Sunday, January 9, 2022

செருவாமணி 13

அத்யாயம்: 13 .. செருவாமணி

Written by Baskar Sathya 

எல்லா கட்டணங்களும் செலுத்தி நந்தினியின் கல்லூரி வாழ்க்கை துவங்கிவிட்டது.

அவளுக்கென்ன?  ஏற்கனவே அவளோடு ஒன்பதாம் வகுப்புவரை படித்த விசித்ரா அதே கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள்.  மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் அப்படி ஒரு சந்தோஷம் இருவருக்கும்.

'அப்பா, என்னோட மன்னார்குடியில படிச்சவப்பா.'

'அம்மா, அப்பாவ கவலப் பட சொல்லாதம்மா.  விசித்ரா பார்த்துப்பாம்மா என்ன.  நாங்க ரெண்டுபேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்மா.'

அவளுக்கு அறிமுகமானவளே அந்த கல்லூரியில் சேர்ந்திருப்பது செருவாமணிக்கு சந்தோஷம்தான்.  புது மனிதர்கள், புது சூழல் என்ற நிலையில் பரிச்சயமான நட்பு சற்று பலம்தானே?

ஹாஸ்டல் வார்டன் பத்மாவதி அவள் ரூமில் வந்துகொண்டிருந்த பக்ஷணங்களை பார்த்துவிட்டு செருவாமணியை கோபித்துக் கொண்டாள்.

'என்ன சார், குழந்தைகள்கிட்ட செல்லம் கொடுத்தே கெடுத்துடுவீங்க போல இருக்கே?  இதெல்லாம் திரும்ப எடுத்துகிட்டு போங்க முதல்ல.'

காலில் விழுந்து கெஞ்சாத குறை.  எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டார் வார்டனை.

'அடுத்த முறையிலிருந்து நான் இதெல்லாம் அனுமதிக்க மாட்டேன்.  இனி உங்க பெண்ண கவனிச்சுக்கறது எங்க பொறுப்பு.'

'மாசத்திற்கு ஒரு தடவை வந்து பெண்ணை பார்த்துட்டு போகலாம்.  உங்க வீட்டுக்கு அழச்சிகிட்டு போகணும்னா, அம்மாவோ அப்பாவோ நேரில வந்துதான் கூப்பிட்டு போகணும், என்ன?'

'சரிம்மா.  செல்லமா வளர்ந்த பொண்ணு அவ.  கொஞ்சம்...?'

'கொஞ்சம் கூட கவலைப் படாதீங்க.  இங்க அவ செல்லமா வளரவே மாட்டா.  தைரியமாகவும் கட்டுப்பாடோடோடு தான் இங்க வளருவா.  இப்பவே சொல்லிட்டேன்.'

சிரித்துவிட்டு கிளம்பினார்.  ஆனாலும் அடிக்கடி திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே காரை நோக்கி வந்தார்.  நந்தினி கையை அசைக்கிறாளா என்று பார்த்துக் கொண்டே ஒரு ஏக்கப் பார்வையுடன்.

'ஏன்னா இப்படி புழியப் புழிய அழறேள்.  இதுக்குத்தான் சொன்னேன், உங்களால அவள பிரிஞ்சு இருக்க முடியாது, காலேஜெல்லாம் வேண்டாம்னு.  நாளைக்கு அவ புக்காம் போகலாமில்லையோ?  இல்ல, ஆத்தோட மாப்ளையா பார்க்கப் போறேளா?'

ஆத்துக்கு வந்து பாயையும் தலையாணியையும் போட்டு விட்டு குப்புறப் படுத்து அழுதவரை சமாதானப் படுத்துவது விசாலத்திற்கு போதும் போதும் என்றாகி விட்டது.

மனைவியின் சமாதானமும் ஆறுதலும் ஒருவனை சீக்கிறமே தேற்றிவிடும்.  அவர்களிடம் பிரத்யேக உத்திகளும் இருப்பதாலோ என்னவோ?

இனி அடுத்த கட்டத்திற்கு அவரை சிந்திக்க வைத்துவிட்டாள்.

'சதா சர்வகாலம் அவளையே நெனச்சிண்டு இருக்காம, அவ கல்யாணத்துக்கு பணம் கிணம் சேர்க்கிற வழியப் பாருங்கோ.  இன்னும் நாலு வருஷத்துக்குள்ள கடன் வாங்காம கல்யாணம் பண்ற ஏற்பட்ட கவனிங்கோ.'

'சாலி சொல்றதிலேயும் அர்த்தம் இருக்கே.  அவ புக்காத்துக்கு போகறதுக்கு முன்னேயே இந்த படிப்பு எனக்கு ஒரு ஒத்திகை போல இருக்கு.  மனுஷா ஒவ்வொருத்தரும் இன்னொருத்தர பிடிச்சிண்டேவா எப்போதும் இருக்கா?  பொண்ணு நன்னா இருக்கணும்னு தானே இவ்வளவு கஷ்டப்படறோம்?'

