Friday, January 14, 2022

பத்தாயிரமும் உறங்காப் புளியமரமும்

 ○# சிறுகதை

பத்தாயிரமும் உறங்காப் புளியமரமும்

( ஆன்மிகம் கலந்த கற்பனைக் கதை)

ஆழ்வார்திருநகரி போயிருக்கிறீர்களா? திருவைகுண்டம் ரயில் நிலையத்துக்கும் நாசரேத் ரயில்நிலையத்துக்கும் நடுவில் தாமிரபரணி நதிக்கரையில் நம்மாழ்வார் பிறந்த கிராமம்.

திருநெல்வேலி திருச்செந்தூர் பேருந்துகள் திருவைகுண்டத்துக்கு அப்புறம் z வடிவில் கோவிலைச் சுற்றி ஓடும். பக்கத்திலேயே நவ திருப்பதிகளும் தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ளன.

கோதை கோவிலுக்குத் தெற்குப் புற வீட்டில் பிறந்தவள். நல்ல சூட்டிகை. ப்ளஸ் டூ வில் பள்ளிக்கூடத்திலே முதன்மை. கல்லூரி முடித்து ஒரே வருடத்தில் வங்கியில் காசாளர் வேலை. இன்னும் இரு வருடத்துக்குள் அவளுக்குக் கல்யாணம் முடிக்க பெற்றோர் மாப்பிள்ளை தேட இப்போதே ஆரம்பித்து விட்டனர். 

அந்தக் கோவில் கோதைக்குப் பிடித்தமான ஒன்று. அழகான குட்டி யானை முன் நின்று ரசிப்பது அவள் வழக்கம். அண்ணனும் சில நேரம் அவள் கூட நின்று ரசிப்பான். கல்யாணமான பிறகு கணவனுடன் இந்த யானை முன் நின்று ஃபோட்டோ எடுக்கணும்னு ஒரு ஆசை அவளுக்கு. வேலைக்காக சென்னை குரோம்பேட்டை போனபிறகு ஊருக்கு மாதம் ஒருமுறைதான் போகமுடிந்தது. 

மனிதன் மனதுள் சில நேரம் வினோதமான எண்ணங்கள் வருவது இயற்கையே. கோதைக்கு என்னதான் பக்தி இருந்தாலும் ஆழ்வார் திருநகரி கோவில் புளியமரம் லட்சுமணனின் அவதாரம் என்பதை மட்டும் மரத்தைப் பார்க்கும் போதெல்லாம் நம்ப மறுப்பாள். இதென்ன கற்பனை என்று தந்தையைக் கிண்டல் கூடப் பண்ணுவாள் இந்த ஒரு எண்ணம் அவள் வேலையில் விளையாடியது என கருதலாம். 

ஒருநாள் வங்கியில் பத்தாயிரம் ரூபாய் டாலி ஆகலை. கையிருப்பில் குறைவு. கிட்டத்தட்ட ஒரு மாச சம்பளம் அவளுக்கு. பேமண்ட் பண்ணிய பிறகு மெஷினில் விவரங்கள் டைப்படிக்க மறந்துவிட்டாள் போலும். சரியான வேலைப் பளு அன்று. முதல் தேதி வேற. அந்த பத்தாயிரம் ரூபாய் செக்கும் கீழே விழுந்து அவள் எழுந்து வெளியே போனபோது காலினால் செதுக்கப்பட்டு அவளுக்குத் தெரியாமலே அடுத்த கவுண்டருக்குள் போய்விட்டது. அடுத்த கவுண்டரில் முந்திய நாள் வவுச்சர்லாம் அடுக்கித் தைத்து வைப்பது கடைநிலை ஊழியரின் வேலை. கீழே விழுந்து கிடந்த  வவுச்சர் செக் எல்லாம் எடுத்து நேற்றைய வவுச்சருடன் தைத்துவிட்டார் அவர். மாலை 5 மணிக்கு கோதைக்கு டென்ஷன். அவள் எல்லா செக்குக்களிலும் டிநாமினேஷன்லாம் சரி பார்த்து விட்டாள். நோட்டு பேக்கட், லூஸ் நோட்டுக்கள் எல்லாம் செக் பண்ணியாச்சு. மாலை 6 மணிக்கு அவளைப் பெண் பார்க்க ஒரு வரன் வருவதாக வீட்டில் ஏற்பாடு. அவசரத்தில் தன் கணக்கிலிருந்து பணத்தைப் போடுவதாய் கோதை சொல்லிவிட்டு அன்றைய வேலைகளை முடித்து வீட்டுக்குச் சென்றாள். 

நல்லபடியாக வரன் அமைந்தது. கோதை வீட்டார்க்கு ரொம்ப சந்தோஷம். அடுத்த இரண்டு நாள் பத்தாயிரத்தை மறந்து கல்யாண வேலைகளில் எல்லோரும் இறங்கினர். ஒரு மாதத்தில் கல்யாணம். 

இரண்டு நாள் கழித்து மீண்டும் வங்கிக் கூண்டுக்குள்ளே. திடீரென கடைநிலை ஊழியன் " கோதைக்கா....ஒரு செக் கீழே  விழுந்து பாதி உன் கவுண்டருக்குள் வந்துடுச்சு. அப்படியே தள்ளி விடுங்க"  என்றார். செக்கைக் கையால் அடுத்தக் கவுண்டருக்குத் தள்ளி விட்ட கோதைக்குத் திடீரென மனதில் ஒன்று மின்னல் போல வெட்டியது. 

"அண்ணா....முப்பதாந் தேதி வவுச்சர் தைச்சதை எடுத்து வாங்களேன்.... அந்தப் பத்தாயிரம் செக் அதிலே தவறுதலா இருக்கான்னு பார்க்கலாம்"

முணுமுணுத்துக் கொண்டே ரிகார்ட் ரூம் போனார் ஊழியர். அதற்குள் மேனேஜர் கோதையை அவசரமாகக் கூப்பிட்டார்.

" என்ன ஸார்"

" ஒரு ஃபோன் லைன்ல இருக்கும்மா... கஸ்டமருக்குக் கணக்கில் பத்தாயிரம் டெபிட் பண்ணலைன்னு ஸ்டேட்மென்ட் செக் பண்ணிச் சொல்றாரு. நீ கூட பத்தாயிரம் குறையுதுன்னு சொன்னியே. அதானா பாரு....சார்ட்ட பேசு..."

கஸ்டமரிடம் தேதி, பணம் எடுத்தது எல்லாம் விசாரித்தவுடன் எல்லாமே உறுதியாகி விட்டது. அந்தச் செக்குதான் கணிணியில் ஏற்றவில்லை. இன்று டெபிட் பண்றேன் சார் என்று நன்றி கூறி விட்டு, உங்க பெயர் ப்ளீஸ் என்று விசாரித்தாள் நன்றி ததும்பும் குரலில்.

" லட்சுமணன்"

ஓவியம்...நன்றி...திரு Govindaraj Lakshminarayanan

No comments:

Post a Comment