Friday, January 14, 2022

முதல் மகன்

 முதல் மகன்!

தபால்காரர் கொடுத்துவிட்டுப்போன கடிதத்தை பிரிக்காமலேயே பல தடவைகள் திருப்பிப் பார்த்தார் பரசுராமன்.  அவர் கண்களில் அளவுகடந்த ஆனந்தமும் பெருமிதமும் ததும்பி நின்றன.  சுந்தரம் தான் எழுதி இருக்கிறான்.  புதுடெல்லி என்ற தபால் முத்திரை எவ்வளவு தெளிவாக விழுந்திருக்கிறது என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டார்.  வயதுக்கு மீறிய வேகத்துடன் நடந்து வந்து கூடத்து நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார்.

எங்கிருந்து அப்பா கடிதம் என்று கேட்டுக்கொண்டே உள்ளிருந்து அவரை நோக்கி வந்தாள் அவருடைய மூத்த பிள்ளை சங்கரன்.   பரசுராமன் கடிதத்தை சங்கரனிடம் கொடுக்க முயற்சிக்கவில்லை. அதற்கு பதிலாக அலட்சியமாக அவனைப் பார்த்தார்.   சுந்தரம் எழுதியிருக்கிறான் என்றார். 

 அந்த வார்த்தைகளில் அசாதாரண கர்வமும் அகம்பாவமும் ஒலித்ததை சங்கரன் கவனிக்காமலில்லை. அவனுக்கு இது புதிது இல்லை

கண்ணாடி தான் போட்டுக் கொண்டிருக்கிறீர்களே! நீங்களே படித்துக் கொள்கிறீர்களா இல்லாவிடில்.....

அவளை முடிக்க விடாமல் பரசுராமன் குறுக்கே பாய்ந்தார். டேய் அவன் எழுதி இருக்கிறது  உனக்கும்தான் தெரியட்டுமே. நீ இன்னும் லட்சம் ஜென்மம் எடுத்தாலும் அவனுடைய அன்பு நிறைந்த குணத்தையும் பெருந்தன்மையையும் பெற முடியாது.   நான் இன்னும் ஆயிரம் வருஷம் வாழ்ந்தாலும் என்னை வாஞ்சையோடு வைத்துக் காப்பாற்ற அவனுக்கு ஆசை உண்டு.   நீ எப்பொழுதும் என்னைப்பற்றி இந்த கிழட்டு சனியன் எப்போது ஒழியும் என்று தான் நினைத்துக் கொண்டிருப்பாய்.  சரி சரி அவனுடைய கடிதத்தைப் படிக்கும் கடுகத்தனை புண்ணியத்தையாவது செய். கடிதம் கிழவனார் கையிலிருந்து பறந்து சென்று சங்கரன் என் காலடியில் விழுந்தது

சங்கரன் சட்டென்று குனிந்து கடிதத்தை எடுத்துப் பிரித்தான்.  அவன் மனைவி பங்கஜம் அடுக்களை கதவு இடுக்கு வழியாக கூடத்தில் நடக்கும் இந்த வழக்கமான நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.

சங்கரன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு மிகவும் இதமான குரலில் அந்த கடிதத்தை படிக்கத் தொடங்கினான்.   தேவரீர் அப்பா அவர்கள் பாதாரவிந்தங்களில் சுந்தரம் நமஸ்கரித்து எழுதுவது.   தங்கள் முகத்தை தினசரி தரிசிக்கும் பாக்கியம் பெறாத அதிர்ஷ்டக் கட்டை நான். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு உங்களைப் பார்க்க ஏங்குகிறேன் இங்கு எல்லாம் வெகு சௌகரியமாக இருக்கிறது நீங்கள் இங்கு வந்து எங்களுடன் இருந்து ஆசைப்பட வேண்டாமா?   எப்பொழுது வரப் போகிறீர்கள்? அண்ணா மன்னி எல்லோருக்கும் என் நமஸ்காரங்கள். சுந்தரம்

கடிதத்தை பயபக்தியுடன் மடித்து சங்கரன் தகப்பனாரிடம் கொடுத்தான். கிழவனார் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டார் கைவிரல்கள் கடிதத்தை பற்றிக்கொண்டன சங்கரன் மௌனமாக பூனை போல் தான் விட்டுவந்த ஆபீஸ் வேலைகளை முடிக்க தன் அறைக்குள் நுழைந்தான்.  பங்கஜம் கொதித்துக் கொண்டிருக்கும் சாதத்தை கவனிக்க அடுப்படிக்கு திரும்பினாள்.

