விரும்பாத உறவு ...
💔
"என்னடி சொல்ற!" அதிர்ச்சியோடு கத்தினான் முத்து.
லட்சுமி முழுங்கி முழுங்கி " குடும்ப கட்டுப்பாடுதான் பண்ணிட்டோமேன்னு மெத்தனமாக இருந்ததில நாள் தள்ளிப் போனதை கவனிக்கல, நேத்திக்கு சந்தேகத்தில மருத்துவமனைக்கு போய் காட்டிட்டு வந்தேங்க... முழுசா நாலு மாசம் ஆயிடுச்சுன்னு சொல்றாங்க!" என்றாள் பயந்தபடியே.
"என்ன எழவுடி பண்றாங்க? எவ்வளவு பணம் செலவழிச்சு அறுவை சிகிச்சை எல்லாம் பண்ணிட்டு வந்த... இப்ப கர்ப்பம்ங்கற.... மூணு பொட்ட புள்ளைங்க பெத்துட்டு... இனி ஒன்னு தாங்குமாடி... சும்மா விடமாட்டேன் இந்த மருத்துவமனைய.. உண்டு இல்லை என்று பண்ணிடுவேன்" என்று கத்தினான் முத்து.
சொன்னபடியே முத்து செய்யவும் செய்தான். அந்த தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவரையும்... லெட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்த பெண் மருத்துவர் வசுந்தரா தேவியையும்... கண்ணில் விரலை விட்டு ஆட்டினான். நீதிமன்றம் போவேன் என்று மிரட்டினான். தலைமை மருத்துவரும், வசுந்தரா தேவியும் தொழிலில் மிகுந்த அக்கறை உள்ள மருத்துவர்கள். அவர்கள் முத்துவின் மிரட்டலுக்கு பயப்படவில்லை.
லட்சுமியை மருத்துவமனையில் சேரச் சொல்லி, எல்லா பரிசோதனைகளையும் பண்ணி பார்த்த போது தான் காரணம் பிடிபட்டது. பின் முத்து ,லட்சுமி இருவரையும் அழைத்து "இதோ பாருங்க... உங்க மனைவிக்கு நடந்த அறுவை சிகிச்சையில் எந்த தவறும் நடக்கல. சினைக்குழாய்யை கவனமாக வெட்டி மூட்டினோம். இயற்கையின் வினோதமாக புதிய சினைக்குழாய் வளர்ந்து அதன் காரணமாகத்தான் சினை முட்டை, சினைப் பையை அடைந்திருக்கு. இது இயற்கையோட விளையாட்டு. எங்கள் தவறு எதுவுமில்லை" என்று வசுந்தரா தேவி விளக்கிக்கூற...
முத்து ஆவேசம் குறையாமல்," எது எப்படியோ போகட்டும், இப்ப வந்திருக்கிற சனியன அழிச்சிடுங்க" என்று கத்தினான்.
" புரிஞ்சுக்கோங்க! இப்ப கருவை கலைச்சா இவங்க உயிருக்கே ஆபத்து".
"செத்து ஒழியட்டும்! அத்தோடு சேர்ந்து இவளும் ஒழியட்டும்! இன்னொரு பொட்ட புள்ள பெத்துட்டு இவ என் வீட்டுக்குள்ள நுழையக்கூடாது"என்று கத்தி விட்டு போய்விட்டான். அழுது கொண்டிருந்த லஷ்மியை பார்க்க பாவமாக இருந்தது.
அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை வசுந்தரா தேவிக்கு. லட்சுமியின் கண்ணீர் முகம் கண்ணுக்குள்ளேயே நின்றது. சோதனை செய்தபோது இதுவும் பெண் குழந்தை என்பது தனக்கு மட்டுமே தெரிந்த செய்தியாய் அவள் மனதை உறுத்தியது. தனக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் ஒரு குழந்தை இல்லாத போது, வேண்டாம் என்று சொல்லும் லட்சுமிக்கு குழந்தைகளாக பிறப்பது என்ன கணக்கோ என்று எண்ணிக்கொண்டாள். மனம் கனத்தது.
