Monday, January 3, 2022

மனதோடுமலர்கள்_28

மனதோடுமலர்கள்_28

அத்யாயம் 28

'அடிக்கடி வந்து போயிண்டிரு'

வாசலில் வந்த பூக்காரியிடம் மல்லுகட்டி வாங்கிய நான்கு முழ மல்லிகைப் பூவை அண்ணு கொடுத்தாள். அவளுக்கு கொடுக்க மட்டுமே கொடுப்பினை.

வாங்கியவர்கள் உடனே சூடிக்கொண்டால் தானே வாங்கி கொடுத்தவர்களுக்கு சந்தோஷம். மாலதியும் உடனே தலையில் வைத்துக் கொண்டாள். ஏற்கனவே ராஜி வீட்டில் வாங்கிக் கொண்ட இரண்டு முழத்தோடு மொத்தம் ஆறு முழம்.

'இப்படித் திரும்பு, அப்படி கொஞ்சம்...'. மாறி மாறி ஏதோ அண்ணு அவளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கொல்லைப் பக்கம் சென்றாள் அண்ணு. 'ராத்திரியா இருந்தாலும் பரவாயில்லை'. இரண்டு வேப்பிலை தளங்களை பறித்து வந்தாள்.

'தலைல சொருகிக்கோ'. பிரயாணம் போகும்போது அண்ணுவின் வழக்கம், ரெண்டு மூன்று வேப்ப இலைகளை கைப்பையில் வைத்துக் கொள்வாள். ஏதோ, மாரி ஆத்தா கூடவே வந்து இறங்க வேண்டிய இடத்தில் ஸேஃபாக இறக்கிவிடுவாள் என்ற நம்பிக்கை. வருங்கால மாட்டுப்பொண்ணின் பிரயாணத்துக்கு துணையாக மாரி ஆத்தா. என்ன ஒரு வாஞ்சை?

'எத்தனை தடவை நமஸ்காரம் பண்ணுவ. எல்லாம் போதும். எழுந்திரு.'

'இருக்கட்டும்மா'

'ஜாக்கிரதையா போயிட்டு வா. டிக்கெட்டெல்லாம் இருக்கானு பார்த்துக்கோ'.

வாசலுக்கு வந்தாள். 'சகுனம் நன்னா இருக்கு டா சந்தா. சீக்கிரம் கிளம்புங்கோ. சந்தா, நிதானமா ஓட்டு'.

கல்யாணம் ஆகாம கொழந்தைகளை ஒண்ணா... அவளுக்கு பரவாயில்லைனு தோன்றி விட்டது. காலத்தின் மாற்றங்கள், ஏற்றுக் கொண்டுதானே ஆகவேண்டும், பிடிக்கறதோ பிடிக்கலையோ.

ராதா நகரிலிருந்து மெயின் ரோடு வந்தாச்சு. க்ரோம்பேட்டை ஸ்டேஷன்ல வண்டிய போட்டுட்டு ட்ரெயின் புடிச்சு தாம்பரம் போகலாம். அப்படிப் போக மனசு வருமா நம்ம ஹீரோவுக்கு? 

ஸ்ட்ரெயிட் டு தாம்பரம் டூ வீலர்ல. மெள்ள ஓட்டினால் அரைமணி நேரத்திலேயும் போகலாம். இன்னிக்கு வெரி வெரி ஸ்லோ ட்ரைவிங் தான். சைக்கிள்ல போறவன கூட முந்த விடனும்.

பௌர்ணமி நிலா வெளிச்சம். பின் சீட்டில் மாலதி. வெஸ்பா ஸ்கூட்டரின் முன்னால் அவள் பிரயாணப் பையை முன்னரே சாமர்த்தியமாக பேசி வைத்துக் கொண்டுவிட்டான். அந்த வில்லனை இருவருக்கும் நடுவில் அவள் வைத்துவிட்டால்? 

இளமைக்கே உண்டான சமயோஜித புத்திசாலித்தனம்.

இருவர் மனங்கள் முழுவதும் குளிர்ந்திருக்கிறது. பௌர்ணமி நிலவு ஸ்கூட்டர் கொடுக்கும் காற்றை ஏசியாக்கி தருகிறது. கூடவே அவள் சூடிக் கொண்டிருக்கும் ஆறு முழ மல்லிகைப்பூ தன் பங்குக்கு அதன் ஸ்வாசத்தை ஏசி காற்றோடு கலக்கிறது.

