ஐ லவ் யூ!!!
...................................
கோவையில், மிக முக்கியமான இடங்களில் ஒன்று டவுன்ஹால். கோவையில் இருக்கும் போது, தேனீர் அருந்தவும், நண்பர்களுடன் ரிலாக்ஸ்டாக பேசுவதற்கும், வியாபாரம் தொடர்பான உரையாடல்களுக்கும் வழக்கமாக செல்லும் பேக்கரி உண்டு. மற்ற பேக்கரிகளைக் காட்டிலும் அமரும் இடம் கொஞ்சம் உயர்ந்த தரத்தில் இருக்கும். சேவை, சுவை நன்றாகவே இருக்கும். பெண்களும் தயக்கமில்லாமல் வந்து செல்கின்றனர்.
அடிக்கடி அங்கு செல்வதால், அங்குள்ள பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எனக்கும் எனது நண்பர்களுக்கும் நன்கு அறிமுகம். உரிமையாளரிடமும் சில நேரங்களில் பேசியிருக்கிறேன்.
மூன்று நாட்களுக்கு முன்பு, நண்பர்களுடன் தேனீர் குடிக்கச் சென்றேன். அப்போது ஒரு 70 வயது மதிக்கத்தக்க ஒருவர், சற்றே கசங்கிய ஆடைகளுடன் நின்று கொண்டிருந்தார். உள்ளே செல்பவர்களை கவனித்தவாறு இருந்தார். நான் எனது நண்பர்களுடன் செல்லும்போது, முன்னால் சென்ற இருவரையும் விட்டுவிட்டு, மூன்றாவதாக வந்த என்னிடம் தயங்கியவாறு வந்தார். ஏதோ கேட்டார். எனக்கு பின்னால் வந்த இன்னொரு நண்பர் உள்ளே சென்றுவிட்டார். நான் அந்த பெரியவரிடம் என்ன கேட்டீர்கள் என்று வினவினேன். அதற்கு அவர், எனக்கு ஒரு டீ வாங்கித் தருவீர்களா என்று கேட்டார். சரி உள்ளே வாருங்கள் என்று அழைக்க நினைத்தேன். அவருடைய தோற்றம் அந்தச் சூழலுக்கு பொருந்தாதது போல் அவரே நினைத்துக்கொண்டார். மேலும் கடை உரிமையாளரும், நிறைய கஸ்டமர் வரும் நேரம், இந்த நேரத்தில் இது சரியாக இருக்காது என்பதுபோல் என்னிடம் கூறினார். இந்தப் பெரியவரை பார்க்கும்போது அவர் பசியில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. நீங்கள் ஏதாவது சாப்பிடுறீங்களா என்று கேட்டேன்.
இந்த கடையில் ஐட்டங்கள் மிகவும் நன்றாகவும், புதிதாகவும் இருக்கும் என்று கூறினேன். ஒரு காளான் ரோல், வெஜ் ரோல் ஆர்டர் செய்தேன். நான் முட்டை சாப்பிடுவதில்லை என்று கூறியதால் முட்டை பப்ஸ் வேண்டாம் என்று கூறிவிட்டார். அவரை உள்ளே அனுமதிக்க தயங்கியதால், நாங்கள் இருவரும் கடைக்கு பக்கவாட்டில் இருந்த மேஜையில் வைத்து சாப்பிட ஆரம்பித்ததும். இரண்டு ஐட்டங்களையும் இருவரும் பகிர்ந்து சாப்பிடத் துவங்கினோம். அவர் ஆச்சரியமாக பார்த்தார். பரவாயில்லை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன்.
அவருடன் நானும் வெளியே நின்று டீ சாப்பிடுவது, அந்த கடை நிர்வாகிக்கும், எனது நண்பர்களுக்கும் சற்றே வித்தியாசமாக தோன்றியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் திருப்தியாக அனைத்தையும் சாப்பிட்டு முடிக்கும்வரை இருந்துவிட்டு, அவருடன் பேச ஆரம்பித்தேன்.
