Sunday, January 9, 2022

மனதோடுமலர்கள்_34

மனதோடுமலர்கள்_34

அத்யாயம்  34

சத்துவாச்சாரி வீட்டுக்கு மாலதி வரும்போது சனிக்கிழமை காலை ஏழு. அப்பா வாசலில் மோட்டர் ரீவைண்ட் செய்துகொண்டிருந்தார்.

'வா, மாலு குட்டி. அடியே, யார் வந்திருக்கா பாரு.'

அம்மா காதில் விழுந்து வருவதற்குள் அப்பா பக்கத்தில் திண்ணையில் உட்கார்ந்து ஒரு குட்டிப் பேச்சு.

'UPSC பாஸ் பண்ணினதுல ரொம்ப சந்தோஷம். போஸ்டிங் எப்ப போடுவான்?'

'ரெண்டு மூணு மாசம் ஆகும்பா. அநேகமா மெட்ராஸ்தான்.'.

எதற்கும் சொல்லி வைப்போமே என்று நினைத்தே இதை சொன்னாள்.

'அப்பா, எங்கேயாவது இன்னிக்கு வேலை இருக்காப்பா?'

'இல்ல மாலு. நீ போய் ரெஸ்ட் எடு. சாவகாசமா பேசலாம். அதுக்குள்ள இந்த ரீவைண்ட் ஒர்க்க முடிச்சுடறேன். நாளைக்கு கொடுக்கறேன்னு வேற சொல்லிட்டேன்'.

'சரிப்பா'

உள்ளே லல்லு மரவட்டை போல சுருண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.  பக்கத்தில் இருந்த தலையணையால் ஒரு சின்ன மொத்து.

'மாலுஉஉஉஉஉ. எப்ப வந்தேஏஏஏ'. தூக்க கலக்கத்தில் இழுத்து இழுத்து.

'இப்பத்தான் வந்துண்டே இருக்கேன். சீக்கிரம் எழுந்து வா.'

'அம்மா, ஜானா இல்ல?'

'திருப்பத்தூர் வரைக்கும் ஆஃபிஸ் விஷயமா போயிருக்கா, ஏதோ ஆஃபீஸ் மீட்டிங்காம்.'

காஃபி எல்லாம் குடித்து முடித்த பின்னர், பையை திறந்து இரண்டு ஜாதகங்களையும், சந்துரு சேகரித்து அனுப்பிய விவரங்களையும் எடுத்தாள்.

எடுக்கும்போது தான் பார்த்தாள். அண்ணுவின் கடிதம். ஒரு சின்ன திக் திக். சாமர்த்தியமாக அம்மா பார்வையிலிருந்து மறைத்தாள்.

'இப்பதாண்டி கொஞ்சம் நம்பிக்கை வரது. நீயே இறங்கிட்டியோன்னோ? இனிமே சீக்கிரம் எல்லாம் நடக்கும்'.

'ஆமாம், இதெல்லாம் எங்கேந்து வரவழிச்சே? யார் கொடுத்தா?'

'அம்மா, என் ஃபரெண்ட் ராஜி. டாக்டரா இருக்கா. அவளுக்கு தெரிஞ்சவா, அண்ணு மாமின்னு பேரு. எல்லாருக்கும் ரொம்ப ஒத்தாசை பண்ற குணம் மாமிக்கு. போன மாசம் மாமியை பார்த்துட்டு வந்தேன். நம்மாத்து விவரமெல்லாம் சொன்னேன். அதான் அனுப்பிச்சிருக்கா. அந்த ரெண்டு ஜாதகத்துல ஜானாக்கு பொருத்தமா ஏதோ கல்யாணராமன் ஜாதகம் இருக்கும்னு சொன்னா. உடனே பதில் சொல்லணுமாம். நானே நேரில் வேலூர் போய் பொருத்தம் பார்த்துட்டு நாளைக்கு நேரில் வரேன்னு சொல்லியிருக்கேன்.'

இதைக் கேட்டுக் கொண்டே அப்பாவும் வந்தாள். அப்பாவிடம் திரும்ப எடுத்து சொன்னாள்.

'ஜோஸ்யர் பத்து மணிக்கு இருப்பார். நீங்க ரெண்டு பேரும் மாத்திரம் போய் பொருத்தம் பார்த்துட்டு வாங்கோ'. 

ஜாதகத்தை வாங்கி குடும்பவிவரங்களை பார்த்துவிட்டு அப்பா திருப்தி அடைந்தார்.

'மாலு குட்டி இருந்துட்டா போதும். எதையும் சாதிச்சுடலாம்'.

'போங்கோப்பா, கிண்டலுக்கு உங்களுக்கு அளவே கிடையாது.'

'அப்பா, இவா அட்ரெஸுக்கெல்லாம் ஜானா, லல்லு ஜாதகத்தை அனுப்புங்கோ.'

