Friday, January 14, 2022

செருவாமணி 19

அத்யாயம்: 19 .. செருவாமணி

Written by Baskar Sathya 


சித்தப்பாவை பார்த்தார் செருவாமணி.  விசாலம் சொன்னதைப் போலவே அவரிடத்தில் சொன்னார்.

'நானும் என் ஃபரெண்டுகிட்ட ஃபோன்ல சொல்லிட்டேன் மாப்ள வாரக் கடைசியில நாம வரதாக.'

'சந்தோஷம் சித்தப்பா.  நானும் நாளைக்கு திருச்சிக்கு போய் நந்து கிட்ட சொல்லிட்டு வரேன்.  வர சன்டேக்கு அடுத்த சன்டே பொண் பார்க்க அவாள வரச் சொல்லலாம்.'

'எல்லாம் நல்ல படியா நடக்கும் மாப்ள.  விசாலத்தையும் கவலைப் படாம இருக்க சொல்லுங்கோ'.

விடை பெற்று வீடு வந்தார்.  தற்போது செருவாமணி ஓரளவு ஜம்பு ஜோஸ்யர் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

ராத்திரி சாப்பாட்டை முடித்து விட்டு சாலியோடு ஒன்றாக ஊஞ்சலில் உட்கார்ந்தார்.

'க்ரீச் க்ரீச் என்ற ஊஞ்சலின் சத்தம். பெரிதாக ஆட்டவில்லை ஊஞ்சலை இருவரும்.  ஊஞ்சல் காற்றை விட ஏகாந்தமே அங்கு இருவருக்கும்.

புகையிலை போடும் வழக்கமில்லை செருவாமணிக்கு.  ஆனாலும் கும்பகோணம் வெற்றிலையும், நெய்யில் வறுத்த பன்னீர் சீவலும் போடும் வழக்கம் உண்டு.  அப்பா இருக்கும் வரை இந்த வெத்தலை சீவலும் போட்டதில்லை.  அதற்குப் பிறகு மன்னார்குடி வந்தவுடன் ஆரம்பித்தது இந்த பழக்கம்.

சிலமுறை தன் செல்லப்பெட்டியை விசாலத்திடம் காண்பித்து தாம்பூலம் போடச் சொல்லுவார்.  தாம்பத்தியத்தில் அன்னோன்னியம் கூடும் போதெல்லாம் வாசமிக்க சிவந்த வாய் அதை வெளிப்படுத்தும்.

அவருடைய செல்லப் பெட்டியில் கும்பகோணம் தளிர் வெத்தலை, பன்னீர் சீவல், கொஞ்சம் ஏலம், சிறிது க்ராம்பு எப்போதும் இருக்கும்.

'என்னன்னா, வரனை எப்படியாவது முடிச்சுடலாம்னா.  இதைவிட நல்ல வரன் எப்ப வரும்னு சொல்ல முடியாதுன்னா.'

'சாலி, எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன?  ராஜகோபாலஸ்வாமி கண்டிப்பா அனுக்ரஹம் பண்ணுவார் சாலி.  கவலைப் படாதே.'

'எங்காத்துல போட்ட நகை பத்து பவுன் இருக்கு.  நான் ஒரு பதினைந்து சவரன் வெச்சிருக்கேன்.  பதினைந்துன்னு பேசலாம்.  அப்புறம் அவா என்ன பிரியப்படறான்னு கேட்டுண்டு ஒசத்திக்கலாம்.  ஆத்துல இருக்கற அந்த காலத்து அண்டா குண்டால்லாம் புதுசு பண்ணிடலாம்.  கொஞ்சம் கொஞ்சமா சீட்டு கீட்டுனு போட்டு குடும்பம் பண்ற அளவு எவர்சில்வர் பாத்திரம் சேர்த்து வெச்சிருக்கேன்....'. அடுக்கிக் கொண்டே போனாள்.

'செருவாமணிக்கு ஆச்சர்யம்.  பாதி கல்யாண செலவுகளுக்கு தயாராகவே இருக்கிறாளே இவள்?'

எப்படித்தான் பெண்கள் இப்படியெல்லாம் திட்டமிடுகிறார்களோ?  பத்து வருடங்களாக சிந்தித்து ஒவ்வொன்றாக சேர்த்திருக்கிறாள்.

'நல்ல கெட்டிக்காரிதாண்டி சாலி் நீ.  என் கிட்ட கூட சொல்லவே இல்லையே.'

'எல்லாம் சொன்னேன்னா.  உங்களுக்கு எப்போதும் மளிகைக் கடைலியே சிந்தனை.  எங்க காதுல வாங்கிண்டேள்.  எப்ப காமிச்சாலும் பார்க்காமலேயே பிரமாதம்னு சொல்லிடுவேள்.  இதெல்லாம் அம்மா இருக்கும்போதே வாங்க ஆரம்பிச்சுட்டேன்.  அம்மா தான் அது விட்டுப் போச்சு, இத வாங்குனு சொல்லிக் கொடுத்துண்டே இருந்தா.'

கல்யாணக் கனவுகள் பேச்சில் நேரம் போனதே தெரியவில்லை இருவருக்கும்.

மனசு வலிக்கும் போதும் தூக்கம் வருவது இல்லை.  மனசு நெறஞ்சிருக்கும்போதும் தூக்கம் வருவதில்லை.

'நாளைக்கு வேற திருச்சிக்கு போய் நந்து குட்டிய பார்க்கணும் சாலி.  படுத்துக்கலாம்.'

கல்யாணப் பேச்சுக்கள் இருவரையும் ஏகாந்தத்திற்கு அழைத்துச் சென்றது.

தொடரும்...

No comments:

Post a Comment