மனதோடுமலர்கள்_44
அத்யாயம் 44
மாலதி ஆத்தில் ரணகளம், மாப்பிள்ளை வீட்டுக்காரா எல்லாம் சென்றபிறகு. ஆரம்பித்தது ஸ்ரீதர்.
'எனக்கு என்ன இருக்கு இந்த வீட்டில் மரியாதை? எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்ட பிறகு ஒரு ஃபார்மாலிடிக்காக நானா? பையன் யாரு, எப்படி குணம், ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கா அது இதுன்னு விசாரிக்காமல் பெண் பார்க்கும் படலத்த வெச்சுண்டாச்சு. ஜாதகம் பொருந்தியிருக்குனு ஜோஸ்யன் சொன்னோன இவ்வளவு ஏன் அவசரப்படணும்?'
'இப்ப என்ன குடி முழுகிப் போச்சு. அவாதான் நன்னா விசாரிச்சுண்டு வந்து பேசுங்கோன்னு சொன்னாளே. இப்ப விசாரிச்சா போச்சு.'. கமலம் குறுக்கிட்டாள்.
'அம்மா, நீ பேசாம இரு. உனக்கு ஒண்ணும் தெரியாது. நன்னா விசாரிச்சுட்டு பொண்ணு பார்க்க கூப்பிடுவாளா, இல்ல பொண்ணு பார்க்க வெச்சுட்டு விசாரிப்பாளா? இந்த ஆத்தில எல்லாமே தலைகீழ்தானே?'
அதுவரை பொறுமையாக இருந்த ஸ்ரீனிவாசன் பேச ஆரம்பித்தார்.
'ஸ்ரீதர், நான் சொல்லித்தான் மாலா ஏற்பாட்டெல்லாம் செஞ்சா. மூணு பொண்ணு பெத்தவனுக்கு தான் கஷ்டங்கள் புரியும்.'
'ஓஹோ. மாலா இந்த ஆத்து கடைசி பொண்ணு. அவ போய் முதல் முதல்ல மாப்பிள்ளையாத்துல பேசறது எந்த ஊர் ஞாயம்? ஆத்துல தடி ஆம்பிளைகளே இல்லையான்னு அவா நெனச்சுக்க மாட்டா. நீங்க ரெண்டு பேரும் இந்த முப்பெரும் தேவிகளுக்கு கொடுக்கற மரியாதைல கொஞ்சமாவது எனக்கு கொடுத்திருக்கலாம்.'
'இப்ப என்ன ஆச்சு. நல்லாத்தானே எல்லாம் போயிண்டிருக்கு. நமக்கோ வேலை வெட்டி ஜாஸ்தி. நான் இவாள்ல ஒருத்தரை தானே நம்ப வேண்டியிருக்கு. நீயாவது இவா பேர்ல அக்கறை எடுத்துண்டு கரை சேர்க்கற வழிய பார்த்திருக்கலாமே? நீ பேசறதுல துளி கூட ஞாயமில்லை.'
'எனக்கா அக்கறை இல்லை. ரெண்டு மாசம் முந்தி கற்பகத்தோட சொந்தக்காரா ஜாதகத்தை அனுப்பிச்சேனே. நீங்க தான் ஏதேதோ ஜாதகம் பொருந்தல அது இதுன்னு சால்ஜாப்பு சொன்னேள்.'
'ஆமாம் ஜாதகம் பொருந்தலைனு ஜோஸ்யன் சொன்னான். அதுக்குன்னு வேற பார்க்க கூடாதா?'
'அப்பா, இப்ப மட்டும் புள்ளையாண்டான பத்தி விசாரிக்காம எல்லாம் எப்படி பொருந்தி வருது, நிச்சயதார்த்தம் வரைக்கும். இப்ப மாத்திரம் நான் வேணும், கற்பகம் வேணும், ஏன்னா கல்யாணத்துக்கு பணம் வேணும்.'
