Sunday, January 9, 2022

செருவாமணி 17

அத்யாயம்:17 .. செருவாமணி

Written by Baskar Sathya 

ஜம்பு ஜோஸ்யர் ஆத்தை விட்டு கிளம்பியபோது மணி ஏழு ஆகிவிட்டது.

இரண்டு தெரு தள்ளி ஒத்தை தெருவில்தான் சித்தப்பா இருக்கிறார்.  நேரில் சிரமப்பட்டு வந்து ஜாதகம் கொண்டு வந்து கொடுத்தவரிடம் மரியாதை நிமித்தமாக ஜம்பு ஜோஸ்யர் சொன்னதை சொல்வது தானே மரியாதை.

சித்தப்பா ஓரிரு குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுத்துக் கொண்டிருந்தார்.  செருவாமணி வந்தவுடன் குழந்தைகளுக்கு ஏதோ பாடம் எழுத கொடுத்து விட்டு வந்தார்.

'என்ன மாப்ள.  ஜோஸ்யரை பார்த்தாச்சா?'

'பார்த்தேன் சித்தப்பா.  பொருத்தம் நன்னா இருக்குன்னார்.  ஆனா பையன் ஜாதகத்தில ஏதோ கோளாறு இருக்காம்.  நாளைக்கு நன்னா பார்க்கறேன்னு சொன்னார்.'

'பொருந்தியிருக்குன்னு சொல்லிட்டாரோன்னோ.  அப்புறம் என்ன கவலை.  நாளைக்கு திரும்பவும் ஜோஸ்யர பார்த்துட்டு வாங்கோ.  பொண்ணையும் ஒரு வார்த்தை கேட்டுட்டு பொண் பார்க்க வரச் சொல்லலாம்.'

'இல்ல சித்தப்பா.  நான் என்ன நினைக்கிறேன்னா.  நேராவே மெட்ராஸுக்கு போய் அவாளையும் ஒரு தடவை பார்த்துட்டு மனுஷாள பத்தி தெரிஞ்சிண்டு வரலாம்னு பார்க்கறேன்.   திக்கு தெரியாம இந்த ஊருக்கு வந்ததிலேந்து நீங்கதான் எங்க பலமே.  அதனால நீங்களும் எங்களோட மெட்ராஸ் வரணும்.'

'இதுவும் நல்ல ஐடியாவாத்தான் தெரியறது.  இப்ப பசங்களுக்கு அரையாண்டு பரிட்சையெல்லாம் இருக்கு.  நான் வரணும்னா சனி கிளம்பி ஞாயித்துக் கிழமை அவா கிட்ட பேசிட்டு திங்க கெழம இங்க ஸ்கூலுக்கு வந்துடணும்.'

'சரி சித்தப்பா.  அப்படியே பண்ணலாம்.  உங்களுக்குத் தான் மேல மேல சிரமம் கொடுக்கறேன்.'

'நான் என்ன பெரிசா செஞ்சுட்டேன்.  ஒண்ணு செய்யறேன்.  என் ஃபரெண்டுக்கு ஃபோன் போட்டு நாம மெட்ராஸுக்கு வர்ரதா சொல்லிடறேன்.  அவா கிட்டேயும் சொல்ல சொல்றேன்.  நம்ம பொண்ணு ஜாதகத்துல அவா முனைப்பா இருக்கறதால, வேற இடம் பத்தி யோசிக்காம அவாள வெச்சுக்கலாம்.  என்ன நான் சொல்லறது.'

'சரி சித்தப்பா.  நான் கிளம்பறேன் சித்திகிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு.  நீங்க போய் ட்யூஷன கவனிங்கோ.'

வரும் வழியில் மீண்டும் ஆனந்த விநாயகர்.  அதே சந்தனக் காப்புடன் ஜொலித்துக் கொண்டிருந்தார்.  அவருக்கென்ன பொண்ணா புள்ளையா?  கவலையே இல்லாம தரிசனம் பண்ண வரவா கொண்டு வந்த மாலையெல்லாம் மாத்தி மாத்தி போட்டுண்டு சிரிச்சிண்டு பக்தாளோட அப்ளிகேஷனையெல்லாம் காலில் போட்டுண்டு ஆசிர்வாதம் கொடுத்துண்டு பொழுதைப் போக்கிண்டிருந்தார்.  சில ஜாதகங்கள், ஹால் டிக்கெட்டுகள், அப்பாயிண்ட் மெண்ட் ஆர்டர்கள், க்ரயப் பத்திரங்கள், சில முகூர்த்தப் பத்திரிக்கைகள்...அவர் கையிலும் காலிலும் வைத்து விட்டு சிம்பாலிக் அனுக்ரஹங்கள்.  அன்னிக்கு என்னவோ அனுக்ரஹ அப்ளிகேஷன்ஸ் கொஞ்சம் ஜாஸ்திதான்.  செருவாமணி சற்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். 

