Sunday, January 9, 2022

பாட்டிம்மா

 பாட்டிம்மா

“கைய விடும்மா”, என்றபடி ராஷ்மி படு வேகமாக, அந்த ப்ளாட்ஃபார்மில் ஓட ஆரம்பித்தாள். அவள் எதற்காக ஓடுகிறாள் என்பது ராதிகாவுக்குத் தெரியாது. ராதிகாவின் மகள் ராஷ்மி. வந்திருப்பது ஊருக்குப்போக, ரயில்வே ஸ்டேஷனுக்கு. இன்னும் ரயில் வரவில்லை. இங்கிருந்து தான் கிளம்பும். மைசூர் மயிலாடுதுறை எக்ஸ்ப்ரெஸ்.

மைசூரில் இருந்து வந்து இங்கு அண்ணன் வீட்டில் விட்டிருந்த ராஷ்மியை அழைத்துக்கொண்டு போக வந்தாள். லீவுக்கு. மைசூரில் அவளுக்கு சீதோஷ்ணம் ஒத்துக்கொள்ளவில்லை. அது மட்டும் இல்லை. அண்ணன் மகளும் அவளும் ஒரே பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்கள். நல்ல துணையுமாச்சு. சரி அவ படிப்பு இங்கேயே இருக்கட்டும்னு, அங்க போனவ, திரும்ப கொண்டுவந்து இங்கேயே சேர்த்தாள் போன வருடம்.

“ஏய்... ராஷ்மி... இப்டி ஓடினா என்னான்னு தெரியும் எனக்கு” என்று கத்திக்கொண்டே அவளும் பின்னே ஓடினாள்.

வேகமாக அந்த பாட்டியைப் பிடிக்கப் போய்க்கொண்டிருந்த ராஷ்மிக்கு அந்த நாளின் ஞாபகங்கள் நிழலாட, ஒரு பெரிய திரைப்படம் போல காட்சிகள் விரிய ஆரம்பித்த்து.

ராஷ்மியும் அவள் மாமா பெண் மஞ்சுவும், சித்தர்காடு கோவில் போயிட்டு, அப்படியே பரிமள ரங்கநாதரையும் பார்த்துட்டு, ஏதோ பேசிக்கொண்டு அந்த ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் ரெண்டுபேருக்கும் அங்க இருக்கற புக்ஸ்டாலில் இருக்கும் பெண் நல்ல நட்பு. மூவரும் சேர்ந்து தான் காவிரிக் கரை, மயூரநாதர் கோவில் குளக்கரை என்றெல்லாம் சுற்றுவார்கள் லீவு நாட்களில். இவ்வளவு தூரம் வந்துட்டோம் அந்த வேதாவையும் பார்த்துட்டு போகலாம்னு மஞ்சு தான் சொன்னாள். அப்படியே புதுசா வந்த புக்கும் ஏதாவது வாங்கிட்டுப் போகலாம்னு வந்தார்கள் இருவரும்.

வாயில் பான்பராக் மாதிரி எதையோ குதப்பிக்கொண்டு எப்போது பார்த்தாலும் எச்சிலைத் துப்பிக்கொண்டு, தலைக்கு எண்ணையே வைக்காது, செம்பட்டையாகிப் பரட்டையாகி, அழுக்கு ட்ராயர் போட்டு ஒரு மூணு பேர் ஏதோ புரியாத வடக்கத்தி பாஷையில பேச்சிட்டு சிரிச்சிட்டு இருந்தாங்க. அது ஹிந்தி இல்ல. ஹிந்தி ராஷ்மிக்குத் தெரியும். அவ மூணு வருஷம் முன்னாடி டில்லியில் படிச்சா. அதனால, ஓரளவு ஹிந்தி பேசுவா.

அவனுங்க பார்வையே சரியில்ல. இவங்க ரெண்டு பேரையும் திரும்பித் திரும்பிப் பார்த்து ஏதோ சொல்லி சத்தமா சிரிச்சுட்டே இருந்தாங்க. கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. அப்போ ட்ரெயின் வேற ஒண்ணும் இல்லை. மக்கள் நடமாட்டமும் குறைவு. திக்கு திக்குன்னு இருக்க, கொஞ்சம் பயத்தோடயே புக் ஸ்டால்ல எட்டிப் பார்த்தாள் ராஷ்மி. மஞ்சுவும் தான்.

வேதாவைக் காணும். அந்த ஸ்டாலில் இன்னொரு அண்ணா இருப்பான் அவனையும் காணும். ராஷ்மி கண் ஸ்டாலுக்கு உள்ள நோட்டம் விட்டது. அங்க சில பாட்டில் எல்லாம் கிடக்க, அவுங்க புக்கு விக்காத நேரத்துல வேற ஏதோ வேலை பண்றாங்கன்னு தெரிஞ்சுது. அதுமட்டும் இல்ல, இன்னிக்கு வேதா வரவே இல்லைன்னு தெரிஞ்சுது. வந்திருந்தா இந்த பாட்டில் சமாசாரம் எல்லாம் வந்திருக்காது.

