Friday, January 21, 2022

நீடாமங்கலம் பால் திரட்டு

 நாவிலும் / நினைவிலும் நீங்காத சுவை : நீடாமங்கலம் பால் திரட்டு

பால்கோவா என்றாலே உடனே நம் நினைவுக்கு வரும் ஊர் ஸ்ரீவில்லிப்புத்தூர் தான். பால்கோவாவை, தஞ்சாவூர் பக்கத்தில் திரட்டிப்பால் என்றும் பால்திரட்டு என்றும் கூறுவார்கள்.

சென்னையில் பல்வேறுவித நல்ல  / நல்லன அல்லாத பால்கோவா கிடைத்தாலும், ஆவின் காரர்கள் தரமான பால்கோவாவைத் தயாரிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி. அதிலும், வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்த்து செய்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. 

இருந்தும் இதெல்லாம் நீடாமங்கலம் பால்திரட்டின் சுவைக்கு ஈடாகாது என்றே சொல்ல வேண்டும். 

நீடாமங்கலம், கும்பகோணத்திலிருந்து 25 கிமீ தொலைவில் திருவாரூர் செல்லும் வழியில் உள்ள மிகச் சிறிய ஊராகும். 

திருவாரூர் மாவட்டம், மூணாறுதலைப்பில் வெண்ணாறு மூன்றாகப் பிரிகிறது: கோரையாறு, வெண்ணாறு, பாமணியாறு. காவிரியின் கிளைநதிகளான இந்த மூன்று நதிகளுக்கும் இடையே ஓர் ஊர்...  

சிலுசிலுவெனத் தண்ணீரும் பச்சைப்பசேல் என வயல்களும் சூழ. ஊருக்கு நடுவே ஸ்ரீ சீதா பிராட்டியார் ஸமேத ஸ்ரீ சந்தான ராமஸ்வாமி  கோயில். எதிரே அழகான குளம். கூப்பிடு தூரத்தில் ரயில் நிலையம். அதையொட்டி ஒரு பூங்கா... என்று  ரம்மியமாக இருக்கிறது நீடாமங்கலம்!

நீடாமங்கலத்தைப் பற்றி ஒரு சுவையான கதை உண்டு. 

மராத்திய மன்னன் பிரதாபசிம்ம மஹாராஜா தன் காதல் மனைவி யமுனாவைச் சந்தித்ததன் நினைவாக சர்வமானியமாக அளித்த காதல் பரிசு நீடாமங்கலம் என்று உள்ளூர்க்காரர்கள் சொன்னார்கள். 

அழகான நீடாமங்கலத்தை மேலும் அழகாக / நினைவில் நிற்கும் விஷயமாக  மாற்றும் இன்னொரு விஷயமும் நீடாமங்கலத்தில் உண்டு - அது இங்கே கிடைக்கும் பிரத்தியேக பால்திரட்டு. 

மாலையில் மட்டுமே இது கிடைக்கிறது. நீடாமங்கலம் மேல ராஜவீதியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகக் கட்டடத்தின் அருகே ஒரு சின்ன மேஜையில் மாலை 4 மணிக்குத் தொடங்குகிறது இந்த வியாபாரம். 

ஒரு பெரிய தாம்பாளத்தில் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் பால்திரட்டை, கேட்பதற்கேற்ப சின்னச்சின்ன பொட்டலங்களில் கட்டித் தருகிறார்கள்  தாம்பாளம் காலியாகும் போது வியாபாரமும் முடிந்துவிடுகிறது. "ஒவ்வொரு நாளும் பால்திரட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சிலரேனும் திரும்பிச் செல்கிறார்கள். ஆனாலும், இந்த அளவுக்கு மேல் செய்வதில்லை. இந்த அளவைத் தாண்டினால் பக்குவம் சிதைந்துவிடும்'' என்கிறார்கள். 

ஆனால், வெளிநாடு / வெளியூர் செல்வோருக்கும் விசேஷ வீட்டுக்காரர்களுக்கும் மட்டும் - முன்கூட்டியே கேட்டால், இந்த அளவுக்கு உட்பட்டு தனியாக செய்து தருகிறார்களாம்.

நீடாமங்கலம் பால்திரட்டில், பால் சுண்டும்போது கிளம்பும் மணம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. நல்ல பசும்பாலாடையின் ருசி நாக்கில் கரையும்போது ஒட்டிக்கொள்கிறது. 

(நன்றி: சமஸ் எழுதிய சாப்பாட்டுப் புராணம் என்ற நூல்)

No comments:

Post a Comment