Friday, January 14, 2022

லைகாசா'வில் அப்புசாமி

 'லைகாசா'வில் அப்புசாமி!

இப்போதெல்லாம் ரேடியோ, தூர்தர்ஷன்ல கூட 'காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு' வருவதில்லை. இல்லையென்றால்,

"பெயர் : அப்புசாமி,

வயது : 87,

மாநிறம்,

சாதா உயரம்,

கையால் துவைத்துக் காயப்போட்டு அயர்ன் பண்ணாத பழுப்பு நிற ஜிப்பா,

அதைவிட பழுப்பான வேட்டி,

கையில் மூக்குப்பொடி போட்டு துடைத்து அழுக்கேறிய கர்ச்சீஃப்,

முகத்துக்கு கொரோனா மாஸ்க் அணியவில்லை..!" என்று விளம்பரமாவது தரலாம்.

இந்த சோஷியல் மீடியாவில் 'அப்புசாமியைக் காணவில்லை' என்று ஆட் குடுத்து அவரை ஃபேமஸாக்க மனமில்லை சீதா பாட்டிக்கு. "இந்தப் பாவி மனுஷன்..! வேர் இஸ் ஹீ ஹைடிங்..ன்னே தெரில்ல..?! இவரோட கிங்கரப் பட்டாளம் எல்லாம் கூட 'ஹைடவுட்ல நாட் ரீச்சபிளா' இருக்கா..!" என்று புலம்பினாள் பாட்டி.

அப்புசாமி தாத்தா, "இனி.. இந்த வீட்டில் ஆவுறதில்லை.. கூறாமல் சன்யாசம் கொள்..! நமக்கென்று ஒரு நாடு..! நமக்கென்று அதில் மக்கள்..!!" என்று தனது

சகாக்களோடு தீவிரமாக ஆலோசித்துக்கொண்டிருந்த நேரமது.

"முதல்ல மல்லையாட்ட பேசி ஒரு குட்டித் தீவை வாங்கணுண்டா..!" என்றார் அப்புசாமி.

அதற்கு, "ஒரு குட்டி ஏம்பா..?! நீறீய குட்டீங்க கீறமேறி வாங்குபா..!" என்ற மன்னாரிடம், "ஆமேல.. மல்லையா ஏனு மாடுதாரே..?" என்றார் பீமாராவ்.

"தாத்தா..! நம்ம தீவு நாட்டுக்கு 'வைகுண்டா'ன்னு பேர் வைக்கலாமா..? 'கைலாசா' மாதிரி 'வைகுண்டா'ன்னா நிறைய ஸ்ரீரங்கம் இன்வஸ்டர்ஸ கவரலாம்.." என்று

ஐடியா கூறினான் ரசகுண்டு.

"அண்டா.. குண்டா..ல்லாம் வேண்டாண்டா..! விட்டா 'ரசகுண்டா'ன்னு வைக்கணும்பியே..! நமது புதிய தேசம் இன்று முதல் 'லைகாசா' என்று அழைக்கப்பட்டும்.." என்று அதிரடியாக அறிவித்தார் அப்புசாமி.

"அல்லாருக்கும் 'லைக்'காற மேரி வச்சிக்கீறே பா..!" என பக்கிரி பாராட்டினான்.

"முதல்ல நம்ம பேரை எல்லாம் மாத்தணும்.. நான் ஸ்வாமி ஸ்மைலானந்தா..! நீ லைக்கானந்தா..! பீமா ஷேரானந்தா..! மன்னாரு கமண்டானந்தா..!" என்று அப்புசாமி அடுக்கினார்.

உடனே ரசகுண்டு, "அப்போ பக்கிரி ட்ரெண்டானந்தாவா..?!" என்றதும், "இல்லை..! ஃப்ரெண்டானந்தா..!" என்றார் அப்புசாமி.

"லேடீஸ்க்கு.. மா லைக்கானநந்தமயீ..! மா ஷேரானந்தமயீ..! தானே ஸ்வாமி..?!" என்று ரசகுண்டு கேட்க அனைவரும், "ஸ்மைலானந்தம்..! ஸ்மைலானந்தம்..!!"

என்று பரவசத்துடன் கூவி மகிழ்ந்தனர்.

அடுத்து, "நம்ம நாட்டுக்குள்ள வர தனி பாஸ்போர்ட் வைக்கணும் ஸ்வாமி..!" என்றான் ரசகுண்டு.

அதற்கு, "அதேனோ..! கிரீன்கார்டோ.. ப்ளுகார்டோ.. கண்டிதாபேக்கு..!" என்று பீமாராவ் அலட்டினார்.

