Sunday, January 9, 2022

செருவாமணி 15

அத்யாயம்:15 ..  செருவாமணி

Written by Baskar Sathya 

என்னதான் சொல்லுங்கள், தங்கள் குழந்தைகளுக்கு வரன்கள் தேடும் ஆர்வத்தில் பெற்றோர்களுக்கு இணை எவரும் இல்லை.

குழந்தைகளின் மீது அவர்கள் கொண்டிருக்கும் பாசம், அன்பு, அக்கறை எல்லாம் அதில் ஒன்றியிருக்கும்.  அப்படித்தான் செருவாமணியும் விசாலமும் நந்தினிக்கு  வரனைத் தேடுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

'திருநெல்வேலி பையனா பார்க்கலாமா.  திருநெல்வேலிக் காராள்லாம் மாட்டுப் பொண்ண பாசமா வெச்சுப்பாளாமாம்'

'ஆம்படையாள நன்னா வெச்சுக்கறதுல பெஸ்ட் பாலக்காட்டு பையன்கள் தான்.'

'ஏய் சாலி, இங்க பாரேன்.  பையன் ஜாதகத்துல லக்னத்துல சந்திரன்.  லக்னத்துல சந்திரன் இருந்தா அழகா இருப்பானாம்.  ஜம்பு ஜோஸ்யர் சொன்னார்.'

'பெரிய இடமா இருக்கும் போல இருக்குன்னா.  ரெண்டு நாத்தனார் ஒரு மச்சி்னன்.  நந்துக்கு பிக்கல் புடுங்கல் இல்லாம பாருங்கோன்னா?'

கல்யாண பேச்சுவார்த்தை ஆரம்பிக்கறதுக்கு முன்னரே நாத்தனார் மச்சி்னர் உறவுகள் பேச்சுக்கள்.

'இந்த பையனுக்கு மிலிட்டரில வேல போல இருக்குன்னா.  இது சரிப்படாதுன்னா.'

'எல்லாம் சரியா இருக்கும் போல இருக்கு இதுல.  ஆனா வாத்திமாவா போச்சே.'

'ஜம்பு ஜோஸ்யர் சொன்னார், பத்துக்கு பத்து பொருத்தம் பார்த்து பண்றது ரொம்ப கஷ்டமாம்.  ஏழெட்டு இருந்தாலே போதுமாம்.  பஞ்சாங்கத்துல பின்னாடி போட்டிருப்பானாம் பொருத்தம் எப்படி பார்க்கறதுன்னு.  ஓரளவு என்னையே பார்க்கச் சொல்றார்.  ஸெலக்ட் பண்ணி ஜாதகம் எடுத்துண்டு வந்தா போதும்னு சொல்றார்.'

ஜம்பு ஜோஸ்யர் ஆத்துக்கு அடிக்கடி பொருத்தம் பார்க்க ஜாதகம் பார்க்கப் போய் கால் ஜோஸியன் ஆகியாச்சு செருவாமணி.  ஒரு மாசத்துக்குள்ள இருபது மாப்பிள்ள ஜாதகத்தை அலசியாச்சு.

'எல்லாத்தையும் வேண்டாம் வேண்டாம்னு சொல்றேளேன்னு அலுத்துக்கறார் சாலி, வேணு மாமா.'

'நன்னா இருக்கே வேணு மாமா சொல்றது.  அவர் பொண்ணுன்னா கண்ண மூடிண்டு கொடுத்துடுவாரா என்ன?  வரும்ன்னா, நீங்க வேணா பாருங்கோ, பகவான் சீக்கிரமே கண்ண தொறந்துடுவான் பாருங்கோ.  நந்துக்குனு மாப்பிள்ள இதுவரைக்கும் பொறக்காமலா போயிருப்பான்.'

அனுதினமும் இருவரின் பேச்சுக்களும் வரன்களைப் பற்றியும், கல்யாணத்தை எப்படியெல்லாம் நடத்துவது என்பது பற்றியும் தான்.

தன் பெண்ணுக்கு ஏத்த அழகான மாப்பிள்ளை, கெட்ட பழக்கங்கள் இல்லாத, நல்ல வேலை சம்பாத்தியம் உள்ள மாப்பிள்ளை, பிக்கல் பிடுங்கல் இல்லாத நல்ல குடும்பம், கார் பங்களா வசதியுள்ள குடும்பம், ஒரே கோத்திரம் இல்லாத, ஜம்பு ஜோஸ்யர் எதிர் பார்க்கிற எட்டு பொருத்தங்களுடன், .. இப்படியாக எல்லோரிடத்தும் சொல்லி வெச்சு கிடைக்கும் ஜாதகங்களை அலசி ஏதோ ஒன்று நெருடலாகி, அதை கைவிட்டு.... அப்பப்பா சொல்லி மாளாதய்யா பெற்றோர்களின் முயற்சிகள்.  அனைத்தும் அவர்கள் சலிப்பில்லாமல் விரும்பி ஏற்கும் கஷ்டங்கள் தன் குழந்தையின் மீமுள்ள ப்ரேமையினால்.

ஒருவருக்கொருவர் துவளாமல் தேற்றிக் கொள்வார்கள்.  நம்பிக்கையை என்றும் இந்த காலகட்டத்தில் விட்டுக் கொடுப்பதில்லை.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறதோ இல்லையோ, பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு சொர்க்கத்தை தேடி அலைவார்கள்.

