Friday, January 14, 2022

செருவாமணி 21

அத்யாயம்: 21 .. செருவாமணி

Written by Baskar Sathya 

சித்தப்பா சேதுராமனுடன் செருவாமணி மெட்ராஸ் வந்தாகி விட்டது.  எக்மோர் வரும்போது காலை ஏழு.  ட்ரெயின் இரண்டு மணி நேரம் லேட்.

மைலாப்பூர் பானுமதி அக்ரஹாரத்தில் உள்ள கோபு மாமாவாத்துக்கு வந்தார்கள்.  அவர் இல்லை.  அவாத்து மாமிதான் வரவேற்றாள்.

'ஒரு பூஜைக்கு போயிருக்கார்.  உங்களை குளிச்சிட்டு டிஃபன் சாப்டுட்டு மூர்த்தி மாமாவாத்துக்கு எமகண்டத்துக்கு  முன்னாடி போய் பேசிண்டு இருக்க சொன்னார்.  அங்க பன்னெண்டு மணிக்குள்ள நேரா வந்துடறாராம்.'

வாங்கி வந்த ஒரு டஜன் ஆப்பிள்களை பார்வதி மாமியிடம் கொடுத்தார் செருவாமணி.

வைதீக குடும்பம் கோபு மாமாவுடையது.  செருவாமணியை ஒத்த வயசுதான்.  கொஞ்சம் வளர்ந்த பையன்.  எட்டு வயசுல ஒரு பொண்ணு.  ரெண்டு பேரும் ஏதோ புத்தகங்களை வைத்து படித்துக் கொண்டிருந்தார்கள்.

செருவாமணி முதலில் ரெடியானார்.  அதற்குள் கோபுவின் குழந்தைகளுடன் சித்தப்பா வம்பு இழுத்துக் கொண்டிருந்தார்.  பள்ளிக் கூட வாத்யாரில்லையா.  படிக்கும் குழந்தைகளைப் பார்த்தவுடன் அவருக்கு ஒரு ஆனந்தம்.

இருவரும் ரெடியாகும் போது மணி பத்து.  ஆளுக்கு ஐந்து இட்லியும் டிகிரி காஃபியும் உள்ளே போனது.

'கணேஸா, இவாள அழச்சிண்டு  மூர்த்தி மாமாவாத்த காமிச்சுட்டு வாடா'.

சைக்கிளை தள்ளிக்கொண்டு கணேசன் முன்னே போக, இருவரும் தொடர்ந்தார்கள்.

'கொஞ்ச தூரம்தான் சார்'

அப்பு முதலி தெருவில் ஒரு வீட்டின் முன் கணேசன் சைக்கிள் நின்றது.  தெருவிலேயே அந்த வீடு மட்டும் தான் தனி காம்பௌண்டோடு இருந்தது.  வாசலில் 'டாக்டர் மூர்த்தி', 'டாக்டர் பாலச்சந்தர்' என்ற இரண்டு போர்டுகள்.  இரண்டு மாடி வீடு என்று அசப்பிலேயே தெரிந்தது.

'மாமா.  உங்கள பார்க்க மன்னார்குடியிலிருந்து வந்திருக்கா.'

டாக்டர் மூர்த்தி இவர்களை 'வாங்கோ' என்று கூப்பிடுவதற்குள் அவன் சைக்கிளில் சிட்டாய் பறந்துவிட்டான்.

ஆஜானுபாஹுவான சரீரம்.  அப்போதுதான் பூஜையை முடித்திருப்பார் போல இருக்கிறது.  ஸ்வாமி அறையிலிருந்து வந்த சாம்பிராணி புஷ்ப வாசனைகள் உணர்த்தியது.

'கோபு வாத்யார் சொன்னார், நீங்க வருவேள்னு.  சித்த இந்த ஸோஃபால உட்காருங்கோ.  தையுக்கு மாலை போட்டுட்டு வந்துடறேன்.'

