Sunday, January 9, 2022

மனதோடுமலர்கள்_35

மனதோடுமலர்கள்_35

அத்யாயம் 35

அம்மா அடுப்பறைக்குள்.

லலிதா ரேழி உள்ளில் தலைகுப்புற படுத்து தலையணையில் அழுது கொண்டிருந்தாள்.

அப்பா யாரையோ பார்த்து விட்டு வருவதாக மாலதியிடம் மட்டும் கூறிவிட்டு வெளியே கிளம்பினார்.

மாலதி சற்று ரேழி உள் கதவை சாத்திவிட்டு லலிதாவிடம் மெல்லிய குரலில் பேச்சை துவக்கினாள்.

'என்ன லல்லு, என்ன கோபம்? ஏன் அழற?'

'என்ன கொஞ்சம் தனியா இருக்க விடறியா?'

லல்லுவின் கோபத்தை அன்றுதான் பார்த்தாள் மாலதி.

புதிதாக இருந்தது அவளுக்கு.

விடவில்லை மாலதி.

'என் மேலயா கோபம்? ஆசையா உங்களெல்லாம் பார்க்கறதுக்கு வந்தா, இப்படி பண்ணலாமா. என்னன்னு சொன்னாதானே, நான் அதை தீர்க்க முடியும்?'

'யார் அண்ணு மாமி? யார் சந்துரு? அவா ரெண்டு பேருக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்? ஏன் எங்க கிட்டயெல்லாம் நடிக்கிர'.

புரிந்து விட்டது மாலதிக்கு. அவள் பையில் ஒளித்து வைத்திருந்த கடிதத்தை இவள் பார்த்திருக்க வேண்டும். ஒரு கணம் திகைப்பு. 

மறு கணம், 'ச்சே, என்ன காரியம் செய்துவிட்டோம்?' என்று தன்னைத்தானே. பயம் வேறு சற்று, இவள் இதை பெரிது படுத்தி விட்டால்?

பேச்சு வரவில்லை சற்று. மௌனமே லல்லுவுக்கு பதிலாக இருந்தது.

சுதாரித்துக் கொண்டாள் மாலதி. 

ஒரு நாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் இதைப் பற்றி பேசித்தானே ஆகவேண்டும். இன்று நடக்கும் என்பது அவள் எதிர்பாராத ஒன்று.

'கடுதாசிய படிச்சயா?'

'ஏன்? படிக்கக் கூடாதா. படிச்சோண்ணதானே நீ எப்பேர்பட்ட நடிகைனு தெரியறது. சும்மா, அப்பா அம்மா அக்கானு எங்களையெல்லாம் ஏமாத்திண்டிருக்கறது தெரிஞ்சு போச்சேங்கிற பயம் உனக்கு இப்ப. நீ குடுத்தனமே நடத்தறையோ என்னவோ, யார் கண்டா?'

எரிச்சல் கலந்த சிரிப்பு.

'இதுக்கு தானே உன் கோபம்? நீ இது சம்மந்தமா கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டா உனக்கு கோபம் போயிடுமோன்னோ?'

இப்போது லல்லு மௌனம்.

'பதில் சொல்றேன். கண்டிப்பா எல்லாத்தையும் சொல்றேன். பட் ஒன் ப்ராமிஸ். நீ அதுவரைக்கும் யார் கிட்டேயும் சொல்லக் கூடாது. எப்படியும் தெரியத்தான் போகப் போறது. நானே நேரம் வரும்போது சொல்லிக்கறேன். ஒன் மோர், இது பப்ளிக்கா எல்லார் கிட்டேயும் பேசமுடியாத விஷயம். அதனால, திஸ் இஸ் நாட் தி ப்ளேஸ். புரிஞ்சுக்கோ. சாயந்திரமா நாம ரெண்டு பேரும் வெளிய போகலாம். அப்ப சொல்றேன் உனக்கு எல்லாத்தையும். அது வரைக்கும் பொறுமையா இரு. எப்போதும் போல என் கிட்ட பேசிண்டிரு'.

இதை மாலதி சொன்னவுடன் பொல பொலவென்று கண்ணீர் லல்லுவிடமிருந்து. தோளில் சாய்த்துக் கொண்டாள் அவளை மாலதி.

