உறவுபோட்டமுடிச்சு_104
எழுதியது பாஸ்கர் சத்யா
உள்ளே நுழைந்த கீதா அங்குள்ள எல்லா பெரியோர்களையும் நமஸ்கரிக்கிறாள்.
ஞானாம்பாள் தன் அருகில் இருந்த சுசீலாவிடம் ஏதோ சொல்ல அவள் பெரிதாக சிரிக்கிறாள். மற்றவர்களுக்கு எதனால் என்பதில் ஆர்வம்.
'அக்கா, இப்ப பாருங்கோ. பத்து எண்ணப் போறேன். அதுக்குள்ள கீதா பின்பக்கம் ஓடுவா பாரு.'
'ஏன் ஞானம்? எதனால இப்படி சொல்ற?'
'அங்க கீதாவுக்கு பிடிச்ச ரெண்டு ஜீவன்கள் இருக்கு. அதான் நம்மாத்து கருப்பனும் ஸ்வர்ணமும். அவ அதுங்க ரெண்டையும் பார்த்து இருபது நாளுக்கு மேல ஆகறதோன்னோ? அதனால அதுங்க கிட்ட போய் இருபது நாள் கதைய சொல்லிட்டு வருவா. நம்மாத்துல கீதா இருந்தபோது ஓசப் படாம அவ அதுங்க ரெண்டையும் கொஞ்சறத பார்த்துட்டு வருவேன். பாடுவா....கதையெல்லாம் அதுங்களுக்கு சொல்லுவா.'
ஞானம் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கும் போது கீதா கொல்லைப் பக்கம் ஓடுகிறாள்.
'ஞானம், நான் போய் பார்க்கட்டுமா?'
'உடனே போகாத ஒரு நிமிஷம் கழிச்சி போய் பாரு அந்த கூத்த.'
கருப்பனையும் ஸ்வர்ணத்தையும் பார்த்தவுடன் கீதாவின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.
'ஏ ஏ ஏய் கருப்பா? என்னடா ஒரே தடியா இருப்ப இப்படி எளச்சுட்டியே? மாமி பருத்தி கொட்ட போடறாளா இல்லையா? வைக்கல் வேற இல்ல?'
தடவிக் கொடுக்கிறாள். வைக்கோல் பிரியை அவன் பக்கத்தில் போடுகிறாள். அவள் ஸ்பரிஸம் கருப்பனுக்கு ஏக்கம் தீர்ந்த உணர்வைக் கொடுத்திருக்க வேண்டும். அவன் கண்கள் ஓரங்களில் கண்ணீர்.
'நான் தான் வந்துட்டேனே. என்ன அழுகை? ஓ....ஓ.......ஓ...'
ஷொட்டு கொடுக்கிறாள். வால் பகுதியை நீவி விடுகிறாள். நெத்தியில் வழக்கமான முத்தம்.
'அம்ம்ம்ம் மே.' கருப்பனையே கொஞ்சிக் கொண்டிருந்தால் ஸ்வர்ணம் சும்மா இருப்பாளா? கூப்பிட்டாச்சு அவள.'
'வரேண்ண்ண்டி. உங்கள பார்க்கத்தான வந்திருக்கேன்.'
அதே கரிஸன ஸ்பரிஸங்கள்.
'பரவாயில்லையே... குட்டிப் பாப்பா பெரிசாயிடுத்தே.'
வயிற்றிலே காதை வைக்கிறாள்.
"ஏய் .... அம்மாக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்காம வெளிய வரணும். இல்லாட்டி ரெண்டு போடு போடுவேன் பார்த்துக்கோ.'
'என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் வந்திருக்கா ஸ்வர்ணம். நாளைக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சோன்ன உங்க சின்னய்யாவோட வந்து பார்க்கறேன்.'
பேசிவிட்டு ஆத்துக்குள் நுழைய திரும்பியவள் அங்கு நின்று கொண்டிருந்த சுசீலா பெரியம்மா, ஜானா, சுபத்ரா மற்றும் கீதாவின் நண்பிகள் சிலர் கொல்லென்று சிரிப்பதைப் பார்த்து வெட்கம்.
அவளை பிடிக்க முற்படும் அவர்கள் கைகளை உதறிவிட்டு சிரித்துக் கொண்டே உள்ளே வருகிறாள்.
'கொழந்தைகளா, மாடுகள் கிட்ட எங்காத்து மாட்டுப் பொண் என்ன பாட்டுப் பாடினா? கேட்டேளா?'
'டயலாக் தான் மாமி. நாங்க பார்க்க ஆரம்பிச்சோண்ணயே நியூஸ் ரீல் மாதிரி சீக்கிரம் முடிஞ்சுடுத்து.'