காலையில் அவளைப் பார்க்க வந்த லட்சுமியை அமரச் சொன்னாள்.' லட்சுமி நான் சொல்றத கவனமா கேளு! நீ இப்ப இருக்கிற நிலையில முழுசா நாலு மாசம் முடிஞ்சு போச்சு! கருவை கலைத்தால் உன் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். அதனால இதை சுமந்து பெத்துக்கோ! பையனா இருந்தா உன் விருப்பப்படி முடிவெடு. பொண்ணா பிறந்தா அந்த குழந்தையை நான் வளர்க்குறேன். உன் பிரசவ செலவையும் நானே ஏத்துக்குறேன். இதனால நம்ம ரெண்டு பேர் பிரச்சனையும் தீரும். யோசிச்சு பதில் சொல்லு!" என்று கூறினாள் வசுந்தராதேவி.
"அம்மா! தெய்வம்மா நீங்க! வயித்தில வந்ததை அழிக்க மனசு வரல. என்ன இருந்தாலும் அதுவும் ஒரு உசுரு. என் உசுரையும் என் புள்ள உசுரையும் காப்பாத்திட்டீங்க" அழுதாள் லஷ்மி.
அதன் பிறகு, வசுந்தராதேவி லட்சமியை கவனமாக பார்த்துக் கொண்டாள். அவளுக்கு மட்டுமில்லாமல் அவள் குடும்பத்திற்கும் செலவு செய்தாள். பிள்ளைகள் படிப்பிற்காக ஒரு தொகையை வைப்பு நிதியாக போட்டு கொடுத்தாள். லட்சுமிக்கு ஐந்து மாதம் கழித்து பெண் குழந்தை பிறக்க, அந்த குழந்தையை தூக்கி வசுந்தராதேவி கையில் கண்ணீரோடு கொடுத்ததோடு சரி, அதன் பின் அவள் வாழ்க்கையிலிருந்து அந்த குழந்தையின் நினைவுகளை கூட அழித்துவிட்டாள்.
காலம் உருண்டோடியது. லட்சுமியின் பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்து விட்டார்கள். முத்துவும் குடித்துக் குடித்து நுரையீரலில் பிரச்சனை வந்து ஒரு ஆண்டிற்கு முன்பு போய் சேர்ந்துவிட்டான். பெரிய பெண்ணை பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்டு, சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்தாள். சின்னவளுக்கு பழைய சாமான் வாங்கி விற்கும் மாப்பிள்ளைதான் அமைந்தது. மூன்றாவது பெண் மட்டும்தான் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாள். வருமானம் கைக்கும் வாய்க்குமாக வாழ்க்கை ஓடியது.
லட்சுமியால் முன்பு மாதிரி உழைக்க முடியவில்லை. வேலை அதிகம் செய்தால் மூச்சு வாங்கியது. பேரன், பேத்தி இருவரும் பிடித்த பண்டங்களை வாங்கி கொண்டு மகளை பார்க்க கோவில்பட்டி கிளம்பினாள். மகளும்,மருமகனும் வீட்டிலேயே சின்னதாக ஒரு உணவகம் நடத்திக் கொண்டிருந்தனர். லட்சுமி அங்கு இருக்கும் வரை, தன்னால் முடிந்த வேலைகளை செய்து கொடுப்பாள்.
அன்றும் இட்லிக்கு மாவு அரைத்து வைத்து விட்டு, தண்ணீர் பிடித்து வைத்தாள். காய்கறி நறுக்கிவிட்டு நிமிர்ந்தவளுக்கு நெஞ்சுவலிக்க ஆரம்பித்தது. விறுவிறுவென இடது கை, தோள்பட்டை, முதுகு என வலி பரவியது. சளசளவென வேர்த்து கொட்டியது. அப்படியே சரிந்து உட்கார்ந்துவிட்டாள். அடுத்த அரைமணி நேரத்தில், அவள் மகளும், மருமகனும் அவளை ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
மாரடைப்பு என்றார்கள். தூக்கமும்,விழிப்புமாக இருந்தவள், இரண்டாம் நாள்தான் நன்றாக கண்விழித்தாள். அருகிலிருந்த நர்ஸ்," அம்மா நீங்க செத்து பிழச்சிருக்கீங்க! நல்ல நேரத்துல மருத்துவமனையில சேர்த்திட்டாங்க!" என்றாள்.
