Monday, January 3, 2022

உறவுபோட்டமுடிச்சு_105

உறவுபோட்டமுடிச்சு_105

By பாஸ்கர் சத்யா 

நிச்சயதார்த்தத்திற்கு முதல் நாள்  இரவு பதினோரு மணியையும் தாண்டி பூவனூர் அக்ரஹார நட்புகளும் மன்னார்குடி நட்புகளும் களைப்பறியாத சந்தோஷங்களில் திளைத்திருந்தன.  ஆட்டம், பாட்டம், கிண்டல்கள், கேலிகள்,  விளையாட்டுகள் எல்லாம் தெருவெங்கும் போடப் பட்டிருந்த பந்தல்களில் ஒலித்துக் கொண்டிருந்தன.

சிறுமிகளும் யுவதிகளும் மருதாணிச் சிறையில் கட்டுப்பட்டே விளையாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர் தங்களை.

அக்ரஹார கல்யாணி அம்மனும், கைலாசநாதரும் பெரிய கோவில் சதுரங்க வல்லபநாதர் மற்றும் இதர சந்நிதிகள் தரிசனங்களில் லயித்து பேசிக்கொண்டே இருந்தனர் மன்னை வாசிகள்.  பூவனூர் வாசிகள் மூலம் கேட்டறிந்த சாமுண்டீஸ்வரி மகிமைகளில் புல்லரித்தே உறக்க மறந்து இருந்தனர் அந்த கோவிலுக்கு சென்றவர்கள்.

நேரம் கடந்தாலும் மானுடம் இரவு உறக்கம் கண்டுதானே ஆக வேண்டும்.  இரவு புசித்த நளபாக சாப்பாடும் அவர்களை சொக்க வைத்து தாலாட்டியிருக்க வேண்டும்.

ஜாங்கிரி, வாழைப்பூ வடை, பால் பாயசத்தில் கண்ட அவர்கள் ருசி அவர்களை விட்டு லேசில் போகவில்லை.

சீதா ஒவ்வொரு ஆத்திலும் வேலைக்காக சென்ற போதும் பூவனூர் பெருமைகளை சொல்லிக் கொண்டுதான் இருப்பாள்.  அப்போதெல்லாம், 'போதுமே உன் பொறந்தாத்துப் பெருமை' என்று சிரித்து சலித்தவர்கள் கூட உண்டு.  இன்று அந்த மண்ணின் மகத்துவங்களை கண்கூடாக பார்க்கும் போது இன்று சிலிர்த்து நிற்கிறார்கள்.

இரவு முடிந்தால் பகல்.  இது இயற்கை தான்.  ஆனால் எதிர்பார்க்கும் விடியல் ஒரு ஸ்வர்கத்தை அல்லவா எல்லோருக்கும் காட்டப் போகிறது?

நான்கரை மணிக்கெல்லாம் அக்ரஹார வீடுகளின் கொல்லைப் புறங்கள் குண்டு பல்புகளில் மஞ்சள் பிரகாசத்தை ஜொலிக்க விட்டுக் கொள்கின்றன.

'மன்னார்குடிக்காரா யாராவது நம்மாத்துல வந்து குளிக்கறாளான்னு கேட்டுட்டு வா.  சுந்தராமய்யர் ஆத்துல அத்தன பேரும் ஒரே சமயத்துல குளிச்சிட்டு ரெடியாக முடியாது.'

வாலண்டரி ஸர்வீஸ்களுக்கு தயராகும் அக்ரஹார குடும்பங்கள் அண்டாவில் வெந்நீரை போட்டு அழைக்கின்றன அவர்களை.

எங்கோ கேட்கும் காகம் மற்றும் சேவல் ஒலிகள்.  கீச் கீச் என்று அன்றைய இரைக்கு காற்றில் டிஸைன்களோடு புறப்படும் குருவிகள் பறவைகள்.

கன்னுக்குட்டிகளை தங்கள் மடி ருசிக்கு அனுப்பும்படி குரல்களை எஜமானர்களின் கவனத்திற்கு எழுப்பும் மாடுகள், பசுக்கள்.

மார்கழி போனாலும் விட்ட குறை தொட்ட குறையாக புற்களோடு உறவாடும் பனித் திவலைத் துளி மொட்டுகள்.  தேனைத் தேடும் வண்டுகளும் வண்ணத்துப் பூச்சிகளும்.

கைகளைக் கட்டிப்போடும் சிலு சிலு காற்று.  ' பனி என்ன குளிர் என்ன' என்று சவால் விட்டு கல்யாணி அம்மன் கோவில் பக்கத்தில் உள்ள சிறு குளத்தில் இறங்கி கச்சைக் குளியலை ரசித்து ஏற்கும் பெண்மணிகள்.

பித்தளைச் சொம்புகளோடு தட்டி திறக்கும் வரை பொறுமை ஏற்கும் வயிறுகள்.

எல்லாம் முடிந்து பெண்களின் ஒப்பனைகள் ஆரம்பம். 

