அத்யாயம்: 18 .. செருவாமணி
Written by Baskar Sathya
'நேராவே விஷயத்துக்கு வரேன். இந்த ஜாதகக்கார பையனுக்கு ரெண்டு கல்யாணம்னு விதி.'
தூக்கிவாரிப் போட்டது செருவாமணிக்கு.
'ஜாதகம் நன்னா பொருந்தியிருக்குன்னு சொன்னேளே மாமா'
'பொருத்தம் வேற, ஜாதகம் பார்த்து சொல்றதுங்கறது வேற. பொருத்தத்துல பிரச்சனை இல்ல. ஆனா, பையன் ஜாதகத்த பார்த்தா ரெண்டு கல்யாணங்கறது உறுதியா சொல்ல முடியறது.'
'அப்படின்னா, நந்துக்கு ஆயுஸு கம்மியா? அவ ஜாதக ப்ரகாரம் நல்ல ஆயுசுன்னு சொன்னேளே?'
'உம்ம பொண்ணு ஜாதகத்த தான் நூறு தடவை பார்த்த்திருக்கேனே. அவ ஜாதகத்துல பி்ச்சனை இல்லை. இன்னும் சொல்லப் போனா அவ ஜாதகத்துல களத்திர தோஷம் கூட இல்ல. இருந்தாலும் பையன் ஜாதகம் இப்படி காண்பிக்கறது.'
'உங்க அபிப்ராயம் என்ன? இந்த வரன பார்க்கலாமா வேண்டாமா? பளிச்சுனே சொல்லுங்கோ மாமா. ஏதாவது பரிகாரம் இருந்தா கூட சொல்லுங்கோ.'
'சில ஜோஸ்யா, வாழை மரத்துக்கு பையன முதல்ல தாலிய கட்ட சொல்லி, அதை வெட்டிபுடுவா. பொதுவா, இதெல்லாம் அப்ராமணாதான் செய்வா. பிராமணா இப்படி செய்யறது இல்ல. அவாத்திலேயும் ஒத்துக்கணுமே.'
'நல்ல வரனா தெரியறதே மாமா. விடவும் மனசு வரல.'
'நான் இதை ஏன் சொன்னேன்னா, நாளைக்கு நீ வந்து இதெல்லாம் சொல்லியிருக்கப் படாதான்னு கேழ்க்கப் படாதோல்யோ. அதான் சொன்னேன். பகவான் மேல பாரத்தப் போட்டு நிச்சயம் பண்ணினா பண்ணிக்கோ.'
'ஜாதகம் பார்க்கறது கூட நம்பிக்கைக்குத்தான். கொடுத்த ஜாதகம் நன்னா கணிச்சிருக்கணும். என்னோட ப்ரஸன்னம், நீ ஏத்துக்கறது எல்லாமே இருக்கு. அதுக்குமேல பகவான் சக்தி இருக்கு. அதுக்கு முன்னாடி ஜோஸ்யாள்லாம் என்ன சொன்னாத்தான் என்ன?'
மொத்தத்தில் தெளிவில்லாத பேச்சு. எப்போதும் அடிச்சுபேசுகிறவர், அன்னிக்கி என்னமோ வழ வழன்னு பேசறாரே.
'சித்தப்பா கிட்டேயும் சாலி கிட்டேயும் பேசுவோம். அவா என்ன சொல்றார்னு பார்ப்போம்.'
'சித்தப்பா இப்ப ஸ்கூல்ல இருப்பார். சாலிகிட்ட தான் முதல்ல பேசணும்.'
மீண்டும் வரும் வழியில் ஆனந்த விநாயகர்.
'பிள்ளையாரப்பா, ஏம்ப்பா எனக்கு கொழப்பத்த கொடுக்கற. ஒரே பொண்ணுடா எங்களுக்கு. அவதாண்டா உலகம். நல்ல வாழ்க்கையை அவளுக்கு அமைச்சுக் கொடுப்பா.'
தெய்வ சங்கல்ப்பங்கள் மனிதனுக்கு புரிவதில்லை. பிரார்த்தனை பண்றதுக்கு மாத்திரமே அவனுக்கு அதிகாரம்.
