Sunday, January 9, 2022

ஶ்ரீமுக்கூர் ஸ்வாமியின் உபன்யாஸத் துளிகள் பகுதி −9

 (ஶ்ரீமுக்கூர் ஸ்வாமியின் உபன்யாஸத் துளிகள்..) (பகுதி −9..)

திருப்பதியில் கபிஸ்தலம் தேசிகாச்சார் என்று ஒரு ஸ்வாமி எழுத்தருளியிருந்தார்..

மஹாவித்வான் அவர்..

அவர் அந்தக் காலத்தில் எல்லோருக்கும் வேதாந்த விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்..

ஒரு சமயம் அவர் உபன்யாஸம் பண்ணிக் கொண்டிருந்த போது, பெரிய வௌவால் ஒன்று பறந்து வந்து அவரது திருவடியில் விழுந்தது..

இன்னும் கொஞ்ச நாழியில் அதோட ப்ராணன் போய்விடும் போலிருந்தது..

தத் க்ஷணமே, அவர் அந்த வௌவாலுக்காக ஸங்கல்பம் பண்ணிக்கொண்டு சரணாகதி பண்ணினார்..

சரணாகதி பண்ணியவுடன் வௌவால் பறந்து போய்விட்டது..

இந்த வௌவால் பண்ணிய பாக்யம்தான் என்ன!..

ப்ராணன் போய்விடும் என்று நினைத்தால் அது பறந்து போய்விட்டது!..

ஆனால் ஸ்வாமியால் அதற்கு இப்பொழுது மோக்ஷம் ஸித்தம்!..

இவர் ஸ்நானம் பண்ணிவிட்டு, ஜபங்கள் எல்லாம் முடித்துவிட்டு, பவித்திரத்தைக் கையில் போட்டுக்கொண்டு நிதானமாகக் கர்மாவை ஆரம்பிக்கவில்லை!..

அதே க்ஷணத்தில் சரணாகதி பண்ணி வைத்து விட்டார்..

பகவத் ஸந்நிதிக்குப் போகிறோம்..

குளித்துப் பளபளவென்று அலங்காரங்கள் எல்லாம் பண்ணிக்கொண்டுதான் போக வேண்டும் என்கிற கட்டாயம் ஏதும் இல்லை!..

அவனை அடைய இல்லாத ஸுத்தியைத் தேட வேண்டாம்!.. இருக்கும் ஸுத்தியே போதும்!..

விபீஷணன் இலங்கையிலிருந்து வரும்போது கீழே கிடந்த ஸமுத்திரத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டா வந்தான்?..

நேராக இராமன் திருவடியில் வந்து விழுந்தானே!..

அவனை இராமன் ஏற்கவில்லையா?..

அஸுத்தியாய் இருக்கும் போதுதான் த்ரௌபதியும் சரணாகதி பண்ணினாள்...

வீட்டுக்குள் வரக்கூடாத நிலையில் இருந்தாள் அவள்!..

ஆனால், "கோவிந்தா! புண்டரீகாக்ஷா!   ரக்ஷ மாம் ஸரணாகதம்!.." என்று இரு கையும் விட்டுக் கதறினாளே...

அவளுக்குக் கண்ணன் மான ஸம்ரக்ஷணம் பண்ணிக் கொடுத்தானே...

...இதிலிருந்து சரணாகதிக்கு இருக்கின்ற ஏற்றம் தெரிகிறது!..

ஆண்டாளும், "தூயோமாய் வந்து" என்பதில் "மனத் தூய்மை"யைப் பற்றியே சொல்கிறாள்!..

"புறம் சுவர் கோலஞ் செய்து
புள்கவ்வக் கிடக்கின் றீரே!!."

...என்று எல்லோரையும் பரிகாசம் பண்ணுகிறார் தொண்டரடிப் பொடியாழ்வார்..

புறம் சுவர் என்பது உடம்பு..

இதற்குப் போய் கோலம்..

பக்தன் மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு...

உள்ளே பக்தி இல்லை!..

"பக்தி இல்லாத இந்த சரீரத்தை ஒருநாள் பக்ஷிகள் கொத்திக் கொண்டு போய்விடுமே..

அதனால் கொஞ்சமாவது பக்தி பண்ண வேண்டாமா?.." என்கிறார் ஆழ்வார்..

"நெடுமாற் கடிமை செய்வேன்போல்

அவனைக் கருத வஞ்சித்து.." என்கிறார் நம்மாழ்வார்..

பகவானுக்கு அடிமை மாதிரி நடித்தால், அவனுக்குத் தெரியாதா என்ன?..

ஒரு பக்தனிடம் பகவான் "பழம் கொடேன்" என்று கேட்க,

"அவன் பழம் கிடைக்கவில்லை.." என்றானாம்..

"பழம் இல்லாவிட்டால், காய் கொண்டு வா.."

"காய் இல்லையே.."

"பூ கொண்டு வாயேன்.."

"பூவும் கிடைக்கவில்லை!.."

"ஒரு இலையாவது கொண்டு வாயேன்.."

"இலையும் இல்லையே.."

"இலை கூட இல்லையா?.. சரி.. போனால் போகிறது!..

கொஞ்சம் தீர்த்தத்தை எடுத்து என் எதிரில் விடு!." என்றான் பகவான்..

"தீர்த்தமும் இல்லை"

"உண்மையில் தீர்த்தம் இல்லையா?.."

"இல்லை!.. இருந்தால் கொடுக்க மாட்டேனா?.."

"கண்ணில் கூட நீர் இல்லையா?.." என்று கேட்டான் பரமாத்மா..

"பகவானுக்குப் பழம், காய், பூ, திருத்துழாய் கொடுக்க முடியவில்லையே!..

ஒரு உத்திரிணி அளவு சுத்தமான தீர்த்தத்தைக் கொண்டு அர்க்யம் கூட சமர்ப்பிக்க முடியாத மஹா பாபியாக இருக்கிறேனே.." என்று ஒரு சொட்டு கண்ணீர் விட்டாலும் போதும் என்கிறான் பகவான்!..

"வெறுங்கையோடு பரமாத்மாவைப் பார்க்கக் கூடாது.." என்கிறது சாஸ்திரம்..

அதற்கென்ன அர்த்தம்?..

தூயோமாய் வந்து...

அவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறான்?..

அவனுக்கு தேங்காய், பழம் இல்லையா என்ன?..

எல்லாம் அவனுடையதுதானே!.

நம்மிடம் ஆத்மார்த்தமான பக்தியை எதிர்பார்க்கிறான் பரமாத்மா!..

வெறுங்கையோடு போகாமல், "அஞ்சலி" ஹஸ்தமாய் போக வேண்டும்!..

"அம் ஜலயதி இதி அஞ்சலி.." − பரமாத்மாவை ஜலம் போல உருகப் பண்ணி விடுவது அஞ்சலி..

உடனே பகவானுடைய அனுக்ரஹம் நமக்குக் கிடைக்கும்படி பண்ணுவது இந்த அஞ்சலி முத்திரை..

இந்த முத்திரையோடு, "தூயோமாய்" உள்ளன்போடு பகவானைச் சேவிக்கப் போக வேண்டும்...

(வளரும்..)

No comments:

Post a Comment