மனதோடுமலர்கள்_24
அத்யாயம் 24
கொஞ்ச நேரம் ரெஸ்ட். அப்பா கிட்ட மாலதி இன்ட்ரொடக்ஷன். குளியல். டிஃபன், காப்பி.
'அம்மா, மாலதி அக்காக்களுக்கு ஏத்த ஜாதகம் இருக்கான்னு கேக்க சந்துரு அம்மாவை பார்த்துட்டு வந்துடறோம்.'
காலை மணி பத்து இருக்கும். கிளம்பினார்கள் அன்னபூரணி மாமியை பார்க்க. ராதாநகரிலே அண்ணு மாமி என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்.
தன்னையும் அறியாமல் ஒரு படபடப்பு மாலதியிடம். ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் சந்துரு அம்மாவுக்கு நம் மீது எப்படி இருக்கும்? ஆர்வம் இருக்காதா என்ன?
வாசலில் போட்டிருந்த கோலத்தில் ஒரு கணம் லயித்தாள். என்ன அழகான ஒன்பது புள்ளிக் கோலம்?
'மாஆஆஆஆஆமி. எப்படி இருக்கேள்?' வாய் மலர விசாரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள் ராஜி.
'அட, அட, அட, வாங்க டாக்டர். இப்பத்தான் என்ன பார்க்கணும்னு தோணித்தாக்கும்?'
'ராஜி, அடுப்புல பால வெச்சுருக்கேன். உள்ள வா'
தயங்கி தயங்கி ராஜியை பின் தொடர்ந்தாள் மாலதி.
உள்ளே சென்ற ராஜி இரண்டு கையை ஊன்றி ஒரு ஜம்ப் செய்து சமையல் கட்டு மேடையில் அமர்ந்தாள்.
'இந்த பொண்ணு யாரு, அம்பாள் மாதிரி லக்ஷணமா இருக்காளே? உன் ஃப்ரெண்டா?'
முதல் இம்ப்ரெஷன், 'அம்பாள் மாதிரி லக்ஷணமா'. தன்னை அறியாமல் ஒரு பூரிப்பு மாலதிக்கு, வருங்கால மாமியார் சர்டிஃபிகேட் கொடுத்தவுடன்.
'பேர் மாலதி. திருச்சில வேலை கவர்மெண்ட் வேலை பார்க்கிறா. நல்ல பொண்ணா பார்த்தா தெரியரா, என்னைப் போல இல்லை.'
எல்லோரிடத்தும் சிரிப்பு.
'வா மாலதி. இவ எப்போதும் இப்படித்தான். அச்சு பிச்சுனு ஏதாவது பேசுவா?'.
'சந்துரு இல்லையா மாமி?'
'ரவி வந்து ஏதோ கிரிக்கட் மேட்சாம். அழச்சிண்டு போனான். வாரந்தவறாம இந்த மட்டையடி உற்சவத்த மாத்திரம் நிறுத்த மாட்டேங்கறான். வாரம் பூரா வேலை செய்யறான். ஒரு நாள் ரெஸ்ட் எடுடாண்ணா, மட்டைய தூக்கிண்டு கிளம்பிடறான்'.
'கால் கட்டு போட்டுடுங்கோ மாமி. அப்பதான் சரிப்படுவான்'.
நைஸா கேட்டு வைப்போம், பதில் என்ன வறதுன்னு பார்ப்போம் என்று மனதில் நினைத்தாள் ராஜி.
'இப்பத்தான் ஒரு வருஷம் முந்தி நல்ல கம்பனியா சேர்ந்தான். பணம் கிணம் சேர்த்துண்டாதானே அதப் பத்தியெல்லாம் யோசிக்க முடியும். வரவளுக்கு சாதம் போட வேண்டாமா? துணிமணி எடுத்து தர வேண்டாமா?'
'வேலை பார்க்கிற பெண்ணா பார்த்துட்டா போச்சு'.
'நானும் அதுதாண்டி நெனச்சுண்டிருக்கேன். மாலதி மாதிரி அழகா லக்ஷணமா, வேலை பார்க்கர பொண்ணா கிடைச்சா சீக்கிரம் யோசிக்கலாம். இந்த பொண்ணு தப்பா நெனச்சுக்கப் போறா, ஒரு உதாரணத்துக்குதான் மாலதி சொன்னேன்.'
'அதெல்லாம் கிடக்கட்டும் ராஜி, இப்ப எதுக்கு இந்த பொண்ணையும் அழச்சிண்டு காலங்கார்த்தால வந்திருக்க, அதச் சொல்லு'.
'ஒண்ணுமில்ல மாமி. மாலதிக்கு ரெண்டு அக்கா இருக்கா கல்யாணத்துக்கு. அவாளுக்கு நல்ல வரன்கள் கெடச்சா, இவளுக்கு ரூட் க்ளியராகும். அதான், உங்களுக்கு தெரிஞ்சவா கிட்ட சொல்லி வெச்சேள்னா..'
