#இந்தியா_டயரி
பாகம் 8 - வட கர்நாடக சமையலும் சாப்பாடும்
ஹூப்ளி என்றாலே மிளகாய் என்பார்கள். மிகப் பெரிய மிளகாய் மார்க்கெட் அது. அக்கம் பக்கம் விளையும் பச்சை மிளகாய், மிளகாய்ப் பழம், காய்ந்த மிளகாய் இங்கே தான் ஹோல்சேலாக விற்கப்படும். பிரபல பேடகி மிளகாய்ப் பொடிதான் எங்கள் வீடுகளில் சமையலுக்கு. வண்ணம் கண்ணைப் பறிக்கும். மற்றபடி தினசரி சமையலில் பச்சை மிளகாய்ப் பிரதானம்.
வரண்ட பூமி என்பதால் எங்கள் ஊர் சமையலும் முக்கால்வாசி வரவரப்புதான். நன்கு கடித்து உண்டு பல்லுக்கு வேலை கொடுக்கும் சாப்பாட்டு முறை. மைசூரின் கேழ்வரகு களியும் உடுப்பியின் அரிசிச் சாதமும் ரசம் நிறைந்த ஹுளிகளும் இங்கே செல்லாது. ஜோவார் அல்லது பாஜ்ரா ரொட்டி தான் தினசரி உணவு. கையால் தட்டி மெல்லிய தகடு போல் வெறும் தண்ணீரைத் தடவிச் செய்வது அருங்கலை! மஹாராஷ்டிர influenceம் உண்டு - வேரக்கடலை உபயோகமும், புளிப்புக்குச் சுளிப்பும் உண்டு. வெங்காயம், பச்சைமிளகாய் தேங்காய் இல்லாத சமையலே கிடையாது. பூண்டும் உண்டு.
ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ள தட்டில் ஒரு எழெட்டு சமாச்சாரங்கள் இருக்கும். தினப்படி தான்! இரு காய்கள், ஒரு சுண்டல், சாலட், இரு தொக்குகள் (இங்கே சட்னி என்போம்) இரு சட்னிப் பொடிகள், ஊறுகாய், கண்டிப்பாக இருக்கும். ஒரு துண்டு ரொட்டியைப் பிய்த்து, தட்டில் உள்ள சாமானை ஒரு காம்பினேஷனாக சேர்த்து ஒவ்வொரு வாயும் புதுச்சுவையாகத் தான் உண்பார்கள். அளவாக ஈரம் ரொட்டியை மிகச் சிறிதே நனைக்கும்படி இருக்க வேண்டும். சாறு அல்லது ஹுளியும் உண்டு. ஒரு வாய் சாதம் சாப்பிட அல்லது மீண்டும் மீண்டும் குடிக்க. அப்பா ரொட்டியின் தலையில் ஹுளியை விட்டு ஊற வைத்து என் கல்யாணமான புதிதில் சாப்பிட்ட காட்சியை என் புக்ககத்தினர் மிகுந்த அதிர்ச்சியுடன் பார்த்தனர். அதெப்படி ஒரே ருசியில் முழு ரொட்டியும் சாப்பிடுவார் என்று பரிதாபமும் பட்டனர்.
மெல்லிய அவலை மொறு மொறுவென்று காய வைத்து அதற்கு அழகாக பல சாமான்கள் சேர்த்து தாளித்து வைத்துக் கொள்வது அத்தனை வீடுகளிலும் வழக்கம். இந்த அவலக்கியின் தலையில் தேங்காய், வெங்காயம், கொத்தமல்லி போன்ற வஸ்துகளைத் தூவி, முக்கியமாக அது ஊறி விடுவதற்கு முன் தின்பது ஆனந்தம். கல்யாண வீடுகளில் இது தான் breakfast! அதே போல் தாளித்த அரிசிப்பொரியில் ஒரு இனிப்பும் காரமுமான வெங்காயம் பச்சை மிளகாய் வெல்லம் புளி சேர்த்த தாளிப்பைக் கலந்து தாராளமாக கரகர மிக்சரும் கொத்தமல்லியும் தூவிவிட்டால் எங்கள் ஊர் அமர்க்களமாடிக் கிர்மிட். கூடவே மிளகாய் பஜ்ஜி நல்ல காம்பினேஷன்.
நாங்கள் ஒரு எட்டு பேர் கூட்டணி சமையலுக்கு. தலைவி நானி அண்ணா மனைவி எங்கள் எல்லொருக்கும் வஹினி (அண்ணி). நாத்தனார் ஜெய், நாங்கள் ஓர்ப்படிகள் மூவர்: மது, அனு, நான். ஒன்றுவிட்ட ஓர்ப்படிகள் ஆர்த்தி, வீணா, பிரபா. சித்து வேலைக்கு லட்சுமி. ரொட்டி தட்டித் தர சப்பாத்தி செய்ய விஜயா, சவிதா. கடைக்கு ஓட, பரிமாற இளைய தலைமுறை. ஒவ்வொரு நாள் மெனுவும் ஒவ்வொரு விதம். ஒரு விஷயம் repeat கிடையாது. சமைத்துத் தள்ளினோம். சாப்பிட்டு சிலாகித்தோம்.
காலை தினமும் ஒரு sweet - கல்யாண வீடாச்சே. மைசூரிலருந்து கஜ்ஜாயம்; திருநெல்வேலியிலிருந்து அல்வா; புனேயிலிருந்து கர்வஸ்; பிஜாபூரிலிருந்து கர்சிக்காய்; உடுப்பியிலிருந்து பேரிச்சம்பழ dry fruit cake; இப்படிப் பல விதம். Main item, அவல் விதம் அல்லது ரவா உப்புமா (எங்கள் ஊர் உப்பமாவை சாப்பிட்டால் ஐயோ இந்த அருஞ்சுவையைச் சரியாக செய்யத் தெரியாமல் வெறுத்தேனே என நொந்து போவீர்கள்). கரகர மிக்சர், முறுக்கு.
மதியம் சரியான சாப்பாடு. தினம் ஒரு மாநில ஸ்பெஷல். குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், பீகார், உபி என்று அமர்க்களம். ஐயோ திரும்பத் திரும்ப எத்தனை சாதம் சாப்பிட முடியும் என்ற மலைப்பில் தென்னிந்திய சமையல் இல்லை. சாதத்துடன் கறிகாய் எப்படிச் சாப்பிடுவது என்று கேள்வி வேறு கேட்பார்கள். கஷ்டம்.
இரவு ஒரு தனிக்களை. சாப்பாட்டைப் பற்றி யாருக்குக் கவலை. நீராகார ஜமா கூடிவிடும். பெரியவர் சிறியவர் பாகுபாடெல்லாம் கிடையாது. அருமையான ஸ்காட்சிலிருந்து லோகல் சரக்கு வரை அணிவகுப்பு. ஆண்கள் ஆர்வமிகுதியில் அனைவரும் ஆஜர். பெண்களில் பலர் breezed; சிலர் old monk and rum; சிலர் எலுமிச்சை சாறு, பாவம். ஒரே ஒரு புதிதாகப் பொறித்த சமாச்சாரம். மற்றபடி மிச்சம் மீதியை ஆனந்தமாக உண்டு ஆராவாரம் அடங்கித் தூங்க இரவு ஒரு மணி தாண்டிவிடும். சாப்பிடப் பிடிக்கும் என்பதில் சங்கோஜமா, நெவர்!
No comments:
Post a Comment