பரசுராமனுக்கு 72 வயது முடிந்து 73 நடந்து கொண்டிருக்கிறது.   ஆள் வாட்ட சாட்டமா கவே இன்னும் இருந்தார். அதிகாரம் செய்யும் சர்க்கார் உத்தியோகம்  ஒன்றை  பார்த்தவர். பழைய அதிகார சுபாவத்துடன் நிறைய முன் கோபமும் சேர்ந்து அவரை எப்போதுமே கடின மனம் உள்ளவராக ஆகிவிட்டிருந்தது.

சங்கரனும் சுந்தரமும் அவருடைய இரண்டு பிள்ளைகள். அதில் சங்கரன் மூத்த மனைவியின் பையன். சங்கரனுக்கு பத்து வயதாகும்போதே தன் தாயை இழந்து விட்டான்.  அந்த காரணத்தினாலோ மற்ற எந்த காரணத்தினாலோ அவருக்கு சங்கரன் பேரில் ஒருவித விவரிக்கமுடியாத வெறுப்பு உணர்ச்சியே மேலோங்கி நின்றது. அவருடைய இரண்டாவது மனைவி பார்வதி ஒரு குணவதி.   சங்கரனுக்கு தந்தையின் வெறுப்பு உணர்ச்சியிலிருந்து அபயமளிக்கும் உன்னதமான புகலிடமாக விளங்கினாள். ஆனால் சங்கரனுடைய துரதிஷ்டம் தானோ என்னவோ அந்த ஆத்மாவும் சீக்கிரமே உலகத்திலிருந்து விடுதலை அடைந்து விட்டது. அவள் தன் நினைவாக சுந்தரத்தை விட்டுச் சென்றாள். அப்போது சுந்தரத்திற்கு வயது நாலு.

நல்லவேளையாக பரசுராமன் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தூரத்து உறவான ஒரு வயோதிக ஸ்திரீயை குடும்ப நிர்வாகம் செய்ய அழைத்து வந்தார். அன்பையும் அபிமானத்தையும் சுந்தரத்தின் மீது பொழிந்தார்.  ஆத்திரத்தையும் சீற்றத்தையும் சங்கரன் மீது வாரி வீசினார். சங்கரன் ஓர் அதிர்ஷ்ட கட்டை என்ற அசைக்க முடியாத ஒரு முடிவு அவர் உள்ளத்தில் வேரூன்றி இருந்தது

சங்கரன் படிப்பு மெட்ரிகுலேஷனுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.   அவனுக்கு கல்லூரிப் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைதான்.   ஆனால் பரசுராமன் அவன் படிப்பு விஷயத்தில் காலணா கூட அதற்கு மேல் செலவழிக்க விரும்பவில்லை. அவனுக்கு தாலுகா ஆபீசில் ஒரு சாதாரண குமாஸ்தா உத்தியோகத்தையும் தன் செல்வாக்கினால் வாங்கிக் கொடுத்துவிட்டார்.

சுந்தரத்தின் விஷயத்தில் மாத்திரம் அவர் முற்றிலும் மாறுதலாகவே நடந்து கொண்டார். அவனை கல்லூரியில் படிக்கச் செய்து பட்டம் பெறச் செய்தார்.  அவன் அதிர்ஷ்டம் அவனுக்கு எடுத்த எடுப்பிலேயே டெல்லி மத்திய சர்காரில் உத்தியோகமும் ஆகி வேலை ஒப்புக்கொண்டு விட்டான். சுந்தரத்தை பற்றி அவருக்கு அபார பெருமை. வந்தவர்களிடம் எல்லாம் சுந்தரத்தை பற்றி தான் பேசுவார்.சங்கரன் என்று தனக்கு ஒரு மகன் இருப்பதாகவே அவருக்கு அந்த வேளையில் நினைவு வராது.