இருவருக்கு புரிந்த கிண்டல் பேச்சு மூன்றாவது நபருக்கு புரியாமல் இருக்கும்போது கிடைக்கிற சுகமே தனி. என்ன, சர்வ ஜாக்கிரதையா சம்பாஷணைகள் இருக்கணும். மாலதியும் ராஜியும் இப்படித்தான் அனுபவித்துக் கொண்டிருந்தனர் அப்போது.
'அதுக்கென்ன சொல்லி வெச்சா போச்சு. ஜாதகம் கொண்டு வந்திருக்கியா?'
'அஞ்சஞ்சு காப்பி இருக்கு, இந்தாங்கோ'.
'கையெழுத்து ஒன்னுதா?'
ம்ம்ம் என்று சொல்லிக் கொண்டே தலை அசைத்தாள்.
'உன்ன போலவே அழகா முத்து முத்தா இருக்கே கையெழுத்து. கவலைப் படாதே, சீக்கிரம் உங்க அக்காக்களுக்கு கல்யாணம் நடந்துடுத்துனே வெச்சுக்கோ'
எப்பேற்பட்ட நம்பிக்கையை கொடுக்கிறாள் சந்துரு அம்மா. சற்று கலங்கிய கண்ணுடன் நினைத்தாள், 'ராஜி அக்கா சொன்னது எத்தனை உண்மை. ஷி இஸ் ரியலி எக்ஸலன்ட்'.
'கோடம்பாக்கம் மஹாலிங்கபுரத்தில ஒரு பிள்ளையார் கோவில் இருக்காம். அங்க கல்யாணத்துக்கு இருக்கற நம்மடவா பசங்க டீடெய்ல்ஸெல்லாம் வாராவாரம் ஒட்டறாளாம். நம்ம சந்துருவ வாரா வாரம் அங்க போய் குறிச்சிண்டு வர சொல்றேன். நானே ஓரளவு இங்க பார்த்துட்டு ஒனக்கு கடுதாசி போடறேன். நீ ஒண்ணும் கவலப் படாதே'.
'ஒருத்தர் கஷ்டத்தில இருந்தா கைகொடுத்து தூக்குவான்னு கேள்விப்பட்டிருக்கேன். இந்த சந்துரு அம்மா முழங்கை வரைக்கும் பிடிச்சு தூக்கி விடறாளே'
கண்கள் மட்டும்தான் கண்ணீர் விடுமா என்ன? மனசு கூட விடும். என்ன, அதை கண்ணாடில பார்க்க முடியாது. மாலதியிடம் அப்படிப்பட்ட உணர்வே இருந்தது அப்போது.
மாலதியோடு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தாள் சந்துரு அம்மா. குடும்பத்தில் யார் யார், என்ன பெயர், பூர்வீகம், அது இதுன்னு.
'ராஜி, ஒன்னால இன்னிக்கு எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் கெடச்சுட்டா. ரொம்ப நன்னா பேசறா, ரொம்ப நன்னா எழுதறா, ரொம்ப நன்னா பழகறா..'
'மாமி, ரொம்ப நன்னா பாடுவா வேற'.
'அப்படியா, ஒரு பாட்டு பாடேன் மாலதி'.
'அக்கா கிண்டல் பண்றா அம்மா. கர்நாடிக் பாட்டெல்லாம் தெரியாது. ஏதோ சினிமா பாட்டு ஒரு நாளைக்கு பாடினேன் அக்கா முன்னாடி. அதைப் புடிச்சிண்டிருக்கா'.
'ஏதாவது ஸ்வாமி பாட்டு பாடமாட்டியா?'
பாடினாள். 'கற்பூர நாயகியே கனகவல்லி....'
'பிரமாதம். சமயபுரத்தாள் ஊரிலேயே இருக்க. அவ அனுக்ரஹம் ஒனக்கு கண்டிப்பா உண்டு'
'அப்புறம் என்ன மாலதி. முக்கால்வாசி இன்டர்வ்யூ முடிஞ்சு போச்சு. ரிஸல்ட் தான் பாக்கி'.
ராஜியின் கிண்டல் சந்துரு அம்மாவுக்கு புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
'அம்மா, இங்க எங்க பாத் ரூம் இருக்கு'.
மாலதியின் தேவைக்கு வழியை சொன்னாள்.
அப்போது தனியே இருந்த ராஜியைப். பார்த்து, 'எனக்கென்னவோ இந்த பொண்ணு நம்ம சந்துருவுக்கு பொருத்தமா இருப்பான்னு நெனைக்கிறேன். அவன் தலையெடுக்கறதுக்கும் இவ அக்காக்கள் கல்யாணம் ஆகறதுக்கும் சரியா இருக்கும்னு நெனைக்கிறேன்.'
'என் மனசுலேயும் அப்படித்தான் மாமி தோணறது. பேசிப் பார்க்கறேன்'.
எல்லாம் ஏதோ திட்டமிட்டு சமயபுரத்தாள் நடத்துவது போன்ற உணர்வு எல்லோருக்கும். கிடைத்தால் இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
தொடரும்
No comments:
Post a Comment