'ஒன் திங் லல்லு. இந்த வீட்டு கௌரவம் என்னால கெடாது. நான் அதற்கு இடம் கொடுக்க மாட்டேன். நீ இத பெரிசுதான் படுத்துவேன்னா, ஐ வோண்ட் பி வித் யூ ஆல்.'

கடைசியாக சொன்னது லல்லுவை என்னவோ பண்ணியது.

'அப்படியெல்லாம் பேசாதடி. நீ சொல்ற வரைக்கும் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்.

நீங்க ரெண்டு பேரும் ஜோஸ்யர பார்க்க போனபோது, எதேச்சயா உன் பைய பார்த்தேன். ஸிப் தொறந்திருந்தது. அத மூடலாம்னு போகும் போது, அந்த கவர் இருந்தது. ஜாதகத்தை தான் விட்டுட்டு போயிட்டேளோன்னு நெனச்சு, திறந்து பார்த்தேன். அப்பதான் இந்த லெட்டரை படிக்கும்படியா ஆச்சு. வான்டனா படிக்கலை டி'

'தட்ஸ் ஓகே. தப்பு என் பேரிலும் இருக்கே. நான் இந்த லெட்டரை இவ்வளவு அஜாக்கிரதையா ஹாண்டில் பண்ணியிருக்க கூடாது. உன் சந்தேகங்களை போக்கிட்டா போறது. மாலதிய புரிஞ்சிக்க மாட்டியா என்ன?'

'ஏண்டி லல்லு, ரெண்டு முந்திரிப் பருப்ப கேசரியில போட்டிருக்கலாமே?' என்று கேட்டுக் கொண்டே அம்மா வந்தாள் ரேழி ரூமுக்கு.

கண்களை துடைத்துக் கொண்டிருந்தாள் லல்லு.

'என்ன கோபமாம் திடும்னு?'

'ஒண்ணுமில்லேம்மா. நார்மலாயிட்டா'

'இந்த வீட்டிலே யாராருக்கு என்னன்ன வரும்னே யூகிக்க முடியல. எல்லாமே விசித்திரமா இருக்கு'

வெள்ளேந்தியா புலம்பிக் கொண்டே சென்றாள் வாசலுக்கு.

'இங்க இருந்த பிராமணர் எங்கே போனார்? ஒரு வார்த்தை கூட சொல்லிக்காம அப்படி என்ன எழவோ?'

'அம்மா, அப்பா யாரையோ பார்த்துட்டு வரதா சொன்னாம்மா. நான் தான் மறந்துட்டேன் ஒன் கிட்ட சொல்ல.

'சமச்சதெல்லாம் ஜன்னி கண்டிண்டு இருக்கு. நீங்களாவது சாப்பிட வாங்கோ. அந்த பிராமணன் என்னிக்குத் தான் வேளைக்கு சாப்பிட்டிருக்கார்?'

மாலதி விருட்டென்று எழுந்தாள். தட்டுகள் சப்தம். எல்லாம் ரெடி.

சாப்பிடத்தான் பிடிக்கவில்லை லல்லுவுக்கும் மாலதிக்கும்.

'இப்படி சாப்பிவேள்னு தெரிஞ்சிருந்தா சமைச்சிருக்கவே வேண்டாம். நம்மாத்துல ஒழுங்கா வேளைக்கு வந்து சாப்பிடறது ராப்பிச்சை காரன்தான். கொட்டறேன் அவன் தட்டுல. வாழத்திட்டாவது போவான்.'

சாப்பிட்டு முடித்தார்கள். அம்மா சற்று கண் அசந்தாள்.

'கொஞ்சம் தூங்கு லல்லு. எதையும் மனசில போட்டுக்காம. சாயந்திரம் மலையடிவாரம் பக்கம் போய் பேசுவோம்.'

மாலுவுக்கு தூக்கம் வரவில்லை, படுத்துக் கொண்டிருந்தாலும். இவளிடம் எப்படி சொல்வது, புரிய வைப்பது என்று.

'சந்துரு அம்மா எழுதியிருந்தாளே, லெட்டர படிச்சுட்டு கிழிச்சுடுண்ணு. அம்மா லெட்டரை கிழிக்கறதான்னு நெனச்சது தப்போ? எப்படி கொண்டு விட்டுருக்கு இப்ப?'

தொடரும்

No comments:

Post a Comment