"என்னை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றிமா! நான் இன்னும் கொஞ்ச நாளாவது உயிரோட இருக்கணும். என் கடமை இன்னும் முடியல. இன்னும் ஒரு பெண்ணை கரையேத்தணும்!" என்று நெகிழ்ச்சியாக கூறினாள் லட்சுமி.
"உங்கள காப்பாத்தினது எங்க சின்ன டாக்டரம்மா தான். சின்ன வயசுனாலும், அவங்க சரியான நேரத்துல போட்ட ஊசியும், தந்த சிகிச்சையும் தான் உங்க உயிரை காப்பாற்றியது. அதனாலதான் நீங்க இப்ப உயிரோட இருக்கீங்க. நீங்க நன்றி சொல்லணும்னா அவங்களுக்குத் தான் சொல்லணும் .அவங்க இருதய சிகிச்சையில மேல் படிப்பு முடிச்சிருக்காங்க" என்றாள் நர்ஸ்.
அன்று மாலை அவசர சிகிச்சை பிரிவில் முதன்மை மருத்துவர் வசுந்தராதேவி, லட்சுமியை பார்த்ததும் திகைத்துப் போனாள். லட்சுமிக்கும் அதே உணர்வு...பார்க்க மாட்டோம் என்று எண்ணியிருந்த இருவரும் எதிர்பாராமல் பார்த்து கொண்டதில் இருவருக்குமே அதிர்ச்சி. வசுந்தராதேவி சுதாகரித்துக் கொண்டாள்.
"லட்சுமி! நீயா? உடம்பு இப்போ எப்படி இருக்கு? இது என் மருத்துவமனை தான். நான் ரெண்டு நாளா ஊர்ல இல்ல... அதுதான் உன்னை பார்க்கல. இன்னைக்கு நோயாளிகள் பெயர் அட்டவணையில உன் பேரும் பார்த்தேன். ஆனா நீயா இருக்கும்ன்னு நினைக்கல. உன் புருஷன், பிள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க?"
"அம்மா! நீங்க நல்லா இருக்கீங்களா? அம்மா உங்கள பார்ப்பேன்னு கனவிலயும் நினைக்கல. உங்க குழந்தை..." என்றவள் டக்கென பேச்சை நிறுத்தினாள் லட்சுமி.
"இப்படி ஒரு சூழ்நிலையில் நீயும், நானும் இந்த ஊர்ல இந்த இடத்தில் சந்திப்போம்ன்னு நினைக்கல.காலம் செய்யும் வேடிக்கையை பாரு. உன் உயிரை காப்பாற்றியது யார்ன்னு நினைக்கிறே. நீ அன்னைக்கு வேண்டாம்ன்னு தூக்கி கொடுத்துட்டுப் போன உன் பொண்ணுதான். நாளைக்கு நான் அவளை கூட்டிட்டு வந்து உன்னை அறிமுகப்படுத்துகிறேன்" என்றாள் வசுந்தராதேவி.
"அம்மா நீங்க தெய்வம்! சொன்னபடி என் மகளை நல்லா வளர்த்து, பெரிய மருத்துவர் ஆக்கிட்டீங்க. அவள் என்னைக்குமே உங்க மகளாவே இருக்கட்டும்மா. புதுசா ஒரு உறவா அம்மான்னு அவ வாழ்க்கைக்குள்ளே நுழைய நான் விரும்பல. அது பல குழப்பங்கள் உண்டாகும் .அவ என் மகளா இருந்தா, இந்த வாழ்க்கை அவளுக்கு கிடைச்சிருக்காது. நீங்கதான் அவளுக்கு என்னைக்குமே அம்மா. இந்த உண்மை அவளுக்கு தெரியவே வேண்டாம்மா" என்று கைகூப்பினாள்.
மறுநாள் "என்ன லஷ்மிம்மா! எப்படி இருக்கீங்க? என்று புன்னகைத்தபடியே உள்ளே நுழைந்தாள் சின்ன டாக்டரம்மா வைஷ்ணவி. அவளை பாசமாக பார்த்து, மகிழ்ச்சியாக, "நல்லா இருக்கம்மா!" என்று தலையாட்டினாள் லஷ்மி... மனம் முழுக்க வாஞ்சையோடும்.. ஒரு சின்ன நெகழ்வோடும்.
No comments:
Post a Comment