Monday, January 3, 2022

மனதோடுமலர்கள்_22

மனதோடுமலர்கள்_22

அத்யாயம்  22

உறவுகள் மாலதியோடு பேசிக்கொண்டே உறங்கின. அவர்கள் தூங்கிவிட்டாலும் இவள் தூங்க சிறிது நேரம் பிடித்தது.

வேறு என்ன? பாழாய்ப்போன சிந்தனைகள். ஃபேன் காற்று தேவைப் பட்டாலும் இழுத்து போர்த்திய போர்வைக்குள் தூங்க முயற்சித்தாள். தன்னை அறியாமல் விடும் கண்ணீரை சொந்தங்கள் பார்த்துவிட்டால்? விசும்பலை அடக்கிக் கொள்ளவேண்டும். அப்படியே விசும்பல் சத்தம் கேட்டுவிட்டால் கனவு என்று பொய் சொல்லி சமாளிக்க வேண்டும்.

அப்பா மனம் விட்டு சொன்ன இவள் மீதுள்ள நம்பிக்கை. பத்து நாட்கள் முன்பு அப்பா சொல்லியிருந்தால் பெருமையாக இருந்திருக்கும். இப்போது கேட்டு, இவளின் குற்ற உணர்வு அல்லவா குழப்புகிறது.

'இப்படி ஒரு நிலைக்கு ராஜி அக்காதான் காரணம். இல்லை அவர் தான். இல்லை இல்லை நானே காரணம்'

'இன்னும் கொஞ்ச நேரம் அப்பா மட்டும் பேசியிருந்தால் அவர் முன் போட்டு ஒடச்சு அழுதிருப்பேன். நடந்ததை சொல்லியிருப்பேன். நல்ல வேளை அம்மா சமயத்தில் வந்தாள்.'

மனசு சிந்திச்சு சிந்திச்சு கண்ணுக்கு சோர்வு கொடுத்தது. மனசு கண்ணையும் சற்று தாலாட்டியது. மனசு போனால் போகிறது என்று பாடும் இரவுத் தாலாட்டு அது.

மறுநாள் சனிக்கிழமை தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ளும்போது மணி ஒன்பது. 

'ஹாஸ்டல்ல தான் இஷ்டத்துக்கு எழுந்துக்கறோம்னா, இங்கேயுமா?'

வீடு நிசப்தம். அப்பா வெளியே. அம்மா கொல்லைப் பக்கம் பித்தளை சாமான்களின் பளபளப்புக்காக போராடிக் கொண்டிருந்தாள். அவைகளின் இண்டு இடுக்கெல்லாம் புளியை நுழைத்துக் கொண்டிருந்தாள். சத்தம் போடாமல் கொல்லைப்புறம் அம்மா அருகில் அமர்ந்தாள்.

'ராத்திரி சரியா தூங்கலையா? கன்னமெல்லாம் வீங்கி இருக்கே?'

அம்மாக்களுக்கே உண்டான போலீஸ் பார்வை. ஆனா என்ன, சமாளிச்சா நம்பிடுவா. குழந்தைகள் எதை சொன்னாலும் நம்பிவிடுவார்கள். அவ்வளவு நம்பிக்கை அவர்கள் மேல்.

'ஜானா, லல்லுவும் எங்கேம்மா?'

'கோவிலுக்கு போறோம்னு ரெண்டும் இப்பத்தான் கிளம்பிச்சுங்க. நீ, பல்லெல்லாம் தேச்சுட்டு வா, காஃபி ரெடி பண்றேன்'.

அம்மாவோட சூடான ஃபில்டர் காஃபி. கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

'அம்மா இன்னிக்கு ராத்திரி திருச்சி கிளம்பறேம்மா.'

'ஏண்டீஈஈஈ. நாளைக்குதானே போகறதா சொன்ன?'

