Monday, January 3, 2022

மனதோடுமலர்கள்_27

மனதோடுமலர்கள்_27

அத்யாயம் 27

மாலதியை தன் ஆத்தில் கொண்டு விட்டுவிட்டு ராஜியை க்ரோம்பேட்டை ஸ்டேஷனில் கொண்டுவிட சென்றுவிட்டான் சந்துரு. அங்கிருந்து அவள் பார்க் ஸ்டேஷன் சென்று பெங்களூர் செல்லவேண்டும்.

பதினைந்து இருபது நிமிடங்கள் பிடிக்கலாம் சந்துரு திரும்பி வர.  மாலதியும் அண்ணுவும் மாத்திரம் சந்துரு ஆத்தில்.

'அவசரத்தில மாஹாலி ஊறுகா கொடுக்க மறந்துட்டேன். இந்தா. அடுத்த தடவை நீ வரும்போது ஏதாவது பக்ஷணம் தரேன். ஹாஸ்டல்ல வாயலுத்து வரும்போது சாப்பிடலாம். ஓமப்பொடி பிடிக்குமோண்ணோ உனக்கு?'

'பிடிக்கும்மா'.

'அது இருக்கட்டும். சந்தாவ ஒனக்கு பிடிச்சிருக்கா. அவன் கிட்ட சொன்னாலும் நானும் ஒரு தடவை கேட்டுடறேன்.'

'பிடிச்சிருக்கு அம்மா'

'பெத்தவா எல்லோருக்கும் பத்து ஜாதகம் பார்த்து, எட்டு ஜாதகத்தை வேண்டாம்னு சொல்லி, ரெண்டு ஜாதகத்தை கையில வெச்சிண்டு பேசி, பெண் பார்த்து தீர்மானம் பண்றதுதான் பிடிக்கும். நானும் அப்படித்தான் நடக்கும்னு நெனச்சிருந்தேன். பரவாயில்ல. கொழந்தைகள் சந்தோஷம்தானே முக்கியம். ஆனாலும் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப வேகம்மா'.

தலையை குனிந்து கொண்டு சிரித்தாள் மாலதி.

'வெட்கத்த பாரு. எனக்கும் உன்ன பார்த்த உடனேயே பிடிச்சுடுச்சு. ரொம்ப மொகராசி காரியா இருக்கேயே.'

'இந்தாத்துல ஒனக்கு பிக்கல் பிடுங்கல் இல்ல. சமையல் கூட நான் பார்த்துண்டுடுவேன். அவனோட சந்தோஷமா இருந்து குடும்பத்த நிர்வகிச்சா போதும். நீ அவனை நன்னா பார்த்துப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.  உங்காத்த பத்திதான் நீ யோசிக்கணும். பகவான் மனசு வெச்சா உன் அக்காக்கள் ரெண்டு பேருக்கும் சீக்கிரமே வரன் அமையும். மெள்ள ஒங்காத்துல பக்குவமா பேசி அவா மனசு புண்படாம சம்மதம் வாங்கிட்டா போதும். அவசரப் படாதே. நேரம் காலம் நிறைய இருக்கு.'

'நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்க வா. ஒனக்கு இன்னொரு அம்மா இங்க இருக்கான்னு நெனச்சுக்கோ.'

'சந்தா அப்பா விட்டுட்டு போனபோது மலைப்பாதான் இருந்தது எனக்கு. எப்படியோ அம்பாள் தைரியத்தயும் நம்பிக்கையையும் கொடுத்தாள். இவன இப்படி படிக்க வெச்சு இப்படி முன்னேத்துவேன்னு அப்ப நெனச்சு கூட பார்க்கல. தன்னம்பிக்கையோடையும் நல்ல குணத்தோடையும் இருக்கறவாள எப்படியோ அம்பாள் கரை சேத்துடறா.'

அவள் பேச பேச மாலதிக்கு அப்படி ஒரு சந்தோஷம். சொல்லத் தெரியாத உணர்வு. இந்த க்ஷணமே இங்கேயே இவளோடு இருந்துட மாட்டோமா என்கிற ஒரு ஃபீல்.

'நீ படிச்ச பொண்ணு. வேலையும் பார்க்கற. உனக்கு நான் சொல்லித்தான் தெரியணும்கற அவசியம் இல்ல. உங்க அப்பா அம்மா சம்மதிக்கற வரைக்கும் கண் திருஷ்டி படாம நடந்துக்கணும் என்ன? பெத்தவா கௌரவம்தான் முக்கியம். ஆசைப் பட்டுட்டேள் ரெண்டு பேரும்.   நான் சம்மதம்  கொடுத்துட்டேங்கறதுக்காக எல்லாத்தையும் சுதந்திரமா பார்க்க கூடாது. சந்தாகிட்டேயும் பக்குவமா சொல்லி புரிய வைக்கிறேன்.'

'ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்காம இருக்கறதும் சிரமம் தான். எவ்வளவு சீக்கிரம் மெட்ராஸுக்கு மாத்தல் வாங்கிண்டு வரமுடியுமான்னு பாரு. உன் கிட்ட இவ்வளவு பேசினதுக்கப்புறம் எனக்கே உன்ன அடிக்கடி பார்க்கலேன்னா மனசு வியாக்யூலப் படும்னு தோணறது. இங்கேந்து வேலூர் பக்கம் தானே. இங்க இருந்துண்டு கூட அப்பா அம்மாவ பார்த்துட்டு வரலாம். அவாளுக்கு சௌகர்யப் பட்டுதுன்னா அவாள கூட இங்க அழைச்சுக்கலாம்.'

'எங்காத்து மனுஷாள கூட கல்யாணத்துல பார்த்தியாமே, சந்தா சொன்னான். எல்லாருக்கும் உன்ன பிடிச்சுருக்குன்னு சொன்னான். உன்ன பிடிக்காம யாருக்காவது இருக்குமா என்ன? அதான் சொக்கு பொடி முகத்திலேயே வெச்சிண்டு இருக்கியே'

அண்ணுவின் சந்தோஷம் வார்த்தைகளில். மாலதியின் சந்தோஷம் கண்ணோரம் எட்டிப் பார்க்கும் கண்ணீரில்.

'உன் மனசுல ஏதாவது இருந்தா சொல்லு. பாரத்த மனசுல எப்போதும் வெச்சிக்க கூடாது. கொட்டிடணும். நம்பிக்கையானவாகிட்ட கொட்டிடணும். என்ன நான் பாட்டுக்கு பேசிண்டே இருக்கேன். கேட்டுண்டிருக்கியே தவிர பேசமாட்டேங்கறையே?'

வரட்டுமா, வந்துடுவேன், அப்புறம் என்ன குத்தம் சொல்லக் கூடாதுன்னு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த கண்ணீர் இப்போது பிரவாகமாய். உடலை ஒரு உலுக்கு உலுக்கி பிரத்யக்ஷமாய். இரு உள்ளங்கைகளும் மூட முயற்சித்தும் தோற்றுப் போய், அண்ணுவின் தோளை தஞ்சமடைந்தது.

'அடி அசடே. தனியா வேற இருக்க திருச்சில. தைரியமா இருக்க வேண்டாமா. என்னிக்கு இருந்தாலும் நீதாண்டி என் மாட்டுப் பொண்ணு. தைரியமா போய்ட்டு வா. அம்பாளே நடத்தாட்டியும் நான் நடத்தறேன். என்ன, கொஞ்சம் பொறுமை தேவையா இருக்கு. அக்காக்கள் கல்யாணம், அம்மா அப்பா சம்மதம்னு ஏகப்பட்டது இருக்கோன்னோ. கண்ண தொடச்சிக்கோ. தைரியம் வேணும்னா என்ன நெனச்சிக்கோ.'

நமஸ்கரித்தாள் அவள்.  ஆசீர்வதித்தாள் இவள்.

'என்ன ரெடியா?' சந்தாவின் குரல்.

'வாழ்கையிலேயே இன்னிக்குத் தான் எனக்கே ஒரு பிடிமானம் கிடச்சிருக்கு மாலதி. பையன் கவலை இனி எனக்கு கிடையாது. எனக்கும் பேச்சுத் துணைக்கு ஒரு ஆள் கிடச்சாச்சு'

இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் சந்துரு இருவரையும் மாறி மாறி பார்க்கிறான்.

'என்ன கிளம்பலாமா?'

'ஏண்டா, பத்து மணிக்குதானே ட்ரெயின்? ராஜி ஆத்துல போயிட்டு சாப்புட்டுட்டு வரட்டும்.'

'நானும் அதுக்குள்ள ரெடியாகட்டுமா?' கிண்டல் சிரிப்புடன் அண்ணு சந்தாவிடம்.

'அம்மா, டூ வீலர்ல ரெண்டு பேர்தான் போகமுடியும். திரும்பி வரதுக்கு பதினோரு மணி ஆகும். நீ ரெஸ்ட் எடும்மா?'

'ஏன், அம்மாவும் வரட்டுமே?' மாலதி சிரித்துக் கொண்டே.

'சரி சரி. விட்டா அழுதுடுவான் சந்தா. பத்திரமா போயிட்டு வாங்கோ.'

குங்குமத்தை தன் கையாலேயே இட்டு விட்டாள் மாலதிக்கு. தலையை தடவிக் கொடுத்தாள். திருஷ்டி கழித்தாள். 

சுகமான நாளாக இருந்தது அன்றைய தினம் அண்ணு மாமிக்கு. மாலதிக்கு மட்டும் இருந்திருக்காதா என்ன?

தொடரும்

No comments:

Post a Comment