அவர்கள் கண்ணெதிரே சிரித்த முகத்துடனும் மடிசாருடனும் அம்பாள் லக்ஷணத்தில் மாமி படம்.  ஸ்டூலில் தானே ஏறி இரண்டு பக்கத்து ஆணிகளிலும் மாலையை சாத்தினார்.

பஞ்சகச்சத்திலிருந்து விடுபட்டு எட்டு முழம் வேட்டி அலங்காரத்தில் வந்தார் டாக்டர் மூர்த்தி.

படத்தை காண்பித்து, 'இவதான் தையல் நாயகி.  நான் சதாசர்வகாலம் நெனச்சிண்டிருக்கிற தையு.  ஆச்சு, கர சேர்ந்து ஒரு வருஷம் ஆகறது.  என்ன இங்க விட்டுட்டு ஜாலியா போய் சேர்ந்துட்டா.'

சொல்லும் போதே மாமி மேல் அவர் வைத்திருந்த பிரியம் வெளிப்பட்டது.

'பேசிண்டே பொக்குனு போகரதுக்கு கொடுத்து வெச்சிருக்கணும்.  அவளுக்கு கெடச்சது.'

'என்னடா வரன் விஷயமா பேச வந்திருக்கோம்.  இப்படி போன மாமிய பத்தி பேசிண்டிருக்காரே' ஒரு சின்ன உறுத்தல் செருவாமணிக்கு.

சித்தப்பா பேச்சு திசையை சட்டென்று மாத்தினார்.

'இவர் எங்காத்து மாப்பிள்ள.  இவர் ஆம்பிடையாளோட ஒண்ணு விட்ட சித்தப்பா நான்.  மன்னார்குடியில ஸ்கூல் வாத்யாரா இருக்கேன்.  சேது வாத்தியார்னா எல்லாருக்கும் தெரியும்.'

'மாப்பிள்ளைக்கு ஒரே பொண்ணு.  திருச்சி காலேஜுல பட்டம் படிச்சிண்டிருக்கா.  கடைசி வருஷம்.  உங்க பையன் ஜாதகம் இவாளுக்கும் பொருந்திருக்கு.  அதான் நேரில வந்து சொல்லிட்டு உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு..:

பேசிக் கொண்டே விசாலம் கொடுத்த நந்தினி ஃபோட்டோவை காண்பித்தார்.

'ரொம்ப லக்ஷணமா இருக்காளே பொண்ணு.  அப்பா ஜாடை அப்படியே.'

வெட்கச் சிரிப்பு செருவாமணியிடம்.  கையில் கொண்டு வந்த பழக் கூடையை மூர்த்தியிடம் நீட்டினார்.

'இதெல்லாம் எதுக்கு?' என்றவர், 'கற்பகம் மாமி, இவாளுக்கும் எனக்கும் கொஞ்சம் காஃபி கொடுக்கறேளா?'

'தையு போனதிலிருந்து இந்த கற்பகம் மாமிதான் சமையல் எனக்கும் என் பையனுக்கும்.  கோபு வாத்யார்தான் இந்த மாமிய ஏற்பாடு செஞ்சு கொடுத்தார்.  என்ன ஒண்ணு, நிதானமா செய்வா எல்லா வேலையையும்.'

'பேசிண்டே இருக்கோமே.  நம்மாத்த கொஞ்சம் காமிக்கறேன் வாங்கோ.'

பூஜை அறையிலிருந்து ஆரம்பித்தார்.  ஏகப்பட்ட சாமிப் படங்களும், பஞ்சலோக விக்ரஹங்களும்.  எல்லா சாமிகளும் ஃபரெஷ்ஷா பூக்களையும் மாலைகளையும் ஸைஸுக்கு ஏத்தபடி வெச்சுண்டு.  எல்லாத்துக்கும் முத்தாய்ப்பா ப்ரம்மாண்டமாய் பெரியவா படம் சிரிச்சிண்டு, ஒரு கையில தண்டத்தோட, ஒரு கை ஆசிர்வாத குவியலோடு.