'உனக்கு ரெட் கலர் எடுப்பா இருக்காது.  வேற கொண்டு வந்திருந்தா அத போடு.'

'அம்மா, என் ஜிமிக்கிய இந்த திருட்டு கோட்டான் எடுத்துண்டுடுத்து.  கேட்டா தர மாட்டேங்குது.  அவ கிட்டேந்து வாங்கிக் கொடுக்கப் போறையா இல்லையா?'

'ஏண்டி, இப்படியா அவுத்துப் போட்டதல்லாம் சாணி சுருணை யாட்டம் பெட்டில சுருட்டி வெப்ப.  ஒழுங்கா மடிச்சு வைக்கப்போறையா இல்லையா?'

'அம்மா சாந்து இருக்கா?'

'ஜெஸ்சூர் சீப்பு உங்க கிட்ட இருக்கா.  தலைல பேன் இருக்குமோன்னு சந்தேகம்.  கொஞ்சம் சிடுக்கா வேற இருக்கு.'

'மீனா, முத்து மால போட்டுக்கட்டா இல்லாட்டி கருப்பு மணிமால எடுப்பா இருக்குமா எனக்கு ?'

'ஏய், உனக்கு ஸைடு வகுடு நன்னாவே இல்ல.  நேர் வகுடுதான் உனக்கு பாந்தமா இருக்கும்.'

'மன்னார்குடிலேந்து கிளம்பறதுக்கு முன்னாடி ஹேர் பின்னெல்லாம் ஒரு பாக்ஸ்ல போட்டு வெச்சிருந்தேனே.  எடுத்துண்டு வந்தியோ?'

'பட்டுப்பாவடைய ஒரு இஸ்திரி போட்டு எடுத்துண்டு வரக்கூடாது?  என்ன பொண்ணு நீ.  எவ்வளவு சுருக்கம் பார்.'

'கீதா கல்யாணப் பொண்ணா இல்ல நீயான்னு தெரியல.  என்ன அழகா ட்ரெஸ் பண்ணிண்டிருக்காய்.'

'மாமி, உங்க பொண்ணுக்கு இந்த ஊர்லேயே மாப்பிள்ள வேணுமாம்.  பார்த்துக்கோங்கோ மாமி உங்க பொண்ண பத்திரமா.  இவ ட்ரெஸ் பண்ணிண்டிருக்கறத பார்த்தா பூவனூர்ல இவளுக்கு சுயம்வரம் நடந்தாலும் நடக்கும்.'

'கொலுசு எடுப்பா இருக்கா எனக்கு?  சத்தம் கேட்கற தோன்னோ நடக்கும் போது?  தஞ்சாவூர் தேவி ஜ்வல்லர்ஸ்ல அப்பா வாங்கி கொடுத்தா தீபாவளிக்கு.'

பெண்களோட ஒப்பனை மஹாத்மிய ரகசியங்கள தெரிஞ்சுக்கணும்னா ஃபங்க்ஷன்களுக்கு மறக்காம போகணும்.

ஏதோ ட்ரெஸ் ஸெலக்ஷன்களோடு முடியற விஷயமா?  ஹேர்ப்பின்கள், தோடுகள், செயின்கள், மணிமாலைகள், வளையல்கள், ஓட்டியாணங்கள், கொலுசுகள் ...  இதுக்கு அது சரியில்ல, அதுக்கு இது பரவாயில்ல, எதுக்கும் இதையும் போட்டுக்கோ ...  அநேகமாக பெண்களின் ஸ்வர்கம் இங்கிருந்து தான் துவங்கிறதோ என்னவோ?

'அம்மா, பசிக்கறதும்மா.  எப்ப பூவனூர் நளன் டிஃபன் கடைய தொறப்பான்.'

'அலையாத சாப்பாடு சாப்பாடுன்னு.  சித்த பொறுத்துக்கோ.  வேணும்னா அந்த பக்கெட்ல காப்பிய இப்பதான் சுடச்சுட வெச்சுட்டு போனான், எடுத்து குடி.  எட்டு மணிக்கு எப்படியும் டிபன் போட்டுடுவா.'

'சீதா மாமி, கவலப் பட்டுண்டே இருந்தேளே.  பர்மா ஷெல் மாமாவும் மாமியும் மூட்டை முடிச்சுகளோட வில்லு வண்டியில வந்துண்டு இருக்கா.  கூட செருவாமணி மாமாவும் நடந்து வந்துண்டிருக்கா.'

'சீதா மாமி, கீதா ரெடியாயிட்டாளா?  ஒன்போது மணிக்கு கல்யாணி அம்மனுக்கு அபிஷேகம்னு சொன்னாளே.'

'மாமி, உங்க பொண்ணு கீதாக்கு தீர்க்க ஆயுசு.  அவளும் மேக் அப் முடிச்சுட்டான்னு நெனைக்கறேன். நான் போய் அவள பார்க்கறேன்.'

