#SERUVAAMANI
Written by Baskar Sathya
#Seruvaamani_4
அத்யாயம்: 4 .. செருவாமணி
ராஜப்பையரின் மரணம் வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தாற் போலாயிற்று.
இந்த குடும்பத்தை கண்டால் முகத்தில் ஒரு செயற்கையான முக பாவத்தை கொண்டு வந்து " த்ச்சு" என சொல்லி துக்கம் விசாரித்தனர் .
'ஒழிந்தான் மகா பாவி' என மனதுக்குள் சந்தோஷித்தவரும் இல்லாமல் இல்லை. அடகு வைத்தவை என்னவாகும் என்ற கவலையும் சிலரிடம் இருக்கத்தான் செய்தது.
சிலரோ ஆபத்து சமயத்தில், கடன் கொடுத்து உதவினாரே. இனிமே சமயம் சந்தர்ப்பத்திற்கு யார் கொடுத்து உதவுவா?' என்ற ஆதங்கமும் இருந்தது.
பாலுவுக்கோ என்ன செய்வது என்ற கவலை. விசாலமும் தர்மாம்பாளும் பயந்தனர் செருவாமணியில் இருக்க.
இந்த ஊர் சாபம் பலித்து விடுமோ என்ற பயம் பிடித்து கொண்டுவிட்டது அந்த குடும்பத்திடம்.
கொலை விழுந்த வீடு. யாரும் வருவதும் போவதும் குறைந்து கொண்டும் இருந்தது.
நாட்களை எவ்வாறு ஓட்டுவது என்ற பிரச்சனை வேறு.
ஒருவாறு, மனதை தேற்றிக்கொண்டு இருக்கும் ஊரை காலி செய்து வேறு ஊருக்கு போக முடிவு செய்தனர்
எங்கு செல்வது என்பதை தீர்மானிப்பது கூட குழப்பமாகவே இருந்தது.
பட்டாமணியாரிடம் பேசினான்.
'விவசாயத்தை மட்டும் பார்த்திண்டு இருக்கலாமே?'
'இல்லை மாமா. இங்க இருந்தா அப்பா ஞாபகமாகவே இருக்கு. அம்மாவும் சாலியும் பயப்படறா. வயக்காட்ட உங்க பொறுப்புல உட்டுட்டு போகலாம்னு பார்க்கறேன். மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி வந்து குத்தக பணத்த வாங்கிண்டு போனா போச்சு. குடும்பத்த ஓட்டற அளவுக்கு கெடச்சா கூட போதும்.'
'எந்த ஊருக்கு போகலாம்னு உத்தேசம்?'
'மன்னார்குடியில சாலீக்கு சொந்தக்காரா இருக்கான்னு சொன்னா. அதனால அங்க போகறது தான் உசிதமா படறது.'
'இருபதுக்கு மேல கடன் வசூல் வேற பாக்கி இருக்கு. நிலைமைய சொன்னாலும் தவணை முடியாததால இழுத்தடிக்கறா.'
'ஆமாம், ஆமாம். இந்த பிஸினெஸ்ல ஒரு தொல்ல இதுதான். நெனச்ச மாத்திரத்துல நிறுத்த முடியாது. ஒரு முடிவுக்கும் வர முடியாம தெகச்சு நிக்கணும்.'
'அப்பாவும் நீங்களும் ரொம்ப பழகியிருக்கேள். நீங்கதான் எங்களுக்கு நல்ல வழி சொல்லணும்.'
'அது இல்லடா. மன்னார்குடி போனா கூட உனக்கு ஏத்த மாதிரி பொழப்ப தேடிக்க வேண்டாமா? அதான் விஜாரமா இருக்கு. உனக்கு உருப்படியான வேலை கிடைக்கிற வரைக்கும் குடும்பம் ரொம்ப சிரமப்படுமே டா. அதான் என் மனசுக்கு விஜாரமா இருக்கு. நன்னா வாழ்ந்த குடும்பம் வேற.'
'ஏதோ ஒண்ணு முடிவு எடுத்துதானே ஆகணும் மாமா. யோசிச்சிண்டே இருந்தா பைத்தியம்தான் புடிக்கும்.'
'சரி, போலீஸ் விசாரணையெல்லாம் எந்த மட்டும் இருக்கு?'
'யாரோ ரெண்டு பேர புடிச்சிருக்காளாம். நான் ஏதோ தப்பு பண்ணின மாதிரி, நான் இந்த ஊர விட்டு போக கூடாதுங்கறா. எடுத்து சொன்னேன், பாதி மனசோட இன்ஸ்பெக்டர் ஒத்துண்டிருக்கான்.'
'சரிடா பாலு. மனச போட்டு குழப்பிக்காம போ. நானும் யோஜனை செய்யறேன். நானே ஆத்துக்கு ரெண்டு நாளுல வந்து பேசறேன் எல்லார்கிட்டேயும். பகவான் இருக்கார். பார்த்துப்பார்.'
ஆறுதலாக இருந்தது அவரிடம் பேசியது.
தொடரும்.....
No comments:
Post a Comment