அத்யாயம்: 12 .. செருவாமணி
Written by Baskar Sathya
கல்லூரி திறக்கும் நாள்.
அதிகாலை மூன்று மணிக்கே எழுந்துவிட்டார்கள் செருவாமணியும் விசாலமும். நந்தினி கொஞ்ச நேரம்தான் தூங்கட்டுமே, நாலு மணிக்கு எழுப்பினால் போதாதா? ஐந்து மணிக்கு வாடகைக் கார் வந்து விடும்.
முதல்நாளே எல்லா சர்டிஃபிகேட்டுகளும் ஒரு பெட்டியில் எடுத்து வெச்சாச்சு. அட, இது என்ன புது லக்கேஜ், இரண்டு சம்படங்கள்? ஒண்ணுல ரிப்பன் பக்கோடா, இன்னொண்ணுல தேன்குழல்.
படிக்கத்தானே போகிறாள் நந்தினி? இருந்தாலும் ஹாஸ்டல்ல தங்கப் போறாளே? வாய் அலுத்து வந்தால்? பத்து நாளைக்கு வரும்.
'இந்தா சாலி. இதையும் பேக்ல வை.'
'என்னண்ணா இந்த பொட்டலத்துல?'
'நேத்திக்கு கடை சாத்தும்போது ஞாபகம் வந்தது. அவளுக்கு பிடிக்குமேன்னு வெல்ல சக்கரைய பொட்லம் கட்டினேன்.'
'ரெண்டு கிலோ இருக்கும் போல இருக்கே. உடம்புக்கு ஆகுமா, ஒரே நாளுல தீத்துடுவாளேண்ணா?'
'இருக்கட்டும். கொழந்தைதானே சாப்பிடட்டும்.'
ராத்திரி பால்ல ஒரு வெளக்கெண்ணை காஃபி. இருந்தாலும் எழுந்தோண்ண கேட்கறதே நாக்கு.
'ஏண்ணா, இவ்ளோ தூக்கிண்டு போறோமே. காலேஜுல சம்மதிப்பாளா?'
'யாருக்கு தெரியும்? அங்க போய் பேசி அடிச்சு சம்மதிக்க வெச்சுட வேண்டியதுதான்.'
'ராஜகோபால ஸ்வாமி, செங்கமலத்தாயார் ஃபோட்டோ எடுத்துண்டியா? அங்க போய் சமயபுரத்தாள் படம் ஒண்ணு வாங்கிக்கலாம். அவ ரூம்ல ஷெல்ஃப் இல்லாமையா இருக்கும்?'
'ஏண்ணா, அவ துணிமணி பதிநெஞ்சு செட் இருக்கு, போதாது?'
'போதும், போதும். கிளம்பற வழிய பாரு. அஞ்சு மணிக்கு கிளம்பினாத்தான் ஏழு ஏழரைக்காவது திருச்சி போகலாம். நேர சமயபுரம் போய், குழந்த பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு, எங்கயாவது சாப்பிட்டுட்டு ஒன்பதரைக்கெல்லாம் காலேஜில இருக்கர மாதிரி பார்க்கணும். நீ குளிச்சிட்டு குழந்தைய எழுப்பு. சீக்கிரம் ஆகட்டும்.'
சாலி குளிக்கப் போனவுடன், செருவாமணி தூங்கிக் கொண்டிருக்கும் நந்தினியின் தலையை தடவுகிறார். என்னமோ என்னிக்குமில்லாத ஒரு படபடப்போட ஒரு பார்வை.
நந்தினியின் முழுத்தூக்கம் அரைத் தூக்கமாகிறது. இப்போது தலையணையை தள்ளிவிட்டு அப்பாவின் மடியில் தலை. மரவட்டை சுருட்டலில் உடம்பு.
'செல்லம், செல்லம்... எழுந்துக்கறையா, கார் வந்துடுத்து பாரு. குளிச்சிட்டு ரெடி ஆகணுமோன்னோ?'
கார் வரவில்லை. சொன்னது தார்க்குச்சிப் பொய்.
'ஃப்ஃப்ஃப்ஃப்ஃபை....மினிட்ஸ்ப்பா.' மெல்லிய குரலில் நந்தினி.