'இனிமே ஒரு வார்த்தை பேசினா...ஜாக்கிரதை. உன் எழவெடுத்த பணம் யாருக்கு வேணும். என் பொண்களுக்கு எப்படி கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தெரியும். உன் சல்லி காசு எனக்கு வேண்டாம். நீ போய் நீ உண்டு, உன்னோட மில் உண்டுனு இரு. கல்யாணத்துக்கு கூப்பிடறேன். கூட பொறந்த பாவத்துக்கு ரெண்டு அட்சதைய போட்டுட்டு சாப்பிட்டுட்டு போ.'
மாலதி அப்பாவை சமாதானப் படுத்தினாள். 'அப்பா, வார்த்தைகளை விடாதீங்கோ. அப்புறம் அள்ள முடியாது. அண்ணா, நான் இனிமேல இதுல ஈடுபடல. நீங்களே மேல ப்ரொஸிட் பண்ணுங்கோ.'
'உங்களுக்கு ஏன்னா இந்த வம்பெல்லாம்? இந்த குடும்பத்திலதான் உங்க மரியாதையத்தான் பட்டவர்த்தனமா சொல்லிட்டாளே' இது கற்பகம், ஸ்ரீதரின் பாரியாள்.
'மன்னி, அப்பா சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். நீங்க ரெண்டு பேர்தான் எங்களுக்கு எல்லாம். ஏதோ அப்பா வாய்தவறி தன் ஆத்தாமைல பேசிட்டா. மறந்துடுங்கோ மன்னி.'
'என்ன மாலா, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடறையோ. உனக்கு கல்யாணம் சீக்கிரம் ஆகறதுக்காக அந்த சமையக்காரி மாமியோட சேர்ந்து இவாள ஏதோ ஒரு குழியில தள்ளிவிட பார்க்கறையா?'
ஸ்ரீதர் இப்படி சொன்னதும் அதுவரை பொறுமை காத்து வந்த மாலதி குரலை ஏற்றினாள்.
'அண்ணா, ஆத்து மனுஷாள நீங்க எது வேணா சொல்லுங்கோ. உதவி செய்ய வரவாள கேவலமா பேசறதை என்னால பொறுத்துக்க முடியாது. மாமிய பத்தி என்ன நெனச்சிண்டு இருக்கேள்?'
'அதான் பார்த்தேனே. எல்லோரை விட அந்த மொட்ட மாமிய நீ ஸ்பெஷலா கவனிச்ச கவனிப்பை.'
'ஸ்ரீதர் அண்ணா, நீ இன்னும் அந்த பரோபகாரிய பத்தி ஒரு வார்த்தை பேசினா, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.' அதுவரை அண்ணாவை வாங்கோ போங்கோனு கூப்பிட்டிருந்தவள் ஒருமையில் பேசியது எல்லோருக்கும் வித்தியாசமா இருந்தது.
மாலதி இப்படி சொன்னவுடன், லலிதா ஓடி வந்து அவள் கையை பிடித்து இழுத்து ரேழி உள்ளுக்கு அவளை அழைத்து சென்றாள்.
'மாலு, கொஞ்சம் பொறுமையா இரு. எனக்கெல்லாம் உபதேசம் சொல்ற நீ இப்படி பொறுமைய இழக்கலாமா? அப்பாவும் அண்ணாவும் ஏதோ பேசிக்கறா. நீ அங்க போகாதே.'
முற்றத்தில் பக்கவாட்டில் இருந்த தூணை பிடித்துக் கொண்டு சம்பாஷணைகளை கவனித்துக் கொண்டிருந்த ஜானா பேச ஆரம்பித்தாள்.
'எல்லாரும் கேட்டுக்கோங்கோ. இனிமே எனக்கு அலையன்ஸ் பார்க்கறத இத்தோட விடுங்கோ. ஆண்டவன் விட்ட வழியில நான் வாழ்க்கையை ஓட்டிக்கிறேன். எனக்காக யாருக்கும் இந்த குடும்பத்தில எந்த மனஸ்தாபமும் வேண்டாம்.'
