மனதோடுமலர்கள்_45
அத்யாயம் 45
காரின் முன் சீட்டிலிருந்து வந்து ஸ்ரீமதி பக்கத்தில் அமர்ந்த அண்ணுவைப் பார்த்து ஸ்ரீமதி சிரித்துக் கொண்டே, 'அம்மாடியோ, அண்ணுவுக்கு சூப்பரா ஒரு மாட்டுப் பெண் கிடைக்கப் போறானு சொல்லவே இல்லையே.'
'என்ன, என்ன? அதெல்லாம் ஒண்ணுமில்லையே.'
'எல்லாம் எனக்கு தெரியும் அண்ணு. நீ நெனைக்கற மாதிரி நடந்துட்டா, ஒன்ன மாதிரி கொடுத்து வெச்சவ யாரும் இருக்கமாட்டா. பகவான் உனக்கு ஆரம்பத்தில கஷ்டத்தை கொடுத்தாலும், கடைசி காலத்துல சந்தோஷத்தை கொடுக்கப் போறான்னு நினைக்கும்போதே சந்தோஷமா இருக்கு எனக்கு.'
'என்ன மாலதி ஏதாவது சொன்னாளா?'
'கோவில்ல நானும் மாலதியும் தனியா பேசிண்டு இருந்தோம். அப்ப என்னோட ஒண்ணு விட்ட தங்கைக்கு ஒரு பையன் இருக்கான். உனக்கு பார்க்கட்டுமான்னு சாதாரணமா கேட்டேண்டி. தடிச்சி என்ன சொன்னா தெரியுமா? அண்ணு அம்மா என்னை ஏற்கனவே புக் பண்ணிட்டா அவா பையனுக்கு. நீங்க வேணா என் ரெண்டாவது அக்காவ பாருங்கோன்னு பளிச்சுனு சொல்லிட்டா. எனக்கு ஒரே ஷாக்'
பெரிசா சிரித்துக் கொண்டே, 'அப்படியா சொன்னா. எமகாதகியா இருக்காளே'.
சுருக்கமா அவர்களுடைய காதல் பரிமாற்றத்தை சொன்னாள் அண்ணு அவளிடத்தில்.
'என்ன பண்றது ஸ்ரீமதி, ரெண்டுங்கெட்டான் வயசுல ரெண்டும் முடிவெடுத்துடுத்துங்க. நான் குறுக்க நின்னா எம் புள்ள எங்கேயாவது தேவதாஸாகி, அந்த பொண்ணு எசகு பிசகா ஏதாவது பண்ணிண்டுடுத்துன்னா என்ன பண்றதுன்னு பயம் வேற வந்துடுத்து நேக்கு. அதான் சம்மதிச்சுட்டு, ரெண்டையும் நல்லதனம் சொல்லிண்டிருக்கேன். அவளோட அக்காக்கெல்லாம் கல்யாணம் ஆனோன போய் அவ அப்பா அம்மாகிட்ட பேசலாம்னு இருக்கேன்.'
'மாலாவும் அமுக்கம், நீயும் அமுக்கம். என்கிட்ட கூட நீ சொல்லலையே?'
'தப்பா நெனச்சுக்காத ஸ்ரீமதி. இதெல்லாம் டமாரம் போட்டா சொல்ல முடியும்? இது விஷயமா உன்கிட்ட பேச சந்தர்ப்பமும் இல்லையோன்னோ.'
'பரவாயில்ல அண்ணு. ஒன்ன பத்தி தெரியாதா எனக்கு. எனக்கு ஜானாவும் உனக்கு மாலாவும் மாட்டுப் பொண்களா கிடச்சுட்டா நாம ரெண்டு பேரும் உறவுக்காராளா வேற ஆயிடறோமே. பெரிய சந்தோஷமில்லையா இது.'
'நான் லலிதா கல்யாணத்துக்கும் ஏற்பாடு ஏதாவது செஞ்சாதான் அவாகிட்ட பேச முடியும். அதுக்கு இன்னும் எத்தனை வருஷம் ஆகறதோ. பகவான் அவளுக்கும் சீக்கிரம் மாங்கல்யத்த ஏற்பாடு பண்ணனும்.'