இதுபோல ஐந்து முறை நடக்கும். தெரியாதா செருவாமணிக்கு? அவருக்கும்தானே அவள் தலையின் பாரம் இவர் மடி சுமப்பதை விரும்புகிறது?
அப்பாவை நினைக்கிறார். அவர் இருந்திருந்தால் ஒருக்காலும் சம்மதித்திருக்க மாட்டார்.
அம்மா இருந்திருந்தால் 'நான் வேணா பேத்திக்கு சமச்சு போட்டுண்டு திருச்சியிலேயே பேத்தியோட ஜாகை இருக்கேனே' என்றிருப்பாள்.
எப்படி இருந்தாலும் செருவாமணிக்கு இந்த விஷயத்துல ஏதோ சாதிச்சுட்டதா ஒரு பெருமை.
குளித்துவிட்டு வந்த விசாலத்தின் குரல் அரைத் தூக்கத்தில் இருந்த நந்தினியை உட்கார வைத்தது.
'நந்தினி, சீக்கிரம் எழுந்து ரெடி ஆகு. ஹாஸ்டல்ல இந்த மாதிரியெல்லாம் இருக்க முடியாது. கட்டுப்பாடு இல்லைனா கழட்டி உட்டுடுவா. அப்புறம் என்ன மாதிரி கரண்டி ஆஃபீஸ் தான், தெரிஞ்சுக்கோ.'
பதினைந்து நிமிஷத்துக்கு மேல கெஞ்சிக் கொண்டிருந்தார் செருவாமணி. கண்டிப்பும் தேவைதான் போல இருக்கு குழந்தைகளுக்கு.
கார் வரதுக்கும் வாசல் தெளிச்சி கோலம் போட்டு சாமி விளக்கேத்தி எல்லோரும் ரெடி ஆகிறதுக்கும் சரியா இருந்தது.
'சாலி, நீ ட்ரைவர் சீட் பக்கத்துல உட்கார்ந்துக்கோ. நான் குழந்தைய வெச்சிண்டு பின்னாடி உட்கார்ந்துக்கறேன்.'
காதைக் கடித்தாள். 'நான் போய் எப்படிண்ணா, ட்ரைவர் பக்கத்துல?'
'நீ செல்லத்த ஏதாவது சொல்லிண்டே வருவ. அவ அப்புறம் பயப்படுவா.'
'அடே அப்பாடி. நாங்க திருச்சிக்காவது வரலாமோன்னோ? இல்ல இங்கேயே இருக்கட்டுமா. நல்ல அப்பா, நல்ல பொண்ணு.'
நமுட்டு சிரிப்போடு அம்பாஸடரின் பின் சீட்டில் நந்தினியோடு ஏறினார் செருவாமணி. ஹரித்ராந்தி தெப்பக்குளம் வரதுக்குள்ளேயே அப்பா மடியில் நந்தினியின் தலை. வழக்கம் போல அப்பாவின் ஹேர் மஸாஜ். அந்த சுகத்தில் திருச்சி வரை விட்டுப் போன தூக்கம்.
சமயபுரத்தாள் தரிசனம், அற்புதம். 'அம்பாள் கொழந்தைக்கு சக்தியையும் பலத்தையும் கொடுக்கணும்' வேண்டிக் கொண்டார். வாதூல கோத்ரம், பூரட்டாதி நக்ஷத்ரம், கும்ப ராசி. நந்தினி பேருக்கு சங்கல்பம் எடுத்து அம்பாளுக்கு ஒரு அர்ச்சனை.
'திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் எல்லாம் பக்கம்தானே அண்ணா?'
'கொழந்தைய காலேஜுல சேர்த்துட்டு நாம ரெண்டு பேரும் போகலாம். ரொம்ப லேட்டாயிடுத்துனா இன்னொரு தடவை பார்த்துண்டா போச்சு. செல்லக் குட்டி இன்னும் நாலு வருஷம் இங்கதானே இருக்கப் போறா. சாவகாசமா ஒவ்வொரு கோயிலா பார்ப்போம். சித்தப்பா போன தடவை வந்தபோது ஒவ்வொரு கோவிலையா பிரஸ்தாபிச்சுண்டே வந்தார்.'
காலேஜ் வாசலுக்கு வந்தபோது மணி ஒன்பது அம்பது.
தொடரும்....
No comments:
Post a Comment