கீதாவை கிண்டலடித்து உறவுகளும் நட்புத் தோழமைகளும் மகிழ்ச்சியுடன் களித்திருந்த சமயம்.
'ஞானம்.... அடியே ஞானம். எத்தன தடவ கூப்டுண்டிருக்கேன். சமையல் மாமா வந்துருக்கார் பாரு. நாளைக்கு என்ன பாயஸம் பண்றதுன்னு கேட்கறார் பாரு.'
'ஜவ்வரிசி பாயசம் மட்டும் வேண்டாம். உங்கள தவிர யாரும் சாப்டமாட்டா. மாமா, வித்தியாசமா நீங்களே ஏதாவது பண்ணுங்கோளேன்.'
'மாமி, வித்யாசம்னா பாதாம் கீர் பண்ணட்டுமா?'
'எங்கேந்து புடிச்சேள் இந்த கீர் பூரை?'
'அது இல்ல மாமி. நம்மாத்து அம்பி பேரு பாலாஜி....பா. பொண்ணு பேரு கீதா.... கீ. பா.. கீ....பாதாம் கீர். வித்யாசமா கேட்டேளே.'
இருவரும் சிரிக்க சமையல் மாமாவும் சேர்ந்து கொள்கிறார்.
'பேச்சு என்னவோ அசத்தலா தான் இருக்கு. பாலாஜி கீர்..... அதான் பாதாம் கீர்.... பண்ணினா அசத்தலா இருக்குமோன்னோ?'
'கண்டிப்பா மாமி'
பாதாம் கீர் ரகசியத்தை உள்ளே வந்து எல்லோரிடமும் ஞானம் சொல்லிவிட்டு சிரிக்கிறாள். சமையல் மாமா சொன்னது ஜோக்காக இருந்ததோ என்னவோ. இனிமேல் அங்கிருப்பவர்கள் பாதாம் கீர் குடிக்கும்போதெல்லாம் பாலாஜி கீதா ஞாபகம் சட்டென்று வந்துவிடாது?
ஒவ்வொரு இல்லத்தில் நடக்கும் விழாக்களில் களை கட்டும் சம்பவங்கள் எத்தனை காலத்திற்கு மனதை நிறுத்தி அசைபோட வைக்கிறது?
'சரி மன்னி, நாங்க கோடியாத்துல போய் தங்கறோம். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துண்டு யாரெல்லாம் பெரிய கோவிலுக்கு போக ஆசப் படராளோ அவளா அழச்சிண்டு போய் காமிச்சுட்டு வரேன்.'
'சரி சீதா. வந்தவாளெல்லாம் மன்னிச்சுகோங்கோ. எங்க சார்புல மன்னார்குடிக்கு உங்கள நேர்ல வந்து கூப்டிருக்கணும். சீதா காரணத்த சொல்லியிருப்பா. நீங்க எல்லாரும் எங்களோட கடைசி வரைக்கும் இருந்து நிச்சயதார்த்தத்த நடத்திக் கொடுக்கணும். நாளைக்கு வரப் போர மன்னார்குடிக்காரா கிட்டேயும் நாங்க சொன்னதா சொல்லுங்கோ. எல்லாருக்கும் பால் கேக், மிக்ஸர், காஃபி வந்ததா? ராத்திரி சாப்பாடு சமயத்துல எங்காத்து மாமா வோட நான் வந்து உங்கள திரும்பவும் பார்க்கறேன்.'
'கீதாவோட பால்ய ஸ்நேகிதிகள் அந்தாத்துக்கு வந்து போயிண்டு இருப்போ. ஏதாவது மேற்கொண்டு செளகர்யம் வேணும்னா அவா கிட்டேயே கூட சொல்லுங்கோ. செஞ்சு கொடுப்பா. என் நாத்தனார்களையும் அடிக்கடி வந்து உங்கள பார்த்துக்க சொல்றேன்.'
எல்லோருக்கும் பூச்சரங்களையும் சந்தனம் குங்குமத்தையும் கொடுத்து அனுப்புகிறாள். அவர்களும் அவர்கள் தங்க வேண்டிய சுந்தரராமய்யர் இல்லத்தை அடைகிறார்கள்.
அங்கு வந்த சந்தானம் அவர்களுக்கான ஏற்பாடுகளை எடுத்து சொல்கிறான்.