சரி, நாம கிளம்புவோம்டி, அவனுங்க பார்வையே சரியில்ல. ஓடிருவோம் வான்னு மஞ்சு கையைப் பிடிச்சு இழுத்தா ராஷ்மி. அதுக்குள்ள அவனுங்கள்ள ஒருத்தன் வேகமா இவங்கள நோக்கி வந்துட்டான். அப்டியே மேல விழுகற மாதிரி ஓடி வந்தான், அங்க இருக்கற ஒரு தூண்ல கைய வெச்சு, வேகமா ஒரு சுத்து சுத்தி பயமுறுத்திட்டோம்னு ஒரு கனைப்போட சிரிச்சு, கேவலமா ஒரு பார்வையும் பார்த்தான்.

ராஷ்மிக்கு, நிலைமையோட தீவிரம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சது. இப்ப இங்கேருந்து தப்பிச்சே ஆகணும்னு, வேகமா வசல் பக்கம் ஓட, இன்னொருத்தன், அந்தப்பக்கம் வந்து மறிச்சான். இதென்னடா சடுகுடு மாதிரி படுத்தறாங்களே, சமயம் தெரியாம வந்து சிக்கிட்டோமேன்னு ராஷ்மியும் மஞ்சுவும் பயத்தோட சுத்தி முத்தி பார்க்க, இந்த, இப்ப பார்க்க ஓட்டிட்டிருக்காளே, அந்த பாட்டி மட்டும் தான் அந்த ப்ளாட்ஃபார்ம் ஓரத்துல வந்துட்டிருந்தா. அவளும், சுயநினைவோட வராளான்னு தெரியலை.

ஒரு அழுக்கு நைட்டி, பத்து காலி வாட்டர் பாட்டில், எல்லாத்தையும் கையில இடுப்புலன்னு அடுக்கிட்டு, மலங்க மலங்க பார்த்தபடி வந்துட்டிருந்தா. சரி ஆபத்துக்குப் பாவமில்லைன்னு, ராஷ்மி, ஓடிப்போய் அந்த பாட்டி கையப் புடிச்சு, ஹெல்ப் பண்ணுங்கன்னு கண்ணாலயே கெஞ்சினா. அந்த மொத்த ப்ளாட்ஃபார்ம்ல, அப்ப, இவங்க அஞ்சு பேர் தான். வேற அலுவலகத்துல யாரு இருந்தாங்களான்னு கூட தெரியலை.

இந்த பாட்டிக்கு உடனே நிலைமை புரிஞ்சு போச்சு, பார்க்க சித்த ஸ்வாதீனம் இல்லாதமாதிரி இருந்தாலும், அவளுக்கு நிலைமை புரிந்தது. ஏதோ ஒரு உள்ளுணர்வு ஆபத்துன்னு சொல்லிடுச்சு.

உடனே, எடுத்தா, ஒரு பாட்டில, ஒவ்வொருத்தன் பின்னாடியும் ஒரு சிங்கம் போல கர்ஜனை பண்ணிக்கொண்டு, பாட்டிலை விட்டெறிஞ்சா. அதோட, அவங்களை பின்னாடியே துரத்தி துரத்தி ஓட்டி அந்த ப்ளாட்ஃபார்மை விட்டே துரத்தி விட்டுட்டா. ராஷ்மிக்கும், மஞ்சுவுக்கும் அப்பதான் உயிரே வந்தது.

அந்தப்பாட்டிக்கு கண்ணாலேயே நன்றி சொல்லிட்டு, அந்த ஸ்டேஷனை விட்டே ஓடி வெளியில் வந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்தார்கள்.

அதுக்கப்புறம் அந்த பாட்டியை இன்னிக்குத் தான் பார்க்கறா. அம்மாவுக்கு காட்டணும் தான் அன்னிக்கு பயந்ததை சொல்லியிருக்கா, அதிலேருந்து பாட்டி காப்பாத்தினான்னு சொல்லணும்னு தேடினா, பாட்டியைப் பிடிக்க ஓடினா அம்மா கையை உதறிவிட்டு.

“அம்மா, இந்த பாட்டி தான், நான் அன்னிக்கு சொன்னேனே” என்றாள், அம்மாவும் ஒரு வழியாக ஓட்டமும் நடையுமாக அவளைப் பிடிக்க, பாட்டியை ராஷ்மியும் பிடிக்க.

ஓ! தெய்வமா வந்திருக்கீங்கம்மா, ரொம்ப நன்றி என்றாள். ராஷ்மியை இந்த விஷயம் பற்றி அவள் ஃபோனில் சொன்ன போதே கடுமையாகத் திட்டிவிட்டாள் தனியாக நேரங்கெட்ட நேரத்தில் போனதற்கு. இன்று கண்களில் நீர் தளும்ப, பாட்டியின் கண்களை நேரா பார்த்தவள், நன்றி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நீங்க, பரிமளம் தானே என்றாள்...

பரிமளத்தின் கதை, அடுத்த பதிவில்....

.... கண்மணி

5/1/22


No comments:

Post a Comment