'துணி மணியெல்லாம் தோய்க்கல. திங்கக் கிழமை ஆஃபீஸுக்கு ட்ரெஸ் இல்ல. அயர்ண் பண்ணி போட்டுக்கணும்'

அவள் சீக்கிரம் கிளம்ப இரண்டு காரணங்கள். தன்னையும் அறியாமல் ஏதாவது உளறி விடுவோமோ என்ற பயம் ஒரு பக்கம்.   கொஞ்சம் மனசு விட்டு ராஜி அக்காவோட ஃபோன்ல பேசினா தேவலைனு தோன்றியதும் காரணம்.

'வர்ரதே அபூர்வம். இப்படி ஒரு நாள் ரெண்டு நாளுக்காக வரதா இருந்த வரவே வேண்டாம்' அம்மா கோபித்தாள். 

அவளோட ஆதங்கம் அவளுக்கு.

கஷ்டமாகத்தான் இருந்தது. எங்கேயோ பிறக்கிறோம். எப்படியோ வளர்கிறோம். க்ஷணப் பொழுதில் ஒருவர் மீது ஆசைப் படுகிறோம்.

உரிமையாக கிடைக்கும் வரை மனசு அலை பாய்கிறது. அதுவரை சுற்றம் கூட சும்மாத்தான் தெரிகிறது.

எவ்வளவோ கேட்டார்கள் இன்னும் கொஞ்சம் இருக்கச் சொல்லி.

மதியம் வந்த அப்பவோடு. தாய் தந்தையரை நமஸ்கரித்தாள். திரும்பினாள் திருச்சி நோக்கி.

காலை ஆறு மணிக்கே ஹாஸ்டல் வந்தாச்சு. பிரயாண அசதி. ஃபேனைப் போட்டு கட்டிலில் நல்ல உறக்கம்.

ஒன்பது மணிக்கு நீரஜாவை அழைத்தாள். 'நீரு, எனக்கு கொஞ்சம் ராஜி அக்கா கிட்ட ஃபோன்ல பேசணும் உடனே. கொஞ்சம் வறியா?'

'எனி ப்ராப்ளம் மாலதி?'

'அதெல்லாம் இல்லை'

என்று சொன்னாலும் அப்பா பேசியதை நீரஜாவிடம் சொன்னாள்.

'ராஜி அக்காகிட்ட ஏதாவது பேசி கெடுத்துக்காதே. வேணும்னா அடுத்தவாரம் நேர மெட்ராஸ் போய் பேசு. நீ தேவையில்லாம மனச போட்டு ரொம்ப குழப்பிக்கறேன்னு தெரியுது. கல்யாணத்துக்கு எவ்வளவோ தூரம் இருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணு. எல்லாம் நல்ல படியா நடக்கும்.'

'கூடிய சீக்கிரம் உங்க அக்காக்களுக்கு கல்யாணம் ஆயிட்டா எனக்கென்னவோ உன் லவ் விஷயத்தில பிரச்சனை இருக்கறதா தெரியல.'

நீரஜாவின் பேச்சு சற்று அவளை சாந்தப் படுத்தியது.

'எதற்கும் ராஜி அக்கா கிட்ட பேசினா கொஞ்சம் தெம்பா இருக்கும். வா என்னோடு.'

நான்கைந்து  கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நீரஜாவின் சொந்தக்காரர் வீட்டில் தான் ட்ரங்க் கால் போட்டு பேசுவது வழக்கம். அங்கு சென்றார்கள்.

'அக்கா, அடுத்த வாரம் மெட்ராஸ் வருவேளா. நான் வரலாம்னு இருக்கேன்.'

'ஏண்டா, போண்டா கண்ணனை பார்க்காம இருக்க முடியலையா?'

'போங்கோ அக்கா. அவர் கிட்ட சொல்லாதீங்கோ நான் வர்ரத பத்தி. ஒரு காரணமாத்தான்'.

'யூ ஆர் மோஸ்ட் வெல்கம். பேங்களூர் போயிட்டு புதன் கிழமை உன் கிட்ட பேசறேன். அப்ப எந்த ட்ரெயின்ல வரேன்னு சொல்லு, என்ன?'

பேசிவிட்டு ஹாஸ்டல் திரும்பினர் இருவரும்.

தொடரும்

No comments:

Post a Comment