Monday, January 3, 2022

மனதோடுமலர்கள்_25

மனதோடுமலர்கள்_25

அத்யாயம்  25

'சாப்பிட்டு போயேண்டி ராஜி, இந்த ஏழை ஆத்துல தான் ஒரு வேளை'

'பார்த்தேளா, பார்த்தாளா. இப்படியெல்லாம் கேட்டா உங்க பேச்சு நான் டூ விட்டுடுவேன்.'

'டிஃபன்இப்பத்தான் சாப்பிட்டோம். அம்மா இத்தனை நேரம் சமையல் ஆரம்பிச்சிருப்பா. மாலதி வேற எங்காத்துக்கு முதல் முறையா வந்திருக்கா. அதான்'.

'பரவாயில்ல டீ. ரெண்டு பேருமே இங்க சாப்பிடுங்கோ. ராத்திரி வேணா இவ உங்காத்துல சாப்பிடட்டும். ரெண்டு ஆம் தள்ளிதானே அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடு.'

பிடிவாதமா சொல்லிக்கொண்டே இருந்தாள் சந்துரு அம்மா. மறுக்க முடியவில்லை.

'சரி சொல்லிட்டு வந்துடறோம். என்ன சமையல்?'

'பருப்பு உசிலியும், வெத்தக் குழம்பும் பண்ணிண்டு இருக்கேன். ஜீரா ரசம் வேணா கூட வெச்சுடறேன் சித்த நாழில'.

'சரி, ஆத்துக்கு போயிட்டு ஒன் அவர்ல வரோம் மாமி. நிதானமா ஒரு மணிக்கு மேல சாப்பிட்டா போதும்.'

கிளம்பினார்கள் ராஜி வீட்டிற்கு இருவரும். ஒரு நிமிட நடையில் ராஜி கேட்டாள். 'என்ன சந்துரு அம்மா எப்படி?'

'எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல அக்கா. உங்க மேல ரொம்ப பாசமா இருக்கா. எல்லாமே உங்க கையிலதான் இருக்கு, வேற என்ன சொல்றது?'

வீடு வந்தவுடன் ராஜி அங்கு சாப்பிடப் போவதாய் தன் அம்மாவிடம் சொன்னாள்.

'மாமிக்கு ஏண்டி சிரமத்தை கொடுக்கற. வந்த பொண்ணையும் நம்மாத்துல சாப்பிட விடாம பண்ணிட்டையே'.

ராஜி சாப்பிட ஒத்துக் கொண்டதற்கு காரணம் மாலதியோடு இருக்கும் நேரத்தில் இன்னும் சற்று புரிதல் அண்ணு மாமிக்கு கிடைக்கட்டுமே என்றுதான்.

சிறிது நேரம் ராஜி ஆத்தில் பொது விஷயங்களை பேசி விட்டு மீண்டும் சந்துரு வீட்டுக்கு கிளம்பினார்கள்.

வாசலில் காலடி வைக்கும் போதே வெத்தக்குழம்பின் நறுமணம். கூடவே சீரகம், வெந்தயம், மிளகு வறுக்கும் வாசனை. அது என்ன ஒரு ஏலக்காய் நறுமணமும். வித்தியாசமாக இருந்தது.

'மாமி, வந்தாச்சு. மாலதி கிட்ட சேலஞ்ச் பண்ணினேன். அவ அம்மா சமையலை விட எங்க அண்ணு குட்டி சமையல்தான் சூப்பரா இருக்கும்னு.'

'போடி நீ ஒண்ணு. ஏதோ ஆத்தில இருக்கறத வெச்சிண்டு அதையும் இதையும் கரைச்சிண்டு சமையல் பண்றேன். அவ சிரிக்காம இருந்தா சரி'.

'அண்ணு கண்ணு, என்ன நடுவுல ஒரு ஏலக்கா வாசனை?'

'அதுவா, ரெண்டு அவல் இருந்தது. சாயந்திரம் எனக்கு உப்மாக்காக ஊற வெச்சிருந்தேன். அதை வெச்சு ஒரு கரைசலா பண்ணி ஒரு பாயசம் பண்ணிண்டிருக்கேன். புதுசா கெஸ்ட வேற அழச்சிண்டு வந்திருக்கியே?'

மாலதி அல்மோஸ்ட் வெப்ட் இதை கேட்டவுடன். மனம் ஒரு நிலையில் இல்லாமல் யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக அந்த சிறிய பெட்ரூமுக்கு சென்றாள்.

சட்டென்று கவனித்த ராஜியும் ஓடிப்போய் அவள் தோளில் கைவைத்து 'கண்ட்ரோல் யுவர்செல்ஃப் மாலதி. எல்லாம்தான் நன்னா போயிண்டிருக்கே. ஏன் வருத்தப் படறே?'.

'கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணின்டு வா சமையல் உள்ளுக்கு. நான் மாமியோடு பேசிண்டிருக்கேன்'.

அழகாக சிரித்துக் கொண்டிருந்த ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு பக்கத்தில் சிறு வயது மாமியோடு அவள் கணவன் நின்று கொண்டிருக்கும் பழைய ஃபோட்டோ அந்த ரூமில் இருந்தது. குழந்தை சந்துருதான் என்பதை தனியாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் அந்த ஃபோட்டோ அவளுக்கு உணர்த்தியது.

அந்த படத்தை கையில் எடுத்து பார்த்துக் கொண்டு தன் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் மாலதி.

எதேச்சையாக அதை கவனித்த அண்ணு மாமியும் அவள் அருகில் வந்து, 'இவன்தான் என் புள்ள சந்துரு. அவன் அப்பா மிலிட்டரில இருந்தா. அங்க ஏதோ குளிர் ஒத்துக்காம நெஞ்சுல சளி புடிச்சி காப்பாத்த முடியாம போயிடுத்து. அன்னிலேந்து சந்துருதான் எனக்கு எல்லாம். அவன் அப்பாவ பார்க்கல. படத்திலையாவது பார்த்திண்டு இருக்கட்டுமேன்னு இந்த படத்தை மாத்திரம் வெச்சிண்டிருக்கேன். சந்துரு பொறந்தோண்ண குதியோ குதியோண்ணு குதிச்சார். என்ன பண்றது, சந்தோஷம் மட்டுமே பகவான் கொடுத்துடறாரா என்ன?'

கொஞ்சம் சுதாரித்துக் கொண்டிருந்த மாலதி குலுங்க ஆரம்பித்து விட்டாள். இருவரும் அவளை பெட்டில் அமர்த்தி தேற்றினார்கள்.

'ஏய், என்ன ஆச்சு, என்ன ஆச்சு. கூல் கூல்'. தோளைப் பிடித்து உலுக்கி மாலதியை கேட்டுக் கொண்டே இருந்தாள் ராஜி.

'நத்திங் நத்திங்'. என்று சொல்லிக் கொண்டே தன்னைத்தானே சற்று தேற்றிக் கொண்டிருந்தாள்.

அந்தப் படத்தில் அண்ணு மாமி சந்துரு அப்பா கதையைத் தான் சொன்னாள். ஆனால், அந்தப் படத்தில் அண்ணு மாமியின் தைரியம், பொறுமை, கருணை போன்ற அத்தனை குணங்களையும் க்ஷணத்தில் மாலதி தன் மனதில் படமாக ஓட்டிவிட்டாள். துக்கம் தொண்டையை அடைக்காமல் என்ன செய்யும். 

எப்பேர்பட்ட ஒரு ஆத்மாவோடு சந்துருவை திருமணம் செய்துகொண்ட பிறகு பயணிக்கப் போகிறோம் என்றும் சேர்த்து நினைத்து விட்டாள். கண்ணீர் கரைபுரண்டதில் ஆச்சர்யம் என்ன?

'ரொம்ப இளகிய மனசா வெச்சிருக்கயே? இப்படி எல்லாம் எப்போதும் இருக்க கூடாது. தைரியமும் பொறுமையும் சேர்த்து இருக்கணும். என்னமோடி, ஒன்ன பார்த்தவுடனே எனக்கு புடிச்சு போயிடுத்து. சித்த ரெண்டு பேரும் பேசிண்டிருங்கோ. ஜபத்தை பண்ணிட்டு, நேவேத்யம் காட்டிட்டு சாப்பிட உட்காரலாம், என்ன? அழக்கூடாது, என்ன?'

அண்ணு மாமிக்கு அழுகை நின்று பல வருஷம் ஆகி விட்டது. ஒரே ஒரு விஜாரம்தான். சந்துரு நன்னா வரணும், சொந்த வீடு கட்டிண்டு, பேரன் பேத்திய என் கையில கொடுத்துட்டு, ஆம்படையாளோட நன்னா குடுத்தனும் பண்ணிண்டு சந்தோஷமா இருக்கணும். ஒரே ஒரு கவலை தான், ஆனா ரொம்ப பெரிசு.

'டூ யூ நீட் எனி மெடிஸன் டு ரிலாக்ஸ்?'

'நோ, தேங்க்ஸ் அக்கா. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். சாரி'.

அவளை இயல்பு நிலைக்கு கொண்டுவர கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டிருந்தாள் ராஜி.

'வரேளா ரெண்டு பேரும், சாப்பிட?'.

'ராஜி, உனக்கு தட்டு வைக்கட்டுமா, இலையா?'

'எது வேணும்னாலும் அண்ணு குட்டி'.

