Sunday, January 9, 2022

மனதோடுமலர்கள்_43

மனதோடுமலர்கள்_43

அத்யாயம் 43

'ஆத்தில் எல்லோரையும் கேட்டுக்கோங்கோ. வேணும்னா என் பையன் வேலை சம்மந்தமா யார் கிட்டேயாவது விசாரிக்க வேணும்னாலும் விசாரிச்சுக்கோங்கோ. எங்களுக்கெல்லாம் ஜானகிய பிடிச்சிருக்கு. ஜாதகமும் பொருந்தியிருக்கு. நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முடிவெடுத்து வந்து மேற்கொண்டு பேசினால் சந்தோஷம். நீங்க சொல்ற வரைக்கும் நாங்க எந்த ஜாதகத்தையும் தொட மாட்டோம்.'

கிளம்பும் போது ஸ்ரீமதி வெளிப்படையாக சொல்லிவிட்டாள்.

'என்னடா இப்படி நான் பேசறேன்னு வித்யாசமா நெனைக்காதீங்கோ. கல்யாணம்கறது ஆயிரம் காலத்து பயிரு இல்லையா?'

என்னோட ஃபரண்ட் அண்ணு உங்களப்பத்தி கொடுத்த சர்டிஃபிகேட் ஒண்ணு போதும் எங்களுக்கு.'

'எங்களுக்கு வரதட்சணை எல்லாம் வேண்டாம். எங்களுக்கு மனுஷா அதிகம். அதனால மெட்ராஸுல கல்யாணத்தை வெச்சுண்டா சந்தோஷப் படுவோம். எல்லோரையும் அழைச்சுண்டு வர செலவ நாங்க குறைச்சுக்கலாம். அதப்பத்தியும் நீங்க உங்களுக்குள்ள பேசிட்டு ஒரு முடிவோட வாங்கோ.'

'நாளைக்கே நிச்சயதார்த்த நாளை குறிச்சு வெச்சிண்டு நாங்க ரெடியா இருப்போம்.'

வழ வழா கொழ கொழா இல்ல. ஸ்ட்ரெயிட் ட்ரைவ்.

கல்யாணராமன் அப்பாவை பார்க்க ஸ்ரீனிவாசன் வருகிற வெள்ளிக்குள் வருகிறோம் என்றார்.

கிளம்பினார்கள். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், ஜாக்கெட் ப்ளவுஸ் அவர்களை மங்களகரமாக வழி அனுப்பி வைத்தது.

'அம்மா, இந்த பையில் கொஞ்சம் ஆப்பிள் கட் பண்ணி வெச்சிருக்கேன். நீங்க எதுவும் சாப்பிடல. காரில் போகும்போது சாப்பிட்டுண்டு போங்கோ மறக்காம. அப்புறம் ஒரு டப்பால சொஜ்ஜியும் இருக்கு. அவருக்கு கொடுங்கோ.'

மாலதியின் ஸ்பெஷல் கவனிப்பு அண்ணுவுக்கு கிளம்பும்போது.

'சரிடி அம்மா. இன்னிக்கு ராத்திரியே திருச்சிக்கு கிளம்புறையோன்னோ? உடம்பை ஜாக்கிரதையா பார்த்துக்கோ. நாளைக்கு சாயந்திரம் ராஜி ஆத்து நம்பருக்கு ஃபோன் பண்ணு.'

சம்பாஷணையை ஸ்ரீதர் உன்னிப்பாக கவனித்தான். மிகவும் பரிச்சயமானவர்கள் பேசற மாதிரி இருக்கே?

அப்பா கேட்டுக் கொள்ள மாப்பிள்ளையின் பெற்றோர்களை நமஸ்கரிக்க சொன்னார். ஆசிர்வதித்தவுடன் ஸ்ரீமதி சொன்னாள் அவளிடம் எல்லோர் காதில் படும்படியாக.

'அண்ணுவ நமஸ்காரம் பண்ணிக்கோ. அவள மாதிரி பரோபகாரி பூமில பார்க்கறது அபூர்வம். நன்னா ராஜாத்தியா இருந்திருக்க வேண்டியவ. ஆம்படையான் மேல இருந்த அன்புனால இருபது வருஷத்துக்கு மேல ஒரு தவஸியா வாழ்ந்துண்டிருக்கா. அவள பண்ணினாலே எல்லாரையும் பண்ணின மாதிரி. உன் கல்யாணத்தால எனக்கு என் ஃபரெண்ட் கிடைச்சுட்டா.'

நமஸ்கரித்தாள் அண்ணுவை. 'சீக்கிரம் விவாஹம் நடக்கணும்'.

பரஸ்பரம் விலாசங்களும் எண்களும் பரிமாறப்பட்டன. கல்யாணத்திடம் உள்ளங்கையை மறைத்து ஜானாவின் நம்பரை அண்ணு கொடுத்தாள். 'தேங்கஸ் மாமி.'