பட்டென்று சொல்லிவிட்டு ரேழி உள்ளுக்கு அவளும் சென்றாள்.
'ஆச்சு, ஞாயத்தை கேட்டா நான் பொல்லாதவன் இந்த குடும்பத்தில. இந்த முப்பெரும் தேவிகள் கான்ஃபரன்ஸ் போட்டு நடிப்பாளுங்க. அதை இந்த அப்ராணிகள் நம்பும். நல்ல குடும்பம்பா இது.'
'மாலா உன்கிட்ட இந்த வரனைப் பற்றி பேசறச்சே இப்ப பேசறதெல்லாம் பேசியிருக்க வேண்டியது தானே. அட்லீஸ்ட் இங்க வந்தோண்ணையாவது சொல்லியிருக்கலாமே?'. கமலம் தன் பங்குக்கு கேட்டாள்.
'மாலா ஆத்துல கடக் குட்டி. அவ கிட்ட எப்படிம்மா நான் இதெல்லாம் பேச. அப்பா என் கிட்ட பேசியிருந்தா நான் சொல்லியிருப்பேன். இங்க வந்ததுக்கப்புறம் பேசியிருந்தா நீங்கள் எல்லாம் மூட் அவுட் ஆகி என்ன வில்லனா பார்த்திருப்பேள்.'
ரேழி உள் வந்த ஜானகி ஒரு தலையணையை போட்டு குப்புறப் படுத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். மாலதி அவளை தேற்ற ஆரம்பித்தாள்.
'அவசரப் படாதே ஜானா. கொஞ்சம் ஆறப் போடுவோம். எல்லாம் நல்ல படியா நடக்கும்.'
அப்பாவுக்கும் பிள்ளைக்கும் வாதங்கள் வலுத்துக் கொண்டே போனது.
'நீ வேணும்னே வம்பிழுக்கறது புரியுது ஸ்ரீதர். என் பெண்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. அவாளப் பத்திய கவலை வேண்டாம் உனக்கு. நான் உண்டு அவா உண்டு. உன் பணம் காசு எனக்கு தேவையில்லை. இத்தோட இந்த டாபிக்கை விடு. நீ திருப்பூர பார்த்து கிளம்பலாம். அப்பா அம்மா கௌரவத்த காப்பாத்தறதுக்கு முடிஞ்சா கல்யாணத்தை நடத்திக் கொடு. அப்புறம் உன் இஷ்டம்.'
வீடு சற்று அமைதியானது. புயலுக்கு பின் அமைதிம்பாளே. அந்த அமைதி.
ரேழி உள்ளுக்கு வந்தார் ஸ்ரீனிவாசன். 'குழந்தைகளா, கவலைப் படாம சாப்பிட்டு தூங்குங்கோ. நான் பார்த்துக்கறேன். மாலா, நீ திருச்சி கிளம்பற வழிய பாரு. நாளைக்கு ஃபோன்ல பேசிக்கலாம்.'
'எனக்கு பசிக்கல அம்மா. பத்து மணிக்கு கிளம்பறேம்பா. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. பத்தரை மணிக்கு பஸ் புடிச்சா சரியா இருக்கும்.'
'சரி, நானே கொண்டு விடறேன் பஸ் ஸ்டாண்டுல உன்ன. ஒன்பதரைக்கே கிளம்பலாம். ஸன்டே வா இருக்கு. பஸ்ஸுல கூட்டம் இருந்தாலும் இருக்கும்.'
ஒவ்வொருத்தராக கமலம் கேட்டுக் கொண்டு வந்தாள் சாப்பிட வருவதற்கு, பேரனை இடுப்பில் சுமந்து கொண்டு அவனுக்கு சாதம் ஊட்டிக் கொண்டே. யாருக்கும் பசியில்லை.
இன்று ராப்பிச்சை காரன் பாக்கியவான், மிச்சம் மீதி பஜ்ஜி சொஜ்ஜியோடு.
தொடரும்
No comments:
Post a Comment