சாதாரணமான ஒரு இடத்தில்தான் சங்கரனுக்கு பெண் தேடி விவாகத்தை முடித்தார். பங்கஜம் தங்கமானபெண். மாமனாரின் குணத்தையும் கடமையே பெரிது என்று நினைத்து பெரியவர் முன் வாயை திறவாத கணவனின் நிலையையும் அனுசரித்து நடந்து கொண்டாள்.

பரசுராமனுக்கு சுந்தரத்தின் விவாகத்தை பெரிய தோரணையில் நடத்தி பிரபலமான ஒரு சம்மந்தியை சம்பாதிக்க வேண்டும் என்று அவா உண்டு. ஆனால் அந்த விஷயத்தில் அவர் ஏமாந்து போனார். ஆபீஸில் தன் மேலதிகாரியின் பெண்ணை தான் மணந்து கொள்வதன் மூலம் தனக்கு வாழ்க்கையில் முன்னுக்கு வர நிரம்ப வாய்ப்பு இருப்பதாக எழுதியிருந்தான் சுந்தரம். வேறு வழியில்லாமல் பரசுராமன் சரி முகூர்த்தத்தை நிச்சயம் செய்து எழுது நாங்கள் உடனே புறப்பட்டு வருகிறோம் என்று பதில் எழுதினார். அதற்கு கிடைத்த மறுமொழி அவரை வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்திவிட்டது.

அப்பா மன்னிக்க வேண்டும் சென்ற திங்களன்று எங்கள் மணம் முடிந்துவிட்டது. என் மாமனார் அமெரிக்கா போக வேண்டியிருந்ததால் இந்த ஏற்பாடு. எங்கள் புகைப்படம் இத்துடன் வருகிறது. ஆசிர்வதியுங்கள். உங்களை பார்க்க ஆசைப்படுகிறோம். நீங்கள் எல்லோரும் வந்து சேரவும் என்று சுந்தரம் சமத்காரமாக எழுதியிருந்தான்.

பரசுராமனுக்கு கோபம் பீறிட்டு வந்தது ஆனால் அடுத்த வினாடியே அது மாயமாக போய்விட்டது பெண் கண்ணுக்கு நன்றாக இருந்தாள் படத்திலே.மேலும் ஆப்பிரிக்கா அமெரிக்கா என்று பறக்கும் சம்மந்தி சாமானியமாக கிடைப்பாரா என்ன?   ஆனால் பரசுராமனுக்கு என்னவோ உடனே டெல்லி போய் பிள்ளையையும் நாட்டுப் பெண்ணையும் பார்க்க இஷ்டமில்லை. லீவில் வந்து சேர் என்று எழுதி விட்டு பேசாமல் இருந்தார். சுந்தரம் தான் லீவில் வருவதை  குறிப்பிடுவதே இல்லை. ஆனால் மாதத்திற்கு ஒரு தடவை மாத்திரம் அப்பாவை வரச்சொல்லி உபசார கடிதம் எழுதுவதில் தவறுவதில்லை.மாதங்கள் வருஷங்களாக பரிணமித்து கொண்டிருந்தன

சங்கரா சங்கரா என்ற கிழவரின் கர்ஜனையை குரல்கேட்டு சங்கரன் ஓட்டம் கலந்த நடையுடன் அவர் அருகில் வந்தான். என்னஅப்பா என்றான் இதமாக .நான் டெல்லிக்கு போகப்போகிறேன் இன்னும் இரண்டு நாளில் புறப்படலாம் என்று நினைக்கிறேன் சேவிங்ஸ் பேக்கிலிருந்து கொஞ்சம் பணம் இன்றைக்கு எடுத்து விட வேண்டும்

