மெய் நெய் !
டிஎம்எஸ் பஸ் ஸ்டாண்டில் 18A விற்காக நான் தேவுடு காத்துக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராவிதமாக முதுகில் ஒரு ' சொடேர்!' 'என்னை தெரியலையாடா?'
என்று இன்னொரு 'சொடேர்!!'. 'நான் தாண்டா கோபாலச்சந்திரன்!' என்றவாரே இன்னொன்று! இந்த பெயர் எவ்வளவு வித்தியாசமானதோ, அந்த அளவுக்கு மேற்படி பெயரைத் தாங்கிய ஆசாமியும் வினோதமான குணங்களை கொண்டவர் என்பதை மேலும் சில அடிகள் வாங்கிய பிறகுதான் உணர்ந்து கொண்டேன்.
'மறந்துட்டியாடா! அம்பாசமுத்திரத்தில் படித்தோமே டா!' என்று அடுத்த சொடேர் விடுவதற்கு முன் "ஆமாம்" என்று சொல்லி விட்டேன். இத்தனைக்கும் நான் படித்தது ஸ்ரீரங்கத்தில் தான்! என்னை வேறு யாரோ என்று இந்தப் போடு போடுகிறான் இந்த கோ.ச. என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இப்படி வலிய வந்து நட்பு பாராட்டும் எந்த ஆத்மாவையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது தானே நமது இயல்பு! இந்தப் பேர்வழியிடம் அதை வெளிப்படுத்தினாலோ மேலும் சில 'சொடேர்கள்' கண்டிப்பாக விழும் என்பதால் திருதிருவென விழித்தேன். விடாமல் அவன் ஆள்காட்டி விரலை நீட்டி " நீ...?" என்றதும் 'ஜகன்னாதன்' என்று உடனே சொல்லி விட்டேன். " ஆங்..! ஏதோ பெருமாள் பெயர் என்பது வரை ஞாபகம் இருக்கிறது!" என்றான். 'நெற்றியில் திருமண், ஸ்ரீசூர்ணத்தோடு இருப்பவன் பெயர் பெருமாள் பெயராக இல்லாமல் பெர்னாட் ஷா என்றா இருக்கும்?' என்று கேட்க நினைத்தாலும் அடிக்கு பயந்து அடக்கி வாசித்தேன்.
இருந்தாலும் 'யார் இவன்? எதற்கு இப்படி ஈஷுகிறான்? ஒருவேளை ஏதாவது டொனேஷன் கேட்டுத் தொலைப்பானோ!'
என்று என் மனக் குரங்கு பலவாறாக கதறிக் கொண்டிருந்தது.
இதற்குள் மூன்று 18 Aக்கள் அம்மணமாக சென்று விட்டன! ஆனால் கோ.ச.வால் 'அன்புடன்' நான் மேற்கு மாம்பலத்திற்கு வலுக்கட்டாயமாக அவன் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டேன். பேச்சுவாக்கில், என் அப்பாவை போனவருஷம் ஏதோ கோவில் உற்சவத்தில் பார்த்ததாக சொன்னான். (என் அப்பா போய் ஏழு வருஷமாகி விட்டது!)
அவர்கள் வீட்டில் வழக்கமான வரவேற்பு. பின் காபி. புறப்படும்போது தான், "போனவாரம் திருப்பதி போய் வந்தேன். நாளைக்கு சமாராதனை. உனக்கும் உன் வொய்ஃப்புக்கும் இங்கு தான் சாப்பாடு" என்று அவன் மனைவியோடு சேர்ந்து அன்புக் கட்டளை. "இது ஏதடா!" என்று யோசிக்கும் போது, சமாராதனைக்கு வரமாட்டேன் என்று சொல்வது தெய்வ குத்தம் என்று எமோஷனல் பிளாக்மைல் வேறு.
வளர்த்துவானேன்? மறு நாள் நாங்கள் அவர்கள் வீட்டில். எதிர்பாராதபடி ஒரு திருப்பம். போனபின் தான் தெரிந்தது என் மனைவியும் அவன் மனைவியும் பள்ளித் தோழிகளாம் ! ஆக ஏதோ இவ்வாறு ஒரு விதத்தில் நாங்கள் குடும்ப நண்பர்கள் ஆகிவிட்டோம் போங்கள்! மொத்தத்தில் அப்பாடா என்றிருந்தது எனக்கு .
இனிமேலும், புதுக் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக, அன்றைய தினம் முழுவதும் சாப்பாட்டிற்காக மட்டுமே வாயைத் திறப்பது என்று முடிவெடுத்துவிட்டேன். சும்மா சொல்லக்கூடாது. அவன் உபச்சாரம் பிரமாதம். குறிப்பாக அக்கார அடிசிலில் நான் 'போதும் , போதும்' என்று சொல்ல சொல்ல அன்பாக மிரட்டி மிரட்டி கரண்டி கரண்டியாக நெய்! ஆனால் அதன் வாசனை மட்டும் என்னை பாடாய் படுத்தியது! இந்த மாதிரி விஷயங்களில் என் மனைவி உஷார் பேர்வழி. ஏதோ பட்சி அவள் காதில் மட்டும் சொன்னதுபோல், 'நெய்யே பிடிக்காது!' என்று ஒரே போடாக போட்டு விட்டாள். நல்ல வேளையாக தயிர் சாதத்திற்கு மட்டும் அந்த நெய்யை எனக்கு அவர்கள் ஊற்றவில்லை!
ஒருவழியாக சாப்பிட்டுட்டு திரும்பும் போது தொப்புளை சுத்தி வயிற்றுக்குள் விஷ்ணு சக்கரம் போல சுற்றி சுற்றிஆரம்பித்த வலி, என்னை வீட்டிற்கு செல்ல விடவில்லை. மாறாக, நேராக மருத்துவமனைக்கே இட்டுச் சென்றது. பிறகென்ன? இடையற, தடையற இரு வழிப்பாதை போக்குவரத்து தான்! முக்கி முனகி 3,000 ரூபாயை செலவழித்து மூன்று பாட்டில் ட்ரிப்ஸ்ஸுக்கு பிறகு மெதுவாக எழுந்து, தளர் நடை பயின்று மாலை ஒரு வழியாக வீடு திரும்பும் போது, எதிரே மீண்டும் கோ.ச.! ஆனால் பாருங்கள்! அதிசயமாக ஏனோ என்னிடம் மட்டும் ஒன்றும் பேசவில்லை. என் மனைவியிடம் 'தவறுதலாக விளக்கு நெய் வாங்கி வந்து விட்டோம் போலிருக்கிறது! நல்லவேளையாக நாங்கள் சாப்பிடுவதற்கு முன்பாகவே அதை கண்டுபிடித்து விட்டோம். அதைத் திருப்பிக் கொடுக்கத்தான் எடுத்துச் செல்கிறேன்' என்று ஏதோதோ சொல்வது மட்டும் என் காதில் விழுந்தது..
கை கால்களை அசைக்க பெரும்பாடாக இருக்கிறது. தயவு செய்து யாராவது எனக்கு பதிலாக அவன் முதுகில் ஓரே ஒரு 'சொடேர்'! ப்ளீஸ்!!
No comments:
Post a Comment