'இப்படி பேசாம வந்தா எப்படி?'. அவன் இப்படி கேட்டபோது அவன் முகத்தில் வந்த சிரிப்பை பார்க்க முடியவில்லையே தவிர கேட்ட கேள்வி புரிந்தது அவளுக்கு.

'என்ன பேசணும்? எனக்கு ஒண்ணும் தோணல'

அர்த்தமில்லாத மந்திரங்கள் இல்லை. ஆனா, இந்த அசடு வழியும் காதலுக்கு மாத்திரம் அர்த்தங்கள் ஓராயிரம். மனசுகள் டெலிபதியாகவே பேசிவிடும். வெளிப்படும் வார்த்தைகளுக்குதான் பெரும்பாலும் பஞ்சம் வந்துவிடும்.

'மெட்ராஸ் பிடிச்சுருக்கா?'

'ம்ம்ம்...'

'ஹௌ வாஸ் யுவர் டே டுடே?'

கொஞ்சம் ஆங்கிலப் புலமையும் காட்ட வேண்டும் இல்லையா?

'இன்னும் தாம்பரம் எவ்வளவு தூரம்? பார்த்து வண்டிய ஓட்டுங்கோ.'

'இன்னிக்கு பதினைந்து கிலோமீட்டர் ஸ்பீடு தான். நீ இருக்கறதால வண்டி நகரவே மாட்டேங்கறது'

ஏதோ தத்து பித்து பேச்சுகள். இடையிடையே கெக்கே பிக்கே சிரிப்புகள். வெஸ்பாவுக்கே பொறுக்க முடியாமல் தாம்பரம் வந்துவிட்டது.

'இவ்வளவு தூரம் வந்திருக்கோம். ஒரு முறையாவது தோளில் கை? ஆனாலும் அழுத்தம் தான்.'  இது அவன் நினைத்தது.

'ஒரு சின்ன பள்ளத்துல கூட இறக்காம? பெரிய ஜென்டில்மேன்னு நெனைப்பு.'  இது அவள் எண்ணமாக இருந்திருக்கலாம்.

மனங்களுக்குள் தான் எத்தனை எதிர்பார்ப்புகள் எதார்த்தத்தை தாண்டி?

ஒன்பது மணிக்குள்ளாகவே வந்தாச்சு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. பேச வேண்டும். நிறைய பேசவேண்டும். என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது. இது மட்டும் தெரிந்துவிட்டால் ஃப்ளோவுக்கு குறை இருக்காது.

'எப்படியாவது ட்ரான்ஸ்ஃபர் வாங்கிண்டு மெட்ராஸ் வந்துடு'

'என்னோட ஒண்ணு விட்ட சித்தப்பாதான் ஜனாதிபதியா இருக்கார். போன உடனே அவர் கிட்ட பேசி நாளை ட்ரெயின்ல மெட்ராஸ் வந்துடறேன்'.

ஹாஸ்யமாக சொன்னாலும் ஏக்கம் இருந்தது அவள் பதிலில்.

'ஒரு மாசம் கூட ஆகல. அதுக்குள்ளயே முடியல மாலதி'.

தன்னை அறியாமல் சட்டென எட்டிப்பார்த்த கண்ணீர்.

'கொஞ்ச நாள்தான். எல்லாம் சரியாகிடும்'.

தோளில் சாயவில்லை. ஆனாலும் ஆறுதல் கிடைத்தது அவனுக்கு.

'முதல்ல எப்படியாவது அக்காக்கள் கல்யாணத்துக்கு ஏதாவது செய்யணும். நீங்களும் முயற்சி செய்யுங்கோ.'

'பண்றேன் மாலதி. அம்மா ஏதோ மஹாலிங்கபுரம் அது இதுன்னாள். விவரம் எல்லாம் அம்மாகிட்ட சொல்லியிருக்கியோன்னோ?'