அவர் முடிக்கவில்லை ஆனால் சங்கரன் திகைத்தான். அப்பா அந்த ஊர் எல்லாம் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாது நம்ம ஊரு ஆற்றங்கரை வசதியும் சுவாமி தரிசனமும் மனநிம்மதியும் உங்களுக்கு கிடைக்குமா? அதெல்லாம் வேண்டாம் அப்பா சுந்தரத்தை லீவில் வரச்சொல்லி எழுதி விடுங்கள் என்றான் நாத் தழுதழுக்க.   கண்களில் ததும்பிய நீரை கூட லாவகமாக துடைத்துக் கொண்டான்.  பரசுராமன் கண்களில் கண்ணாடி இல்லாததால் அவர் அதை கவனிக்கவில்லை.

ஏண்டா என்மேல் காட்டுகிற அன்பெல்லாம் நீ என் பென்ஷன் பணத்திற்கு அடி போடுகிற அன்பு தானேடா?   நான் டெல்லிக்குப் போய் விட்டால் அந்த பணம் கிடைக்காதே என்று பயம் உனக்கு. நான் ஒரேடியாக செத்து போய் விட்டேன் என்று நினைத்துக் கொள் போ!  பரசுராமனின் வார்த்தைகளில் தொனித்த குரோதத்தையும் வெறுப்பையும் அளவிடவே முடியாது.

அப்பா நான் எது சொன்னாலும் உங்களுக்கு தவறுதலாக தென்படுகிறது அது என் துரதிருஷ்டம். ஆனால் உங்களை மீண்டும் வேண்டிக்கொள்கிறேன் டெல்லிக்கு போகும் விஷயத்தை கொஞ்சம் யோசித்து செய்யுங்கள்.  சங்கரன் வேதனையோடு கூறினான். ஆனால் அது பரசுராமனுக்கு தெரியவில்லை

எல்லாம் முடிவு செய்தாகிவிட்டது. நாளை கழித்து மறுநாள் நான் புறப்படப் போகிறேன். அதிர்ஷ்டம் கெட்ட உன் மூஞ்சியை பார்த்து பார்த்து அலுத்து விட்டது. நாளைக்கு நானே சுந்தரத்திற்கு தந்தி கொடுத்து கொள்கிறேன். ஒரு சனியன் தொலைந்தது என்று சௌக்கியமாக இரு.சாவதற்கு முன் கொஞ்ச நாளாவது பிடித்தவர்கள் அருகில் இருக்கிறேன் என்று சீறினார் பரசுராமன். சங்கரன் தலை நிமிராமல் போய்விட்டான். பங்கஜம் அர்த்த புஷ்டியுடன் அவனை பார்த்தாள் அவன் அதை கவனிக்கவில்லை.

அன்று மாலை பரசுராமன் மாத்திரம்தான் வீட்டில் இருந்தார்.  சங்கரன் தன் ஆபீஸ் தோழன் ஒருவனின் திருமண வரவேற்பிற்கு பங்கஜத்தை அழைத்துக்கொண்டு போயிருந்தான்.  வேதாந்த புத்தகம் ஒன்றில் ஈடுபட்டிருந்த பரசுராமனுக்கு சற்று வயிற்றுவலி போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. அந்த மாதிரி சமயங்களில் அவர் கொஞ்சம் சுக்கையும் வெல்லத்தையும் கலந்து பொடிசெய்து சாப்பிடுவார்.  அவர் குறிப்பறிந்து பங்கஜம் பொடி செய்து தருவாள்.ஆனால் இன்று பங்கஜம் வீட்டில் இல்லை. அவரே எழுந்திருந்து சமையலறைக்குப் போய் சுக்கையும் வெல்லத்தையும் எடுத்து வந்தார். அதை வைத்துப் பொடி செய்ய ஒரு காகிதத் துண்டு வேண்டியிருந்தது கூடடத்தில் ஒன்றும் தட்டு படாததால் சங்கரனின் அறைக்குள் நுழைந்து மேஜை டிராயரை திறந்தார். வேண்டாத ஒரு காகிதத் துண்டு கூட இல்லை. மேஜை டிராயரை பின்னும் இழுத்தார்.  ஒரு மூலையில் ஒரு கடித உறை தென்பட்டது. கவரின் மேல் எழுதி இருந்த எழுத்து அவருக்கு மிகவும் பரிச்சயமானது. சுந்தரம் தான் எழுதி இருந்தான்.   ஆனால் அவன் சங்கரனின் ஆபீஸ் விலாசத்துக்கு ஏன் எழுதி இருக்கிறான்? எப்போதுமே அவருக்கு தானே எழுதுவான்?.  பரசுராமன் உள்ளத்திலே எண்ண அலைகள் மோதின. ஆவலால் உந்தப்பட்டு கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார், தப்பான காரியம் ஆனாலும்.