ஒருநாள் ஞாயிறு மதியம்.  செருவாமணி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  விசாலம் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

காலிங் பெல் ஒலி.  கதவைத் திறந்தால், சித்தப்பா நின்று கொண்டிருந்தார்.

'வாங்கோ, வாங்கோ.. என்ன இவ்வளவு தூரம் வெய்யில்ல.  சாப்பிடறேளா..  பூண்டு ரசமும் தக்காளி சாம்பாரும் சாலி நன்னா பண்ணிருக்கா?'

'வேண்டாம் மாப்ள.  சாப்பிட்டுட்டுதான் வந்தேன்.  சாப்பாட்ட முடிச்சிட்டு வாரும்.  பொண்ணு கல்யாண விஷயமா பேசலாம்னு வந்தேன்.'

பொண்ணு கல்யாண விஷயம்?  அதற்கு மேல் செருவாமணிக்கு சாப்பிட பிடிக்குமோ?  அரக்க பரக்க சாப்பாடு ஓவர்.  கொல்லையில் கை அலம்பிவிட்டு தொங்கும் வேட்டியை மேலே பிடித்து வாயையும் கையையும் ஒரு துடை துடைத்தாகி விட்டது.

ஏற்கனவே சேரில் உட்கார்ந்திருந்த சித்தப்பா முன் இன்னொரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தார் செருவாமணி.

ஆர்வ மிகுதியால் அவசரம் அவசரமாக எச்சல் பிரட்டிவிட்டு விசாலமும் தயார்.

'சொல்லுங்கோ சித்தப்பா.  நந்துக்கு ஏதாவது வரன் கெடச்சிருக்கா?'

'ஆமாம்.  நம்மாத்து பொண்ணு ஜாதகத்த மெட்ராஸுல இருக்கர ஃப்ரெண்டுக்கு அனுப்பிச்சிருந்தேன்.  அவன் கிட்டேந்து லெட்டர் வந்திருக்கு.  இந்தாங்கோ.. படிங்கோ.'

'நீங்க தான் படிச்சிருப்பேளே.  நீங்களே சொல்லுங்கோ சித்தப்பா'

'பையன் டாக்டர்.  பேர் பாலச்சந்தர்.  சர்ஜனுக்கு படிச்சிண்டு இருக்கான்.  மெட்ராஸுல கெட் வெல் நர்ஸிங் ஹோம்னு வெச்சு நடத்தறான்.'

'பரம்பரை பணக்காரா.  கார், பங்களான்னு அமோகமா இருக்கா.  அம்மா இல்ல பையனுக்கு.  ஒரே ஒரு சகோதரிதான்.  அவளுக்கும் கல்யாணமாகி லண்டன்ல இருக்கா.'

'பையனோட அம்மா தவறி ஒரு வருஷம் ஆகிறது.  வேலக்காரால்லாம் இருக்கா ஆத்துல.  போன வருஷம் பையனுக்கு கல்யாணம் ஆகியிருக்கணும்.  அம்மா தவறிப் போனதால, தள்ளிப் போயிடுத்து.'

'நந்தினி ஜாதகத்தை பார்த்துட்டு பையனோட அப்பா ரொம்ப ஸ்லாகிச்சிண்டாராம்.  ஏதோ அங்க ஜோஸ்யர் கிட்ட காமிச்சிருப்பார் போல இருக்கு.  நம்மாத்து பொண்ண முடிக்கச் சொல்லி நச்சரிக்கிறாராம்.'

'பையன் ஜாதகத்தை அனுப்பிச்சிருக்கார்.  இந்தாங்கோ.  நம்மாத்துக்கு ஜம்பு தானே ஜோஸ்யர்.  அவர் கிட்ட காமிங்கோ.  எனக்கென்னவோ நல்ல அலையன்ஸா படறது.  சீக்கரம் சொன்னேள்னா, என் ஃப்ரெண்டுக்கு எழுதி மேல ஆகவேண்டியத பார்க்கலாம்.'

'அப்பறம் சொல்ல மறந்துட்டேனே.  பையன் செக்கச்செவேல்னு அழகா இருப்பானாம்.'

கௌளியின் சத்தம் இப்போது.

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த செருவாமணிக்கும் விசாலத்திற்கும் சற்று மயிர்க்கூச்சல் இப்போது.

பகவான் கண் திரந்துட்டார்தான் போல இருக்கு.

பையன் ஜாதகத்தை கொடுத்துவிட்டு சிறிது நேரம் அவர்களோடு பேசிவிட்டு விடை பெற்றார் சித்தப்பா.

'அழகு! டாக்டர்!! மாமியார் இல்லை!!!.  வீடு வாசல் சௌகர்யம்!!!! ஃபாரின் நாத்தனார்!!!!!

சித்தப்பா சொன்னதை ஒரு ரீவைண்ட் செய்து பார்த்து விட்டு கிட்டத்தட்ட கல்யாணத்தையே கனவில் முடித்து விட்டனர். இருவரும்.

'ஜம்பு ஜோஸ்யர் வில்லங்கம் எதுவும் சொல்லாம இருக்கணும்.'

தொடரும்....

No comments:

Post a Comment