மனதோடுமலர்கள்_26
அத்யாயம் 26
மாலை ஐந்து மணி இருக்கும். சந்துரு கிரிக்கெட் ஆடிவிட்டு வீட்டுக்கு வந்தான்.
வரும்போதே, 'அம்மா பசிக்குது. ஏதாவது..'
'முகம், கை கால் எல்லாம் அலம்பிண்டு வா முதல்ல. ஊர்ல அடிக்கிற அத்தனை வெயிலும் உன் தலைல தான். அதுக்கேத்த மாதிரி, வாராவாரம் எண்ணையாவது தேச்சுக்கணும். எங்க கேக்கற'.
எந்த பையன்தான் இந்த மாதிரி அட்வைஸெல்லாம் காதுல வாங்கிண்டாங்க, இவன் வாங்குவதற்கு.
பாத்ரூம் சென்று முகம் அலம்பிக் கொண்டிருக்கும் போது சமையல் உள்ளிருந்து சுகமான வாசனை. அண்ணு வைத்திருந்த அவல் பாயசத்தின் மணம் தான் அது. அடுப்பில் சுட வைத்துக் கொண்டிருந்தாள்.
முகத்தை துண்டால் துடைத்துக் கொண்டே 'என்னம்மா விசேஷம் இன்னிக்கு?'
'அதுவா, ராஜி யாரோ ஒரு பொண்ண அழைச்சுண்டு வந்தா, திருச்சில இருக்காளாமே, பேர் கூட..'
அவள் முடிப்பதற்குள் 'மாலதியா?' என்றான்.
'ஆமாம். அவ பேரு உனக்கு எப்படி தெரியும்? முன்னமே அவளை தெரியுமா?'
அப்போதுதான் தன் ஆர்வக் கோளாறை உணர்ந்தான். சமாளித்தாக வேண்டும்.
'அத அப்புறம் சொல்றேன். மாலதி அவாத்திலேயா இருக்கா?'
'அப்படித்தாண்டா சொன்னா.'
சொன்னதுதான். உடனே சூடா இருந்த பாயசத்தை மடக் மடக் என்று முடித்தான். அவன் உடல் வெப்பத்திற்கு முன் அந்த பாயச சூடு எதுவுமே இல்லை.
ஒரு அவசர மினி அலங்காரம். பவுடர் பஃபை வைத்து முகத்தில் மக்கட்டி, மக்கட்டி. அந்த பௌடரை முகத்தில் பரப்ப கையால் ஒரு வட்டம். பரக்கு பரக்கு என்று சீப்பால் ஒரு சிலிப்பு. ஒழுங்காய் வாரிய சிகையில் ஒரு சின்ன கலைப்பு.
'அம்மா, இப்ப வந்துடறேன் மா'.
நான்கு வீடுகள் தூரத்திற்கு ஒரு ஒலிம்பிக்ஸ் ஓட்டம். அதற்குள் மனதில் மாலதிக்கு டோஸ். 'ஒரு வார்த்தை, நான் வரேன்னு? பொம்மனாட்டிகளே இப்படித்தான்.' ஏதோ எல்லா பெண்களையும் முழுசா புரிஞ்சுண்ட மாதிரி.
வாசலிலே ராஜி அப்பா. 'வா, வா, சந்துரு எப்படி இருக்க?'
'ரொம்ப முக்கியம்'
மனசுக்குள்ள அவருக்கு ஒரு குட்டி திட்டு.
'நேத்திக்கு வெஸ்ட் இண்டீஸ் பிரமாதமா விளையாடினாங்க இல்ல? அதுவும் கோம்ஸும் லாயிடும் த்வம்ஸம் பண்ணிட்டாங்க. காமென்ட்ரி கேட்டையோ?'
'அடேய் கிழவா, இப்ப நிறுத்தமாட்ட?'
நினைக்கிற மாதிரி சொல்லிவிட முடியுமா என்ன?
'மாமா, ராஜி இருக்காளா?'.
'உள்ள இருக்கா டா, அவளோட ஃப்ரெண்டு திருச்சிலேந்து வந்துருக்கா. பேசிண்டிருக்கா ரெண்டு பேரும். நீ இங்க வா, உட்கார்.'
'ராஜி கிட்ட பேசிட்டு வந்து உங்களோட பேசரேன் மாமா.'
அவர் பதிலுக்கு கூட காத்திராமல் உள்ளே சென்றான். ஹாலில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
மாலதியிடம் உடனே கோபம். 'என்ன மாலதி, என் கிட்ட கூட சொல்லாம. என்னை கிள்ளுக் கீரைனு நெனச்சியா? ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்பினா குடியா முழுகிப் போகும்?'
கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள் மாலதி. ஆனாலும் அவன் கோபத்தை ரசிக்கவும் செய்தாள்.
நிலமையை சமாளிக்க ராஜி, 'அப்பா அவள கோச்சிக்காத. நான்தான் ஸர்ப்ரைஸ் உனக்கு கொடுக்கணும்னு ஒன்னுட்ட சொல்லாதேன்னு சொன்னேன். நீ கிரிக்கட் ஆடப்போவேன்னு யாருக்கு தெரியும்?'
'இருந்தாலும்....'
'என்ன இப்ப அவளோடு சண்டை போட வந்தியா, இல்ல அவளோட பேச வந்தியா?'.
சமாதானம் ஓரளவு ஆனான். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சின்ன புன்சிரிப்பு சந்துரு முகத்தில். கலகலப்பானது சூழல்.
போனவாரம் வேலூர் போனது, மதியானம் அம்மா போட்ட சாப்பாடு, அப்படி இப்படின்னு பேச்சு ட்ராவல் ஆச்சு.