'இது கிராமம். பின் பக்கம் போகறதுல தான் சிரமம் இருக்கும் பொம்மனாட்டிகளுக்கு. கொல்ல பக்கம் இருக்கற காலி கிரவுண்டுல மறைவா நாலு தட்டி கட்டியிருக்கோம். தோட்டியையும் ஏற்பாடு பண்ணியிருக்கோம்.'
'சரி சந்தானம். நாங்க பார்த்துக்கறோம். பாலாஜி வந்தோண்ண சொல்லு. இவாள்ல சில பேர் மாப்பிள்ளய பார்க்க ஆர்வமா இருக்கா.'
'அத்தை இவா ஆர்வத்த வுடுங்கோ. கீதாவோட கண்ணு மாப்ளய பார்க்க அங்கேயும் இங்கேயும் அலைபாயறத பார்த்தா எனக்கே ரொம்ப பாவமா இருக்கு. பாலாஜி வந்தோண்ண நானே வந்து சொல்றேன்.'
வெட்கத்தின் உச்சியிலே நின்ற உயிர்த் தோழி கீதாவைப் பார்த்து சிரித்துவிட்டு கிளம்புகிறான்.
பூவனூரில் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்புகளில் மெய் மறந்தே இருந்தனர் மன்னார்குடி நட்புகள்.
'சீதா, ரொம்ப கொடுத்து வெச்சவ டீ நீ. எப்பேர்ப்பட்ட அண்ணா? அவருக்கும் மேல உங்க மன்னி. அக்ரஹாரத்து ஜனங்களுக்கு தான் கீதா மேல என்ன ஒரு பாசம். நன்னா அமோகமா இருப்பாடி கீதா. அடிக்கடி பூவனூர் வரணும் போல இருக்கு எங்களுக்கெல்லாம்.'
சீதாவைக் கட்டிக் கொள்கிறார்கள். கீதாவின் தாவாங்கட்டையை கைகளால் பாவமா வழித்து திருஷ்டி எடுக்கிறார்கள்.
கீதாவின் மன்னார்குடி மற்றும் பூவனூர் நண்பிகள் ஒன்று கூடி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆட்டம் பாட்டம் சினிமா பாடல் கச்சேரிகள் என்று அவர்கள் ஒரு தனி உலகத்தையே உருவாக்கிக் கொள்கிறார்கள். அதான் தெரு முழுவதுமே பந்தல் போட்டிருக்கே. அந்த உலகத்தை விசாலமாக அன்பினால் அலங்கரிக்க.
ஒரு வழியாக ஏழு மணிக்கு பாலாஜியும் சிவா அத்திம்பேரும் ஆத்துக்குள் நுழைகிறார்கள். அக்ரஹாரத்தில் நுழையும்போதே பாலாஜிக்கு தெருக்கோடியில் பந்தலில் நடக்கும் குதுகூலங்கள் கீதாவின் வரவை உணர்த்தி விடுகின்றன.
'அப்பா, சிவநேச நாடாரை கூப்டாச்சு. கண்டிப்பா வரேன்னுட்டார்.'
'ஏன் லேட்டு வரதுக்கு?'
'ஆலங்குடி குரு ஸ்தலம் ஆச்சே. அத்திம்பேர் ஆபத்ஸஹாயர் கோலிலுக்கு போகணும்னு ஆசப்பட்டார். கோவில் அஞ்சு மணிக்குதான் தொறந்தா. தரிசனம் முடிச்சுட்டு வந்ததால லேட்டு.'
'போறது. குரு தரிசனமும் ஆச்சோன்னோ? சரி, கை கால அலம்பிண்டு வா. கீதா அவளோட மன்னார்குடி ஃப்ரெண்ட்ஸோட அஞ்சு மணிக்கே வந்துட்டா. போய் அவாளோட சித்த பேசிட்டு வா. நிறைய வேலை இருக்கு இங்க. ஒண்டியா சந்தானம் கஷ்டப்படறான் பாரு.'
'பரவாயில்லப்பா. வேலையெல்லாம் முடிச்சுட்டே போறேன் அவாள பார்க்க.'
அவனிடமிருந்து வந்தது உதட்டுப் பேச்சு என்று சபேஸய்யருக்கு தெரியாதா என்ன?
'நீ மாப்ள. முறுக்கோட லேட்டா போகலாம். கீதா முகம் வாடக் கூடாது பார். சித்த நாழி போய் பார்த்துட்டு வரதுல வேலை ஒண்ணும் கெட்டுப்போயிடாது. போயிட்டு வா. நானே தான் சொல்றேனே.'
