Monday, January 3, 2022

மனதோடுமலர்கள்_29

மனதோடுமலர்கள்_29

அத்யாயம்  29

'மாலதி ஊருக்கு போய் ரெண்டு வாரம் ஆறது. ரெண்டு வாரமா இந்த மட்டையடி உற்சவத்துக்குத் தான் போறயே தவிர, மஹாலிங்கபுரம் போய் வரன்கள் விவரமெல்லாம் எடுத்துண்டு வரணும்னு தோணறதோ நோக்கு?'

கிரிக்கெட் பேட்டுக்கு ஏதோ நூலைச் சுற்றிக்கொண்டிருந்த சந்துருவிடம் கோபித்துக் கொண்டாள்.

'அவ கிட்டே என்னமோ சொன்ன. ஏதோ வரன்கள ஷர்ட் பாக்கெட்டுல வெச்சிண்டிருக்கற மாதிரி.  அவ அக்காக்களுக்கு கல்யாணமாகாம ஒன் கல்யாணத்துக்கு அவாத்துல ஒத்துப்பாளா? கொஞ்சம் கிரிக்கட் எழவெல்லாம் தள்ளிப் போட்டுட்டு வரன தேடர வழியப் பாருடா. நான் வேற மாலதிக்கு தைரியத்த கொடுத்துட்டேன்'

அவன் கவனம் முழுக்க ஸ்ட்ரெய்ட் ட்ரைவ், ஆன் ட்ரைவ், ஆஃப் ட்ரைவ், ஹூக் ஷாட்டிலேயே இருந்தது.

ரெடி பண்ணின பேட்டை வெச்சு காற்றிலே எப்படி எப்படியோ சுழற்றிக் கொண்டு இருந்தான்.

'சந்தா, நான் ஏதோ கத்திண்டே இருக்கேன். நீ ஏதோ சுத்திண்டே இருக்கியே. பேசாம மாலதிகிட்ட சொல்லிடறேன், எம் புள்ள வாய்ச்சவடால்தான்னு'.

'உங்களுக்கெல்லாம் காதல் வேணும், கத்திரிக்கா வேணும், சினிமா வேணும், ஃப்ரெண்ட்ஸ் வேணும், எல்லா சந்தோஷங்களும் வேணும். பொறுப்புனு வந்துட்டா மட்டும், அசல் எருமை தான். என்னமோ போ. நான் மட்டும் அக்ஞானத்திலேயே கவலப் பட்டுண்டு இருக்கணும்'.

கேட்டவுடன் அம்மாவின் ரெண்டு கன்னத்தையும் லேசா கிள்ளி, 'அண்ணு, கவலைப் படாதே. சீக்கிரம் ஒன் புள்ளைக்கு கல்யாணம் நடக்கும். மாலதியை கடத்திண்டு வரதா முடிவு பண்ணிட்டேன்'.

'ஓ. அந்த மாதிரி வேற நெனப்பு இருக்கோ. அப்படி வந்தா, ரெண்டு பேரையும் தொரத்திடுவேன்'.

'அண்ணு, நீ செஞ்சாலும் செய்வ. இன்னிக்கு மத்யானமா சாப்பிட்டு விட்டு கிளம்பி மஹாலிங்கபுரம் போறேம்மா. இப்ப ப்ராக்டீஸ முடிச்சிட்டு டூ அவர்ஸுல வந்துடறேன். ரவி ப்ராக்டீஸுக்கு வரலைனா மாட்சுல சேர்த்துக்க மாட்டாம்மா'.

'சாப்டுட்டு நானும் சாயந்திரம் சச்சு மாமிய கூட்டிண்டு தாம்பரம் சகடபுரம் மடத்துக்கு போயிட்டு வரேன். அவளுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காளாம். ஏதாவது தெகையறாதுன்னு பார்ப்போம்.'

அவன் போன பிறகு மளமளவென்று குளித்து விட்டு சமையலை ஆரம்பித்தாள். கூடவே கவலைகள் வேறு சூழ்ந்து கொண்டது, மாலதியை நினைத்து. வருங்கால மாட்டுப்பொண் ஆச்சே.

