மனதோடுமலர்கள்_41
அத்யாயம் 41
அந்தவாரம் மாலதி படு பிஸி. பெண் பார்க்கும் படலத்திற்கு ஒருங்கிணைப்பில்.
முதலில் அப்பாவிடம் ஃபோனில் பெண் பார்க்க வருவதை தெரியப்படுத்தியது. அண்ணாவிடம் தகவல். அண்ணு மாமியிடம் ஒப்புதல். அண்ணு மாமி விஜயம் ஸ்ரீமதி ஆத்துக்கு. மீண்டும் அண்ணு மாமியிடம். மீண்டும் அப்பா, அண்ணா.
ஞாயிறு ராகு காலம் முன்பாக மூன்று மணியளவில் ஸ்ரீமதி மாமி குடும்பத்தினருடன் அண்ணு மாமி மற்றும் பாகிரதியோடு இரு கார்களில் வேலூர் வந்து விடுவதாக உறுதி பெறப்பட்டது.
மாலதி வெள்ளி இரவே வேலூருக்கு வந்தாகி விட்டது.
மாலுவும் லல்லுவும் ஜானாவை கிண்டலடிப்பது இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.
மாலு மாத்திரமே கல்யாண ராமனை பார்த்திருப்பதால், லல்லுவிடமும் ஜானாவிடமும் மாப்பிள்ளை வர்ணனை சனிக்கிழமை முழுவதும் அவ்வப்போது சீண்டல்களுடன்.
பாட்டு பாடச் சொன்னா என்ன பாட்டு? கர்னாடிக் தெரியாது. சினிமா பாட்டு? பக்திப் பாட்டு?ஒரு டிஸ்கஷன். ஒரு சில ஒத்திகைகள்.
ஜானா வெட்கிப்பதும், அவ்வப்போது கிண்டல் தாங்க முடியாமல் கோபிப்பதும், அம்மாவின் மத்யஸ்தங்களும், அப்பாவின் நைஸான உசுப்பேத்தல்களும் ...வீடே இன்பங்களின் பொக்கிஷங்களை ரசித்துக் கொண்டிருந்தது.
சொஜ்ஜி பஜ்ஜிக்கான ஏற்பாடுகள். பூச்சரங்கள், பழங்கள், ஜாக்கெட் பிட்டுகள் போன்றவற்றிற்கான பட்ஜெட் பர்ச்சேஸஸ். வீடு விழாக்கோலம் பூண்டு கொண்டிருந்தது.
அண்ணா மன்னி மற்றும் பொடியன் சுரேஷ், ஞாயிறு காலை பத்து மணிக்கு காரில் வந்தனர் திருப்பூரிலிருந்து. சுரேஷோடு அத்தைகள் விளையாட்டு.
எதிர்பார்ப்புகளுக்கே விழாக்கோலம் எடுக்கும் ஒரு வீடு என்றால் அது நடுத்தரவர்க்க குடும்பங்களில் பெண் பார்க்கும் படலமாக தான் இருக்கும்.
வரும் மாப்பிள்ளை பெண்ணை சரியாக பார்க்காவிட்டாலும் அவளுடைய ஒட்டுமொத்த வனப்பும் பிடித்துவிடும், ஸ்வரம் தப்பி பாடினாலும் பாடகி அங்கீகாரம் கிடைத்துவிடும். சாப்பிட்ட பஜ்ஜி சொஜ்ஜி யார் செய்திருந்தாலும் இவள் செய்வதாக நினைக்கும். சமையலில் பலர் பங்கு இருந்தாலும் இவள் மட்டுமே செய்தது என்று சொந்தங்கள் பொய்யுரைக்கும். கல்யாணமான பின் எப்போதுமா சொஜ்ஜி பஜ்ஜி என்ற தைரியம்தான்.
அன்றைய மேக் அப் அழகு சேர்க்கும், அதுவே அழகாய் நிலைக்கும். இதுவும் ஒரு விதமான காதல்தான். பெற்றோர் சுற்றோர்களுடன் இருப்பதால் சுதந்திரமாக ப்ரபோஸ் செய்ய முடியாது. நேரடியாகவே கேட்டாலும் தயக்கம்தான் இருவருக்கும்.
சங்கோஜ மொழிகளும் விழிகளுமே சம்மதம் தெரிவிக்கும். மொத்தத்தில் அசட்டுத்தனமே அங்கீகாரம் கொடுக்கும் பெற்றோர்களுக்கு மேற்கொண்டு பேசி முகூர்த்த நாள் குறிக்க.
