அத்யாயம்:9 .. செருவாமணி
Written by Baskar Sathya
நந்தினி குலக்கொழுந்து. அவளுக்கு அவள் பெயரின் பின்னால் ஒரு பட்டத்தை சுமக்க வைத்து அழகு பார்க்கணும். அவளை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும். அவளைப் பார்க்க இவர்கள் போகவேண்டும். அவள் பெத்துப்போடும் பேரன் பேத்திகளை கொஞ்சிக் கொண்டே இருக்க வேண்டும். சதா இதே ஸ்மரணை. எல்லா பெற்றோருக்கும் இருப்பது போல இவாளுக்கும் இருப்பது இயற்கை தானே.
அவள் ஸ்கூல் படிக்கும்போது காலேஜ் சிந்தனை. காலேஜ் படிக்கும்போது அவளுடைய கல்யாண சிந்தனை. கல்யாணம் முடிந்தவுடன் பேரப்பிள்ளைகள் சிந்தனை. பிறகு அவளுக்கு இந்த சொத்து, பேரப் பிள்ளைகளுக்கு இந்த வீடு, வாசல். இந்த அம்மா அப்பாக்களால் எப்படித்தான் பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளுடனேயே வாழ முடிகிறதோ?
அதிலும் எல்லாக் கனவுகளிலும் சந்தோஷ எதிர்காலங்கள் மட்டுமே. சுகம் துக்கம் சேர்ந்தது வாழ்க்கை என்பதை அறிந்திருந்தாலும் இவர்கள் கனவுகளில் மாத்திரம் துக்கங்களை சேர்ப்பது இல்லை. அது வரவே வராது என்பது நினைப்பு.
'பொழச்சு கிடந்தா, நல்ல மாப்பிள்ளையா செல்ல குட்டிக்கு கெடச்சு ஜாம் ஜாம்னு கல்யாணத்த பண்ணனும்.'
'கொள்ளுப் பேரனையும் பேத்தியையும் பார்த்துட்டா அக்கடான்னு போய் சேர்ந்துடலாம்.'
இப்படி ஆரம்பிக்கற தர்மாம்பாள் கனவுகள் அத்தோட நின்னுடுமா என்ன? கொள்ளுப் பேரன் பொறந்தோன ரெடியா இன்னொரு அப்ளிகேஷன் ஸ்வாமி கிட்ட.
'எப்படியாவது கொள்ளுப் பேரன் பூணல் கல்யாணத்த பாத்துடணும். அப்புறம் எமதர்மனிடம் நானே பாசக்கயிற கொடுத்து என்னை அழச்சுண்டு போகச் சொல்லிடுவேன்.'
இப்படி ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் தன் ஆயுசையும் கூட்டிக் கூட்டி கனவுகள். ப்ரேமை கூடிக் கொண்டிருந்தால் பூலோகத்துலேந்து போவதற்கு மனமே வராது.
ஆனால் பகவான் சும்மா இருப்பாரோ. பத்து வருடத்துக்கு முன் குடும்பத்துக்கு சுனாமிய கொடுத்ததோடு சரி. எத்தனை வருஷமாச்சு? ஒரு குட்டி புயலையாவது கொடுக்க வேண்டாமா?
கொடுத்தான். தர்மாம்பாள் உயிரை எடுத்தான். விசாலத்துக்கு நல்ல மாமியார் போனாள், பாலுவுக்கு அம்மா, நந்தினிக்கு பாட்டி.
நேத்திக்கு நந்தினியை மடியில் படுக்க வைத்து கதை சொல்லிக் கொண்டிருந்தாள். இன்னிக்கு ஹாலுல ஜடமா, மூச்சு இல்லாம, ஊதுபத்தியையும் விளக்கையும் பக்கத்துல வெச்சிண்டு.
பாமணி ஆத்தாங்கரை பாலத்தை தாண்டி இருக்கிரு மயானத்துக்கு பயணம் இன்னும் சித்த நாழில.
'நல்ல மாமி. எப்பப் பார்த்தாலும் வாயெல்லாம் சிரிப்பு'.
'பேத்தி கல்யாணத்தையாவது பார்த்துட்டு போயிருக்கலாம்'.
'நமக்கு எத்தனை வயசானாலும் அம்மா இல்லைனா எல்லாத்தையும் இழந்த மாதிரிதான். செருவாமணி ஐயர், ஆத்துக்காரிக்கும் குழந்தைக்கும் தைரியம் சொல்லுங்கோ.'
'மாமியார் மாட்டுப் பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்னு அடிக்கடி சொல்லிண்டிருப்பேன். என் திருஷ்டியே இருக்கும்.'
'நந்து குட்டி நந்து குட்டினு வாய் ஓயாம கூட்டுண்டே இருப்பா. பாவம், பேத்தி.'
அவரவர் சொல்ல வந்த ஆறுதல்கள் சம்பிரதாயமாக முடிந்தன சடங்குகளோடு.
நந்தினி மாத்திரம் கொஞ்சம் டைம் எடுத்துண்டா. அவளை சமாதானப் படுத்தறது சில சமயம் கஷ்டமாவே இருந்தது.
பத்து பாத்திரத்த பளிங்கு மாதிரி தேச்சுபுட்டு அந்த ஈர இடுப்புல தலை வெச்சு படுத்துக்கறதுல்ல நந்தினிக்கு அலாதி சுகம். தர்மாம்பாளும் அதுக்காகவே அவ ஸ்கூல் விடற நேரத்துக்கு ஏத்தமாதிரி டையத்த பார்த்து பத்து பாத்திரத்த தேச்சுட்டு வாசலுக்கும் ஊஞ்சலுக்குமா குட்டி போட்ட பூனை மாதிரி அலை பாஞ்சிண்டிருப்பா.
தூரத்துல நாலு கொழந்தைகளோட நந்தினி வரதை எப்படியோ இந்த கிழக் கண்கள் கண்டுபிடிச்சிடும்.
'பால் குடிச்சாத்தான் தட்டை கொடுப்பேன்.' என்று பேத்தியோடு மல்லுக்கு நிற்பாள். ஆனாலும் தட்டை முதலில் ஜெயித்து பாலுக்கு ஒரு ஹைட் அண்ட் ஸீக் விளையாட்டு.
காலில் அடிபட்டது போல ஒரு ஆக்ஷன் பாட்டி கிட்டேந்து. மனசு கேட்காமல் என்ன ஆச்சோன்னு பார்க்க வந்து பாட்டியிடம் மாட்டிக் கொள்வாள்.
சாயந்திரம் நாலுலேந்து ஐந்து வரைக்கும் பாட்டி பேத்தி விளையாட்டு.
எல்லாத்தையும் ஒரே நாளில் இழப்பது? ஸ்கூலிலேந்து வந்தவுடன் பாட்டியை நினைத்து ஒரு கதறல். தட்டையில்லாமல் காலியாக இருக்கும் சம்படத்தைப் பார்த்தவுடன் பாட்டி ஞாபகம் வந்து அழுகை.
மாதங்கள் ஐந்தாறு பிடித்தன நந்தினிக்கு பாட்டியின் பிரிவிலிருந்து மீள.
நாதன் ஸ்டூடியோவில் பாட்டியோடு எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை அடிக்கடி பார்த்துக் கொள்வாள்.
வெல்லச் சர்க்கரையில் நந்தினிக்கு இப்போதெல்லாம் நாட்டமில்லை.
தொடரும்...
No comments:
Post a Comment