Friday, January 14, 2022

மனதோடுமலர்கள்_47

மனதோடுமலர்கள்_47

அத்யாயம் 47

கதையாசிரியர்: பாஸ்கர் சத்யா 

மாலதி ஆஃபிஸுக்கு அப்பாவின் தொலைபேசி அழைப்பு காலை பதினொன்று முப்பதுக்கு.

'ஸ்ரீதர் கிளம்பிட்டான். இன்னும் அவன் கோபம் தணியல. அவன் மாமனார் மாமியாரை கூட நாம மதித்து பொண் பார்க்கும் விஸேஷத்துக்கு கூப்படலையாம். இப்ப புதுசா சேர்த்திருக்கான். நீங்க எது வேணா தீர்மானம் பண்ணிக்கோங்கோன்னு சொல்லிட்டான். நாம ரெண்டு பேரும் மெட்ராஸ் போய் புள்ளை ஆத்துல பேசிட்டு வரலாம் வர சன்டே, என்ன?'

'சரிப்பா, மாமிகிட்ட சொல்லிடறேன். இன்னிக்கு நைட் எத்தனை மணியானாலும் உங்களோட நம்மாத்து நம்பரில் பேசறேன்.'

மாலா அப்பாவோடு வருவதை அண்ணுவுக்கு தெரியப் படுத்தினாள், ராஜி ஆத்து ஃபோன் மூலம். அண்ணு எப்படியோ ஸ்ரீமதியிடம் தகவலை சேர்க்க, அவர்களும் சம்மதித்தனர்.

ஞாயிறு காலை மாலதியும் ஸ்ரீனிவாசனும் அண்ணு மாமி ஆத்துக்கு வருவதாக பேச்சு.

சந்துருவின் கண்கள் மாலாவின் வருகைக்கு பூத்திருந்தன.

'சந்தா, மாலா அப்பாவும் கூட வறார். நீ பாட்டுக்கு அவ அப்பாக்கு நேர தத்து பித்துனு பேசி அவள மாட்டிவிட்டுடாத. இன்னொரு தடவை உன் சாகசத்தெல்லாம் வெச்சுக்கோ. ஜானா கல்யாணம்தான் இப்ப முக்கியம். என்ன நான் சொல்றது புரிஞ்சுதா?'

'அண்ணு, ஒன்ன அப்புறம் கவனிச்சுக்கிறேன். பெத்த புள்ளைய பரிதவிக்க உடறியா?'. கிண்டல் செய்தான் அண்ணுவை.

'அம்மா, நீ கவலைப் படாதே. மாலுவ பார்த்தோண்ண ரெண்டு வார்த்தை பேசிட்டு, ஃப்ரெண்ட பார்க்க போயிடறேன், சரியா?'

'இது சொன்னியே, இது உத்தமம். எல்லாம் உன்ன மாலாவோட சீக்கிரம் சேர்த்து வைக்கத்தானே அம்மா இவ்வளவு பாடுபடறேன். கொஞ்சம் பொறுத்துக்கோ, மாலா எங்க போயிடுவா?'

'அண்ணு, நீ போன ஜன்மத்துல இந்திரா காந்தியா பொறந்திருப்பேன்னு நெனைக்கிறேன்.'

'போடா போக்கத்த பயலே'.

ஒன்பது மணிக்கு மாலாவும் அவள் அப்பாவும் அண்ணு ஆத்துக்கு வந்து விட்டார்கள். வாய் நிறைய உபசாரம். மாலா சந்துரு கண்கள் மட்டும் நர்த்தனமாடிக் கொண்டிருந்தன. 

சந்தாவை அண்ணு ஸ்ரீனிவாசனுக்கு அறிமுகப் படுத்தினாள்.

' என்னோட ஒரே பிள்ள இவன். ஏதோ நல்ல கம்பெனியில சேர்ந்து போயிண்டிருக்கான் ஒரு வருஷமா. சந்தா, மாமாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோடா. நன்னா ஆசீர்வாதம் பண்ணுங்கோ அவனை.'

நமஸ்கரித்தான். ஆசிர்வதித்து விட்டு, 'மாமி, நீங்க பண்ற உபகாரத்துக்கு நான் எப்படி பிரதி உபகாரம் பண்றதுன்னே தெரியல.'

'அவ்வளவு தானே, எனக்கு உங்க உதவி தேவைப் படும்போது, நீங்க மறுக்கவா போறேள்?'

'சரி, விஷயத்துக்கு வருவோம். ரெண்டு ஈடு இட்லி வாத்திருக்கேன். கைகாலெல்லாம் அலம்பிண்டு சாப்புடுங்கோ. பத்து பத்தரைக்கு கிளம்பலாம். அம்மாடி மாலதி, நீயும் குளிச்சிட்டு கிளிச்சுட்டு ரெண்டு இட்டிலி எடுத்துக்கோ.'

