மனதோடுமலர்கள்_63
அத்யாயம் 63
கதையாசிரியர்: பாஸ்கர் சத்யா
மாலை ஆறரை மணிக்கே சந்துரு வந்துவிட்டான். மாலதியை அவன் எதிர் பார்க்கவில்லை. 'எப்ப வந்த?'. அவளுடைய பதிலைக் கூட எதிர்பார்க்கவில்லை.
இன்னும் அவன் 'உர்' தான். கோபம் தணியவில்லை. நேராக கொல்லைப்புறம் போனான். ஒரு குளியல்.
ஆண்களுக்கு ஒரு பிரத்யேக குணம். தவறை பெண்ணினம் சுட்டிக்காட்டும்போது ஸாஃப்டாக சொல்ல வேண்டும். அதிர்ந்து பேசினால் எங்கேயோ மூலையில் இருக்கும் தன்மானம் தலை தூக்கிவிடும்.
அம்மா கவனித்துவிட்டாள் இதை. 'என்ன சந்தா, உனக்காக அம்மா அப்பாகிட்ட சண்டை போட்டு சம்மதம் வாங்கிண்டு வந்திருக்கா, அவ கிட்ட சிரிச்சு கூட பேச மாட்டேங்கற? என்ன, ரெண்டு பேர்க்குள்ள சண்டையா? ஒண்ணும் புரியலையே? ஏண்டி, நீயாவது சொல்லக் கூடாதா?'
'அம்மா, ரொம்ப தூரம் போய் விளையாடிட்டு வந்திருக்காரோன்னோ? டயர்டா இருக்காரோ என்னவோ?'
'இந்த ஆம்பிளைகளே இப்படித்தான். எப்ப உறான் கோட்டானா மாறுவாங்கனு தெரியாது. அவனா என்ன ஏதுன்னு விவரம் கேட்கிற வரைக்கும் நான் ஒண்ணும் சொல்லப் போறதில்லை. நீயும் ஒண்ணும் சொல்லாத. நீ ஒண்ணும் வருத்தப்படாத.'
அமைதியாகவே இருந்தான். மாலதியும் அம்மாவும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
'மணி எட்டு. அம்மா சாப்டுட்டு கிளம்பறேன்'.
'சந்தாவ கொண்டு விட சொல்றேன்.'
வந்தான் கூட. ஆனால் சிறிது நேரம் பேசவில்லை.
'ட்ரெயினா பஸ்ஸா?'
'பரவாயில்லையே. குழந்தைக்கு கோபம் போச்சு போல இருக்கே.'
'நீ என்னோட ஒண்ணும் பேசவேண்டாம். அன்னிக்கு என்ன நீ ரொம்ப ஹர்ட் பண்ணிட்ட. நான் அவ்வளவு தூரம் கெஞ்சறேன். நீ பாட்டுக்கும் அன்னிக்கி என்னை திட்டிண்டே இருக்கியே? அதோட மாத்திரம் இல்லாம ராஜி கிட்ட வேற சொல்லிட்ட. அவ என்ன லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டா. யாருக்கும் தெரியாம நான் சிகரெட் பிடிச்சிண்டு இருந்தது, இப்ப ஒவ்வொருத்தரா எல்லாருக்கும் தெரிய போறது. நான் யாரைப் பார்த்தாலும் ஒரு கில்டியாவே இனிமே பார்க்க வேண்டி வரும்.'
'நீங்க இத இப்படியெல்லாம் யோசித்தேள்னா, நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல. அப்புறம் உங்க இஷ்டம். என் தலைவிதி சிகரெட் பிடிக்கறவரோட குடும்பம் நடத்தணும்னு இருந்தா இருந்துட்டு போகட்டும். நீங்க திருந்த வேண்டாம்.'
சொல்லிவிட்டு அழுகை. சந்துருவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
'சரி சரி. அழாத. நம்ம கல்யாணத்துக்குள்ள எப்படியாவது சிகரெட் பழக்கத்த விட்டுடறேன். என்ன நம்பு.'
'ஒண்ணு தெரியறது. பொம்மனாட்டிகளுக்குனு எந்த ப்ரின்ஸிபளும் இருக்க கூடாது. ஆம்பளைங்க உங்க இஷ்டத்துக்கு தான் இருப்பேள்.'
'எவ்வளவு ஆசையோட வந்தேன் எங்க அம்மா அப்போவோட. இப்படி மூஞ்சிய தூக்கி வெச்சிண்டு கஷ்டப் படுத்திட்டேள்.'
'சாரி, மாலு. நீயும் என் அம்மாவும் எவ்வளவு கஷ்டப் படறேள்னு தெரியறது. நான்தான் எப்போதும் விளையாட்டுப் பிள்ளையாவே இன்னமும் இருக்கேன்.'
'எனக்கு ப்ரமோஷன் கிடைக்கும் போல இருக்கு மாலதி. அநேகமா இந்த வாரமே வரும்னு சொல்றா. ஒரே ஜம்ப் மூவாயி்ம் சம்பளமாகும். அம்மா சொன்னா, உன்னோட ராசியாம்.'
'கிடைச்ச உடனே ட்ரீட், என்ன?'
'என்ன வேணும்?'
'உங்க இஷ்டம்.'
'திருச்சிக்கு வந்து?'
'அம்மாவ அழைச்சுண்டு வாங்கோ. அம்மாவுக்கும் ஒரு சேஞ்சா இருக்கும். எல்லா கோவிலையும் அம்மாவுக்கு சுத்திக்காமிக்கலாம். ஒரு கார் வேணாலும் எடுத்துக்கலாம்.'
சந்துரு ஆச்சர்யப்பட்டான். அவன் தன் தாயின் மீது வைத்துள்ள பாசத்தையும் தாண்டி நிற்கிறது மாலதி அண்ணு மேல் வைத்திருக்கும் அபிமானம்.
'ஒன்ன நெனச்சா பெருமையா இருக்கு மாலு. எனக்கு கூட இதுநாள் வரையில் இதெல்லாம் தோணவில்லை. கண்டிப்பா அழச்சிண்டு வரேன்.'
இந்த முறையும் ரவியின் உறவினர் தாம்பரம் ஸ்டேஷன் மாஸ்டர் மூலம் அவளுக்கு ஒரு ஃபாஸ்ட் ட்ராக் ரிஸர்வேஷன் ராக்ஃபோர்ட் எக்ஸ்பெரஸில் ஏற்றி விட்டான். வழக்கம் போல டாட்டா, ட்ரெயினுடன் சற்று ஓட்டம், ..எல்லாம் இந்த முறையும்.
அவர்கள் காதல் சற்று கடமையிலிருந்து புரிதலுக்கு மாறிக் கொண்டிருக்கிறது.
தொடரும்
No comments:
Post a Comment