'உங்க அம்மாகிட்ட என்னை போட்டுக் கொடுத்திடாதடா கல்யாணம். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இப்பதாண்டா சேர்ந்திருக்கோம்.'

சிரித்துக் கொண்டே சரி என்றான்.

அண்ணு போகும் இடமெல்லாம் மாலதி மட்டும் போய்க் கொண்டிருந்தது, அவளுக்கு மட்டும் மாலு பிரத்யேக கவனிப்பு கொடுத்தது எல்லாம் சற்று வித்தியாசமாக தெரிந்தது ஸ்ரீதருக்கு.

கார்கள் கிளம்பின, எப்படி வந்தார்களோ அப்படியே ஏறிக் கொண்டார்கள்.

கார் கிளம்பியதும், ஸ்ரீமதியிடம் அண்ணு ஆரம்பித்தாள்.

'நன்னா பளிச்சுணு பேசிட்ட. அப்படி பேசினாத்தான் அவாளும் ஸ்பீடா வருவா.'

'அண்ணு, ஒன் கிட்ட சொல்றதுக்கு என்ன? எனக்கென்னவோ அவாத்து பையனையும் மாட்டுப் பொண்ணையும் அவ்வளவா பிடிக்கல. எல்லாரையும் நோட்டம் பார்க்கறதுல தான் அவா ரெண்டு பேர் கண்ணும் இருந்ததே தவிர வரன முடிக்கறதுல ஆர்வம் அவ்வளவா இல்ல. பார்க்கலாம் எப்படி போறதுன்னு'.

'அப்படியா சொல்ற. நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். பொண்ண பிடிச்சிருக்கோன்னோ.'

'கண்டிப்பா அண்ணு. அதுல மாத்தம் இல்ல. மூணு பேரும் நல்ல பொண்ணுங்க. அதுவும் மாலதி ரொம்ப சாமர்த்தியமா இருக்கா. அவ மாத்திரம் மூத்தவளா இருந்தா, இன்னிக்கே தட்ட மாத்திண்டிருப்பேன்.'

அண்ணுவுக்கு சற்று பகீர். 'அடுத்தவாள கவனிக்கறதுல ஸ்ரீமதிக்கு அவார்ட் கொடுக்கலாம் போல இருக்கே?'.

'என்ன அண்ணு, யோசனை பலமா இருக்கே. கவலைப் படாதே, எல்லாம் நல்ல படியா நடக்கும்.'

அண்ணுவுக்கு இன்னும் தீவிர யோசனை. 'எதை மனதில் வைத்து ஸ்ரீமதி இப்படி பேசறா? ஜானு கல்யாணத்தையா, மாலதி கல்யாணத்தையா? ஒருவேளை நானும் மாலதியும் எதார்த்தமா பேசறதை கவனிச்சிருப்பாளோ? ஒருவேளை சொந்தக்கார பையன் இருக்கான், மாலதிக்கு முடிச்சு கொடுனு சொல்வாளோ? பகவான் சில பேருக்குத்தான் சட்டுனு இன்னொருத்தரை எடை போடற குணம் கொடுத்திருக்கிறார். இவளுக்கு ஜாஸ்தியாவே இருக்கு? இவ கிட்ட இருக்கும்போது ஜாக்கிரதையா இருக்கணும் போல இருக்கே?'

'என்னடி அண்ணு, ஸைலண்ட் ஆயிட்டயே. என் மனசுல ஒண்ணு படறது, சொல்லட்டுமா?'

ஸ்ரீமதி சொன்னதை காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை அண்ணு. சிந்தனையின் உச்ச கட்டம்.

'இவா கிட்டெல்லாம் பணம் இருக்கு. எப்படியும் தான் நெனச்சத சாதிச்சுண்டுடுவா. ஏழை சொல் எங்க அம்பலம் ஏறும்? என்னதான் ஃபரெண்டா இருந்தாலும் தன் குழந்தைகள் தன் சொந்தக்காரானு வந்துட்டா?'

வருகிற கண்ணீரை அடக்க பகீரத ப்ரயத்தனம்.

'எனக்கு தான் மாலதி இருக்காளே. யார் வேணா என்ன வேணா பேசட்டுமே. என் பையனை அவள் தானே தீர்மானிச்சா'. 

தாயின் பாசம் சற்று தன்னைத்தானே ஆறுதல் படுத்திக் கொண்டது.

'ட்ரைவர், கொஞ்சம் வண்டிய ஓரம் கட்டுப்பா. பாகி, நீ கொஞ்சம் முன்னாடி போய், அண்ணுவ என் பக்கத்துக்கு அனுப்பேன். அவளோட கொஞ்சம் பேசணும்.'

வண்டி ஓரம் கட்டப் பட்டது.

தொடரும்

No comments:

Post a Comment