மனதோடுமலர்கள்_39
அத்யாயம் 39
ட்ரெயின் மாம்பலம் ஸ்டேஷனை விட்டு சற்று நகர்ந்தது.
'அம்மா, உங்க கிட்ட சொல்லணும்னு நினைச்சிண்டே இருக்கேன். ஆனா எப்படியோ பேச்சு மாறிண்டே இருக்கு. நான் UPSC பாஸ் பண்ணிட்டேம்மா'.
'அப்படியா!! ரொம்ப சந்தோஷம் டீ. இங்கிலீஷ்ல ஏதோ சொல்லுவாளே கங்காரூட்ஸ். உனக்கு கங்காரூட்ஸ்'
'அம்மா, அது கங்க்ராட்ஸ்'.
'ஓ. நீ ரொம்ப சமத்து, கெட்டிக்காரி, நல்ல மனசுக்காரி வேற. உனக்கு எல்லாம் நல்லதுதான் நடக்கும். ஆமாம். இந்த பாஸுல உனக்கு என்ன கிடைக்கும்? கூட சம்பளம் கிடைக்குமா? ப்ரமோஷன் கிடைக்குமா?'
'வேலை பர்மனெண்ட் ஆகும்மா. மாத்தலும் ஆகும். மெட்ராஸ் மாத்தலுக்கு முயற்சி பண்றேம்மா.'
'ரொம்ப நல்லது டி. சின்னவளும் நீயும் இங்க ஜாகைய பாருங்கோ. ராதாநகரிலேயே கிடைக்கும். ரெண்டு பேரையும் நான் பார்த்துக்கறேன். ஹாஸ்டல்லாம் சேர்ந்து உடம்ப கெடுத்துக்காத.'
'ஆச்சு, ஜானா கல்யாணம் முடிஞ்சோண்ண நைஸா உங்க அப்பா அம்மாகிட்ட நானே பேசி பார்க்கறேன். என் பிள்ளையா இருந்தாலும் இவ்வளவு அவசரப்பட்டு நீ அவன் கிட்ட சம்மதம் தெரிவிச்சிருக்க கூடாது. அவனே கேட்டிருந்தாலும், கொஞ்சம் டைம் கொடுங்கோன்னு அப்ப சமாளிச்சிருக்கணும். ஆத்துக்கெல்லாம் தெரியற வரைக்கும் அவாளோட பழகறதுல கூட வித்யாசம் தெரிஞ்சிடும். அவாளுக்கும் கஷ்டம் நமக்கும் கஷ்டம் அப்புறம். பொறுமையில்லாம தப்பா முடிவெடுக்கறதுக்கும் வாய்ப்பு இருக்கு.'
'இதெல்லாம் அனுசரிச்சுதான் நானும் உடனே சம்மதிச்சுட்டேன். பருவக் கோளாறில ஏதாவது செஞ்சுடறேள், ராஜியையும் சேர்த்துத்தான் சொல்றேன். அப்புறம் ஒவ்வொரு நாளும் வயத்துல புளிய கரைச்சிண்டு ஓட்ட வேண்டியிருக்கு.'
'ரெண்டு அக்காக்கள் கல்யாணம் முடியறவரைக்கும் வெயிட் பண்றது லேசு பட்ட காரியம் இல்ல. ரெண்டு மூணு வருஷத்துல கூட நம்மளால என்ன நடக்கும்னு தீர்மானிக்க முடியாது. ஆயுஸோட இருக்கணும், பொறுமையா இருக்கணும், நல்ல பேரோட இருக்கணும். இப்பவே பார் சந்தாவ, உன்னோட தனியா எங்கேயாவது போகணும்னு துடிச்சிண்டே இருக்கான். உனக்கும் கூட இருக்கலாம்.'
'அதெல்லாம் விடு. ஸ்ரீமதியா இருக்கறதால, போட்டடிச்சு ஜானா கல்யாணத்த முடிச்சுடலாம்னுதான் தோணறது. உங்க அப்பா பணம் காசோட ரெடியா இருக்காறோன்னோ? அண்ணாவும் சித்த உதவுவான்னோ?'
'இல்லம்மா. அப்பாவே தயாரா இருக்கா.'
'போறது. உன் சின்னக்காவுக்கு ஒரு வரன் கொடுத்தேனே, என்ன ஆச்சு?'
'ஜோஸ்யர் இன்னும் பொருத்தம் பார்த்து சொல்லம்மா.'
'சீக்கிரம் மெட்ராஸுக்கு மாத்தல வாங்கிண்டு வரப் பாரு. அப்பா இருக்கற தைரியத்துல உங்க அம்மா இருந்துட்டா, அண்ணா இருக்கற தைரியத்துல உங்க அப்பா இருந்துட்டா, நான் இருக்கற தைரித்துல நீங்க ரெண்டு பேரும் இருக்கேள். மூத்த அக்காக்காவது கையில வேலை இருக்கு. எனக்கு சின்னவளை நெனச்சாத்தான் பாவமா இருக்கு.'
பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது லல்லுவிடம் தான் மாட்டிக் கொண்டதை கொட்டிவிட்டாள் மாலதி.
