தோஹாவிலிருந்து சியாட்டில்வரை
தூங்கி எழுந்ததில் தோஹா சட்டென்று அடுத்த ஸ்டாப்போல வந்து சேர்ந்தது. முன்னொரு பயணத்தில் கனவுலகம்போல ஜொலிஜொலித்த தோஹா விமான நிலையம் ஏனோ களையிழந்ததுபோல என் கண்களுக்குத் தோன்றியது. ஒருவேளை என் பிரமையாக இருக்கலாம். அல்லது கொரோனாவின் விளைவால் இருக்கலாம். என்ன முயன்றும் காத்திருந்த சில மணி நேரங்களில் என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
செக் இன்னில் என் முன் சென்றவர் பையைக் கொட்டிப் பார்த்ததில் மசாலாப் பொருட்கள், பாட்டிலில் குழம்புபோல திரவங்கள் இருந்ததைப் பார்த்ததும் பணியில் இருந்தவர் "இதெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள். அதுவும் அமெரிக்காவில்" என்று சொன்னது அல்லாமல் என்னைப் பார்த்து "நீங்கள் போகலாம்" என்றும் சொன்னதால் 'ஒருவேளை சரியாகக் கேட்கவில்லையோ?' என்ற நினைவில் நின்றுகொண்டே இருந்தேன்.
அத்துடன் முன்னொரு முறைப் பயணத்தில், ஒற்றை டாலர் தந்த அனுபவத்தில், இந்த முறை முன்ஜாக்கிரதையாகக் குக்கீஸ் ஒரு பேக் எடுத்துச் சென்றிருந்தேன். 'அது அனுமதிக்கப்பட்டதா?' என்று தெரியாமல் "நான் குக்கீஸ் வச்சிருக்கேன்" என்று சம்மன் இல்லாமல் ஆஜரானேன். 'ஏன் வம்பு?' என்றுதான். அவரோ என்னைத் திரும்பிப் பார்த்து "நீங்கள் போகலாம்னு ஏற்கனவே சொன்னேனே?" என்று புன்னகையுடன் மீண்டும் சொன்னதால் இந்த முறை சரியாகக் கேட்ட திருப்தியுடன் முன்னேறினேன். ஒருவேளை தவறு செய்யும் சந்தேக ரேகை என் முகத்தில் ஓடவில்லையோ, என்னவோ?
'ஏர்போர்ட்களில் சில சமயம் இன்டர்நெட் வசதி இருக்காது என்பதால் ஆவணங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்' என்று கட்டாரின் வெப் சைட்டில் படித்தபோது வந்த ஆச்சரியம் உண்மையிலேயே ஏர்போர்ட்களில் இலவச வைஃபை இல்லாததைப் பார்த்தபோது உறுதிப்பட்டது. இதனால் வாட்ஸ்ஆப் செய்தி அனுப்ப முடியாமல், அழைக்க முடியாமல் அவதி ஏற்பட்டது. நல்லவேளை சாதாரண செய்திகள் அனுப்ப முடிந்தது. சென்று சேர்ந்த இடங்களிலிருந்து என் மகளுக்கு உடனுக்குடன் செய்தி அனுப்பினேன்.
செக் இன் செய்து முடித்ததும் காத்திருக்கும் இடங்களில் உட்கார இடம் இல்லாமல் தவித்தது ஒரு மோசமான அனுபவம். கோவிட் காரணமாக இரு இருக்கைகளுக்கு நடு இருக்கையை மறைத்திருந்ததால் இருக்கை எண்ணிக்கைகள் குறைந்து ம்யூசிகல் சேர்போல 'யார் எழுந்திருப்பார்கள்? நாம் உட்காரலாம்' என்று கண்கொத்திப் பாம்புபோலப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டியதாயிற்று. பலர் நின்றுகொண்டே இருந்தார்கள். நடுவில் எதற்காவது எழுந்து சென்று திரும்பினால் தொலைந்தது. மீண்டும் முதலிலிருந்து!
இந்தமுறை அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஓர இருக்கை. தோஹாவில் காத்திருந்த சமயத்தில் தமிழில் கலகலவென்று பேசிக்கொண்டிருந்த இளம் வயதுத் தோழர்கள் இரண்டு, மூன்றுபேர் என் பக்கவாட்டில், பின் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு விமானப் பயணம் ஒத்துக்கொள்ளவில்லைபோல. அடிக்கடி முன்னால் இருந்த கழிவறைக்குப் போய்க்கொண்டிருந்தவர், பின் அங்கேயே நின்றுவிட்டார்.
