மனதோடுமலர்கள்_37
அத்யாயம் 37
இரவு சாப்பிடும்போது அப்பாவும் சேர்ந்து கொண்டார். மாலதி சிறு வயதில் செய்த சேஷ்டைகளை நடித்துக் காட்டிக் கொண்டிருந்தார்.
வாலிப ரகசியங்கள் மனதில் இருக்கும்போது அப்பாவோட ஹாஸ்யத்தை ரசிக்க முடியுமோ?
அப்ராணிகளாய் அம்மாவும் அப்பாவும். சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் அசட்டு ரியாக்ஷன்ஸ் இங்குமங்கும். அடிக்கடி மாலதியின் தொடையை அழுத்தி அழுத்தி லல்லுவின் ஆறுதல்.
டின்னர் முடிந்தது. 'அந்த மாமி பேர் என்ன சொன்ன?'
'அன்னபூரணி. அண்ணு மாமின்னு எல்லாரும் கூப்பிடறா அப்பா.'
'நாளைக்கு போகும்போது மறக்காம ஜானா லல்லு ஃபோட்டோ எடுத்துண்டு போ. அந்த மாமிகிட்ட கொடுத்து வை'.
'சரிப்பா'. சமீப ஃபோட்டோ ஒன்றுதான் இருந்தது. அதுவும் ஃப்ரேம் போட்டு, இரு அக்காக்களும் சேர்ந்து ஸ்டூடியோவில் எடுத்த ஃபோட்டோ.
'இதை எடுத்துண்டு போனா, ஜானா வரன் லல்லுவ புடிச்சிருக்குனு சொல்லிடுவான். அந்த மாமி அட்ரஸை கொடு. நாளைக்கு ரெண்டு பேரையும் தனித்தனியாக ஃபோட்டோ எடுத்து அந்த மாமிக்கு அனுப்பிடறேன்.'
அப்பாவிடம் சந்துரு வீட்டு அட்ரஸ். அப்பா கேட்டால் மறுக்கவா முடியும்?'
எதற்கும் இருக்கட்டுமே தன்னிடம் என்று இருக்கும் படத்தை பையில் வைத்துக் கொண்டு மெட்ராஸ் பயணம் காலை ஐந்து மணிக்கு.
ஒரு முறை வந்திருந்ததால், சந்துரு வீடு செல்வதற்கு கடினமாக இல்லை.
'வா, வா, வா மாலதி.'. வாயார வருங்கால மாமியாரின் அழைப்பு .
சந்துரு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் சல சல சத்தம். பக்கெட் உருளும் சத்தம் சேர்ந்து அவனுடைய 'காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம்....' பாட்டுக்கு பொருந்தாத தாளத்தை சேர்த்துக் கொண்டிருந்தது.
'முதல்ல காப்பிய சாப்பிடு. அந்த கல்யாணராமன் வரனாத்துல தொளச்சிண்டு இருக்காளம். ஜாதகம் ப்ரமாதமா பொருந்தியிருக்காம். இந்த க்ஷணம் வேலூர்காராள வரச்சொல்லுங்கோனு சொல்றாளாம். உங்காத்துல பொருத்தம் பார்த்தாளா?'
'நானும் அம்மாவும் ஜோஸ்யர பார்த்தோம்மா. நன்னா பொருந்தியிருக்குன்னார்'.
'போறது. வயித்த பால வார்த்த. இப்ப சச்சு வரேன்னு சொல்லியிருக்கா. நாம மூணு பேரும் மாம்பலத்துக்கு போறோம். சச்சுக்கு இந்த வரனை கொடுத்தவாகிட்ட போய் சொல்றோம் பொருந்தியிருக்குன்னு. அவாத்துக்கு பக்கத்தில தான் அந்த புள்ளையாண்டானாமும் இருக்காம். பார்த்துட்டு வந்துட்டா, பொண் பார்க்கர படலத்த அடுத்த வாரமே வெச்சுண்டுடலாம். என்ன சொல்ற?'
'சரிம்மா'
குளித்து விட்டு வந்த சந்துருவுக்கு மாலதிய பார்த்தோண்ண வாயெல்லாம் பல். இவள் வருகிறாள் என்று ரவியிடம் ப்ராக்டீஸுக்கு வரமுடியாதுண்ணு வேற சொல்லியாச்சு.
போனதடவைதான் சரியா பேச முடியல. இந்த தடவை ஜமாய்ச்சுடணும் என்ற கனவு.
மாம்பலம் போகும் விஷயத்தை அம்மா சொல்ல மூர்ச்சையாகி கீழே விழாத குறை.
'அம்மாஆஆஆஆஆ'. கெஞ்சல் தொனியில்.
'ஏண்டா, ஒனக்கு இவளப் பத்தியேதான் நெனப்பா? ரெண்டு அக்காக்களுக்கு சீக்கிரம் கல்யாணமாகணும்னு கவல பட்டுண்டு இருக்கா. உனக்கு லவ்வுதான் ப்ரதானமாக்கும்?'. கொஞ்சம் அதிர்ந்தே பேசினாள்.
'வெளியூர்ல வேல பார்த்துண்டு அங்கேயும் இங்கேயும் அலஞ்சுண்டிருக்கா. உனக்கு உன் நெனப்புதான் பெரிசா இருக்காக்கும்.'
'முதல்ல அவா ரெண்டு பேர் கல்யாணம். அப்புறம்தான் மீதி எல்லாம். சாதம் வெடிச்சுருக்கேன், பருப்பு பொடி இருக்கு, தயிர் இருக்கு. போட்டு சாப்டுட்டு மஹாலிங்கபுரம் போய் புது லிஸ்ட் ஒட்டியிருக்காளான்னு பார்த்துட்டு வா. அதுக்குள்ள நாங்களும் மாம்பலம் போயிட்டு வரோம்'.
'அவா அப்பா அம்மா படவேண்டிய கவலையெல்லாம் அண்ணு பட்டுண்டு கழுத்த அறுக்கறா'. முணுமுணுத்தான்.
'என்னடா முணு முணுக்கற. அவா ரெண்டுபேர் கல்யாணம் முடிஞ்சா, உங்க கல்யாணத்தையும் முடிச்சுடுவேன். அப்புறம் ஊட்டி கொடைக்கானல்னு போய் டூயட் பாடுங்கோளேன். யார் வேண்னாம்னா? ஏண்டி மாலதி, நீயும் ஜாதக விஷயமாத்தானே இங்க வந்த இன்னிக்கு?'
சந்துருவையும் பார்த்து சிரித்துக் கொண்டே, 'ஆமாம்மா'. அம்மாவுக்கு தெரியாமல் அவனைப் பார்த்து ஒழுங்கு. அவனிடமிருந்து அசட்டு சிணுங்கல் பதிலுக்கு.
'மாமீஈஈஈ'.
சச்சு அரைவ்ட். 'சுத்தம்'. தலையில் கையை வைத்துக் கொண்டே தோய்த்த துணிகளை உலர்த்த சென்றான் சந்துரு.
தொடரும்
No comments:
Post a Comment