Sunday, January 9, 2022

மனதோடுமலர்கள்_36

மனதோடுமலர்கள்_36

அத்யாயம் 36

சத்துவாச்சாரியில் அவர்கள் வீட்டிலிருந்து ஒரு ஐந்தாறு தெருக்கள் தாண்டினால் ஒரு மலை இருக்கும். மலை என்றால் பிரம்மாண்டம் இல்லை. ஒரு குன்று என்று வைத்துக் கொள்வோம்.

அந்த குன்றிலிருந்து அவ்வப்போது ஊற்றுகள் ஏற்பட்டு ஒரு சிறு ஓடைக்கு வழி வகுக்கும். ஒரு சிறிய நடைப்பாதைதான் அதை அடைய. ரம்மியத்திற்கு குறையில்லை. அங்கிருக்கும் ஏழை ஜனங்கள் ஒரு கால பைரவர் சிலையை ஸ்தாபித்து ஓலைக் கூரை அமைத்திருப்பார்கள். ஜனநடமாட்டம் குறைவாக எப்போதும் இருக்கும் பகுதி.

பைரவர் சந்நதிக்கு முன் இருந்த இரண்டு பாறாங்கற்களில் அமர்ந்தனர்.

மாலதியே ஆரம்பித்தாள். ராஜியின் நட்பு, சந்துரு சந்திப்பு, அம்பி கல்யாணம், சந்துருவுடன் கோவில்களுக்கு சென்றது, அவள் மன அழுத்தங்களில் இருந்த நாட்கள், ராஜி அண்ணு மாமி சந்திப்புகள் மெட்ராஸில்....எதையும் மறைக்கவில்லை. மௌனமாக லலிதா கேட்டுக் கொண்டிருந்தாள்.

'நான் ஏன் இப்படியெல்லலாம் செஞ்சேன்னு எனக்கே தெரியல லலிதா. ஆனால் அவர் மனசுல நானும், என் மனசுல அவரும் இருக்கறது உண்மை. அண்ணு மாமியை பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு அந்த குடும்பத்திலேதான் வாக்க படணும்னு உறுதியா இருக்கேன். அதற்காக ரெண்டு பேரும் அங்க இங்க சுத்திண்டு பேரெல்லாம் கெடுத்துக்க மாட்டோம். அதற்கு அண்ணு மாமியும் சம்மதிக்க மாட்டா.'

'தன் பிள்ள மேல உள்ள பாசத்தில, எங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு ஏதுவா, உங்க ரெண்டு பேர் கல்யணத்துக்கு முயற்சிக்கிறா, அவ்வளவுதான். இதுல தப்பு இருக்கறதா எனக்கு படல.'

'இந்த டாபிக்க இப்பவே அப்பா அம்மாகிட்ட பேசினா வேற மாதிரி விபரீதம் வரலாம். என்னை பிடிக்காமல் போகலாம். ஸ்ரீதர் காது வரைக்கும் போச்சுன்னா அவன் எப்படி பிஹேவ் பண்ணுவான்னு தெரியாது.'

அதுவரை கேட்டுக் கொண்டிருந்த லலிதா, 'எங்க ரெண்டு பேருக்காக நீ ஏன் கஷ்டப் பட்டுண்டு காலத்தை ஓட்டணும். எங்களுக்கு எப்போ கல்யாணம் ஆகறதோ ஆகட்டுமே. இல்ல, நடக்காட்டித்தான் என்ன?'

'அப்படி இல்லை லல்லு. இதே எனக்கு ஏத்த வயசுல ஒரு அத்தை பையனோ, மாமா பையனோ இருந்து, பெரியவாள்லாம் சின்ன வசுலேயே தீர்மானம் பண்ணியிருந்தா, உங்க கல்யாணம் முடியற வரைக்கும் வெயிட் பண்ணமாட்டோமா எல்லாரும்.'

'தேவையில்லாம இத பெரிசு பண்ணினாத்தான் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கே தவிர, மற்றபடி மன சங்கல்பத்தோடேயே நாங்க மூணு பேரும் இருந்துப்போம்.'

'மோரோவர், நான் இருக்கறது திருச்சி, அவர் இருக்கறது மெட்ராஸ். இதுல நாங்க எங்க ஊரச் சுத்தி பேர கெடுத்துக்கறது. நீ விருப்பப்பட்டா, நாளைக்கே என்னோட வா மெட்ராஸுக்கு. நீயே அண்ணு மாமியோட பேசு. தங்கமான மாமி. உனக்கும் தெம்பு வரும், நான் தப்பான முடிவெடுக்கலைனு. அவர் விருப்பத்த சொன்னபோது வேணா எதைப் பத்தியும் யோசிக்காம நானும் விருப்பம் தெரிவிச்சிருக்கலாம். ஆனா, என்னோட முடிவு, மாமிய பார்த்தோண்ண நிம்மதி அடஞ்சுடுச்சு.'

'அவாவாளுக்குன்னு ஒரு அறிவு இருக்கு லல்லு. அதையும் மீறி கெட்டதுதான் நடக்கும்னா யார் தான் என்ன செய்ய முடியும். கையில வேலையோ இருக்கு. காலத்தை எப்படியாவது ஓட்டிடலாம்.'

'மாலு, ஆனாலும் உனக்கு இவ்வளவு தைரியம் கூடாதும்மா.'