'ஏய், எனக்கு ஒரு உதவி செய்யறையா? நான் பெங்களூர் போறேன் 9 மணி ட்ரெயினுக்கு. மாலதிக்கு பத்து மணிக்கு தாம்பரத்துல ட்ரெயின். நீ அப்பாவோட டூ வீலரை எடுத்துண்டு மாலதிய ஸெண்ட் ஆஃப் செய்யறியா ஆன் மை பிஹாஃப்.'
'ஏழு மணிக்கு வரேன். உன்ன க்ரோம்பேட் ஸ்டேஷன்ல ஏத்திவிட்டுட்டு மாலதியை அழைச்சிண்டு போரேன்'.
'தட்ஸ் குட்'.
திரும்பி வந்தான் ஆத்துக்கு.
அம்மா முகத்தில் கண்ணீர்.
'ஏம்மா அழற?'
'வந்த பொண்ணு மாலதிய உனக்கு முன்னமே தெரியுமா, தெரியாதா? அதச் சொல்லு முதல்ல.'
இனிமேலும் அம்மாவிடம் மறைத்து என்ன ஆகப்போகிறது. ராஜி லெட்டர், திருச்சி ஸ்டேஷனில் பார்த்தது, கல்யாணத்துக்கு வந்தது, பிரேமா எல்லோரும் கலாட்டா பண்ணினது, திருவானக்காவல், சமயபுரம் போனது, எல்லாவற்றையும் சொன்னான். ஒன்றை மற்றும் மறைத்தான். அவன் ஆசையை மாலதியிடம் சொன்னதை.
அம்மா எப்படி இதற்கு பதிலளிக்கிறாள் என்று பார்க்கும் வரை மறைக்கலாமே என்று நினைத்தான்.
'இவ்வளவு நடந்திருக்கு. பதினைந்து நாள்ளுக்கு மேல ஆகியும் ஒரு வார்த்தை இதைப் பத்தி சொல்லலை. ராஜியும் என்னிட்ட மறைச்சிருக்கா, வந்த பொண்ணும் சொல்லல. எல்லாருமே நாடகம் ஆடியிருக்கேள். நான் பைத்தியமா இருந்திருக்கேன். இதெல்லாம் உனக்கே நன்னா தெரியறதா?'
'அம்மா, தப்பு தான் மா. எனக்கு கொஞ்சம் கூச்சமா இருந்தது, அம்மாகிட்ட போய்.....'
'வாஸ்தவம்தான் சந்தா. எனக்கும் கவலை இருக்காதா. எனக்கே அந்த பொண்ண சித்த நாழில புடிச்சுடுச்சு. நீ வயசு பையன் தானே?'
'சரி, பளிச்சுனு சொல்லு. அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? பொண் பொல்லாப்பு நம்மள அப்புறம் சும்மா விடாது. இதெல்லாம் விளையாட்டு சமாச்சாரம் இல்ல. ஆயிரம் காலத்து பயிர்.'
'ரொம்ப புடிச்சிருக்கு மா அவளை.'
'அவாத்துல ஏகப்பட்ட சிக்கலா இருக்கும் போல தெரியறதே. அதெல்லாம் தீரற வரைக்கும் பொறுமையா இருப்பேளா ரெண்டு பேரும்? ஊர் வாய மூட முடியாது. அவளோட பெத்தவா காதுல விழுந்தா எவ்வளவு கஷ்டப் படுவா? அவா சம்மதமெல்லாம் கிடைச்சு நல்ல படியா எல்லாம் நடக்கணும் சந்தா. அதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் ஊர் வாயில விழாம நடந்துக்கணும். எவ்வளவோ இருக்கு. நீ ஏதாவது எசகு பிசகா அங்கேயும் இங்கேயும் சுத்தி அவளுக்கு கெட்ட பேர கொடுத்துடக் கூடாது. என்ன, நான் சொல்றது புரியறதா? அவளப் பார்த்தா தைரியம் இல்லாத பொண்ணா தெரியறது. உனக்கும் நாளைக்கு எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாது. அப்பா போனதிலேந்து ஒன்னையே சுத்தி சுத்தி வந்துண்டிருக்கேன் நான். புரிஞ்சுப்பேன்னு நெனைக்கிறேன்.'
'சரிம்மா. பார்த்து நடந்துக்கிறேன் மா.'
'அம்மா, இப்ப மாலதிய ராத்திரி வண்டிக்கு தாம்பரத்துல ஏத்தி விட சொல்றா ராஜி. அவ பேங்களூர் போறாளான்னோ இன்னிக்கு.'
'எல்லாம் ஒண்ணுக் கொண்ணு கூட்டுக் களவாணிகள். இப்படிக் கேட்டா சம்மதிச்சுடுவேனா?'
நமுட்டு சிரிப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டாள் அண்ணு மாமி. அந்த நமுட்டை சந்துரு பார்த்து விட்டான்.
'என் செல்ல அம்மா.' அம்மாவின் கன்னத்தை கிள்ளினான்.
'இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல. நீ போய் மாலதிய அழைச்சுண்டு வா சித்த பொருத்து. நானும் நீயும் சேர்ந்தே தாம்பரம் போய் அவள வழி அனுப்பிட்டு வருவோம்.'
'அம்மாஆஆஆஆ'.
'இந்த கெஞ்சல் எல்லாம் என்னுட்ட வேண்டாம். அவள அழைச்சுண்டு வா. அந்த தடிச்சி கிட்ட நான் பேசிக்கறேன்.'
'இப்போதைக்கு ஒத்துக்கொள்வோம். அப்புறம் சொன்னா அம்மா ஒத்தக்காமையா போவா?' என்பது அவன் நம்பிக்கையாக இருந்தது.
தொடரும்
No comments:
Post a Comment