சிலிர்த்து விட்டார் செருவாமணி.  'இத்தனை தெய்வங்கள் நம்ம கொழந்தைய பார்த்துக்காம போயிடுமா என்ன?' மனதிற்குள் ஒரு சிறிய நம்பிக்கையும் உதித்தது.

'நான் ஒரு ஆயுர்வேத டாக்டர்.  இப்பெல்லாம் இங்கிலீஷ் மருந்துகள் தான் எல்லாருக்கும் பிடிக்கறது.  அதனால தான் என் பிள்ளைய MBBS படிக்கச் சொன்னேன்.'

ஒவ்வொரு அறையாக காண்பித்துக் கொண்டு வந்தார்.  இடையிடையில் தன் பூர்வீகத்தை பற்றியும், மூதாதயர்கள் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்தார்.

பூர்வீகம் என்று சொல்லும் அளவில்தான் அவருக்கு சேங்காலிபுரம் இருந்தது.  கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே மெட்ராஸுக்கு குடிபெயர்ந்த குடும்பம்.  அவர் தாத்தா எழுதிவைத்த மூதாதயர் விவரங்கள் அடங்கிய ஒரு நாப்பது பக்க நோட்டு ஒண்ணை வைத்துதான் அவரே தேடவேண்டும் அவருடைய சொந்தங்களை.

காஃபி குடித்துக் கொண்டும் டாக்டர் மூர்த்தியின் பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டிருந்தாலும், செருவாமணியின் கண்கள் என்னவோ அவர் பிள்ளையையே தேடிக் கொண்டிருந்தன.

ஒரு கட்டத்தில் வாய் திறந்தே கேட்டுவிட்டார்.  'உங்க புள்ள இல்ல?'

'பார்த்தேளா, பார்த்தேளா.  இதுதான் ஊர்க் கதைய பேச ஆரம்பிச்சுட்டா எல்லாத்தையும் மறந்துடுவேன்.  பையன் ஆழ்வார்பேட்டை வரைக்கும் போயிருக்கான்.  அவன் ஃப்ரெண்டு ஒரு க்ளீனிக் வெச்சிருக்கான்.  அவனுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணிட்டு வரேம்ப்பான்னு கார்த்தால எட்டு மணிக்கே கிளம்பிட்டான்.:

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கோபு வாத்தியார் சொன்னபடி வந்து சேர்ந்து கொண்டார்.

'வாடா, கோபு.  என்ன இவ்வளவு லேட்டு.  நான் பேசிண்டே இருந்தது இவாளுக்கு போர் அடிச்சிருக்கும்.'

கோபு மாமாவும் சித்தப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

'சரி, நேரா விஷயத்துக்கு வருவோம் மாமா.  ரெண்டாத்துக்கும் ஜாதகம் பொருந்தியிருக்கு.  வயசுல நான் ரொம்ப சிறியவனா இருந்தாலும் சேதுராமன் சார் என்னை ஃப்ரெண்டுன்னுதான் சொல்வார். அவர் மூலமா, அவர் சொந்தக்காரப் பொண்ணு ஜாதகமே வந்திருக்கறதால, இந்த சார் குடும்பமும் நல்ல குடும்பமாத் தான் இருக்கும்.  மத்த விவரங்கள் எல்லாம் பேசியிருப்பேள்னு நெனைக்கிறேன்.'

'எனக்கும் நல்லபடியா எல்லாம் போகும்ணு தான் தோணறது.  பொண்ணு ஃபோட்டோ கொடுத்தார்.  ரொம்ப நன்னா இருக்கா.  பையனுக்கும் பிடிக்கும்னுதான் தோணறது.  அவன் வர டைம்தான் இப்ப.  அவன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு இப்பவே எப்ப பொண்ணு பார்க்க வரோம்னு சொல்லிடலாம்னு நெனய்க்கிறேன்.'

வாசலில் ஸ்கூட்டர் சத்தம்.  இறங்கியது பாலச்சந்தரே தான்.

'அவனே வந்துட்டான்னு தோணறது.'

தொடரும்...

No comments:

Post a Comment