கிளம்பினார்கள். பாம்பேயிலிருந்து அடித்து பிடித்து டிக்கெட் எடுத்து ஆளைப்பிடித்து EQ வில் வந்த கல்யாணராமன் அக்கா சாந்தி, அத்திம்பேர், கல்யாண ராமன், அப்பா ஒரு காரில்.
ஸ்ரீமதி, அவள் தங்கை ஸ்ரீநிதி, பாகிரதி, அண்ணு மற்றொரு காரில். கடைசி நிமிடத்தில் சச்சு வரமுடியவில்லை.
வழி நெடுக ஸ்ரீமதி அண்ணு பேச்சுக்கள். கடந்த கால, நிகழ்கால, எதிர்கால பேச்சுக்கள். சந்துரு மாலா விஷயங்களில் மாத்திரம் அண்ணுவின் அமுக்கம்.
'கல்யாணராமனை ஜானாவுக்கு முடித்துவிட்டு ஸ்ரீமதியிடம் நைஸா பேசினால் அவளே த்வஜம் கட்டிக்கொண்டு முடித்துவிட மாட்டாளா என்ன?'
அண்ணுவின் மனசு ஒரு நம்பிக்கை மலராக பொறுமை காட்டச் சொன்னது. ஏதோ சொல்லுவாளே, ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்.... அப்படி ஒரு நம்பிக்கை அண்ணுவுக்கு.
இன்னொரு காரில் பாம்பே பேச்சுக்கள், டிவிஷனல் மேனேஜர் அத்திம்பேரின் LIC டார்கெட்டுகள், கல்யாணராமனின் அமால்கமேஷ கனவுகள், அப்பா சந்திரசேகரின் ஆஃபிஸ் ப்ரஸ்தாபங்கள், அடுத்தவருட ஓய்வை நோக்கிய பேச்சுக்கள்.
இங்கு மாலதி அங்குமிங்கும் ஏதேதோ செய்து கொண்டிருந்தாள். நல்ல வாய்ப்பு. வரும் மாப்பிள்ளை குடும்பத்தாருக்கு நல்லதொரு ஃபர்ஸ்ட் இம்ப்ரஷனை சீனிவாசன் குடும்பம் கொடுத்துவிடவேண்டும்.
வாசல் திண்ணையில் ஒரு மர ஸ்டூல். அதில் உள்ள பழமையை மறைக்க அப்பாவின் பழைய பட்டு அங்கவஸ்திரம். அதன்மேல் வெள்ளி சந்தனப் பேலாவில் அரைத்து சென்ட் சேர்த்த சந்தனக் கரைசல். அதன் பக்கத்தில் ஒரு வெள்ளி பன்னீர் சொம்பு, கொஞ்சம் கற்கண்டுகளை சுமந்த வெள்ளிக் கிண்ணம், கொஞ்சம் உதிரி ரோஜாப் பூக்கள். தனியாக ஒரு தட்டில் ரெடியான ஆரத்தி தட்டு.
ஹாலில் ப்ரோட்டோகால் ப்ளானில் சேர்கள் வரிசை, தன் ஆத்தில் இருந்தவை, எதற்கும் இருக்கட்டுமே என்று இரவல் வாங்கிய ஒன்றிரண்டு.
மாப்பிள்ளை இருக்கைக்கு மாத்திரம் ஒரு பட்டு வேஷ்டி போர்வை. அந்த சேரிலிருந்து ரேழி உள்ளில் இருக்கும் ஜானா அவன் கண்ணுக்கு மாத்திரம் தெரியவேண்டும். ஒத்திகை கூட பார்த்தாகி விட்டது.
வட்ட மேஜை போல போட்டிருந்த ச்சேர்களுக்கு நடுவில் ஒரு ஈஃஸ்ட்மேன் கலர் ஜமக்காளம்.
வந்தார்கள் பத்து நிமிடங்கள் முன்னரே. வரவேற்பு. எல்லோர் முகத்திலும் இனம்புரியாத சிரிப்பு. அறிமுகங்கள்.
ரேழி உள்ளில் ஜானகியும் லல்லுவும். ஒப்பனையின் கடைசி கட்டம். அம்மா நகை, மாலுவின் செயின். அவள் கல்யாணத்துக்காக வாங்கிய காசு மாலை, மற்றும் நெக்லஸ். மெயின் ரோடு கடையில் வாடகைக்கு எடுத்த தலை செட்டுகள். பக்கத்தாத்து மாமியின் 'இந்தா இதைப் போட்டுக்கோ' என்று கொடுத்த எடுப்பான வளையல்கள். எதிர் ஆத்து சுகுணாவின் பிரத்யேக சிகை அலங்காரம். ஜடை வைத்து, குஞ்சலத்தோடு. பிறகென்ன, ஜானகி லட்சுமி ஆனாள், லக்ஷணத்தில்.