'சந்தா, யாரோ ஃபரண்ட பார்க்கணும்னியே, சாப்டுட்டு கிளம்பு, கிளம்பு.'

மாலதியின் நமுட்டு சிரிப்பு. சந்துருவின் விளையாட்டுக் கோபம். சங்கேத கண்ணசைவு மொழிகளில் பேச காதலர்களுக்கு சொல்லித் தரணுமா என்ன.

கிளம்பினார்கள். போகும் வழியில் சச்சு வீட்டுக்கு கர்டிஸி கால். அவள் வாழ்த்தையும் வாங்கிக் கொண்டா்கள். 

'நாங்க வரோம்னு பாகிரதி கிட்டேயும் சொல்லிட்டியா சச்சு?'

'சொல்லிட்டேன் மாமி. மன்னிச்சுங்கோ நான்தான் வர முடியவில்லை உங்களோட.'

'பரவாயில்லடியம்மா. நீ ஆரம்பிச்சு வெச்சே, எல்லாம் நல்ல படியா போயிண்டிருக்கு.  எல்லாம் உன் கைராசி தான்'

ஸ்ரீனிவாசனும் சச்சுவுக்கு நன்றி தெரிவித்தார்.

க்ரோம்பேட்டையிலிருந்து மாம்பலம் போவதற்குள் அண்ணு மாமி, ஸ்ரீனிவாசன் கிட்டேயே மாலாவப் பத்தி ஒரு பெரிய பாராட்டு பத்திரத்தையே வாசித்து கண்பித்துவிட்டாள்.

'உங்களோட மூணு பொண்ணுங்களுமே சமத்து. எவ்வளவு ஒண்ணுக்கொண்ணு பாசமா இருக்கா. அதிலும் மாலா மாதிரி வரவே வராது. அவள கல்யாணம் பண்ணிக்கப் போறவன் கொடுத்து வெச்சிருக்கணும். உங்க நல்ல மனசுக்கும், மாமியோட நல்ல மனசுக்கும் எல்லாம் நல்ல படியா நடக்கும். நீங்க வேணா பாருங்கோளேன், ஜானா கல்யாணம் முடிஞ்ச உடனே லலிதா கல்யாணமும் அடுத்த முஹூர்தத்திலேயே நடந்துடும் பாருங்கோ. அப்புறம் மாலா கல்யாணம் தான்.'

வெட்கப்பட்டுக் கொண்டே சிரித்தாள் மாலதி. 'அப்பா, இவாள விட்டா பேசிண்டே இருப்பா. மாமிக்கு பரந்த மனசு.'

'உங்கள மாதிரி பெரியவா ஆசீர்வாதம் பரிபூரணமா கிடைக்க மாலதி ரொம்ப கொடுத்து வெச்சிருக்கா.'

பாகிரதியோடு ஸ்ரீமதி வீட்டிற்கு வந்தார்கள். ராஜ உபசாரம். கல்யாணராமன் சிறிது நேரம் பேசிவிட்டு வெளியே கிளம்பினான்.

'ஒங்க பையன் மாட்டுப்பொண் வரலியா?'. முதல் கேள்வி ஸ்ரீமதியுடையது.

'அண்ணாவுக்கு மில்லுல தவிர்க்க முடியாத வேலை. அதான்....'. இழுத்தாள் மாலதி. முதல் கேள்விக்கு பொய்யே பதில்.

'மாமியையாவது அழைச்சுண்டு வந்திருக்கலாமே?'

'அவளும் வர மாதிரிதான் இருந்தது. சட்டுனு நேத்திலேந்து அவளுக்கு வயித்து வலி. சரி, சொல்லிட்டோமேன்னு மாலதிய அழைச்சுண்டு வந்தேன். என் ஆத்துக்காரி சார்பா மன்னிப்பு கேட்டுக்கறேன்'.

'பரவாயில்லை சார். அதான் நீங்களும் பொண்ணும் வந்திருக்கேளே, அதுவே போதும். எல்லாரையும் நிச்சயதார்த்தத்தில பார்த்துண்டா போச்சு. என் புள்ளையப் பத்தி விசாரிச்சாச்சா?'. ஸ்ரீமதி ஆத்துக்காரர் அவர்களுடைய எம்பராஸ்மெண்டுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

'தேவையில்லை மாமி. எங்களுக்கும் இந்த மாமி சொன்னதே போதும்.'

'நல்லது. சரி. நான் உங்காத்துல சொன்ன மாதிரி எங்களுக்கு வரதட்சணை எல்லாம் வேண்டாம். நீங்களா உங்களால முடிஞ்சதை செஞ்சா போதும். ரொம்ப சிரமப் படுத்திக்காதீங்கோ. கல்யாணத்த மாத்திரம் நன்னா பண்ணிக் கொடுத்திடுங்கோ. மெட்ராஸுல கல்யாணம் வெச்சுக்கறத பத்தி யோசிச்சேளா?'