'எவ்வளவோ தர்ம காரியங்கள் செஞ்சிண்டு வரோம். யாரையும் கெடுக்கல. குழந்தையையும் நல்ல விதமா வளர்த்து ஆளாக்கியிருக்கோம். நம்மள கைவிட்டு விடுவாரா என்ன?'
தனக்குத் தானே ஆறுதல்.
'இந்த வரன் இல்லாட்டி என்ன? மனக் குழப்பத்தோட ஏன் இறங்கணும் இதுல. பேசாம...'
இப்படியும் மனசோட ஒரு சம்பாஷணை.
'என்னன்னா சொன்னார் உங்க ஜம்பு ஜோஸ்யர்?'
'உங்க ஜம்பு ஜோஸ்யர்' என்று விசாலம் கேட்கும் போதே அவள் எங்கே இதையெல்லாம் ஒத்துக் கொள்ளப் போகிறாள் என்ற சிந்தனை செருவாமணிக்கு.
அவர் சொன்னதை சொன்னார். எதையும் மறைக்கவில்லை அவளிடத்தில். அவளுக்கும் தானே பெண்ணின் மீது அக்கறையும், கரிசனமும், உரிமையும் இருக்கிறது.
'நான் சொல்லல. அவர் சரியா பார்க்க மாட்டார்ன்னா. உங்கள மாதிரி சில அசடுகள்தான் அவரை பிடிச்சிண்டு இருக்கேள். ஜாதகம் பொருந்தறது ஆனா பையனுக்கு தோஷம்.. இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்? இப்ப என்ன செய்யறதா உத்தேசம்.'
'அதான். சித்தப்பாகிட்டேயும்...'
'ஏன்னா, அவரைப் போய் இதுல போய் ஏன் குழப்பணும். வரனை தீர்மானிக்க வேண்டியது நாம. அவர் ஜாதகம் கொடுத்தார். பொருத்தம் இருக்கு. பையன பத்தி நன்னா விசாரிப்போம். நீங்கதான் நேர போறேளே பேசறதுக்கு.'
'நீயும் தானே வர சாலி'
'நான் எதுக்குன்னா இப்போ. மூணு பேரா போக வேண்டாம். சித்தப்பாவும் நீங்களும் போங்கோ. பையனைப் பத்தி குடும்பத்தைப் பத்தி அக்கம் பக்கத்துல நன்னா விசாரிங்கோ. பொண் பார்க்க ஒரு ஞாயித்துக் கிழமையா வர சொல்லுங்கோ.'
'இன்னும் எவ்வளவோ இருக்கு. பையனுக்கு பொண்ண பிடிக்கணும். நம்ம கொழந்தைக்கு புள்ளையாண்டான புடிக்கணும். லௌகீகம், அது இதுன்னு, நிச்சயதார்த்தம் அப்படி இப்படின்னு. இப்ப நீங்க மாத்திரம் போய், வேணும்னா ஒரு நாளைக்கு தங்கி நன்னா பையனைப் பத்து விசாரிச்சுட்டு வாங்கோ.'
'அப்ப சித்தப்பா கிட்ட என்ன சொல்றது சாயந்திரம்?'
'பொருத்தமிருக்கு. பையனுக்கு தான் ஏதோ தோஷமிருக்குன்னு சொல்றார். கவலைப் படும்படி இல்லைங்கறார்னு சொல்லிட்டு அதோட நிறுத்திக்கோங்கோ. என்ன?'
'சரி சாலி. எனக்கு சாத்த போடு. சாப்பிட்டுட்டு கடைக்குப் போறேன். கணக்குப் பிள்ளைக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கணும்.'
சாதத்தை சரியாக சாப்பிட முடியவில்லை அவரால். புரிந்து கொண்டாள் சாலி.
'அன்னா, இதையே நெனச்சு கவலைப் படாதீங்கோ. உங்க நல்ல மனசுக்கு அம்பாள் ஒரு கொறையும் வைக்கமாட்டா.'
சாப்பிட்டுவிட்டு கடைக்கு கிளம்பினார். ஜோஸ்யர் என்னவோ சொல்லிவிட்டார். இவர் மனம்தான் பல்வேறு சிந்தனைகளில் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருந்தது.
தொடரும்.....
No comments:
Post a Comment