Friday, January 14, 2022

மனதோடுமலர்கள்_46

மனதோடுமலர்கள்_46

அத்யாயம் 46

கதையாசிரியர்: பாஸ்கர் சத்யா 

திருச்சி பஸ்களுக்கு அன்று கிராக்கி. அப்பா யாரிடமோ பேசி மாலதிக்கு 11 மணி வண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டார். சரியாக ஒன்றரை மணி நேரம் இருந்தது பஸ் கிளம்ப.

'அப்பா, நீங்க வேணா ஆத்துக்கு போங்கோப்பா. நான் பாத்து ஏறிக்கிறேன்.'

'எத்தனை நாழி தனியா இருப்பே. பஸ் கிளம்பட்டும். அதுவரை இருக்கேன்.'

'கவலைப் படாதீங்கோப்பா. எல்லாம் சரியாயிடும். அண்ணா ஏதோ கோபத்தில சொன்னத பெரிசு பண்ணாதீங்கோப்பா'.

'எனக்கு ஒண்ணுமில்லை டி. உங்க மூணு பேரையும் அவன் பேசினதைத்தான் ஏத்துக்க முடியல.'

'விடுங்கோப்பா. என் மேலையும் தப்பு இருக்கு. நானும் அவசரப் பட்டிருக்க கூடாது. எல்லாருக்கும் சுய கௌரவம்னு ஒண்ணு இருக்கோன்னோ.'

'ஹாஸ்டல்ல தனியா வேற இருக்க. இதெல்லாம் போட்டு குழப்பிக்காத. ஆத்துக்கு போய் அவன் கிளம்பறத்துக்குள்ள சமாதான படுத்த பார்க்கிறேன். இல்லைன்னா, நாம ரெண்டு பேர்தான் மாப்பிள்ளை ஆத்துக்கு போய் அடுத்த சனி ஞாயிறு பேச வேண்டியிருக்கும்படியா இருக்கும். நல்ல வரனா தெரியறது.  முடிச்சுடலாம்.'

'அண்ணாகிட்ட நான் வருத்தப் பட்டு மன்னிப்பு கேட்டதா சொல்லுங்கோப்பா. அண்ணு மாமிய சமையக்காரி, மொட்ட மாமின்னு அண்ணா சொன்னதால என்னால பொறுக்க முடியலப்பா. நானும் அதனால அதிர்ந்து பேசிட்டேன்'.

'அடி அசடே.  இதுக்குப் போயி வருத்தப்படாத. பொறுப்பா இருக்கறவனா இருந்தா இத்தனை நேரம் முனைப்பா இருந்திருப்பான். நான் தான் போனதடவையே சொன்னேனே அவன நம்பி பிரயோஜனம் இல்லைனு. அவன் சுயநலமா இருக்கான். என்ன பண்றது?'

'அவா வேற மெட்ராஸுல கல்யாணத்த வெச்சுக்க சொல்றாளேப்பா? முடியுமா?'

'ஏதோ சமாளிக்க வேண்டியது தான். இங்க வெச்சிக்கறதும் அங்க வெச்சிக்கறதும் தானிக்கு தீனி சரியாத்தான் இருக்கும் செலவ பொருத்த மட்டுல'.

'அண்ணா சமாதானமாகி வந்தா கூட நானும் வரேம்பா அவா கிட்ட பேச. அண்ணு மாமியும் பக்கத்தில இருந்தா கொஞ்சம் நமக்கும் தெம்பா இருக்கும்ப்பா.  ஜானாவையும் கவலைப் படாம இருக்க சொல்லுங்கோப்பா. அவ இன்னிக்கு ரொம்ப அப்செட்'

'புரியறது. யாரத்தான் சமாதானப் படுத்தறதுன்னு தெரியல. உன்ன வேற கஷ்டப்படுத்தும்படியா இருக்கு.'

'இதுல என்னப்பா கஷ்டம் எனக்கு?'

'அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேண்டி. அநேகமா ட்ரான்ஸ்பார்மர் டெண்டர் அப்பாக்கு அலாட் ஆயிடும் இன்னும் பத்து நாளுல. அட்வான்ஸும் கொடுப்பா. கல்யாணத்தை எவ்வளவு சீக்கிரம் வேணாலும் வெச்சுக்கலாம். முதல்ல பத்து ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் எரெக்ட் பண்ணனும்னாங்க. இப்ப இருபது வேணும்கறாங்க. ஜாப் கிடைச்சுதுன்னா நம்பிக்கையா மூணு பேர் கல்யாணத்தையுமே முடிச்சுடலாம், கையில இருக்கிற பணத்தையும் வெச்சிண்டு.'

'அப்பா, ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்கோ. எலக்ட்ரிகல் வேலைப்பா. ஜாக்கிரதை. வயசு வேற ஆயிண்டே இருக்கு உங்களுக்கு. உடம்பு முக்கியம்.'

வண்டியில் ஏற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

'நாளைக்கு ஃபோன் பண்றேன். ஜாக்கிரதையா போயிட்டு வா.'

'நீங்க பத்திரமா கிளம்புங்கோப்பா.'

கண்ணீர் இருவருக்கும்.

அன்றைய பயணம் ஒரு கண்ணீர் பயணமாகவே இருந்தது. திரும்பத் திரும்ப அண்ணா சண்டை போட்டதை நினைத்தே அந்த மலர் மனதோடு பேசிக் கொண்டே சென்றது.

'எல்லாம் நல்லபடியா முடித்துக் கொடுத்து பெத்தவாளுக்கு நிம்மதிய கொடுடி சமயபுரத்தாளே.'

அவளுக்கு பிரத்யக்ஷ தெய்வம் அவள்தானே.

தொடரும்

No comments:

Post a Comment