நான் ஒரு முறை எழுந்து முன்னால் செல்ல நினைத்து, அவரைப் பார்த்ததும், அவசரமாகப் பின்னால் சென்றேன். பார்த்தாலே தொற்றிவிடுமே! பின் சில நிமிட நேரத்திலேயே பல நாட்கள் வயது ஏறியதைப்போலத் தள்ளாடிக்கொண்டு தன் சீட்டுக்கு வந்து சேர்ந்தார். நான் இந்த முறை கையுடன் கொண்டு சென்றிருந்த கருமிளகு, கிராம்புவைக் கொடுத்து மெல்லச் சொன்னேன். நல்ல பலன் இருந்ததுபோல. அங்கே நன்றி சொன்னது போதாது என்று சியாட்டிலில் இறங்கிய பிறகும் நன்றி சொன்னார். பயணத்தில் உடல் சுகம் குறைவது பெரும் பாரம்.
பயணத்தில் பெரும் பகுதியை சாப்பாடு, தூக்கம் என்ற வழக்கமான சுழற்சியில் கழித்த நான், நடுவில், ஒரு நல்ல விழிப்பில், ஏதாவது ஒரு திரைப்படம் பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். ஒன்று ஒன்றாகப் பல படங்களைக் கொஞ்ச நேரம் பார்த்தும் பிடிக்காமல் அலுத்துப்போய் சுற்றிப் பார்த்தேன். பெரும்பாலானவர்கள் "Shang Chi and the legend of the ten rings" என்கிற மார்வெலின் சமீபத்திய படத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் எனக்கும் அப்படி என்னதான் அதில் இருக்கிறதென்று பார்க்கும் ஆர்வம் வந்தது. பொதுவாக மார்வெலின் Vigilante வகைப் படங்கள் எனக்குப் பிடிக்கும்.
'இன்னும் குழந்தைத்தனம் நமக்கு மாறவில்லை' என்று தோன்றினாலும், நல்லவர்களையும், மற்றவர்களின் நன்மைக்காகப் போராடுபவர்களையும் பார்ப்பதில் அலுப்பு வருவதில்லை. படம் என்னை ஏமாற்றவில்லை. எல்லா மசாலாக்களும் சரி விகிதத்தில் கலந்த சமையல்மாதிரி, விமானப் பயணத்தில் திரைப்படம் பார்க்காத என்னைக்கூட முழுதாக ஒரு முறையில் தொடர்ந்து பார்க்க வைத்தது.
கட்டார் ஏர்லைன்சில் நான் கவனித்து வியந்த இன்னொரு முக்கியமான விஷயம் அதிகம் டர்புலன்ஸ் இல்லாமல் விமானம் சீராகச் சென்றதே. பெரும்பாலான சமயங்களில் ஒரு விமானத்தில் செல்வதுபோலவே இல்லை. விமானம் நடு வானத்தில் நின்றுகொண்டிருப்பதைப்போலவே தோன்றியது. பைலட்டுகளின் திறமையோ, அல்லது, விமானங்களின் நல்ல பராமரிப்போ தெரியவில்லை.
இன்னொரு நல்ல விஷயம் விமானப் பணியாளர்களின் நல்ல கவனிப்பும், அருமையான இதமான உணவும். சாப்பாடு, காஃபி, டீ, தண்ணீர், பழச்சாறு, ஸ்நாக்ஸ் என்று ஏதாவது ஒன்று வந்துகொண்டேயிருந்து பசி, தாகத்திலிருந்து காப்பாற்றியது. எல்லா நேர சாப்பாட்டிலும் யோகர்ட் கட்டாயம் இருந்தது.
விமானம் கிளம்பும்போது "நான் உங்கள் பைலட்" என்று அறிமுகம் செய்துகொள்ளும் முகம் தெரியாத பைலட்டின் கையில்தான் பயணம் செய்யும் அத்தனை பேரின் உயிரும் ஒப்படைக்கப்படுகிறது. அந்தப் பைலட்டின் குரலில் தெரியும் தன்னம்பிக்கையும், வலிமையும்தான் பயணம் செய்பவர்களின் நம்பிக்கையாக மாறுகிறது. சியாட்டிலை அடைந்ததும் முகம் தெரியாத அந்தப் பைலட்டுக்கு மௌனமாக நன்றி சொல்லி விடைபெற்றேன்.
Ancila Fernando
No comments:
Post a Comment