செருவாமணி தன்னை பலப்படுத்திக் கொண்டார்.  இருந்தாலும், அவ்வப்போது விசாலத்திடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

'இந்த மாசம் அவளுக்கு எப்ப வரும்?'

அவள் ஞாபகம் வருகிறதோ இல்லையோ.  மாசாமாசம் கொழந்தை பட்டுண்டிருக்கிற அவஸ்தை ஞாபகம் வந்துடறது.  மனசு சங்கடப் படறதுக்குன்னே பகவான் ஏதாவது ஒண்ண கொடுத்துடறான்.

'உத்தேசமா அவளோட வயத்து வலி வர சமயமா மாசா மாசம் அவள பார்த்துட்டு வந்தா என்ன?'

உத்தேசமாக கணக்கில் வைத்துக் கொண்டு போய் வருவார்.  சிலமுறை சாலியோடு,  அம்மாவோடு செருவாமணி வரும்போது மட்டும் அம்மாவிடம் தன் வலியை விஸ்தரித்து சொல்வாள்.

காலேஜுக்கு போகும்போதெல்லாம் வார்டன் பத்மாவைப் பார்க்காமல் வரவே மாட்டார்.  என்னதான் நந்தினி தான் நன்றாக இருக்கிறேன் என்றாலும், அவருக்கு பத்மா சொன்னாதான் திருப்தி.

'சார், ஒங்க பொண்ணு மாதிரி குட் கேர்ளை பார்க்கறதே அபூர்வம்.  நன்னா படிக்கறா.  அருமையா செஸ் விளையாடறா. இங்க நாங்க எல்லோருமே அவளை ஜிமிக்கி நந்தினினு தான் கூப்படறோம்.  பாவாடை தாவணி போட்டுண்டு ஒரு ஜிமிக்கியையும் மாட்டிண்டு வரும்போது எங்க கண்ணெல்லாம் அவ மேலதான் விழும்.  மன்னார்குடிக்கு அவ வரும் போதெல்லாம் திருஷ்டி சுத்தி போடுங்கோ.'

என்னதான் தன் மகள் தனக்கு அழகா இருந்தாலும்,அடுத்தவா சொல்லும் போது முகத்துல வர சிரிப்பு இருக்கே, அதுக்கு ஈடு இணையே இல்ல.

'எல்லார் கண்ணும் பட்டிருக்கும்.  சாலிகிட்ட மறக்காம இத சொல்லணும்.  திருஷ்டி சுத்தி போட சொல்லணும்.'

மன்னார்குடி திரும்புகிற பஸ் ட்ராவல் முழுவதும் தனக்குத் தானே பெண்ணைப் பற்றிய சிந்தனை, பெருமிதம், கல்யாண கனவுகள், சிலமுறை அதையும் தாண்டி பேரன் பேத்திக் கனவுகள்.  சிலமுறை தூக்கம் கனவைக் கொடுக்கும்.  சிலமுறை கனவே தூக்கத்தையும் கொடுக்கும்.

அவளுடைய விடுமுறை நாட்கள் சொர்க்க உணர்வை கொடுத்தது செருவாமணிக்கும் விசாலத்திற்கும்.  ஊஞ்சலில் அவள் தலையை விசாலமும், கால்களை செருவாமணியும் வைத்துக் கொண்டு ஆட்டி மகிழ்வதில் அப்படி ஒரு சுகம்.  கல்லூரி லூட்டிகள் மன்னார்குடி வம்புகளுக்கு ஈடு கொடுக்கும்.

ப்பி.யூ.ஸி. ஃபர்ஸ்ட் க்ளாஸில் தேர்ச்சி.  அவளுக்கு பிடித்திருந்ததால் அதே கல்லூரியில் பி.எஸ்ஸி.  சேர்ந்தாகிவிட்டது.

வருடங்கள் என்னவோ நன்றாகத்தான் ஓடிக் கொண்டிருந்தன.  ஆனாலும் அவளின் அந்த வயத்துவலி மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஒருமுறை விசாலத்திடம் அவள் அழுதே விட்டாள்.

'அம்மா, இதுக்கு விடி மோட்சமே கிடையாதா.  மாசாமாசம் வலி உசுரு போறது.  மாத்திரைகள் உள்ளே போய் வலி தீரதுக்குள்ள செத்துடலாமான்னு இருக்கு.  மெட்ராஸுல வேணா காட்டலாமாம்மா?'

அவள் சொன்ன அந்த வார்த்தைகள்... செத்துடலாம் போல இருக்கு.

அதிர்ந்தே போனார்கள் இருவரும்.

தொடரும்...

No comments:

Post a Comment