'அருமை கீதா.  ரொம்ப நன்னா ஜொலிக்கற.  மாப்புள்ள பையன் இந்த கெட் அப்புல உன்ன பார்த்தான்னு வெச்சுக்கோ, இன்னிக்கே தாலிய உன் கழுத்துல கட்டுவேன்னு அடம் பிடிக்கப் போறான்.  எனக்கென்ன?'

செருவாமணி பாலு மாமா வாத்து மாமி சாலி அப்படி சொன்னவுடன் அங்கு சிரிப்பு களை கட்டியது.

'மாமி, அதுக்குதான இப்படி ட்ரெஸ் பண்ணிக்கறது.  உங்களுக்கு விவரம் பத்தாது மாமி.'

'மாமி, உங்காத்து மாமா வந்தாச்சு.'

'சீதா மாமி, ரகு சாஸ்திரிகள் இன்னொரு சாஸ்திரிகளோட வந்துண்டிருக்கா இன்னொரு வண்டில.  அடுத்த பஸ்ஸுல சிவராமன் சாரும், மணிமேகல ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ராஜகோபாலய்யரும் வராளாம்.  அப்பாசாமி அய்யராத்து மாமியும் மாமாவும் அவா பொண்ணு பிச்சம்மாவும் வேரன்னு சொல்லியிருக்காளாம்.'

ஏற்கனவே வந்தவர்கள் மற்றும் வந்து கொண்டிருப்பவர்கள் வரவு சீதாவிற்கு பெருமிதத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

'மாமி, டிஃபன் ரெடி.  உட்கார்ரவா உட்காரலாம்.'

'என்ன மாமா பண்ணியிருக்கேள்?'

'காசி அல்வா, இட்லி, பொங்கல், சட்னி, கொத்சு.  சுட சுட இருக்கு. இப்ப சாப்ட்டாத்தான் அபிஷேகம் பார்க்க செளகர்யமா இருக்கும்.   பட படன்னு உட்கார்ந்தா தான எங்களுக்கும் வேலை சட்டுனு முடிஞ்சு மதியான சாப்பாட்ல இறங்க முடியும்?'

புரிந்து கொள்கிறார்கள்.  இருக்கும் இடங்களில் டிஃபன் இலைகள் போடப்பட்டு பந்தி ஆரம்பம்.

சந்தானம் ஓடி வருகிறான் பந்தியை கவனிக்க.

'கீதா, மன்னார்குடிக்காரா டிஸிப்ளின் டிஸிப்ளின் தான்.  எங்க அக்ரஹாரத்துல தான் சோம்பேறி மயம்.'

'அவர் ரெடியாயிட்டாரா டா சந்தானம்?'

'ஓ.  ஒன்னோட புதிய அவர் தான?  அவருக்கு என்ன குறச்சல்?  ரெடி ஆகறத தவிர வேற வேலையே கிடையாதே அவனுக்கு.  மாமியும் ரெடியாயிட்டா.  மாமா மாத்திரம் செங்கிபட்டி டாக்டரோட பேசிண்டிருக்கார்.  டாக்டர் அவரோட சம்சாரம், அன்னிக்கு அட்மிஷன் போது உதவி செஞ்சாளே மீனாட்சி மூணு பேருமே கார்ல ஒண்ணா வந்திருக்கா தஞ்சாவூர்லேந்து.  டாக்டர் நொழஞ்சோண்ணையே உன்னத்தான் கேட்டார்.'

'அப்பறம் யாரோ மாமாவோட ஃப்ரெண்ட் கதாகாலக்ஷேபம் பண்ணப் போறதா சொன்னாரே மாமா.  அவர் வந்துட்டாரா?'

'ஓ.  ராமசாமி ஐயர் தானே?  வந்தாச்சு.  நல்ல தேஜஸ் அவர் முகத்துல.  அவர் போட்டிண்டிருக்கற கடுக்கணும் ருத்ராக்ஷ மாலையும் அவர இன்னும் எடுப்பா காமிக்கறது.  அவரோட அவர் புள்ள வைதீஸ்வரனும் வந்தாச்சு.  மெட்ராஸ்ல பெரிய ஆடிட்டராம் அந்த வைதீஸ்வரன்.  பாலாஜியோட ரொம்ப நாழி பேசிண்டிருந்தார்.  படிப்பு முடிச்ச அடுத்த நிமிஷம் பாலாஜிக்கு நல்ல வேலை வாங்கித் தரதா சொல்லியிருக்கார்.'

இப்போதே பாலாஜி வேலையில் சேருவதாக ஒரு சின்ன கனவு கீதாவின் மனதிலே.

எட்டரை மணி அளவில் கீதா அண்ட் பார்ட்டியை வரேவேற்று அழைத்துச் செல்ல நாயன கோஷ்டி வந்து சுந்தர ராமய்யர் ஆத்துத் திண்ணையை ஆக்ரமித்துக் கொண்டது.

நாமும் டிஃபனை ஒரு பிடி பிடித்து விட்டு கல்யாணி அம்மன் கோவிலுக்கு செல்ல ஆயத்தமாவோம்.

தொடரும்.....

No comments:

Post a Comment