Sunday, January 9, 2022

மனதோடுமலர்கள்_42

மனதோடுமலர்கள்_42

அத்யாயம் 42

கல்யாணராமனுக்கு ஜானாவோடு ரெண்டு வார்த்தை பேசவேண்டும். எல்லார் முன்னாடியும் கண்ணே முத்தேன்னா பேச முடியும்? ஏதோ மனசுல தோணிய ரெண்டு வார்த்தை?

ரகோத்தமன் அத்திம்பேர் காதைக் கடித்தான்.

'இப்ப மணி நாலேமுக்கால். ராகுகாலம் கழிஞ்சுதான் மெட்ராஸ் கிளம்பணும். அதுவரைக்கும் பக்கத்தில ஏதாவது கோவில் இருந்தா போயிட்டு வரலாமா?'

ரகோத்தமன் திட்டம் ஒர்க் அவுட் ஆச்சு. இனி கல்யாணராமனின் சாமர்த்தியம்.

அண்ணு, லல்லு, கமலம் வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அண்ணு கட்டாயப் படுத்தியதில் ஜானாவும் கிளம்பினாள்.

மூன்று கார்களில் கிளம்பினார்கள். இரு கார்கள் மெட்ராஸிலிருந்து வந்தவை மற்றும் ஒரு கார் ஸ்ரீதர் திருப்பூரிலிருந்து வந்தது. வேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள செல்லியம்மன் கோவில்.

கமலம் மாமி பேச்சை ஆரம்பித்தாள்.

'ரொம்ப நல்லவாளா தெரியரேள். ஒங்க ஆசிர்வாதத்தில இந்த ஜானா கல்யாணம் முடியணும்.'

'எல்லாம் உங்க நல்ல மனசுக்கு நல்ல படியா நடக்கும் மாமி. மூணு சத்புத்திரிகளை பெத்துருக்கேள். நல்ல குழந்தைகள். அதுவும் மாலதிய எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு. ஸ்ரீமதி என் பால்ய ஸ்நேகிதி தான். நானும் எடுத்து சொல்றேன் மாமி. நீங்க கவலைப் படாதீங்கோ. பகவான் ஜானா கல்யாணம் மாத்திரம் இல்ல, மத்த ரெண்டு பேர் கல்யாணத்தையும் சீக்கிரமே நடத்துவார். நானும் என்னால முடிஞ்சத செய்யறேன்.'

'மாமிக்கு பசங்க இருக்காங்களா?'

'ஒரே பையன். அவன் கைக் குழந்தையா இருக்கும்போதே அவன் அப்பா தவறிட்டார். ஏதோ கைய நம்பி சமையல் வேலைக் கெல்லாம் போய் அவன கஷ்டப்பட்டு படிக்க வெச்சேன். இப்பத்தான் கொஞ்சம் தலை எடுத்துண்டு வரான்.'

'உங்க பையனுக்கும் நல்ல பொண்ணா கிடைப்பா பாருங்கோ.  மாமி, நீங்க லல்லுவோட சித்த பேசிண்டிருங்கோ. நான் கொஞ்சம் சமையல் உள்ள வேலைய பார்த்துட்டு வரேன்.'

ரேழி அறையில் லல்லுவும் அண்ணுவும்.

'எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்குடி அம்மா கோந்த'.

'மாட்டுப் பொண்ணா வரட்டுமா மாமி உங்களுக்கு.'. கிண்டலடித்தாள் லல்லு.

'புரியறதுடி அம்மா உன் கேலி. எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. ஆனா மாலா உன்ன சும்மா விடமாட்டாளே? அக்கா தங்கைக்குள்ள ப்ரளயம் என்னால வேண்டாம்மா.'

'மாலு கோச்சிக்க மாட்டா மாமி. நான் சொல்லிக்கறேன்'.

'நாம ரெண்டு பேரும் யாருங்கறது நேக்கு தெரியாதா. எனக்கு மாலா தான் மாட்டுப் பொண்ணு. சந்துருவ விட அழகா, நல்ல சம்பாத்யம் உள்ள புள்ளையாண்டானா பார்த்து ஒனக்கு முடிக்கறேன் பாரு. இந்த அண்ணு ஒரு காரியத்துல இறங்கினா ஜெயிக்காம விடமாட்டா, நீ வேணா பாரேன்.'

இருவரும் சிரித்தனர். லல்லு சட்டென்று கண்கலங்கினாள்.

'மாமி, உங்கள் மாதிரி மாமியார் இருக்கற இடமா பாருங்கோ மாமி. மாலு இந்த விஷயத்துல ரொம்ப கொடுத்து வெச்சுருக்கா.'