'அவ சீக்கிரம் ஆத்துக்கு வந்துட்டா, இவன் விளையாட்டுத் தனம் போயிடும். பொறுப்பும் வந்துடும். நானும் ஏதோ கவலை படாம ஜபத்தை பண்ணிண்டு காலத்தை ஓட்டிடலாம்.'

'மாமிஇஇஇஇ'. வாசல் கதவை யாரோ தட்டறா போல இருக்கே.

'வா சச்சு. எத்தன மணிக்கு தாம்பரம் கிளம்பலாம்?'

'நாலு மணிக்கு கிளம்பலாம் மாமி. இப்ப கையில ரெண்டு ஜாதகம் கெடச்சது. முப்பத்திரெண்டு வயசு ஒண்ணு, இருபத்து எட்டு ஒண்ணு. ரெண்டுமே ப்ரஹசரணம்தான். பொண்கள் ஜாதகத்தை வாங்கிண்டு தரச்சொன்னா மாமி.'

ஜாதகத்தை பார்த்த உடனேயே அண்ணுவுக்கு கனவுலகம். பெரியவளுக்கும் சின்னவளுக்கும் ஒரே முஹூர்த்தத்திலே கல்யாணம் நடந்துட மாதிரி. மாலதியோட அப்பா அம்மாகிட்ட விடாப்புடியா பேசி சந்தா கல்யாணத்தையும் அடுத்த முஹூர்த்தத்திலேயே நடத்திடற மாதிரி.

மர பீரோவில் வைத்திருந்த ஜானா, லலி்தா ஜாதகங்களை எடுத்து வந்தாள்.

'நேக்கு ஒரு ஒத்தாச செய்யேன். இரண்டு ஜாதகங்களையும் காப்பி பண்ணிட்டு அவா கிட்ட கொடுக்கறையா? நான் அவ்வளவா படிக்கலையோன்னோ. தப்பா எழுதிடுவேன்னு பயமா இருக்கு. பையன் கிட்ட சொன்னா இன்னிக்கு நாளைக்குனு தள்ளி போட்டுண்டே இருக்கான்'.

'சரி மாமி. சாயந்திரம் வரும்போது ரெண்டு மூணு காப்பியா எழுதிண்டு வரேன். இதக் கூட மாமிக்காக செய்ய மாட்டேனா?'

'நன்னா இருப்பேடியம்மா. இந்த ஜாதக குழந்தைகளோட தங்கை நம்ம ராஜியோட ஃப்ரெண்டு. நாலு பேர் ஒண்ணா சேர்ந்து உதவி செஞ்சாதானே குழந்தைகளுக்கு சீக்கிரம் கல்யாணமாகும். வர வர ஒருத்தொருக் கொருத்தர் ஹெல்ப் பண்றதே கொறஞ்சிண்டு வரது இப்பெல்லாம்'.

'மாமி, நம்மாத்து பையனுக்கு ஏதாவது பார்க்கறேளா?'

'வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷம்தானே ஆறது. சம்பளம் ஒரு ஆயிரம் ரூபா இருந்தாதானே வர்ர குழந்தைய சௌக்கியமா வெச்சுக்க முடியும்'

'உங்க நல்ல மனசுக்கு பையனுக்கு ப்ரமோஷன்லாம் சீக்கிரம் கிடைக்கும் மாமி.'

'எல்லாம் உன் வாய் முஹூர்த்தப் படி நடக்கணும்டி அம்மா'

சச்சு மாமி கிளம்பினாள். வந்த இரு ஜாதகங்களையும் மாறி மாறி பார்த்தாள்.

முப்பத்திரெண்டு வயசுக்காரன் கல்யாண ராமன்.

இருபத்தெட்டு வயசுக்காரன் வைதீஸ்வரன்.

இவளே சேர்த்துப் பார்க்கிறாள். ஜானகி கல்யாணராமன், லலிதா வைதீஸ்வரன்.

'ஆஹா, பேர் பொருத்தம் பிரமாதம். ராமனும் ஈஸ்வரனும் வந்துட்டா. கல்யாணமே நடந்த மாதிரிதான்'

ஓவர் ஆப்டிமிஸ்டிக் சிந்தனையில் அண்ணு.

தொடரும்

No comments:

Post a Comment