மனதோடுமலர்கள்_38
அத்யாயம் 38
'உங்க அக்கா ஜானா ஃபோட்டோ கொண்டு வந்திருக்கியா மாலதி?'
நடந்ததை சொன்னாள். கையிலிருந்த ஃபரேம் போட்ட படத்தை காண்பித்தாள்.
'லட்சணமா ரெண்டு பேரும் இருக்காளே. ஆனா ரெண்டு பேர்ல பெரியவ மாநிறமா தெரியறது.'
'சச்சு, இவ அக்காக்கள் படத்தை பாரேன். போட்டோ பார்த்தா புடிச்சிடும்னுதான் நெனைக்கிறேன்.'
'எதுக்கும் இந்த ஃபோட்டோவ எடுத்துண்டு வா. தேவைப்பட்டா காமிச்சுக்கலாம்.'
'சந்தா, நாங்க கிளம்பறோம். எல்லாம் வெச்சிருக்கேன். சாப்டுட்டு கிளம்பு மஹாலிங்கபுரத்துக்கு.'
'சச்சு, மூணு பேரா கிளம்ப வேண்டாம். மாலதியும் நீயும் தெருக்கோடி வரைக்கும் போயிண்டிருங்கோ. நான் பின்னாடி வரேன்.'
'மாலதி, ஸ்வாமி படத்துக்கு நமஸ்காரம் பண்ணிட்டு கிளம்பு'.
சுபர்பன் ட்ரெயினில் ஏறி மாம்பலத்தில் இறங்கினார்கள்.
'மாமி, முதல்ல பாகிரதியாத்துக்கு போகலாம். இங்க தான் நடேசன் தெருவுல இருக்கா. அவ மூலம்தான் இந்த வரன் வந்துது. அவாத்துக்கு ரெண்டாம் தள்ளிதான் அந்த பையனாம் இருக்கு.'
'அதான் சொன்னியே. அரை டஸன் பழம் அவாத்துக்கும், அரை டஸன் பழம் பையனாத்துக்கும் வாங்கிக்கோ மாலதி. மொரட்டு பழமா இருக்கட்டும். இந்தா பர்ஸ்.'
'நான் வாங்கிக்கறேம்மா.'
'உன் பர்ஸெல்லாம் வை. இத வெச்சுக்கோ. யார் வாங்கினா என்ன?'
பாகிரதி மாமியாத்துக்கு வந்தார்கள். 'இத சாக்கிட்டாவது வந்தியே சச்சு.'
அறிமுகப் படுத்தினாள் இருவரையும்.
'எனக்கு என்ன பண்ணுவியோ, இந்த வரனை முடிச்சு தரணும் பாகிரதி.'. அண்ணு மாமி சொன்னதும் பாகிரதிக்கு ஆச்சர்யம்.
'இப்பத்தான் என்ன பார்க்கறேள். உடனே இப்படி உரிமையோட பழகறேளே. எனக்கும் இதுதான் பிடிக்கும்.'
படத்தை காட்டி ஆத்து விவரங்களையும் சொன்னாள் மாலதி. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
'சச்சு, இவாளோட பேசிண்டிரு. நான் பிள்ளையாத்துக்கு போயிட்டு நீங்க வந்திருக்கறத சொல்லிட்டு, அழைச்சுண்டு வரட்டுமான்னு கேட்டுண்டு வரேன்.'
சொன்னபடியே கேட்டுக்கொண்டு வந்த பாகிரதி, ஆத்தைப் பூட்டிக் கொண்டு இவர்களையும் அழைத்துக் கொண்டு வரன் வீட்டுக்கு சென்றாள்.
வீட்டுக்குள் நுழைந்ததும் அண்ணு மாமி, 'ஸ்ரீமதிஇஇஇ. எப்படி இருக்கே?'
'நீங்க ....நீ....அண்ணு? என்னடி வேஷம் இது?'
நன்னிலத்தில் ஒன்றாக படித்த பால்ய நண்பிகள். இருவரிடத்திலும் கண்ணீர். ஊர் பேச்செல்லாம் நீண்டுகொண்டே இருந்தது. சச்சு, பார்கவி, மாலதி எல்லோரும் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
பாகிரதி குறுக்கிட்டாள். 'அப்புறம் என்ன சச்சு, அண்ணு மாமியே இந்த கல்யாணத்தை முடிச்சுடுவா.'
கொல்லென்று சிரித்தார்கள் எல்லோரும்.
'அப்படி இல்லடி அம்மா, நீ மாத்திரம் இல்லாட்டி, ரொம்ப நாளுக்கப்பறம் என் ஃபரண்ட் எனக்கு கிடச்சுருப்பாளா. உனக்கு தான் என் தேங்ஸ் எல்லாம்.'
பிறகென்ன, மாலதி அறிமுகம். வரன் பேச்சுக்கள். ஃபோட்டோவை எடுத்துக் கொண்டு பெட்ரூமில் இருந்த கல்யாண ராமனிடம் ஸ்ரீமதி காண்பித்தாள். அவனும் சரி என்றான். பிறகு அவனை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள் ஸ்ரீமதி.
அண்ணுவிடமும் சிறிது பேசிவிட்டு ஆசி பெற்றான்.
அவளுடைய பெண் சாந்தி திருமணமாகி மும்பையில் இருப்பதாகவும் அவளிடம் ஒரு வார்த்தை கூறிவிட்டு, வெளியே போயிருக்கும் அவள் ஆத்துக்காரையும் கலந்து பேசிவிட்டு பெண் பார்க்க வருவதாக கூறினாள் ஸ்ரீமதி.
எல்லாம் கனவில் நடப்பது போன்ற பிரமை மாலதிக்கு. சந்துரு அம்மாவிடம் அவளுக்கு இருந்த அன்பும் நம்பிக்கையும் ஒரு விஸ்வரூபம் எடுத்தது.
சாப்பிட வற்புறுத்தினாள் ஸ்ரீமதி. மறுத்துவிட்டாள். இன்னொரு நாள் சாவகாசமாய் வருவதாக சொல்லி விடைபெற்றாள் அண்ணு மாமி.
பாகிரதி ஆத்துக்கு மீண்டும் வந்து அவளுக்கு மீண்டும் நன்றி தெரிவித்தாள் அண்ணு மாமி.
சச்சு சிறிது நேரம் பாகிரதியுடன் இருந்து பேசிவிட்டு வருவதாக கூறினாள்.
அண்ணுவும் மாலதியும் சுபர்பன் ட்ரெயினில் க்ரோம்பேட்டை நோக்கி.
தொடரும்
No comments:
Post a Comment