அத்யாயம் : 10 .. செருவாமணி
Written by Baskar Sathya
என்ன வயதானாலும் செருவாமணிக்கு எல்லாமே அம்மாதான்.
நந்தினியை கண்கொத்தி பாம்பாக பார்த்து பார்த்து வளர்த்தாள். நந்தினிக்கோ பாட்டி மேல் அலாதி பிரியம்.
எதுவாக இருந்தாலும் பாட்டியிடம் பிடிவாதம் பிடித்து தன்காரியத்தை சாதித்தித்துக் கொள்வாள்.
பாட்டின்னா செல்லம் கொடுத்து வளர்க்கணும். அம்மா அப்பான்னா கண்டிச்சு வளர்க்கணும். இப்படித்தான், விசாலம் கண்டிக்கற சமையத்துல பாட்டி வந்துடுவா. 'சின்ன குழந்த, என்ன தெரியும் அவளுக்கு. பதிவுசா சொன்னா கேட்டுப்பா. வாடி என் செல்லம். அம்மா உனக்கு நல்லதை தானே சொல்றா?'
'நாளைக்கு புக்காம் போற பொண்ண நன்னா கெடுத்து தொலைங்கோ அம்மாவும் புள்ளையும். வளர்ப்பு சரியில்லைனு அவா சொல்லட்டும். அப்ப வெச்சுக்கிறேன் உங்களை.'
இப்படி ரசிச்ச விஷயங்கள் செருவாமணிக்கு நின்னு போச்சு. பாட்டி போன ஏக்கத்திலேந்து பொண் மீள, கொஞ்சம் தன்னை மீட்டுக்கொண்டார்.
நந்தினி பாட்டியின் மறைவுக்கு பின். அவளின் கல கலப்பு குறைந்தது.
யாருடனும் அதிகம் பழகுவதில்லை.
ஒரு வெறுமையை உணர ஆரம்பித்தாள்.
காலங்கள் சும்மா இருக்குமா. தன் பங்குக்கு இவர்கள் கவலையை சட்டை செய்யாமல் ஒடிக்கொண்டிருந்தது.
நந்தினி பெரிய மனுஷி ஆனதிலிருந்து ஒரு பிரச்சனை இருந்தது. அந்த நாட்களில் வரும் வயிற்று வலி. துடிப்பாள்.
இது சகஜம் சில பேருக்கு என்றார்கள்.
பொறுத்தார்கள் ஒரு வருடம். பாட்டி வைத்யத்துக்கு பாட்டி இல்லை. பெரிய டாக்டர்னா தஞ்சாவூர்தான் போகணும்.
மாதாமாதம் குழந்தை துடிக்கறதை பார்க்க முடியாமல் கண் கலங்கிக் கொண்டிருந்தனர் இருவரும்.
'பெரிய டாக்டராவே பார்த்துடலாம்ணா. எனக்கு என்னவோ இது புது மாதிரியா இருக்கு. கட்டி கிட்டி இருக்குமோண்ணு பயமா இருக்கு.'
தஞ்சாவூரில் டாக்டர் லீலாவதி. பொம்மனாட்டி டாக்டர். கேட்டவா அத்தனை பேரும் இவாதான் பெஸ்டுணு சொன்னா.
பரிசோதித்தார் டாக்டர் லீலாவதி.
'கவலைப் பட வேண்டாம். சில குழந்தைகளுக்கு இப்படி இருக்கும் ஆரம்பத்துல. சில பேருக்கு கல்யாணத்துக்கப்பறம் சரியா போறதும் உண்டு. கட்டி எதுவும் இல்ல. பேரீச்சம்பழம் கொஞ்சம் கொடுத்துண்டு வாங்க. அந்த நாட்கள்ல வலி அதிகமா இருந்தா நான் கொடுக்கற இந்த மருந்தெல்லாம் கொடுங்க. மத்த நாளுல வேண்டாம்.'
அந்த நாளுல படிப்பு அனுபவம் கலந்தே ப்ரிஸ்க்ருப்ஷன் இருக்கும்.
'டாக்டர் கிட்ட வந்தா இப்படி சொல்றாளே? நாளடைவில சரியாயிடும்னு சொல்றதுக்கா இவா படிச்சிருக்கா?'
அந்த நாட்கள் வந்தாலே குடும்பம் திக் திக். ஏதாவது விஜாரப் பட்டுண்டே இருக்கணும்கறது தலை எழுத்து.
எஸ்.எஸ்.எல்.ஸி யில் நல்ல மார்க்கு நந்தினி. எண்பத்து மூணு வாங்கியிருந்தா. பள்ளிக்கூடத்துல மூணாவதோ, நாலாவதோ.
'ஏண்ணா, மேல் படிப்பெல்லாம் வேணாம்னா. இவள வேற ஊர்ல காலேஜுல சேர்த்துட்டு வயித்துல நெருப்ப கட்டிண்டு இருக்கணுமா, யோசிங்கண்ணா.'
'அவளுக்கு மாசா மாசம் இந்த பிரச்சனை வேற இருக்கே. அவள தனியா வுட்டுட்டு நாம எப்படிண்ணா நிம்மதியா..?'
'ஒரு டிகிரிய முடிக்கட்டுமேடி. இவ்வளவு நல்ல மார்க் வாங்கியிருக்காளே. அதுக்காவது சித்த மேல படிக்கட்டுமே?'
'காலம் கெட்டு கெடக்குண்ணா. எனக்கு மட்டும் ஆசை இல்லையா?'
'எனக்கென்னவோ, மேல படிக்கட்டுமேன்னு தோணறது சாலி. படிப்ப நிறுத்தினா மனசு வருத்தப்படுவா. ரெண்டு மூணு வருஷமா தினமும் கெஞ்சிண்டே இருக்காடி.'
ரிசல்ட் வந்ததுலேந்தது பத்து நாளா இதே சம்பாஷணைதான் ரெண்டு பேர் கிட்டேயும்.
'ஏண்டா நந்து, தனியா அப்பாம்மாவ உட்டுட்டு ஹாஸ்டல்ல இருக்க முடியுமாடா? ஒனக்கு வேற வயத்து வலி அடிக்கடி. வரதே டா. ஒன்ன தனியா உட்டுட்டு எங்களால நிம்மமதியா இருக்க முடியாதே டா.'
எத்தனை நாள்தான் அவங்க ரெண்டு பேருமே பேசி மூளைய கசக்கிக்கறது. அவளிடமும் பேச்சை ஆரம்பித்தார் செருவாமணி.
தொடரும்....
No comments:
Post a Comment