அவன் முகம் ஜலம் பட்டு குளிர்வதற்கு முன் மனம் நினைவோடு குளிர்ந்தது. கண்ணாடி முன் நிற்கிறான். கர்லிங் ஹேருக்கு வகிடு பிரச்சனை இல்லை. மெட்ராஸில் வாங்கிய ஸென்ட் ஸ்ப்ரே இவன் சட்டையை வியாபிக்கிறது. சட்டை இன் மாப்பிள்ளை மிடுக்கை கொடுக்கிறது.
கிளம்புகிறான். வாசல் வரை பூனை நடை. அதற்குப் பிறகு நாலுகால் பாய்ச்சல். மனதில் ஓடிய ப்ளான்.
'பாலாஜி. மத்யானம் நீ சாப்டது. ரெண்டு மிக்ஸரையாவது வாயில போட்டுண்டு போடா.'
ஞானத்தின் பாசக் குரல் அவன் காதுகளில் விழுந்ததாக தெரியவில்லை.
'ஏண்டி ஞானம், இப்ப அவனுக்கு மிக்ஸரா முக்கியம்? ஜிலேபிய பார்க்கப் போறான். உன்னோட ப மிக்ஸர் தொன்னைக்கு மசிஞ்சுடுவானா என்ன?'
நாத்தனார்களும் ஞானத்தின் சிரிப்பில் கலந்து கொள்கிறார்கள்.
தூரத்திலேயே அந்த மங்கிய மாலை வெளிச்சத்தில் பாலாஜியை பார்த்து விடுகிறாள் கீதா. ஜிவ்வென்ற சூடு முகத்தில்
ஜில்லென்ற உணர்வு மனதில்.
முகம் நிறைந்த சிரிப்பு. குழி விழுந்த கன்னத்தோடு அந்த ரோஜா சிவப்போடு கீதா அவனுக்கு தேவதையாக ஜொலித்தாள். முத்தாய்ப்பாய் அவன் தீபாவளிக்கு வந்தபோது வாங்கி வந்த அந்த பட்டுப் புடவை அவனை அந்த தேவதையோடு எங்கெங்கோ சஞ்சரிக்க வைத்தது.
மன்னார்குடி வாசிகளின் அறிமுகங்களும் கைக்குலுக்கல்களும் கீதாவை அவன் நெருங்கி பேசும் நேரத்தை தாமதப் படுத்திக் கொண்டிருந்தன.
மாமன் மகனோடு மணிக்கணக்கில் பேசியவள் மௌனம் காப்பது கீதாவுக்கே புரியாத புதிராக இருந்தது. சிரிப்பும் வெட்கமும் இன்பச் சித்திரவதையை குறைவில்லாமல் கொடுத்துக் கொண்டிருந்தன.
'எப்போ வந்தேள்?'
அவள் கேள்வி அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுத்திருக்க வேண்டும்.
'என்னையா கேட்ட கீதா ?'
'உங்கள இல்ல. உங்க தாத்தாவ.'
'ஆஹா. இப்பத்தான் கேட்டது கீதான்னு புரிஞ்சது. அத்தை இல்ல?'
'வந்தவாளோட பெரிய கோவில் போயிருக்கா. எட்டு எட்டரை ஆகும்.'
நண்பிகள் இரண்டு நாற்காலிகளை எங்கிருந்தோ எடுத்து வருகிறார்கள்.
'அண்ணா, இதுல உட்காருங்கோ. கீதா நீ இதுல உட்காரு.'
இருவர் கைகளையும் இழுத்துப் பிடித்து அமர்த்துகிறார்கள்.
'ரெண்டு பேரும் பேசுங்கோளேன். நாங்களும் ஃப்ரீயா ஒரு டூயட் ஸீன் ஓசியில பார்க்கறோமே.'
கிண்டல்கள் கேலிகள் இருவர் வெட்கங்களையும் கூட்டுகின்றன.
'கீதா, கார்த்தாலேயே நம்மாத்து மருதாணி கிளைகள பறிச்சு சந்தானத்து அம்மா கிட்ட அறைக்க கொடுத்துருக்கேன். உஷா எடுத்துண்டு வந்தோண்ண எல்லாரும் இட்டுக்கோங்கோ.'
சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்புகிறான்.
யதார்த்த சூழல்கள் இருக்கும் போது காதலில் வெளிப்பாடுகள் கண்களில் மட்டும் தானே. திகட்டும் அளவிற்கு கண்களின் மொழிகள் இருவருக்கும் கிடைக்காமலா போயிருக்கும்.
மனங்கள் கவரப் படுவது எந்த விதமான உறவுக்கும் சாத்தியம். ஆனால் களவாடப் படுவது? காதலுக்கு மட்டுமே பிரத்யேகம்.
தொடரும்....
No comments:
Post a Comment