'பார்ப்போம், பட்டாபி செட் ஆகறானான்னு?'
'அட, யார்டி அந்த பட்டாபி?'
'அதான் மாலதிகிட்ட சொன்னேனே, என் ஒண்ணு விட்ட தங்க பையன். ரெண்டு பேருக்கும் ஒரு வருஷம்தான் இருக்கும்போல தெரியறது. ஆனா அவா வேலை பார்க்கற பொண்ணா வேணும்னு சொல்றா. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு. பேசித்தான் பார்ப்போமே'.
'எப்படியாவது முயற்சி பண்ணுடி. ஒத்துப்போனா, நானும் மாலா விஷயமா பெத்தவாகிட்ட பேச சௌகர்யமா இருக்கும்.'
'நீ பேசறையா? அடிப்போடி இவளே. பிராமணன் முரண்டு பிடிச்சா, மிரட்டியே நான் சம்மதிக்க வைக்க மாட்டேன்?'
அண்ணுவுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. 'ச்சே ச்சே, சித்த நாழில ஸ்ரீமதிய போய் தப்பா நெனச்சுட்டோமே. என்ன மனுஷி நான்?'
ஸ்ரீமதியின் இரு கைகளையும் பற்றிக் கொண்டாள் அண்ணு. அவள் கண்கலங்குவதை ஸ்ரீமதி கவனித்து விட்டாள், காருக்குள் இருந்த இருட்டிலும்.
'அடி அசடே. கண்ண தொடச்சுக்கோ. எத்தனை கம்பீரமா லைஃபை போராடி ஜெயிச்சிண்டு வர. இதெல்லாம் உனக்கு சாதாரணம் டி. நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்? என் பையனுக்கு ஏத்த பொண்ணா ஜானாவ நீ ஏற்பாடு செய்யும்போது, நான் உன் பையனுக்கு நல்லது செய்ய மாட்டேனா?'
'அத விட்டுத் தள்ளு. இப்போதைக்கு மாலதி கொடுத்த பழத்தையாவது சாப்பிடு. கார்த்தாலேந்து கொல பட்டினியா இருக்கியே. முதல்ல சாப்பிடு அண்ணு.'
'பையன் சாப்பிட்டானோ இல்லையோ. இப்பவே லேட் ஆயிடுத்தே.'
'ஏண்டி, அவன் என்ன பச்ச கொழந்தையா. கண்டிப்பா இத்தனை நேரம் சாப்பிட்டிருப்பான். அவன பத்தி விஜார படாம நீ சாப்பிடு.'
ஆப்பிளின் தோலெல்லாம் சீவி, துண்டு துண்டா அழகாக வெட்டித் தந்திருந்தாள் மாலதி. கூடவே அரை டஸன் மலை வாழைப் பழத்தையும் வைத்திருந்தாள்.
கம்பெனிக்காக ஆளுக்கு ஒரு பழத்தை எடுத்துக் கொண்டார்கள், அண்ணுவின் வற்புறுத்தலில். சாப்பிட ஆரம்பித்தாள் அண்ணு.
'பாகி, அண்ணுவும் நானும் இப்ப பேசிண்டு வந்தது உன் மனசோடையே இருக்கட்டும். குறிப்பா உன் ஃபரெண்ட் சச்சுக்கு நீ சொல்லாதே. பக்குவமா நேரம் பார்த்து அண்ணுவே சொல்லிப்பா, என்ன?'
பேச்சு சற்று நன்னிலம் பக்கம் திரும்பியது. மெட்ராஸுக்கு அருகில் காரும் வந்து விட்டது.
'கணேசா, முதல்ல க்ரோம்பேட்டைல மாமிய இறக்கிட்டு அப்புறம் மாம்பலம் போகலாம், என்ன?' என்று ட்ரைவரிடம் ஸ்ரீமதி சொன்னாள்.
'சரிங்கம்மா..'
தொடரும்
No comments:
Post a Comment