"நம்ப சாமிய மருத மடத்துக்கு அஜிஸ்ஸண்டு சாமியா அப்பாய்ண்டு பண்ணிகிறாங்கபா..!" என்ற மன்னாரிடம், "ஷோக்கா சொன்னே போ..! சாமி தங்கத்துல சிம்மாசனம் வேற கேக்குமே..! இப்போ தங்கம் விக்கற விலைக்கு எங்க போக..?!" என்றான் ரசகுண்டு.

"பட்டாபிஷேகதப்போ பித்தளையில செஞ்சு தங்க முலாம் பூசிக்கலாம்..! டி.நகர் மூசா தெருல ஒரு சேட்டு பக்தன் இருக்கான்..! அவன் செஞ்சு தருவாண்டா..!"

என்றார் அப்புசாமி.

"நீ கண்டி.. 'சாரலடிக்குது.. சன்னல சாத்து..! கதவ தொற.. காத்து வர்ட்டும்..! சுயிச்ச போடு.. லைட்டு வரும்..!'ன்னு நெட் ப்ளாகுல எயுதினே.. படா

பேமஸாயிடலாம்பா..! சும்மா டொனேசன் பிச்சிக்கும்பா..!" என்றான் பக்கிரி.

"இதென்னடா..?! 'மின்னலடிகுது.. கண்ண மூடு..! மூக்கரிக்குது பொடீய போடேய் ..!'ன்னு இன்னும் ஏகப்பட்டது திங்க் பண்ணி வெச்சிருக்கேண்டா.." என்றதும் அனைவரும் கோரஸாக, "ஸ்மைலானந்தம்..! ஸ்மைலானந்தம்..!!" என்று பரவசப்பட்டனர்.

"நம்ம 'லைகாசா' நாட்டு கரன்சிய எப்போ ஸ்வாமி வெளியிடுவேள்..?" என்ற ரசகுண்டுவிடம், "அதெல்லாம் ரெடியாகிதே..! தீபாவளி ரிலீசு..!" என்றார் பீமாராவ் உற்சாகமாக.

"நீ கண்டி உன்க்கு சுளூவா பேர வச்சிகின சாமீ..! எங்க பேரே வாயில நுயலபா..!" என்ற மன்னாரை பக்தர்கள் எல்லோரும், "ஸ்மைலானந்தம்..!

ஸ்மைலானந்தம்..!!" என்று கூவி ஆஃப் செய்தனர்.

"சாமீ..! நம்ம 'லைகாசா'ல நாஸ்தா கட தொறக்க மருதலேந்து ஆன்லைன்ல அப்ளை பண்ணிகிறாங்கோ..! அத்தொட்டு ஆர்டர குட்தா.. நாஸ்தா துண்ண பேஜாரில்லாம போகும்பா..!" என்றான் பக்கிரி.

அதற்கு, "நீவு பேஜார் மாட பேடீ..! 'லைகாசா நாஸ்தா பவன்' பேரு ஸ்வாமி கொட்டிதாரே..!" என்றார் பீமாராவ்.

ரசகுண்டுவோ, "கொரோனா ஃப்ரீ 'லைகாசா'ன்னா கூட்டம் அள்ளும் ஸ்வாமி..! அப்படியே இங்க எந்த ஸ்மிருதியும் இல்லைன்னுட்டா.. நிறைய பேர் அப்ளை

பண்ணுவாளே..!" என்றதும், "அவாளுக்கும் கொரோனாவாமே..! ப்ச்ச்.. பாவம்..!" என்று திடீரென்று அப்புசாமி எதிர்க்கட்சி தலைவரானார்.

இப்படி 'லைகாசா'வே அல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிருக்கும்போது, பொன்னம்மா டேவிட்டும் தன் பங்கிற்கு சீதா பாட்டிக்கு ஃபோன் செய்து, "ஹாய் சீத்..! ரீஸண்டா 'லைகாசா'லேர்ந்து ஸ்வாமி ஸ்மைலானந்தா இங்க பார்பர் ஷாப்ல லைப்ரரி வெச்சிருக்கிறவர் கிட்ட ஹேம் ரேடியோல கூப்பிட்டுப் பாராட்டிப்

பேசினது நெட்ல ரொம்ப ட்ரெண்டாயிண்டிருக்கே..! நீ பாத்தியோ..?!" என்று வெறுப்பேற்ற, "நோ..! ஐ ஹாவ் நோ ஐடீயா!..' என்று ஃபோனை கட் செய்தாள் சீதா பாட்டி.

அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். படத்தில் தான் ஹீரோயின் கனவு காண்பார். அதுபோல அப்புசாமி தாத்தா பற்றிய கனவிலிருந்து, "ஹௌ ஸில்லி..?!" என்று

சட்டென எழுந்து அமர்ந்தாள் சீதா பாட்டி, சிதம்பரத்துக்கு போராடப் போய், கைதாகிக் கலவரமான குஷ்பு போல!

- ர.ர.

(Ragunathan Rangarajan)

No comments:

Post a Comment