Friday, January 14, 2022

மனதோடுமலர்கள்_51

மனதோடுமலர்கள்_51

அத்யாயம் 51

கதையாசிரியர்: பாஸ்கர் சத்யா 

சிவா விஷ்ணு கோவிலில் சந்தோஷித்துக் கொண்டிருந்தன அத்தனை மலர்களும்.

விரிக்கப் பட்ட ஜமக்காளங்கள், அலங்கரிக்கப்பட்ட ஐந்து முக விளக்கு, அடுக்கி வைக்கப் பட்ட சீர் வரிசைகளுக்கு சாட்சியாக உயர்ந்து நின்ற பருப்பு தேங்காய் கூடுகள், பெண்களுக்கு இணையாக தலையில் பூ சுற்றிக் கொண்டு.

பெற்றோர்கள் மட்டும் ட்ரெடிஷனல் ட்ரெஸ், மற்றோர்கள் அடுத்தவர்களுக்கு சேலஞ்சான கேஷுவல்ஸ்.

அண்ணு மட்டும் தனித்திருந்தாள் உடையிலும் சிகையிலும், அவளை ஒத்தவர்களின் பிரத்யேக யூனிஃபார்முடன். அவள் தனித்துவம் மிகுந்தவள் அல்லவா, அப்படித்தானே இருப்பாள். வந்தவர்கள் யாராக இருந்தாலும் ஏதோ அவர்களுடன் நெருக்கிப் பழகியதைப் போல தன் புன்சிரிப்பால் தன் பால் ஈர்த்துக் கொண்டிருந்தாள். ப்ரேமை குசலங்களை பரிமாறி தன் நட்பு வட்டத்தில் இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தாள்.

குழந்தைகளுக்கு பாட்டி அவள், அறிந்தோருக்கு மாமி அவள். நெருங்கிய சொந்தங்களுக்கு அண்ணு, அண்ணு குட்டி. ராஜிக்கு மாத்திரம் அவள் எப்படி கூப்பிடுகிறாளோ அப்படித்தான்.

இந்த நிச்சயதார்த்தத்தில் அவள் ஒரு ஹீரோயின். 'எப்படி கிடைத்தது இந்த அலையன்ஸ்?' என்று துளைத்த ஸ்ரீமதியின் சொந்தங்களுக்கு விடையாக நின்றாள்.

இன்னும் அரை மணி நேரத்தில் வைபவம் துவக்கம்.

ஸ்ரீமதியும் அவள் ஆத்துக்காரும் அவளிடம் வந்தார்கள். 'மன்னிச்சுக்கோடி அண்ணு. மறந்துட்டேன் உன் கிட்ட கொடுக்க. இந்தா இதை நம்மாத்துக்கு போய் கட்டிண்டு சீக்கிரம் வா.'

அவள் கொடுத்தது நார்மடிப் புடவை, ஆனால் ஸில்க்கிஷாக இருந்தது. பளபளப்பை பார்த்து ஒரு பிரமிப்பு. 'எதுக்குடி இதெல்லாம்? விலை ஜாஸ்தி இருக்கும் போல இருக்கே?'. திணித்தார்கள்.

'இதுக்கு எதுக்கு அவாத்துக்கு போகணும்?'

மாலதியை கூப்பிட்டாள் கிட்டத்தட்ட இப்போதெல்லாம் அவளுக்கு மாலதி தான் செக்ரடரி. ஒரு சந்நிதிக்கு பின் சென்றாள். துறவிக்கு எதற்கு பிரத்யேக அறையெல்லாம் உடை மாற்ற. ஆச்சு ரெண்டு சுற்று.

'நன்னா இருக்காடி எனக்கு? நான் சொல்லல ஸ்ரீமதிக்கு பெரிய மனசு.'

மாலதிக்கு சுருக்கென்றது, முகத்தில் பிரதிபலித்ததை கவனித்துவிட்டாள். 'ச்சே இது எனக்கு ஸ்ட்ரைக் ஆகலையே. நம்ம ஒண்ணு வாங்கிக் கொடுத்து ஆத்திலேந்தே அழைச்சுண்டு வந்திருக்கலாம்.'

'என்ன யோசிக்கற. என் சொச்ச காலமெல்லாம் நீ வாங்கித் தர புடவைதான். இவ ஒண்ணுதான் கொடுத்தா, உன்னுட்டேந்து வருஷத்துக்கு அஞ்சாறு வாங்கிட மாட்டேன். இதெல்லாமா எனக்கு பெருமை இல்லை. சந்துருவோடு நீ நன்னா குடுத்தனம் பண்ணி என் குடும்பத்த டாப்புல கொண்டு போகணும். நீ செய்வ, எனக்கு அசாத்ய நம்பிக்கை உன் பேர்ல'

எப்பேர்ப்பட்ட நம்பிக்கை. பளிச்சென வந்த அண்ணுவை எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள். ஒரே சிரிப்பு. இந்த சிரிப்பு ஒண்ணுதான் அவள் பலம்.

