#கோலமயில்
சிறுகதை
அலாரம் அடித்தது. அலாரத்தை நிறுத்தினாள் மைதிலி.
"மணி என்ன?"
"மணி 3.00 அம்மா."
"இப்பவே ஏன் எழுந்துக்கறே? 4.30 மணிக்கு எழுந்தா போதாதா?"
அந்தப் பெரிய வீட்டின் சமையற்காரம்மா தன் மகள் மைதிலியிடம் கேட்டாள்.
"இல்லை மா. இன்னிக்குப் பெரிய கோலம் போடணும். கலர் பொடி தூவணும். எப்படியும் 1.30 மணி நேரம் ஆகும். இப்ப எழுந்தாத்தான் வாசல் பெருக்கித் தண்ணி தெளிச்சி கோலம் போட சரியா இருக்கும். போட்டிக்கான கோலமாச்சே!"
எழுந்துகொண்டாள்.
பொங்கலையொட்டி நான்கு ராஜவீதிகளிலும் 'கோலமயில்' கோலப் போட்டி அறிவித்திருந்தார்கள்.
வெளிவாசல் விளக்கு போட்டுவிட்டு பக்கெட் தண்ணீரும் துடைப்பமுமாக வெளி வாசலுக்கு வந்தவள் பெருக்கிவிட்டு பிளாஸ்டிக் மக்கில் தண்ணீரை எடுத்துக் கைஅணைத்து அடித்துத் தெளித்தாள்.
ஒரு தட்டில் வெவ்வேறு நிறங்களில் கோலமாவுகள் இருந்த கிண்ணங்களை அடுக்கி வைத்து எடுத்து வந்து புள்ளி வைக்க ஆரம்பித்தாள்.
அழகழகாய்ப் பூக்களும் அன்னங்களும் கிளிகளும் அவள் கைகளில் ஜனனம் எடுத்தன.
பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா?"
குரல் வந்த திசையில் பார்த்தாள். யாரோ பனிக்குல்லாயும் மாஸ்க்கும் போட்டுக்கொண்டு ஜாக்கிங் போய்க்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
கோலம் போட்டு முடியவும் வீட்டின் உள்ளே இருந்து வீட்டு எஜமானி அம்புஜம் எட்டிப் பார்த்து, "பரவாயில்லையே! நான் எதிர்பார்த்த மாதிரியே அழகா போட்டிருக்கே. சரி மைதிலி, நீ உள்ளே போ. அவங்க எல்லாம் வர்ற நேரம். நான் பாத்துக்குறேன்."
வந்தவள், கோலத்தின் அடியில் தனது பெயரை எழுதினாள்.
"என்னங்க! இங்கே வாங்க."
உள்ளே இருந்து அவள் கணவன் வெளியே வந்தான்.
"நான் கோலம் போடற மாதிரி நிக்கிறேன். அப்படியே ஒரு ஃபோட்டோ எடுங்க."
"ஆஹா..என்ன அழகான கோலம்!
இப்பத்தானே எழுந்து குளிச்சிட்டு அலங்காரம் பண்ணி வெளியே வந்தே?
நீ எப்ப போட்டே?"
"உங்கள போட்டோ மட்டும் தான் எடுக்கச் சொன்னேன். கேள்வி எல்லாம் கேக்கப்படாது."
ஒரு கோலமாவுக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு குனிந்து கோலம் போடுவது போல் போஸ் கொடுத்தாள்.
"க்ளிக்"
போட்டோ எடுத்தான் கணவன்.
"ஆ..! இங்கே சித்த வாங்கோ."
"இங்க தானேடி நிக்கிறேன்."
"ஐயோ, நிமிர முடியலைங்க. வந்து கைத்தாங்கலா தூக்கி விடுங்கோ."
"உனக்கெல்லாம் ஏம்மா இந்த ஆசையெல்லாம்? இப்பப் பாரு இடுப்பு பிடிச்சுகிச்சி."
"இதான் சாக்குன்னு ஓவரா பண்ணாதீங்க.
கோலங்களைப் பாக்குற ஜட்ஜஸ் வர்ற நேரம். போங்க போயி அந்த அமிர்தாஞ்சனமோ அயோடக்ஸோ எதாவது எடுத்தாந்து கொஞ்சம் பூசி நீவி விடுங்கோ. சீக்கிரம்."
"ஏம்மா, அக்கம் பக்கத்துல இருக்கறவங்களுக்கு யார் இதைப் போட்டாங்கன்னு தெரியாதா?"