ஸ்ரீனிவாசன் பதிலளித்தார். 'இங்க வெச்சுக்கறதில கஷ்டமில்ல. ஆனா இங்க எங்களுக்கு சொல்லிக்ககற அளவுக்கு ஆள்பலம் கிடையாது. அதான் யோசிக்க வேண்டியிருக்கு.'

அப்போது அண்ணு குறிக்கிட்டாள்.

'ஏன் கவலைப் படறேள் அதுக்காக. என் புள்ளையும் அவன் கிரிக்கெட் ஃபரெண்ட்ஸும் இருக்கா. நான் எல்லா ஏற்பாடும் செஞ்சுடறேன். கவலைய விடுங்கோ. உங்க பட்ஜெட்டுக்கு எந்த மாதிரி பசங்க எல்லாம் பார்த்துப்பா. நான் கேரண்டி.'

'அப்படின்னா மாமிகிட்ட விவரமா பேசிட்டு அதை தீர்மானம் பண்ணலாம். பாத்திரம் பண்டமெல்லாம் இருக்கு. நகை ஒரு எட்டு பவுன் இருக்கு. வைர மூக்குத்தியும் ரெடி பண்ணிடறேன். மத்தபடி, சீர் செனத்தையெல்லாம் நீங்க கேட்கிற மாதிரி செஞ்சுடறேன்.'

'நீங்க வரத கேள்விப் பட்டு எங்காத்து ஜோஸ்யர எதுக்கும் கேட்டு வைப்போமேன்னு விசாரிச்சோம். வர ஞாயித்துக் கிழமைக்கு அடுத்த ஞாயித்துக் கிழமை நாள் நன்னா இருக்குன்னார். அன்னிக்கு நம்மாத்திலேயே நிச்சயம் பண்ணிக்கலாம். என்ன சொல்றேள்.'

'என் ஆத்துக்காரிய ஒரு வார்த்தை கேட்டுண்டு நாளைக்கு ஃபோன் பண்ணலாமா?'

'ஓ. தாராளமா. நானும் அதுக்குள்ள எங்காத்து வழக்கப் படி சீர் லிஸ்டெல்லாம் ஃபோன்லியே சொல்லிடறேன்.'

எல்லா பேச்சு வார்த்தைகளும் நல்ல படியாக நடந்தது.

வீடு வந்தனர். 

சந்துருவும் அவன் ஃப்ரெண்ட் ரவியும் கிரக்கெட் பற்றி பேசிக் கொண்டுருந்தார்கள்.

'ரவி, உன்னால ஒரு உதவி ஆகணும். இவர் பொண்ணு கல்யாணத்தை மெட்ராஸுல வெச்சுக்க சொல்றா மாப்பிள்ளை ஆத்துல. இவர் இருக்கறது வேலூர்ல. அப்புறம் விவரமெல்லாம் சொல்றேன். கல்யாணத்த உன்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து நடத்திக் கொடுக்கணும்.'

'அதுக்கென்ன மாமி. எங்களோட சோபர்ஸ் கிரிக்கெட் க்ளப் அத்தனை பேரையும் இறக்கிடறேன்.'

'அப்புறம் என்ன மாலதி. இந்த வானரக் கூட்டம் எல்லாத்தையும் பார்த்துக்கும். கவலைப் படாம இரு.'

இந்த அண்ணு மாமிக்கு தான் எத்தனை சேனைகள்?

அசந்தே போய் விட்டாள் மாலதி.

விடை பெற்றுக் கொண்டனர் இருவரும். திருச்சி ஹாஸ்டல் வரை மாலாவை கொண்டு விட்டு விட்டு அங்கிருந்து வேலூர் போகவேண்டும் ஸ்ரீனிவாசன். மாலா எவ்வளவு சொல்லியும் பிடிவாதமாக திருச்சி வருவதாக சொல்லிவிட்டார்.

'அம்மாஆஆஆஆஆ', புள்ளையாண்டானின் ஏக்க குரல்.

தாம்பரம் வரையாவது சென்று மாலதியை வழி அனுப்ப வேண்டும் என்ற சந்துருவின் பிடிவாதம்.

'சரி, போயிட்டு வா... உன்னோட ரோதனை தான் பெரும் ரோதனை.'

அவன் கேட்டு இவள் சம்மதம் கொடுக்கும் ஒவ்வொரு முறையும், அம்மாவின் கண்ணத்தை கிள்ளி தலையை இரண்டு ஆட்டு ஆட்டுவான். இந்த முறையும் அப்படித்தான்.

'வாயெல்லாம் வலிக்கறதுடா. நீ பேரன் பேத்தி எடுக்கற வரைக்கும் இப்படித்தான் கிள்ளப் போறையா?'

சந்தடி சாக்கில் தன் ஆயுளை கூட்டிக் கொண்டாள் அண்ணு.

தொடரும்

No comments:

Post a Comment