அத்யாயம்: 20 .. செருவாமணி
Written by Baskar Sathya
அன்பின் அபரிமிதமான ஈர்ப்பினால் செருவாமணி தம்பதியினருக்கு வெகுநேரம் தூக்கமில்லை.
நாளை காலை திருச்சி செல்ல வேண்டும். குழந்தையைப் பார்த்துப் பேச அனுமதி ஐந்து மணிக்குத்தான் கல்லூரி கொடுக்கும். அதுவரை? கோவில்கள்தான். ஜம்பு ஜோஸ்யர் குழப்பியதை கண்ணால் பார்க்கும் சந்நிதிகளில் கொட்டித் தீர்க்க வேண்டும்.
மனம் உருகி பிரார்த்திக்கும் போது மனம் லேசாகி விடுகிறது. அசட்டு தைரியமும் குருட்டு நம்பிக்கையும் கிடைத்து விட்டால் போதாதா என்ன? சிலைகள் பேசாவிட்டால் என்ன, சித்தம் ஆறுதல் பெற்று விடுகிறதே.
அவன் அவன் வழியில் தீர்மானிப்பதை தங்கள் வழியில் அவன் பயணிப்பதாக ஏற்று விடுகிறோம்.
சமயபுரம் பார்த்தாச்சு. திருவானக்காவலையும் விட்டு வைக்கவில்லை. அரங்கனை அண்டியாகி விட்டது. இன்று செவ்வாய். வயலூருக்கு செல்ல வேண்டியதுதான். செவ்வாய் கிழமைக்கு அவன் தானே அதிபதி. அவனுடைய நாளில் அவனிடத்தே முறையிட்டால் போகிறது. மற்ற நாட்களில் அவனைப் பிரார்த்தித்தால் வேண்டாமென்றா சொல்லப் போகிறான்? கிழமைகளுக்கு தெய்வத்தை பொருத்திப் பார்ப்பதிலும் ஒரு சுகம் உண்டு. பிரத்யேக நாட்களில் தரிசித்தால் பரவசமடைவான் அவன் என்ற நம்பிக்கை.
வயலூரான் தரிசனம் பனிரெண்டு மணிக்குள் முடிந்தது இருவருக்கும். ஐந்து மணிவரை நாளை ஓட்டவேண்டும். நடை சாத்தியிருந்தாலும் கோவில் திறக்கப்பட்டிருந்தது. கோவில் பிரசாதங்கள் மதிய உணவானது. தூணிலே சாய்ந்து ஒரு களைப்புத் தூக்கம் விசாலத்திற்கு. ஒரு கைத் தலையணையில் உண்ட மயக்கம் செருவாமணிக்கு. சந்தன மொட்டைகளின் பேச்சு சத்தங்கள், காவடிக் கூட்டங்கள் அவ்வப்போது கொடுக்கும் அரோஹரா அதிர்வுகள். இவை எல்லாமே இருவருக்கும் தாலாட்டுக்கள் தான். தூங்காத இரவின் அசதி இருவரையும் அடித்துப் போட்டது. பிரகாரத்தின் சில்லுக் காற்று, ஏற்றிய ஊதுபத்திகள் மற்றும் பக்தர்கள் படைத்தபின் பசியாற திறக்கும் சர்க்கரைப் பொங்கல்களின் நறுமண வாசங்களை சேர்த்தே நெஞ்சுக்குள் செலுத்தியது.
கோடை வாய் கொடுத்த ஈரம் நேரத்தில் தூக்கத்தைக் கலைத்தது. மணி இரண்டு. சரியாக இருக்கும் இப்போது கிளம்பினால்.
நந்து குட்டியோடு ஏழுமணிவரை பேசிவிட்டு கிளம்பினால் பத்து மணிக்குள் மன்னார்குடி போய்விடலாம்.
வயலூரான் அமைதியைக் கொடுத்துவிட்டான் மனதிற்கு.
அனுமதிச் சீட்டு வாங்கி கல்லூரியில் நாலேகால் மணியிலிருந்து காத்திருப்பு.
'அம்மாஆஆஆஆஆ.... அப்பாஆஆஆஆ. என்னப்பா திடீர்னு.'
'கோந்த. ரொம்ப எளச்சுட்டியே. வேளைக்கு சாப்பிடறையோன்னோ?'
எந்த பெற்றோர் தன் குழந்தை குண்டாயிருப்பதாக ஒத்துக் கொள்வார்கள்? அவர்களைப் பொருத்தவரை குழந்தைகள் எப்போதுமே சரியாக சாப்பிட மாட்டார்கள். வாஞ்சை எப்போதும் ஏற்பதில்லை.
'செல்லம், நன்னா படிக்கறையா? ஃபர்ஸ்ட் ரேங்க் தானே?'