உள்ளே மாலதி சென்றாள். பட. படவென்று மூன்று தட்டுக்களை அலம்பி தரையில் வைத்தாள். அங்கு இருந்த சமைத்த உணவுகளை எடுக்க போனாள்.

'ஏய் மாலதி, மாமி மடி விழுப்பெல்லாம் பார்ப்பா. எது செஞ்சாலும் கேட்டுண்டு செய்.'

'ஆமாம், ராஜி சொல்றது கரெக்ட்டுதான். சாப்பிடற வரைக்கும் மடி விழுப்பு பார்ப்பேன். ஆனா இன்னிக்கு மட்டும் கிடையாது. எனக்கு இன்னிக்கு ஃப்ரெண்ட்ஸ் சாப்பாடுதான்'.

சொன்னதுதான் தாமஸம். பாயசம், பருப்புசிலி, சாதம், வெத்தக் குழம்பு, மொளகு ஜீரா ரசம், நெய், உப்பு, மோர், மாஹாலி ஊறுகாய்,எல்லாவற்றையும் பரப்பி விட்டாள் மாலதி.

ஒரு தட்டின் முன் உட்காரப் போனவளை சற்று நிறுத்தினாள் சந்துரு அம்மா.

'அது சந்துரு தட்டு. அதுல ராஜி சாப்பிடட்டும். நீ இதுல உட்காந்துக்கோ.'

சந்தோஷ சாப்பாடு. அவல் பாயசம் அமர்க்களமாய் இருந்தது. மாலதி பாயசமாயிற்றே, இருக்காதா பின்னே.

'வேணுங்கறத சங்கோஜப் படாம போட்டுக்கோ மாலதி' வாஞ்சையுடன் அண்ணு மாமி கேட்டு கேட்டு.

ராஜி அது எப்படி பண்றது, இது எப்படி பண்றதுன்னு துளைத்து எடுத்து விட்டாள்.

'அண்ணு குட்டி, எனக்கு பேங்களூருக்கு மாஹாலி ஊறுகாய் வேணும் சொல்லிட்டேன்.'

'தீரும் சமயத்தில கேட்கறையே? அடுத்த வாரம் வரும்போது நிறைய பண்ணி வைக்கிறேன். இப்ப இருக்கறத மாலதி எடுத்துண்டு போகட்டும்..'

'அண்ணு குட்டி, இது ஓர வஞ்சனை? இன்னிக்கு வந்த இவ பெரிசா போயிட்டாளா?'

கலகலப்பா பேசிண்டு சாப்பிடும் போது எப்படி மனசு குளிர்ந்து போகறது?

பட படவென்று சொந்த ஆத்தில் கூச்சமில்லாமல் வேலை பார்ப்பது போன்று மாலதி, சாப்பாடு முடிந்தவுடன் எல்லாவற்றையும் ஒழித்துப் போட்டு, அலம்பி... அசத்திவிட்டாள் போங்கள்.

விடை பெற்றுக் கொண்டார்கள். குங்குமம் கொடுத்தாள் இருவருக்கும். ஒரு தட்டில் இருவருக்கும் வெற்றிலை பாக்குடன் தலா ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்துக் கொடுத்தாள்.

நமஸ்கரித்தனர் இருவரும்.

ராஜியை ஆசீர்வதிக்கும்போது 'சீக்கிரம் மாமா பையனை கல்யாணம் பண்ணிண்டு அமோகமா எல்லாருக்கும் டாக்டர் சேவை செஞ்சிண்டு நன்னா இருக்கணும்' என்றாள்.

மாலதியிடம், 'சீக்கிரம் ரெண்டு அக்காக்களுக்கும் கல்யாணம் ஆகி உன் நல்ல மனசுக்கேத்த மாப்பிள்ளையா கிடைக்கணும்' என்றாள்.

'சரி மாமி. இன்னிக்கு ராத்திரி பெங்களூர் கிளம்பறேன். இவளும் ராத்திரி திருச்சி கிளம்பறா. சந்துரு சீக்கிரம் வந்தா ஆத்துக்கு வர சொல்லுங்கோ.. வரோம் மாமி.'

மாலதியின் தலையை தடவி, கன்னத்தை வழித்து தன் பொட்டுகளில் சொடக்கு போட்டு திருஷ்டி கழித்தாள்.

'தைரியமா போயிட்டு வா. எப்பப்பெல்லாம் நேரம் கிடைக்கறதோ நேரா இங்க வா. ஜாக்கிரதையா போயிட்டு வா, என்ன. கவலைப் படாதே, பகவான் இருக்கார்.'

அவர்கள் இருவரும் ராஜி வீட்டு கதவை அடையும் வரை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் சந்துரு அம்மா, அன்னபூரணி, அண்ணு மாமி, ராஜியின் அண்ணு குட்டி.


தொடரும்

No comments:

Post a Comment