ஆரம்பித்தாகி விட்டது மஞ்ச பிள்ளையார் பூஜை. எவ்வளவோ பேர் கேட்டுக் கொண்டும் ராஜியோடு கடைசியில் உட்கார்ந்துவிட்டாள். 

முறைப்படி எல்லா சம்ப்ரதாயங்களும். ஜானாக்கு நெக்லஸும் மோதிரமும், ஸ்ரீமதி ஆத்தில்.

'ஏண்டி ராஜி, மாலதிக்கு இதெல்லாம் என்னால போட முடியுமா? பாவம். அவளுக்கு இதெல்லாம் பார்த்தா ஆசையா இருக்காதா?'

'அண்ணு செல்லம். உங்கள அடிப்பேன். நீ போடாட்டி என்ன நாத்தனார் நான் போடுவேன். அனத்தாம இருங்கோ.'

இதோ பெண்ணுக்கு நிச்சயதார்த்த புடவை ஓதிவிட்டார்கள். 'போய் ஆஃபிஸ் ரூம்ல கட்டிண்டு வா. ஏற்கனவே ஆஃபிஸ்ல சொல்லி இருக்கோம்' ஸ்ரீமதி சாந்தியிடம் சைகை காண்பித்து அவளும் உடன் சென்றாள்.

பட்டுப் புடவையுடன் அவள் வெளியே வந்த அழகை ராஜியிடம் ஸ்லாகித்துக் கொண்டிருந்தாள். 'மாலதிக்கும் இதை மாதிரி புடவை எடுக்கணும். இவளை விட மாலதிக்கு இந்த கத்திரிப்பூ கலர் எடுப்பா இருக்கும்'. ஆமோதித்தாள் ராஜி.

வைபவத்தின் ஒவ்வொரு அழகையும் மாலதியோடு ஒப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

'இதுல எவ்வளவு மிஸ் பண்ணப் போறாளோ மாலதி. தடபுடலா இவா நடத்தறா. என் சக்தி?' 

மீண்டும் மீண்டும் சந்தோஷங்கள் ஜானகி பக்கம், ஏக்க உணர்வுகள் மாலதி பக்கம். அலைபாய்ந்து கொண்டிருந்தது அண்ணுவின் மனசு.

'இதோ நிச்சயதார்த்த பத்திரிக்கை. வாத்ய கோஷ்டி எல்லாருடைய கவனத்தை பத்திரிக்கை வாசிப்பில் திருப்ப ஒரு சின்ன கொட்டு.

'இன்னும் மூன்று மாதத்திற்குள் திருமணத்தை பெண் வீட்டார் மெட்ராஸிலோ, திருப்பூரிலோ வைத்துக் கொள்வது....'

'அது என்ன திருப்பூர், ராஜி திடும்னு மாத்தம்'

'எனக்கென்ன தெரியும், விசாரிக்கலாம் மாலதி கிட்ட அப்புறம்'

பேசிக்கொண்டே இருந்த அண்ணு ராஜியின் கையை இழுத்துக் கொண்டு கோவில் வாசலுக்கு வந்தாள்.

'என்ன மாமி, ஏன், என்ன ஆச்சு'

'என்னமோ தெரியலடி, நெஞ்சு பட படன்னு அடிக்கறது. மார அழுத்தற மாதிரி இருக்கு அப்பப்ப. இப்பத்தான். நீ டாக்டர் தானே கொஞ்சம் பாரேன்.'

'சித்த இந்த படிக்கட்டுல உட்காருங்கோ. கார்ல ஸ்டெதாஸ்கோப் வெச்சுருக்கேன். எடுத்துண்டு வரதுக்குள்ள நாடிய பார்க்கிறேன்.'

பார்த்தாள். பல்ஸ் வீக்.

கோவிலுக்குள் ஓடினாள். அங்கு யாருடனோ பேசிக் கொண்டிருந்த சந்துருவின் கையை பலமாக பிடித்து இழுத்து வந்தாள்.

'இந்தா கார் சாவி, நம்பர் 4509. கோவிலுக்கு பேக் ஸைடு நிறுத்தியிருக்கேன். காரை தொறந்து என் ஸ்டெத்தாஸ்கோப்பும், ப்ரெஷர் மானிடரும் எடுத்துண்டு நேரா ராஜு நர்ஸிங் ஹோம் வா. நான் ஆட்டோ எடுத்துண்டு அங்க போறேன். சீக்கிரமா வா.'

'அம்மாக்கு என்ன? அம்மாவுக்கு என்ன?'

'ஒண்ணுமில்ல டா. சரியாயிடுவா. நீ மொதல்ல ஓடு'

பசு நர்ஸிங் ஹோமை நோக்கி, கன்று காரைத் தேடி.

தொடரும்

No comments:

Post a Comment