'நன்னா படிக்கறேம்ப்பா'. அப்பா பக்கத்தில் உட்காருகிறாள். செருவாமணியின் கை அவள் தலையை தடவுகிறது.
'அம்மாகிட்ட போ.'
இப்போது அம்மாவின் முறை. வயலூர் விபூதிப் பிரசாதம் அவள் நெற்றியில் ஏறுகிறது.
'எதுக்கு இப்படி திடீர்னு சொல்லவே இல்லையே?'
'சொல்றோம் டீ. ஏன் உன்னப் பார்க்க நாங்க வரக்கூடாதா? என்னவோ பார்க்கணும்னு தோணித்து வந்தோம்.' சிரித்துக் கொண்டே விசாலம்.
'அம்மாஆஆஆஆ. சீக்கிரம் சொல்லு.'
பேசிக் கொண்டிருக்கும் போதே செருவாமணி தன் ஜோல்னா பையிலிருந்து வெல்லச் சர்க்கரை பொட்டலத்தை நந்தினியிடம் நீட்டுகிறார்.'
அவருக்கு இன்னும் நந்தினி வெல்லச் சர்க்கரைக்கு அலைபவளாகவே தெரிகிறாள்.
'அப்பாஆஆஆஆ. நீங்களாவது சொல்லுங்கோ அப்பா.'
மெல்ல ஒரு பீடிகை, 'ஒண்ணுமில்லடா குட்டி. அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ள பார்த்து வெச்சிருக்கா. நந்து குட்டி மாதிரியே கொள்ள அழகாம், சித்தப்பா சொன்னார். டாக்டர் வேற. பெரிய சம்பந்தம்.'
'அப்பாஆஆ. நான்தான் இப்ப கல்யாணம் வேண்டாம்ங்கரேனே. நான்பண்ணிக்க மாட்டேன். நான் ஐ ஏ எஸ் படிக்கணும்பா. ப்ளீஸ்ப்பா.'
மூவரும் மாறி மாறிப் பேசினார்கள். பெற்றோர்களை எவ்வளவு தூரம்தான் எதிர்த்து பேச முடியும்.
'உன் நல்லதுக்குத் தான்'
'டாக்டர் சொன்னாளோன்னோ. கல்யாணத்துக்கப்பறம் வயித்து வலி சரியாயிடும்னு.'
'நல்ல வரனா தெரியறது.'
'மாப்பிள்ளையும் டாக்டரா இருக்கறதால உனக்கு எந்த ஒடம்பா இருந்தாலும் நன்னா பார்த்துப்பார்'
'மாமியார் இல்ல. வேலக்காராள்லாம் வெச்சிருக்காளாம். வசதியா இருக்கலாம் கொழந்த'
'நல்ல இடத்துல கொடுக்கணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா?'
'நோக்கு மாப்ளைய பிடிக்கலைனா வேண்டாம். வேற பார்க்கலாம்.'
'மாப்ள ஆத்துல சொல்லி, நீ IAS படிக்க ஏற்பாடு செஞ்சா போச்சு.'
'அப்பா போய் பேசிட்டு வருவா. உடனேவா நாங்க ஒன்ன கழுத்த நீட்ட சொல்றோம்.'
'இப்படி அடம் பிடிச்சா, நாங்க உன்னோட பேசமாட்டோம் பார்த்துக்கோ.'
'சரிம்மா உங்க இஷ்டம். ஆனா மாப்பிள்ள புடிக்கலைனா அவாளுக்கு நேர சொல்லிடுவேன். அப்புறம் என்ன திட்டக் கூடாது, என்ன?'
இந்த அளவுக்காவது அவள் சம்மதித்தது அவர்களுக்கு சந்தோஷம். மாப்பிள்ளை அழகு மீதத்தை கவனித்துக் கொள்ளாதா என்ற நப்பாசைதான் கூடவே இருக்கே.
'பொண்ணு பார்க்க எப்ப அவா வரான்னு கேட்டுண்டு நானே வந்து உன்ன மன்னார்குடிக்கு கூப்டுண்டு போரேன் செல்லம்.'
கோபம் தீர்ந்தபாடில்லை. தலையை கூட அசைக்க வில்லை நந்தினி.
'வார்டன் கிட்ட வேணா சொல்லிட்டு போகட்டுமா?'.
'அப்பாஆஆஆஆ. மொதல்ல கிளம்புங்கோ ரெண்டு பேரும். காலேஜ் முழுக்க தெரிஞ்சா என்ன எல்லாரும் ஒரு வழி பண்ணிடுவாப்பா. புண்ணியமா போகும். இடத்த காலி பண்ணுங்கோ.'
பெற்றோர்கள் சிரித்தார்கள். விடை பெற்றார்கள்.
மன்னார்குடி பிரயாணம் முழுவதும் மனசு நெறஞ்சு நின்றது இருவருக்கும்.
தொடரும்.....
No comments:
Post a Comment