'உத்தரவு மஹாராணி'

'அப்புறம் மாலதி. ஒனக்கு ஒரு குட் ந்யூஸ். அப்பாக்கு ஈ.பி. ஆஃபீஸ் டெண்டர் கிடைக்கும் போல இருக்கு. மும்பத்தஞ்சு இடங்கள்ல புது ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் போடணுமாம். அது மட்டும் கிடைச்சுதுன்னா, மாலுகுட்டி கல்யாணத்தையும் ஒப்பேத்திடலாம்.'

'அதுக்கு என்னப்பா அவசரம். மொதல்ல இவா ரெண்டு பேர் கல்யாணத்தையும் முடிங்கோ.'

'இல்ல மாலு. நோக்கும் வயசாயிண்டே வருதே. ஸ்ரீதர் தயவு இல்லாம முடிக்கணும்னு பார்க்கறேன். ரொம்ப நம்பிட்டேன் அவனை.'

'கவலைப் படாதீங்கோப்பா. எனக்குன்னு ஒருத்தன் பொறந்துருப்பான் இத்தனை நேரம்'.

சொல்லும்போதே சந்துரு மனத்துக்குள் உட்கார்ந்துவிட்டான்.

அப்பா ரீவைண்டு பக்கம் சென்றுவிட்டார்.

குளித்துவிட்டு மாலதியும் ரெடியானாள் ஜோஸ்யரை பார்க்க.

'லல்லு, அடுப்ப கொஞ்சம் பார்த்துக்கோ. முடிஞ்சா கேசரி பண்ணு. மாலுக்கு பிடிக்கும். நாங்க ரெண்டு பேரும் ஜோஸ்ய கடங்காரன பார்த்துட்டு வரோம். திருவாழத்தான் திருவாய் மலரணும். என்ன ஜோஸ்யமோ?'

சலித்துக் கொண்டு கிளம்புவதற்கு முன், சுவாமி படங்களுக்கு முன் ஒரு குட்டி நமஸ்காரம்.  இத்தன பேர் சுவத்துல தொங்கிண்டு இருக்கா.  ஒருத்தராவது கண்ண தொரந்தா தேவலை'.

ஜோஸ்யரை பார்த்தார்கள். கல்யாணராமன் ஜாதகத்தை ஆஹா, ஓஹோ என்றார்.

'ஜானா ஜாதகத்துக்கு அப்படியே பொருந்தரது. இதுக்கு ரிஸல்ட் தெரியர வரைக்கும் வேற வரன் எதுவும் பார்க்கவே வேண்டாம்.'

அம்மா முகத்தை பார்க்கணுமே. இப்பவே பச்சைபுடி சுத்தற கனவு. சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் எப்படி நடுத்தர வர்க்கத்தை குஷிப்படுத்துகின்றன?

அப்பாவிடம் வந்தார்கள். 'மாலு, சிரமத்தை பார்க்காம ஏதோ ஒரூ மாமி பேர சொன்னியே, அவாள பார்த்து விவரங்களை விசாரிச்சிண்டு வா.' என்றார்.

ஏதோ மாமியா? நம்ம விஷயம் தெரிஞ்சு இப்படி சொல்லியிருந்தா அப்பாவையே ஒரு புடி புடிச்சிருக்கலாம்.  இப்ப சப்திக்கு அடக்கிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.

'நீங்களும் வரேளா அப்பா மெட்ராஸுக்கு?'

'எனக்கு ராசியில்லை மாலு. புள்ளையாண்டான் ஆத்துக்கா போகப் போற. அப்ப பார்த்துக்கலாம்'.

'நாளைக்கு கார்த்தால அஞ்சு மணி பஸ்ஸ புடிக்கிறேம்பா'.

லல்லுவும் சம்பாஷணைகளை கேட்டுக் கொண்டிருந்தாள்.

கொஞ்சம் வாட்டமாக இருந்தாள். பொறாமை? ஏக்கம்? இருக்கலாம்.

'லல்லு, உனக்கும் ஏத்த வரன் ஜாதகத்தை ஜோஸ்ய மாமா கிட்ட கொடுத்திருக்கேன். அப்புறமா பார்த்துட்டு சொல்றேன்னு இருக்கார்.'

அலட்சியமாக ஒரு பார்வை அவளிடமிருந்து. வித்யாசமாக இருந்தது.

'ஏண்டா, உடம்பு சரியில்லையா? ஏதாவது  கோபமா?  ஃபேஸ்ல ரியாக்‌ஷனே இல்லை?'

மாலதி கேட்க கேட்க உள்ளே சென்று விட்டாள்.

'ஏண்டி...இங்க வா. மாலதிக்கு பதில் சொல்லாம போயிண்டே இருக்கியே.'

அம்மாவின் குரலுக்கும் பதில் இல்லை.

'ஏதோ மூடு சரியில்லை போல இருக்கு. அப்புறம் பேசுவாள்'

அப்பா இருவரையும் சமாதானப் படுத்தி உள்ளே அனுப்பி வைத்தார்.

தொடரும்

No comments:

Post a Comment