வரிகள் ஓட ஓட அவர் கண்களில் இருந்து குபுகுபுவென்று நீர் பொங்கி வழிந்தத. தான் எதற்காக கடுதாசி துண்டை தேட வந்தோம் என்பதை கூட மறந்து விட்டார்.அந்த கடிதத்தை எப்படி இருந்ததோ அப்படியே வைத்து டிராயரை சாத்திவிட்டு தன் இடத்தில் வந்து நிதானமாக உட்கார்ந்தார்.

எத்தனை நேரம் அவர் உட்கார்ந்திருந்தாரரோ தெரியாது. சங்கரன் தம்பதிகள் வந்தபோதுதான் இவ்வுலக சிந்தனை அவருக்கு வந்தது.  சங்கரா என்றார் பரசுராமன். அந்த வார்த்தைகளில் ஒலித்த குழைவும் அன்பும் சங்கரனை திகைப்படைய செய்தன.

சங்கரா நான் ஓர் இடமும் போகப் போவதில்லை.  இந்த ஜென்மத்தை இங்கேதான் கழிப்பதாக உத்தேசம்.  நீயும் பங்கஜமும் என்னை வந்து ஒரு தடவை நமஸ்காரம் பண்ணுங்கள்.  மனம் குளிர ஆசீர்வாதம் செய்ய வேண்டும் போல் இருக்கிறது என்றார்.

தன் தந்தையிடம் காணப்பட்ட மகத்தான மாறுதலுக்கு காரணம் தெரியாமல் விழித்தான் சங்கரன்.

ஆனால் பரசுராமனுக்கு அந்த காரணம் நன்கு தெரியும்.  கடிதத்தில் சுந்தரம் எழுதி இருந்தது இதுதான்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த துர்வாசகிழடை  இங்கு புறப்பட்டு வந்து விட செய்யாதே.  அந்தக்கிழடை  கட்டிக்கொண்டு அழ எங்களால் முடியாது. ஆனால் உலக ஒப்புதலுக்கு இங்கு வரும்படி எழுதி தொலைக்கிறேன். அதை நம்பி புறப்பட்டால் அதை தடை செய்வது உன் பொறுப்பு.   என் மனைவிக்கும் அவருக்கும் ஒத்துக் கொள்ளாது.   நான் அப்பாவை வைத்துக்கொள்வதற்கு என்று அனுப்பும் ரூபாயையும் திருப்பி அனுப்பி விடுகிறாய். ஆகையால் உனக்கு தான் அப்பா மேல் ஆசை அதிகம்.   நீயே அவரை கட்டிக்கொண்டு  அழு!.

தன் முன்னே வந்து நின்ற பங்கஜத்தையும் சங்கரனையும் பரசுராமன் வாழ்த்தக்கையெடுத்தார்.  ஆனால் வாழ்த்த எடுத்த கைகள் அவரை அறியாமலே அவர்களை வணங்கி விட்டன.

(1965 ஆம் வருடம் வெளிவந்த  "ரேடியோ ரஞ்சனி" என்ற பெயரில் என் தந்தை திரு கோமதி ஸ்வாமி நாதன் எழுதிய கதை தொகுப்பிலிருந்து ஓர் கதையின் மறு பதிவு)

No comments:

Post a Comment