'அட ராமா, இது வேறையா? போடி, நீயும் உன் காதலும். தலையே சுத்தறது நேக்கு. ஜானாவ பொண் பார்க்க ஸ்ரீமதி வரும்போது, நானும் வேலூர் வரலாம்னு நெனச்சேன். இப்ப யோசிக்க வெச்சுட்டியே. அவா காதுல இப்பவே எல்லாம் விழுந்தா, இந்த மொட்ட பாட்டிக்கு என்ன கொழுப்புனு சொல்ல மாட்டாளா? எந்த அப்பா அம்மாதான் காதல் கத்திரிக்காயெல்லாம் ஒத்துப்பா?
'இல்லம்மா. லல்லு காமிச்சிக்க மாட்டா. நானும் ஃபோன்ல இன்னொரு தடவை சொல்லிடறேன்'.
'நான் ஏதோ சாணக்கிய தந்திரமா ஏதோ செஞ்சு உங்க ரெண்டு பேர் கல்யாணத்த ஒப்பேத்தலாம்னு பார்த்தா, நீயே கெடுத்துண்டுருவ போல இருக்கே?'
கண் கலங்கியது மாலதிக்கு. ரொம்ப சொன்னா அழுதுடுவாளோன்னு பயம் அண்ணுவுக்கு. 'பரவாயில்ல. கவலைப் படாதே, இவ்வளவு தூரம் கொண்டு விட்ட பகவான் கரை சேர்க்க மாட்டானா என்ன?'
வீட்டுக்கு வந்தார்கள். பருப்புப் பொடி சாதம், கரைத்த மோர் சாதம், எலுமிச்சை ஊறுகா. அலைந்து விட்டு வந்து சாப்பிட்டதால் தேவாம்ருதம்.
ஒரு சின்ன தூக்கம். டொக் டொக்.
'அம்மாஆஆஆஆ'.
மாலதி லேசாக கதவைத் திறந்தாள். ஆனால் மனங்கள் விசாலமாய் திறந்தன இருவருக்கும்.
'என்ன ஆச்சு மாம்பலம் போனது?'
'அம்மா தூங்கறா. மெள்ள பேசறேன். கேட்டுக்கோங்கோ.'
நடந்ததை சொன்னாள். ஒரே சந்தோஷம் சந்துருவுக்கு.
அம்மா உட்ட டோஸையும் சொன்னாள். விளையாட்டாய் எடுத்துக்கொண்டு சிரித்தான். ஒரு துரும்பு அங்கேயும் இங்கேயும் போடாமல் ஆண்கள் எப்படித்தான் அலட்டிக்காம சிரிச்சிண்டிருக்காளோ தெரியல.
'என் லெட்டரை பத்திரமா ஒளிச்சு வெச்சிண்டிருக்கியோன்னோ?'
'ம்ம்ம்....ஃபரேம் போட்டு ஹாஸ்டல் நோடிஸ் போர்டுல தொங்க வுட்டுருக்கேன்.'
'சந்தாஆஆஆஆ. வந்துட்டியா? ஏதாவது குறிச்சிண்டு வந்தியா?'
'அப்பா, இந்த மச்சினிகளுக்கு கல்யாணம் நடக்கற வரைக்கும் நிம்மதியே இல்லை.'. சலித்த மைண்ட் வாய்ஸ்.
'ராஜி ஆத்துக்கு போகணும்னா மாலதி. ராஜி வந்திருக்காளான்னு பார்த்துட்டு வா சித்த.'
'அவாம் பூட்டிக் கிடக்கு. ஏதோ ஈரோடுல தெரிஞ்சவா கல்யாணத்துக்கு குடும்பத்தோட போயிருக்காளாம். நாளைக்குதான் வருவா போல இருக்கு.'
'காப்பி சாப்பிடறையா மாலதி.'
'அம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்கோ. நான் போடறேன்.'
'இன்னிக்கு ஐயாவுக்கு மாலு'ஸ் காஃபியா'.
'ஏண்டா, அண்ணு'ஸ் காஃபி பிடிக்காம போயிடுத்தாக்கும்.'
'மாலு காஃபி சாப்பிட்டுட்டு சொல்றேன் அண்ணு'.
'அவ ஊருக்கு போகட்டும். சூட்டு கரண்டிய வெச்சு ஒரு இழு இழுக்கறேன்'.
சின்னஞ் சிறுசுகளோடு சேர்ந்து சிரித்தாள்.
'பகவானே, சீக்கிரம் இந்த சின்னஞ் சிறுசுகள சேர்த்து வெச்சு உரிமையோட எனக்கும் சந்தோஷத்த கொடு. கடமைலியே வேதனைப் பட்டிண்டிருக்கிற எனக்கு நிம்மதியோட சந்தோஷத்தை சீக்கிரம் கொடு. மாலதி அக்காக்களுக்கு சீக்கிரம் வரன்கள் அமைந்து இந்த சின்னஞ் சிறுசுகளையும் சேர்த்து வை.' மனதுக்குள் அண்ணு.
இந்த அண்ணுவுக்குத்தான் எத்தனை பெரிய மனசு?
தொடரும்
No comments:
Post a Comment