SERUVAAMANI
Written by Baskar Sathya
#Seruvaamani_3
அத்யாயம்: 3 .. செருவாமணி
'தம்பி, மனச திடமா வெச்சிக்கங்க. அய்யர கிழக்க உள்ள கொளத்துக்குப் பக்கத்துல யாரோ வெட்டிட்டாங்க. சீக்கிரம் வாங்க'
காளிமுத்து சொன்னதைக் கேட்டு நடுங்கி விட்டான் பாலு.
'சாலீஈஈஈஈஈஈஈ', விசாலத்தை கூப்பிட்டு விவரத்தை சொன்னான்.
'அம்மா கிட்ட பக்குவமா சொல்லிடு. நான் குளத்துப் பக்கம் போறேன். எப்ப திரும்புவேன்னு சொல்ல முடியாது. ஜாக்கிரதை.'
காளிமுத்துவுடன் ஓடினான் குளத்துப் பக்கம்.
'இருக்கற சொத்து பத்த வெச்சிண்டு சுகமா இருந்திருக்கலாம். எல்லாம் விதி.'
உயிர் போகவில்லை. ஏதோ அவனை பார்த்து கையை ஆட்டுகிறார். பஞ்சகச்சம் முழுவதும் ரத்தம். கழுத்தும் ஒரு காலும் வெட்டப் பட்டிருந்தது.
பட்டாமணியார் வந்தார். 'போலீஸ் கேட்டா நான் பாத்துக்கறேன். உயிர் போகல. உடனே திருவாரூருக்கு தூக்கிண்டு போங்கோ.'
குண்டு கட்டாய் தூக்கினார்கள். திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு வில்லு வண்டி. கூடவே பாலு சென்றான். அப்பா உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது அவனுக்கு பார்க்க சகிக்கல. நடுக்கம் உடல் முழுவதும். ஒரே சிந்தனைகள்.
'கூட யார் வந்திருக்கா?' டாக்டர் கேட்டார்.
'அவர் பையன் நான். பேர் பாலு.'
'உத்தரவாதமா ஒண்ணும் சொல்ல முடியாது. போலீஸுக்கு சொல்லியிருக்கோம். அப்படியே பொழச்சாலும் கால காப்பாத்த முடியாது. ரத்தத்தை நிறுத்தியிருக்கோம். போலீஸ் வந்தோண்ண தான் மேற்கொண்டு எல்லாம்.'
போலீஸ் வருவதற்குள் பட்டாமணியார் சுந்தரேசனும் வந்துவிட்டார். மூன்று மணி நேரம் கழித்து முடிந்து விட்டது என்றார்கள்.
போலீஸ் விசாரணை அது இது என்று ஒரு வழி ஆகிவிட்டான் பாலு.
போஸ்ட்மார்ட்டம் முடிந்து பொட்டலம் கட்டி கொடுத்தார்கள்.
'எடுத்துகிட்டு போங்க. நல்லா யோசிங்க. யார் மேலையாவது சந்தேகம் இருந்துச்சுனா சொல்லுங்க. மொதல்ல போய் அப்பா காரியங்கள பாருங்க. நாளைக்கு சாயந்திரமா வூட்டுக்கு வரேன்.
எல்லோரும் தொடர்ந்து கொலையை பற்றியே இவனிடம் பேசிக் கொண்டிருந்ததால் கொஞ்சம் அமைதி பெற்று தைரியம் வந்தாலும் நடுக்கம் போகவில்லை பாலுவுக்கு.
Bபாடியை ஏற்றினார்கள் வேனில். கைத்தாங்கலாக பாலுவை பிடித்துக் கொண்டு பட்டாமணியார் சுந்தரேசனும் ஏறினார்.
'இந்த கடன் கொடுக்கற சமாச்சாரம் எல்லாம் வேணாம். விட்டுத் தொலைங்கோன்னு பல தடவை சொல்லியிருக்கேன். பிராமணாளுக்கெல்லாம் இந்த பிஸினெஸ் ஒத்து வராது. இப்ப என்ன ஆச்சு பார்.'
'கொறச்ச வட்டிக்கு தான் எல்லோருக்கும் பணம் கொடுத்தார். ஆனா நேரத்துக்கு திருப்பலைனா கன்னா பின்னான்னு திட்டிடுவார். அவாவாளுக்கு தன்மானம் இருக்கோண்ணோ.'
'மஹா பாவி. நல்ல மனுஷன கொன்னுட்டான். கோபக்காரரே தவிர, அப்பாக்கு நல்ல குணம்.'
'வேணாம் பாலு உனக்கு இந்த பிஸினெஸ். பொண் குழந்தைய வேற பெத்துருக்க. நல்ல ஆம்படையா உனக்கு விசாலம். அம்மாக்கு வேற வயசாயிண்டு வரது. இந்த கடன் கொடுக்கற வியாபாரத்த தலைய சுத்தி போட்டுட்டு இருக்கற சொத்த வெச்சிண்டு சந்தோஷமா இருங்கோ. அதான் நல்லது.'
ஆம் வரும் வரை சுந்தரேசய்யர் நிறுத்தவில்லை. அவருக்கு அக்ஞானம்.
நேத்திக்கு வரைக்கும் ராஜப்பையர். இன்னிக்கு, பொணம். இறக்கினார்கள் வேனிலிருந்து.
தர்மாம்பாளின் ஓலம், அலறல், நடுக்கம், மயக்கம். கூந்தலை விரித்து விட்டு அவள் போட்ட சத்தத்தில் அக்ரஹாரமே கண்ணீர் விட்டது.
'தலய்ல அடிச்சிண்டேனே. கேட்டேளா. அய்யோ, தெய்வமே. நீயாவது அவருக்கு புத்தி சொல்லியிருக்கப்படாதா?'
பொண்டாட்டிய கிள்ளுக் கீரையா நெனச்ச உடம்பு. பொட்டிப் பாம்பா பொணமா கிடக்கு.
பதிமூணு நாள் காரியங்கள் முடிந்தன. பாலுவுக்குத் தான் அலைச்சல் கொஞ்ச நஞ்சமில்ல. போலீஸ் ஸ்டேஷன், என்கொயரி, அப்பா காரிய ஏற்பாடுகள் அது இதுன்னு. விசாலம் கைக்கொழந்தைய வெச்சிண்டு அவளுக்கும் பாவம், ஏகப்பட்ட சிரமம்.
சாதாரணமா போயிருந்தா காரியத்தோட போயிருக்கும். இது ஸ்பெஷல் சாவு. ஊர் ஒலக வாயில வேற புகுந்து வர வேண்டியிருக்கு.
அக்ரஹாரம் முழுக்க இந்த கொலை பேச்சுதான். அவா அவா ஒரு மர்மக் கதை எழுத ஆரம்பிச்சுட்டா. இவன் மேல சந்தேகம் அவன் மேல சந்தேகம். ஏற்கனவே அப்பாகிட்ட அவனுக்கு பணம் கொடுக்காதீங்கோன்னு சொன்னேன், கேட்கல, அப்படி இப்படின்னு வேற.
நூத்துக்கும் ஆயிரத்துக்கும் அப்பாகிட்ட கடனுக்கு நின்னவா கூட, எதுக்கு இந்த பிஸினெஸ் அப்பாக்குன்னு சொன்னதுதான் ஹைலைட்.
தொடரும்...
No comments:
Post a Comment