"அவங்கெல்லாம் அஞ்சு மணிக்கு மேலதான் வெளியே வந்தாங்க. அதுக்குள்ளே நம்ம வீட்ல கோலம் போட்டு முடிச்சாச்சு. யாரும் பாத்திருக்க சான்ஸே இல்லை. பாருங்க. எல்லாரும் இப்பதான் போட்டுட்டே இருக்காங்க. ஏங்க, உங்க மனைவிக்கு 'கோலமயில்' பட்டம் கிடைச்சா உங்களுக்குப் பெருமை இல்லையா?"
"சரி. ஒரு முடிவோடதான் இருக்கே. ஒன் ஆசை அப்படியாச்சும் நிறைவேறட்டும்."
மணி 6.30.
தெருக் கோடியில் மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் அடங்கிய குழு ஒன்று கோலங்களைப் பார்த்து மதிப்பெண் போட்டுக்கொண்டு வந்தது.
கோலம் போட்டவரைத் தவிர மற்றவர்கள் கோலத்தின் அருகே நிற்கக் கூடாதென்று முதலிலேயே அறிவுறுத்தப்பட்டிருந்ததால் எல்லா வீடுகளின் முன்பாகவும் கோலம் போட்டவர்கள் மட்டுமே நின்றிருந்தார்கள்.
கோலங்களைப் பார்த்துக்கொண்டே வந்தவர்கள் இந்தக் கோலத்தின் முன் வந்து நின்று அப்படியே பார்த்த பார்வையை அகற்றாமல் கண்களை விரித்துப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
கோலத்தின் அருகே நின்று கொண்டிருந்த அம்புஜத்திடம் ஏதோ கோலத்தைப் பற்றிக் கேட்க அவள் எல்லாவற்றுக்கும் மழுப்பலாக பதில் கூறி ஒருகட்டத்தில் "ஏங்க நானே கோலத்தில பேரெழுதி இடுப்பு பிடிச்சிட்டு வலியோட நிக்கிறேன். நீங்கதான் கோலத்தில Experts ஆச்சே. நீங்களே எல்லாத்தையும் பாத்துக்கங்க."
அப்போது அங்கே வந்த இளைஞன் ஒருவன் அந்த ஐந்து நீதிபதிகளுள் வயதான ஒருவரிடம் ஏதோ மெல்லிய குரலில் கூற, அவர் அம்புஜத்திடம் "கொஞ்சம் குடிக்கத் தண்ணி கிடைக்குமா?" என்று கேட்டார்.
"மைதிலி! குடிக்கக் தண்ணி கொண்டு வா!" என்று குரல் கொடுத்தாள்.
"பூ வரையும் பூங்கொடியே.." என்ற பாடலை 'ஹம்' பண்ணியபடி அந்த இளைஞன்.
மைதிலி வாட்டர் பாட்டில் எடுத்துக் கொண்டு வந்து தர, அவர் அதை வாங்கிக் குடிக்கையில் தண்ணீர் கோலத்தின் மீது சிந்தி, அந்த இடத்தில் கோலம் கலைந்தது.
அதைப் பார்த்த அம்புஜம் எதுவுமே நடக்காதது போலிருக்க, மைதிலி ஓடிப்போய் அந்த வண்ணப் பொடியை எடுத்து வந்து கலைந்த இடத்தைச் சரிசெய்தாள்.
"இது எத்தனை புள்ளி மா?"
"33. சந்துப் புள்ளி. ஆறு வரிசை, ஆறு புள்ளியில நிறுத்தணும்."
அனிச்சையாக மைதிலி பதிலிறுத்தாள்.
"இந்தக் கலர் வித்தியாசமா இருக்கே. இந்தக் கலர் தனியா வருதா?"
"இல்லை. இந்த ரெண்டு கலரையும் கலந்தா இந்தக் கலர் வரும்."
"பக்கத்து சின்ன கேட்டில போட்டிருக்கே அந்தக் கோலம்.."
"அது 3D கோலம்"
"மைதிலி! நீ உள்ளே போ."
நீதிபதிகள் அடுத்த வீட்டிற்கு நகர்ந்தார்கள்.
மற்ற கோலங்களை எல்லாம் வேகமாகப் பார்த்துச் சென்றுவிட்டனர்.
அடுத்த நாள் கோலப் போட்டியில் முதல் பரிசு பெற்ற வீட்டு உரிமையாளர் பெயர் அம்புஜம்; 'கோலமயில்' மைதிலி என்ற அறிவிப்பு வெளியாயிற்று.
**
#லீலா
04/01/2022
நன்றி: ஓவியம் திருமதி. Radhai Sairam
No comments:
Post a Comment