'அடி அசடே. நீயும் கெட்டிக்காரி. நன்னா பழகினா எல்லா மாமியாரும் நல்ல மாமியார்தான் டி. மாலா எல்லா விஷயத்தையும் சொன்னா. அவசரப் படாம கொஞ்சம் யார் கிட்டேயும் சொல்லாதே. கேள்விப் பட்டு பெத்தவா சாபமிட்டா, எல்லாம் கெட்டுப் போயிடும். மாலா உங்க ரெண்டு பேர் கல்யாணமும் முடிச்ணோனதான் பண்ணிப்பேங்கறா. எனக்கும் அதுதான் சரின்னு தோணறது. அதுவரைக்கும் பொறுமையா இருப்போம். என்ன நான் சொல்றது? எனக்கு பகவான் மேல பரிபூரண நம்பிக்கை இருக்கு. அவர் உங்க மூணு பேர் லஃபையும் நன்னா வழி நடத்துவார்.'

மாலா அவளிடம் அண்ணுவைப் பற்றி சொன்னபோது கூட நம்பவில்லை அவள். இந்த அண்ணு மாமிக்குத்தான் எத்தனை ப்ரேமை எல்லோர் கிட்டேயும்?

கல்யாணம் ரகோத்தமனை விடாமல் நச்சரித்துக் கொண்டிருந்தான், ஜானாவோடு தனியாக பேச வேண்டும் என்று.

ரகோத்தமன் நேராக ஸ்ரீனிவாசனிடம் சென்றார். 'மாப்பிள்ளை ஜானாவோடு சித்த பேச பிரியப் படறான். பிரகாரத்துல ஒரு மூலைல ரெண்டு பேரும் பேசட்டும். நாம கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து பேசுவோம்.'

ஸ்ரீமதி குடும்பத்தினர் ஒத்துக் கொண்டனர். சற்று பிகு பண்ணினாலும் ஜானா குடும்பத்தினரும் சம்மதித்தனர். ஜானா தயங்கினாள்.

'ஜானா, நாங்கெள்லாம் தான் இங்கேயே இருக்கோமே. சித்த பேசுங்கோ தனியா, தப்பில்ல.'

கல்யாணராமனின் முகம் தௌஸண்ட் வாட்ஸ் பல்பா பிரகாசித்தது.

'என்ன உங்களுக்கு மனப் பூர்வமா பிடிச்சிருக்கா?'

'நீ, வா, போன்னே கூப்பிடலாம் என்ன'.

'சரி. என்ன பிடிச்சிருக்கா?'

'முன் பின் தெரியாதவர் கிட்ட, ஒருமைல என்ன கூப்பிடலாம்னு சொல்லும் போதே தெரியலையா?'

'ச்சே, இத புரிஞ்சிக்காம போயிட்டேனே. இருந்தாலும் டைரக்டா ஒரு தடவை...'

'பிடிச்சிருக்கு, பிடிச்சிருக்கு...போதுமா?'

'இதுக்கு முதல்ல சொன்னதே பரவாயில்லை போல இருக்கே. அது கிடக்கட்டும். உனக்கு ட்ரான்ஸ்ஃபரபிள் ஜாப் தானே?'

'மெட்ராஸுக்கு மாத்திரம் கிடைக்காது...' சிறிது கிண்டல் அவளிடமிருந்து.

'அப்படியா!!!'. வெகுளித்தனமாய் நம்பினான்.

'அப்படின்னா, நீ வேலைய உடணும்'.

'நான் எதுக்கு உடணும். வேணும்னா நீங்க விடுங்கோ'.

அழுதுவிடுவான் போலிருந்தது அவளுக்கு. அவனது வெகுளித்தனம் அவளுக்கு பிடித்திருந்தது.

'வருத்தப் படாதீங்கோ. எப்படியாவது கஷ்டப் பட்டு மெட்ராஸ் மாத்தல் வாங்கிக்கறேன் கல்யாணத்துக்கு அப்புறம்.'

ஒரு மத்தாப்பு சிரிப்பு அவனிடமிருந்து. எந்த மாதிரி கல்யாணமானாலும் அசட்டுத்தனம்தான் அஸ்திவாரம் போடறது.

'ஏண்டாப்பா, கிளம்பலாமா, இல்ல வேலூரிலேயே தங்கலாமா?' சாந்தியின் குரல்.

'அவன் மாத்திரம் வேலூர்ல தங்கறானாம். நாம கெளம்பலாம்னு சொல்றான்'. ரகோத்தமன் தன் பங்குக்கான கிண்டல்.

'அண்ணு மாமிகிட்ட உன் ஆஃபீஸ் நம்பரை கொடுக்கறையா? நாம பேசுவோம்'.

எல்லா காதலர்களுக்கும் இந்த அண்ணு மாமிதான் கெடச்சாளா?

கல்யாண ராமனுக்கு  நிறைய நேரம்  பேசத்தான் ஆசை.  நடக்குமோ எல்லோரும் இருக்கும்போது?

தொடரும்

No comments:

Post a Comment