'ம்ம்..இன்னிக்கு உங்க அம்மாவோட பேசிண்டிருந்ததில ஏதோ ரெண்டு அக்காவுக்கும் கல்யாணமே ஆனமாதிரி ஃபீலிங். ட்ரெமென்டஸ் மதர் ஐ ஹேவ் எவர் ஸீன் இன் மை லைஃப். உங்க மேல உயிரையே வெச்சிருக்கா'

'ஆமாம். அம்மா மாத்திரம் இல்லைனா நான் இத்தனை நேரம்... அது கிடக்கட்டும்.. அம்மா உடனே சம்மதிச்சுடுவான்னு நான் கனவில கூட நெனைக்கல. எ பிக் சர்ப்ரைஸ், ரியலி'.

'அம்மா மாத்திரம் உங்கள சந்தான்னு தான் கூப்பிடுவாளோ?'

'அது ஒரு பெரிய கதை. ஒரு தடவ ராஜி ஆத்தில கம்பெல் பண்ணி ஆராதனா சினிமா அழச்சுண்டு போனா. ராஜேஷ் கண்ணா ஆர்மில கூட வேலை பார்ப்பானே, அந்தப் படம்தான். அம்மா கைக்குழந்தையோட விதவை. கேக்கவா வேணும். ஹிந்தி புரிஞ்சதோ புரியலையோ, அம்மா தன்னை ஷர்மிளா தாகூராவே நெனச்சுண்டா. ரெண்டு லைன் ச்சந்தா ஹேத்து, சூரஜ் ஹேத்துனு, அந்தப் படத்துல வர பாட்ட அடிக்கடி முணுமுணுத்துண்டே இருப்பா. அதுலேந்து நான் அவளுக்கு ச்சந்தா தான்.'

நடுத்தர வர்க்கம் எப்படித்தான் சினிமாவை தங்கள் வாழ்க்கையோடு பின்னிப் பார்த்து ரசித்துக் கொள்கின்றது.

'உங்க அம்மா ஷர்மிளா தாகூர விட அழகு.'

'இத மாத்திரம் நான் அம்மா கிட்ட நீ சொன்னதா சொன்னேன்னு வெச்சுக்கோ, வாரம் தவறாம திருச்சிக்கு வந்துடுவா'

சிரித்தார்கள். நம்பிக்கை நிரம்பியிருந்தது அவர்கள் பேச்சில்.

'மாலதி. சித்த இரு. ஏதோ அனௌன்ஸ் பண்றான்.'

கேட்டார்கள். ராக்ஃபோர்ட் எக்ஸ்ப்ரஸ் முதல் ப்ளாட்ஃபார்ம். இருப்பது மூன்றாவது.

'ஐயோ, ஸ்டெப் ஏறணுமா?'

'வேணாம். இப்படியே ட்ரேக்கில் இறங்கி அந்தப் பக்கம் ஏறி போயிடலாம்.'

இவன் இறங்கி விட்டான். அவளால் முடியவில்லை. தயங்கி தயங்கி.

'என் கையை பிடிச்சுக்கோ மாலதி எதுக்கும். இறங்கிடலாம். ஈஸி தான்'

'அப்படியே குதிச்சுடறையா? பிடிச்சுக்கறேன்'.

'ஆசையைப் பாரு'.

அவன் கையை பிடிக்க, எப்படியோ இறங்கி விட்டாள். அவன் கையிலிருந்து ஸ்பரிஸம் கிடைக்கவில்லை. ஆனால் ஆண்மையின் ஆளுமை இருந்தது, பாதுகாப்பாக அவளை இறக்கிவிட. 

இனி ஏறவேண்டும் அந்த பக்கம். யாரோ சிலர் கற்குவியல்களை வைத்திருந்தனர். நளினமான ஒரு தூக்கு போதுமானதாக இருந்தது. எதற்கும் அடிஷனல் சப்போர்ட்டாக இடுப்பில் ஒரு தாங்கல்.

'ஆர் யூ ஓகே? ரிலாக்ஸ்'.

சிறிது நேரம் ராஜி குடும்பத்தாரை பற்றி பேச்சு.

வண்டி வந்தாகிவிட்டது. ஏறியாகிவிட்டது. வண்டியோடு சிறிது நடை. கண்ணிலே ஏக்கம்.

'வேண்டாம், வேண்டாம், நில்லுங்கோ' அவள் குரல். கேட்காததால் தன்னைத்தானே திருப்பிக்கொண்டு கம்பார்ட்மெண்டில் செட்டில் ஆனாள். கண்களுக்கு கைக்குட்டையை துணையாக்கினாள்.

தொடரும்

No comments:

Post a Comment