இப்பொழுதுதான் வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக கசங்கிய உடைகளுடன் நம்மிடம் உதவி கேட்கும் அனைவரையும் பிச்சைக்காரர்கள் என்ற எண்ணத்தில் தவறாக புரிந்து கொண்டிருக்கிறேன் என்ற உண்மை எனக்கு பொட்டில் அடித்தாற்போல் புரிந்தது. அந்தப் பெரியவர் யாரிடமும் பிச்சை எடுக்கவில்லை. அனைவரையும் கவனித்து, டீ வாங்கித் தருகிறீர்களா என்று அவருக்கு வேண்டியதை கேட்டார். காசு கொடுங்கள் என்று பிச்சை எடுக்கவில்லை. அதே சமயத்தில் சில நாட்களாக என்னை கவனித்து வந்திருக்கிறார். அவருடைய பேச்சில் இதை புரிந்துகொள்ள முடிந்தது. படித்த, செல்வாக்கான மனிதர்கள் உலா வரும் அந்த இடத்தில், என்னிடம் உரிமையாக டீ கேட்பதற்கு நான் தகுதியானவனா என்பதை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தபோதிலும், அந்த மனிதர் நல்ல கல்வியறிவு மற்றும் அன்பு நிறைந்தவராக தோன்றினர். அங்கு வரும் மனிதர்கள் பற்றியும், ஒவ்வொருவரும் தங்களுக்குள் விவாதிக்கும் விஷயங்களைப் பற்றியும், நாட்டு நிலவரங்கள் பற்றியும் பொதுவாக பேசிக்கொண்டு இருந்தோம்.
திடீரென்று எனக்கு ஒரு ஆசை என்று கூறினார். என்னவென்று கேட்டேன். அடுத்த முறை நீங்கள் காரில் வரும்போது, முன் சீட்டில் என்னை உட்கார வைத்து ஒரு ரவுண்ட் அடிக்க முடியுமா? என்று கேட்டார். காரில் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என்று கூறினார். இப்பொழுதே அதை செய்யலாம் என்று கூறினேன்.
முக்கிய வேலையாக காரில் வந்ததால் அவரை ஐந்து கிலோமீட்டர் சுற்றி கூட்டிவந்து, மீண்டும் அதே இடத்தில் டிராப் செய்தேன். அப்போது அவர் கண்களின் ஓரத்தில் ஈரம் மின்னியது.
வண்டியை ஓரமாக பார்க்கிங்கில் போட்டுவிட்டு, அவருடன் பேச ஆரம்பித்தேன். உங்கள் பெற்றோர் உங்களை நன்றாக வளர்த்திருக்கிறார்கள்.
ஒரு மனிதனின் கஷ்டத்தை புரிந்துகொண்டு உதவி செய்பவன் நல்ல நண்பனாக இருக்கிறான்.
ஒரு மனிதனின் பசியை புரிந்து கொண்டு சோறு கொடுப்பவன் தர்மவான் ஆகிறான்.
ஒரு மனிதனின் நிறைவேற முடியாத, சிறிய ஆசைகளை எதிர்பாராத விதத்தில் நிறைவேற்றுபவன் வாழும் தெய்வமாக இருக்கிறான்.
நீங்கள் இந்த உதவியை செய்ததற்காக உங்களை புகழவில்லை. உங்கள் நண்பர்கள் உங்களை பற்றி பேசுவதை கேட்டதால் கூறுகிறேன். நல்ல மனிதனாக உங்களை வளர்த்திருக்கிறார்கள். ஆனால், இந்த உலகம் உங்களை ஏமாளி என்று பெயரிட்டு அழைக்கத் தயங்காது. கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று கூறினார். செலவுக்கு ஏதாவது பணம் வேண்டுமா? என்று கேட்டேன். எதுவும் தேவையில்லை, வேண்டுமென்றால் உங்களிடமே கேட்கிறேன் என்றார்.
நானும் அவரிடம் இருந்து விடை பெற்றேன். சற்று தூரம் நடந்திருப்பேன். தம்பி நில்லுங்க என்ற குரலுக்கு திரும்பிப்பார்த்தேன். பின்னால் அவர் வந்து கொண்டிருந்தார்.
உங்கிட்ட ஒன்னு சொல்லணும் என்றார். என்ன சொல்லவேண்டும் சொல்லுங்க என்று கேட்டேன். நீங்க எனக்கு நான் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தீங்க, கார்ல கூட்டிட்டு போனீங்க பதிலுக்கு நான் உங்களுக்கு எதுவுமே சொல்லல. தேங்க்ஸ் அப்படின்னு சொன்னா நீங்க செஞ்ச உதவிய குறைவா மதிப்பிட்ட மாதிரி ஆயிடும். அதனால உங்ககிட்ட ஒண்ணு சொன்னா தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே? என்று கேட்டார். பரவால்ல சொல்லுங்க என்று சொன்னேன்.
ஐ லவ் யூ என்று கூறினார். நீங்கள் எனக்கு மகன் போன்றவர். ஆனால் என்னை அப்பா ஸ்தானத்தில் வைத்து பார்த்தீர்களா என்று தெரியவில்லை. என் மனதில் உள்ள அன்பை கூறுவதற்கு வார்த்தை இல்லை. சிம்பிளாக கூறுகிறேன் ஐ லவ் யூ.
இப்போது எனது கண்களில் ஈரம் பூத்தது.
No comments:
Post a Comment