'எனக்கென்னவோ, இதுல சாக்ஷாத் சமயபுரத்தாள்தான் என்ன தள்ளினான்னு நெனைக்கிறேன். நான் ஏன் ராஜி லெட்டர வாங்க ஸ்டேஷன் போகணும், ஏன் அவாத்து கல்யாணத்துக்கு போகணும், ஏன் அவாத்து மனுஷாளோட எடுத்த எடுப்பிலேயே அந்யோன்னத்த காட்டணும்...இப்படி தொடர்ந்து ஒன் ஆஃப்டர் அனதர்..எல்லாம் ஏனோ அவ நடத்தின மாதிரிதான் இருக்கு. எனக்கு அவ மேல நம்பிக்கை இருக்கு. அவ என் வாழ்க்கைய நல்ல படியா அமச்சுக் கொடுப்பான்னு. முடிவெடுத்துட்டோம். கொஞ்சம் பொறுமையாத்தான் இருந்து பார்ப்போமே.'

'தயவு செஞ்சு யார் கிட்டேயும் சொல்லாத. அம்மாவப் பத்தி உனக்கு தெரியும். போரவா வரவாகிட்ட பொலம்பித் தீர்த்து அப்பாவ ஒரு வழி பண்ணிடுவா. அப்புறம் இந்த விஷயத்தால உங்க ரெண்டு பேர் கல்யாணத்துல கூட சிக்கல்கள் வரலாம்.'

'அவரும் டீஸண்டாத்தான் நடந்துக்கறார். நானும் ஜாக்கிரதையா இருக்கேன். கவலைப் படாதே. ஜானாவுக்கு கூட தெரிய வேண்டாம். நான் ஒங்க ரெண்டுபேர் மேலையும் உயிரையே வெச்சிருக்கேன். ஆண்டவன் புண்ணித்துல உங்களுக்கும் நல்ல வரன்களா கிடச்சு நல்ல வாழ்க்கை அமையற வரைக்கும் பொறுமையா இருப்போம்.'

'என்ன நாளைக்கு என்னோட மெட்ராஸ் வரையா? மெட்ராஸிலிருந்து திருச்சிக்கு கூட நான் ரிஸர்வ் பண்ணல. அதனால உன்ன இங்க திருப்பி கொண்டு விட்டுட்டு, இங்கேந்து கூட திருச்சிக்கு போறேன். என்ன சொல்லற.'

கொஞ்சம் ஆசையாகத்தான் இருந்தது லலிதாவிற்கு. இருந்தாலும் நிராகரித்தாள்.

'என் மேல இப்ப கோபம் இல்லையே? என்னடா இந்த வயசுலேயே இப்படி பேசறேன்னு நெனைக்காதே. எல்லார் வாழ்க்கையும் இப்படித்தான் போகும்னு சொல்ல முடியாது. என்னைப் பத்தி கவலைப் படாதே. அப்பா அம்மாகிட்ட எப்படி பக்குவமா எப்போ சொல்லணுமோ அப்ப சொல்லிக்கறேன். யாருக்கும் பாதகம் இல்லாம நானே சால்வ் பண்ணிக்கறேன்.'

'ரொம்ப பெருமையா இருக்குடி மாலு, ஒன்ன நெனச்சா. இருந்தாலும் ரொம்ப கேர்ஃபுலா இருடி. எங்க கல்யாண கவலைய விட உன் கவலை தான் இப்ப எனக்கு பெரிசா தெரியறது. நீ படிச்சவ, நான் சொல்லி புரிய வைக்கணும்கறது இல்ல.'

லல்லுவின் கையை பிடித்துக் கொண்டாள் மாலதி.

'திரும்பவும் சொல்றேன் லல்லு. என்னால நம்ம குடும்பத்திற்கு ஒரு துளி கௌரவக் கொறச்சலும் வராது. அப்படி வரும்படி ஒரு வேளை இருந்தா உங்க கண்ணுலேயே படமாட்டேன்.'

தன்னையும் அறியாமல் விசும்ப ஆரம்பித்தாள் மாலதி.

'ஏய், என்ன இவ்வளவு சாகசமெல்லாம் போல்டா பண்ணிட்டு இப்ப என்ன? கண்ண தொடச்சுக்கோ, சிரி. நீ அடிக்கடி சொல்லிண்டிருக்கிற சமயபுரத்தாள் ஒன்ன நிச்சயம் கைவிட மாட்டா. எல்லாம் உன் மனசு போல நடக்கும்.'

மாலதியின் அழுகை நிற்கவில்லை. லல்லு அவளை சற்று அணைத்தவாரு கண்ணைத் துடைத்தாள்.

'அசடு. என்னால உனக்கு எந்த ப்ராப்ளமும் வராது. நீயே சொல்லுனு சொல்றவரைக்கும், ஐ ப்ராமிஸ். அம்மா மேல சத்தியமா.'

விசும்பி விசும்பிக் கொண்டே இன்னொரு முறை கேட்டாள் மாலதி, 'நீயும் மெட்ராஸுக்கு வரையா?'

'இல்லடீ. இன்னொரு தடவை உன் மாமியார வந்து பார்க்கிறேன்'.

'அந்த மாமிய உனக்கு ரொம்ப பிடிக்கும், தெரிஞ்சுக்கோ'.

கெஞ்சலோடு விசும்பல் சேர்த்து சொன்னாள் மாலதி.

'அதான் தெரியறதே. மாலதிக்கே வேப்பில அடிச்சுட்டாளே அந்த மாமி.'

'கிளம்பலாமா?'

'வழியில ஒரு டீ சாப்பிட்டுட்டு போகலாம் லல்லு. ஐ வாண்ட்டு ரிலாக்ஸ் ஆத்துக்கு போகறதுக்கு முன்னால'

தொடரும்

No comments:

Post a Comment