'பொண்ண அழச்சிண்டு வாங்கோ?' அண்ணுவின் குரல்.
எதிர்பார்ப்பு கல்யாண ராமனிடத்தில். நேராக பார்க்காமல் தலை குனிந்த அவளின் நடை. சாந்தியின் பிரமிப்பு. அவள் ரகோத்தமன் பெண் பார்க்க வந்த போது இருந்த அவள் மனநிலை ஜானாவின் நிலை என்று அவளுக்கு தெரியாதா என்ன?
'இந்த ஜமக்காளத்தில் உட்கார்ந்துக்கோம்மா'.
ஸ்ரீமதியின் பதிவிசான குரல். அண்ணு ஒரளவு புரிந்து கொண்டாள் இதுவரை இரண்டு பேருக்கு ஓகே. இருப்பினும் கல்யாணராமன் திருவாய் மலர வேண்டும். அல்லது சங்கேதமாக உணர்த்த வேண்டும். நடப்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள். நாம் ஏதாவது ஓவர் என்த்துஸியாஸ்டிக்கா பேசிவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தாள்.
'ஒரு பாட்டு பாடேன்?' இது ஸ்ரீமதி.
'ஜானகி, உன் குரலை கேட்கத்தான் இந்த பாட்டெல்லாம். பாட்டு தெரியாதுன்னா பரவாயில்லை. தைரியமா எல்லார் கிட்டேயும் பேசிண்டிருந்தா போதும்.' பாம்பே சகோதரியின் வெளிப்படையான பேச்சு.
'இல்ல, இல்ல. அவ பாடுவா.'. அப்பா சொன்னதின் ரகசியமே தானும் குழந்தையின் பாட்டை கேட்கலாமே என்று.
கொஞ்சம் சங்கோஜ சினுங்கல்கள் மற்றும் அலட்டல்கள். நிஸப்தம் அங்கு பாட்டுக்காக காத்துக் கொண்டிருந்தது. ஸ்லிப்பாகும் வரிகளை எடுத்துக் கொடுக்க மாலதி தயார் என்ற நம்பிக்கை.
'ராமன் எத்தனை ராமனடி. நல்லவர்.....:
கல்யாணராமன் ஊட்டிக்கே போய்விட்டான். அவ்வளவு ஜில், மனதில்.
பாம்பேயின் நோட்டம் அவனைச் சுற்றி.
பாட்டை ஸ்லாகித்தார்கள். சாந்தி ப்ரமாதம் என்றாள் தன் ஒப்புதலை இன்டைரக்டாக தெரிவித்து.
ஸ்ரீமதி, 'நன்னா பாடறையே, பாட்டு படிச்சிண்டு இருக்கையா? நல்ல குரல்.'
'என்னடா கல்யாணம், பாட்டு எப்படி? அவளுக்கு போட்டியா நீ ஒண்ணு எடுத்து விடேன்'. இது ரகோத்தமன் அத்திம்பேர்.
விடாமல் ரகோத்தமனின் வேண்டுகோள். தட்டமுடியாமல் நிர்பந்தம்.
'கண்ணாலே பேசி பேசி கொல்லாதே...'
இரண்டு லைன் அவன் பாடியவுடனேயே நிறுத்திவிட்டார் ரகோத்தமன்.
'பாட்ட கேட்டோனியே தெரியலையா, பையனுக்கு பொண்ண புடிச்சி போச்சு. மேற் கொண்டு நீங்கள்லாம் பேச ஆரம்பிக்கலாம்.'
பொத்தென்று போட்டு உடைத்துவிட்டார் ரகோத்தமன். அதற்கு முன்னரே லோ வாய்ஸில் அவனிடம் கேட்டுவிட்டார்.
அண்ணுவைத் தவிர அனைவரும் டிஃபன் சாப்பிட்டனர். 'இன்னிக்கு ஏகாதசி. ஒரு பொழுது தான். நீங்களெல்லாம் சாப்பிடுங்கோ. வந்ததுக்காக காஃபி மாத்திரம் சாப்பிடறேன். நான் சித்த குழந்தைகளோடு பேசிண்டிருக்கேன்'.
குழந்தைகள் என்று அவள் சொன்னது ஜானாவையும் லல்லுவையும்.
'நீங்களும் மாமியும் அடுத்த வாரத்தில் எங்காத்துக்கு வந்து பேசுங்கோ. எங்களுக்கு பரிபூரண சம்மதம்.'
சத்துவாச்சாரி வீட்டின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
தொடரும்
No comments:
Post a Comment