ஶ்ரீமுக்கூர் ஸ்வாமியின் உபன்யாஸத் துளிகள் பகுதி −8
இராமாவதாரத்தைக் காட்டிலும் க்ருஷ்ணாவதராத்துக்கு ஏற்றம் உண்டு..
என்ன காரணம்?..
இராமவதாரத்தில் பனிரெண்டு வயதுக்கு மேல்தான் பித்ருவாக்ய பரிபாலனம் ஆரம்பிக்கிறது..
"விஸ்வாமித்ரருடன் போ" என்றதும், மறுவார்த்தை பேசாமல் கிளம்பிவிட்டான் பரமாத்மா...
"நான் போக மாட்டேன்" என்று ராமன் உட்கார்ந்திருந்தால், விஸ்வாமித்ரர் வந்த காரியம் ஆகியிருக்குமா?..
அப்பாவின் முகம் கோணவிடாமல் கிளம்பினானே...
அதனால்தான் அவன், "ஸுப்ரஜா ராமா!.."
பிள்ளை பிறந்து விடுவதாலேயே ஒருவன் பிள்ளையாக ஆகிவிட மாட்டான் என்கிறது சாஸ்திரம்..
பின் எப்போது அவன் பிள்ளை ஆகிறான்?..
அப்பா அம்மா உயிருடன் இருக்கும் பொழுது அவர்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்கக்கூடிய பிள்ளையாக இருக்க வேண்டும்...
அவர்களுக்கு வயதாகித் திருநாட்டை அலங்கரித்தால், அந்த நாளை விசேஷமாக அனுஷ்டிக்க வேண்டும்.
அவர்களுடைய ஸ்ரார்த்தத்தை ஸ்ரத்தையோடு பண்ண வேண்டும்..
இவனுடைய வாழ்நாளில் கயைக்குச் சென்று விஷ்ணுபாதத்தில் பிண்ட பிரதானம் பண்ண வேண்டும்..
இந்த மூன்றும் எவனுக்குச் சித்திக்கிறதோ, அவனே உத்தமமான பிள்ளை என்கிறது சாஸ்திரம்..
ய்தந்தையர் உயிரோடு இருக்கும்போது அவர்களுக்கு முள்ளாய் இருந்த பிள்ளை, அவர்கள் காலமானபின் விசேஷமான முறையில் ஸ்ரார்த்தம் நடத்தினால், அதனாலெல்லாம் பித்ரு தேவதைகள் ஸந்தோஷம் அடைந்து விடமாட்டார்கள்..
இதைச் சித்ரகூடத்தில் இராமபிரானிடம் பரதனே சொல்கிறான்..
"நானும் ஸபண்டீகரணம் வரையிலான ஸ்ரார்த்தங்களை நன்றாகப் பண்ணிவிட்டு வந்துள்ளேன்.. இருந்தாலும் பித்ரு தேவதைகளுக்கு த்ருப்தி ஏற்பட்டிருக்காது..
...ஏனென்றால் நான் அப்பாவுக்குப் பிடிக்காத பிள்ளை.. நீ பண்ணினால்தான், அது பூரணமாகப் பலிக்கும்.."
.... இப்படி பரதன் சொன்னது, நமக்கான பாடம்தான்!..
சரி.. இப்பொழுது க்ருஷ்ணா வதாரத்துக்கு வருவோம்...
பிறந்தவுடனே தாய்சொல்லைக் கேட்டதாம் இந்தக் குழந்தை!..
பிறந்தபோதே கேட்டதா, என்றால்,
"ஆம், கேட்டது!.." என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி சொல்லலாம்!..
சங்கு, சக்கரம், கௌஸ்துபம் இத்யாதிகளுடன் குழந்தை வடிவில் இருக்கிறான் பரமாத்மா..
சிறைச்சாலையில் பரமாத்மா அவதரித்த அதே சமயத்தில் கம்ஸன் தலையில் இருந்த க்ரீடம் "பொத்"தென்று விழுந்ததாம்!..
அவனுடைய தேஜஸ், பலம் எல்லாம் குறைந்ததாம்!..
அவனுடைய பத்னிமார்கள் காதில் அணிந்து கொண்டிருந்த குழைகள் கழன்று கீழே விழுந்து, அவர்களுக்கு வைதவ்யம் வரப்போவதையும், அவர்களது பதியை முடிக்கிறவன் வந்துவிட்டான் என்பதையும் தெரிவித்ததாம்..
ஆனால், அதே சமயத்தில் தந்தை வஸுதேவர் காலில் பூட்டப்பட்ட விலங்குகள் பட்டென்று அறுந்து விழுந்தனவாம்!..
நல்லவர்களை வாழவிக்கவும், தீயவர்களை நிரசிக்கவும் பரமாத்மா பிறந்துள்ளான் என்பதை இவையெல்லாம் சூசகமாக அறிவித்ததாம்!..
சரி.. பரமாத்மா எப்படிப் பிறந்தான்?..
சங்கு சக்ர கதா பாணியாக அவதாரம் பண்ணினாம்..
குழந்தையைப் பார்த்துத் தேவகி நடுங்கிப் போய்விட்டாளாம்!..
"குழந்தாய்!.. உன் ப்ரபாவம் எனக்குத் தெரிகிறது..
இங்கு எழும் பூண்டெல்லாம் அசுரப் பூண்டாய் இருக்கிறது..
சுற்றிலும் நல்லவர்கள் இல்லாத இடமாய் இருக்கிறது..
நீ உன் வடிவை மாற்றிக் கொண்டு, சாமான்யமான ப்ராக்ருத குழந்தையாக மாறிவிடு!.." என்று ப்ரார்த்திக்கிறாள் தேவகி..
அந்தக் குழந்தை சாக்ஷாத் ஜகந்நாதன் அல்லவா?..
"அம்மா, நீ ஏன் கவலைப் படுகிறாய்?..
என்னை யாராலும் ஒன்றும் பண்ணமுடியாது..
நான் இப்படியே இருக்கேன்.." என்று சொல்லியிருக்கலாமே!..
ஆனால் அம்மாவின் பேச்சைக் கேட்டு, குழந்தை சாமான்யக் குழந்தையாக தத்க்ஷணமே மாறிவிடுகிறது!..
அதனால்தான்,
"ஆயர் குலத்தினில் தோன்றிய அணிவிளக்கு.." என்று காரணத்தோடே ஆண்டாள் கொண்டாடினாள்...
(வளரும்..)
No comments:
Post a Comment