○#சிறுகதை
வானத்தைத் தொடும் வேப்பிலை
முத்து பாடப்புத்தகத்தில் படித்துக் கொண்டிருந்த பக்கத்தில் பேனாவை வைத்து மூடி விட்டு தனது சன்னலுக்கு வெளியே பாதி இலைகளை உதிர்த்துக் கவர்ச்சி நடிகை போல அரைகுறையாக நின்ற வேப்ப மரத்தின் கிளைகளையும், அவனது கோணத்தில் இருந்து பார்த்தால் விண்ணை முட்டும் சில இலைகளையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஏற்கனவே இரண்டு மாதம் முன்பு கொசுத் தொல்லை அதிகம், ஃப்ளாட்டுக்குப் பக்கத்தில் நன்றாக வளர்ந்து நிற்கிறது; வெட்டிடுவோம்னு பக்கத்து வீட்டு ப்ளாக் தலைவர் சொல்லிட்டார். அவர்கள் சன்னலோர பாதிக் கொப்பு ஏற்கனவே வெட்டியாச்சு. அடுத்து முத்து வீட்டுக் கொப்பு....இறுதியில் நாளை மரத்தையே வெட்டுவதாக ஏற்பாடு.
முத்து பரிதாபமாக மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு காக்கா கிளையில் உட்கார்ந்து, திடீரென பறந்து போனது. தினமும் நாலைந்து காக்கைகள் அம்மரத்தில் வந்து உட்காருவதை முத்து பார்த்திருக்கிறான். நாளையிலிருந்து மின்சார வயரோ கேபிள் வயரோ அவர்களுக்கு உட்கார உதவக் கூடும். முத்து வீட்டின் ஏஸியின் வெளிப்புறம் இரண்டு அணில்கள் தங்கியிருக்கின்றன. காலையில் அவை போடும் கீச் கீச் சத்தம் இவ்வளவு சிறிய அணிலிடமிருந்து இவ்வளவு சத்தமான்னு அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். தினமும் ஏஸி தண்ணீர் போகும் சின்ன ட்யூபில் அந்தரத்தில் இரண்டாம் மாடியில் அணில் ஏறுவதைப் பார்த்தால் முத்துக்கு வயிறு பகீரென்று இருக்கும். ஆனால் அணில் சரசரவென ஏறும். அதற்கு ஆறறிவு இல்லாததால் தேவையின்றி பயப்படுவதில்லையோ? முத்துக்குப் பதினாறு வயதில் இதெல்லாம் புரிவதில்லை.
இவை தவிர அந்த அபார்ட்மென்ட்டில் நிறைய புறாக்களும் இருந்தன. பால்கனிகளே அவைகளின் இருப்பிடம். இல்லையெனில் மொட்டை மாடியில் தண்ணீர் டேங்க்குக்குக் கீழோ, மூன்றடிச் சுற்றுச் சுவர்களிலோ உட்காரும். இவன் மொட்டை மாடிக்குத் துணிகளைக் காயப்போடப் போகும்போது மொத்தமாக பறக்கும் பம்பாய் தாஜ் ஓட்டல் முன் பறக்குமே ....என்ன படம்...நாயகனா?அது போல. பெஸன்ட் நகர் பீச்சிலேயும் முத்து நண்பர்களோடு நூற்றுக் கணக்கான புறாக்கள் ஒன்றாக உட்காருவதையும் யாரும் வந்தால் கூட்டமாகப் பறப்பதையும் பார்த்து சிலாகித்திருக்கிறான்.
வெளியே போகும்போதும் வரும்போதும் நின்று அந்த இலை உதிர்த்த வேப்பமரத்தைக் கவலையுடன் பார்த்து வந்து கொண்டிருந்தான். யாராவது பார்த்தால் இவனைப் பைத்தியம் என்று கூட சொல்லக்கூடும். இந்த மரம் அவனுக்கு அண்ணன் போல. இவன் வயசுக்கு மேலேயே இருக்கும் அதற்கு. தினம் விடியற் காலையில் வேப்பமரம் தரிசனம் இனி கிடைக்காது. எந்த மரத்தைக் கும்பிடுவான் அவன். அதைத் தாண்டிய பைபாஸ் ரோடும் முருகன் இட்லிக் கடையும்தான் இனி தெரியும்.
வேப்பமரத்தை வெட்டிய அன்று முத்து தனது தலையை மொட்டையடித்து விட்டுக் குளிக்கும் போது கண்ணீரை தண்ணீருடன் உடலில் வீழ்ந்தோடச் செய்தான். " ஏன்டா முடியைக் குறைப்பதற்குப் பதிலா மொட்டையடிச்சுட்டு வந்து நிற்கிறே" ன்னு கேட்ட அம்மாக்குச் சொல்ல பதிலில்லை அவனிடம்.
No comments:
Post a Comment