திரும்பவும் ஒரு ரிக்வெஸ்ட் பிள்ளையார்கிட்ட.  'என் குழந்தைக்கு நல்ல வழி காட்டுப்பா.'

வீடு வந்தவுடன் சாலியிடம் பரஸ்பர பரிவர்த்தனை நடந்தவைகளுக்கு.

விசாலம், 'ஒரு கவலையும் படாதீங்கோன்னா.  எல்லாம் நல்லபடியா நடக்கும்.  நீங்க வேணா பாருங்கோ, இந்த வரன்தான் நந்து குட்டிக்கு செட் ஆகும்.  முந்தானா வேணு மாமா ஆம்படையா வந்திருந்தா.  ஜம்பு ஜோஸ்யர் சொன்னது எதுவும் நடக்கறதில்லையாம் அவாளுக்கு.  நீங்கதான் அவர கட்டிண்டு அழறேள்னு எனக்கும் டோஸ் விட்டுட்டு போனா.  நீங்க வருத்தப் படுவேள்னு சொல்லலை.  பையன் ஜாதகத்துல இருக்கற குறைக்கு பரிகாரம் சொல்றேங்கறாரே, நம்ம பொண்ணு வயித்து வலிக்கு ஏதாவது பரிகாரம் சொன்னாரோ?  ஏதோ மழுப்பிண்டேதானே இருக்கார்.'

'அப்படி ஒரேடியா சொல்ல முடியாது சாலி.  கடை நன்னா வரும்னார்.  பொண்ணு நன்னா படிப்பான்னார்.  டிகிரி கூட ரேங்க்கில பாஸ் பண்ணுவான்னார்.  அம்மா தவறின ரெண்டு மாசம் முந்தி அம்மாக்கு கண்டம்னார்.  எல்லாம் கரெக்டாதான் சொன்னார்.  நந்து வயித்துவலி கூட காலக்கோளாறு, சரியாயிடும்னு தானே சொல்லியிருக்கார்.'

'நீங்க தான் மெச்சிக்கணும்.  அவர் ஏதோ சொல்றத கேட்டுண்டு நல்ல அலையன்ஸ உட்டுடாதீங்கோ.  அவ்வளவுதான் சொல்லிட்டேன்.'

'எல்லாம் ஸ்கூல் பிள்ளையார் பார்த்துப்பார்.  நீ ஒண்ணும் கவலைப் படாத.'

இரவு கொஞ்சம் டிஸ்டர்ப்ட் ஸ்லீப்தான் செருவாமணிக்கு.

மறுநாள் காலை எட்டு மணிக்கு கடை கணக்குப்பிள்ளை முருகானந்தம் வந்து சாவி வாங்கிக் கொண்டு சென்றார்.  வேலைக்கு சேர்ந்து இரண்டு வருஷம் ஆகிறது.  நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கொண்டிருப்பவர் இவர்.  சித்தப்பா சிபாரிசில் வேலைக்கு வந்தவர்.

'முருகானந்தம், இன்னிக்கு மதியம் மேலதான் கடைக்கு வருவேன்.  நான் வர வரைக்கும் கடையிலேயே இருங்கோ.  பசிச்சா ஏதாவது பையன விட்டு வாங்கி சாப்பிட்டுக்கோங்கோ.'

ஒன்பது மணிக்கெல்லாம் இருப்பு கொள்ளாமல் ஜம்பு ஜோஸ்யராம் போயாச்சு.

'செருவாமணி, வா.  இன்னும் பார்க்கல.  சித்த உட்கார் திண்ணைல. ஸ்வாமிக்கு ரெண்டு பூ போட்டுட்டு வரேன்.'

வந்தார் திண்ணைக்கு மூக்குக் கண்ணாடி, பூதக் கண்ணாடி, பஞ்சாங்கங்கள், சில ஜோதிட புஸ்தகங்கள், ஒரு ஸ்கேல், பேனா, பென்ஸில், ரப்பர் சகிதம்.  திண்ணையில் ஏற்கனவே இருந்த கணக்குப் பிள்ளை டெஸ்க் அவருக்காக காத்துக் கொண்டிருந்தது.

'டிஃபன் சாப்பிட்டையா செருவாமணி?'

இந்த கேள்வி கேட்கலைனு யார் அழுதா?  பாவம் அவர் வாஞ்சைல கேட்கறது கூட செருவாமணிக்கு வித்யாசமா படறது.

அரைமணி நேரம் ஜாதகத்தையே பார்த்துக் கொண்டும் அவ்வப்போது ஜாதக புஸ்தகத்தையும், ஏதோ பஞ்சாங்கத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.  கைவிரல்களை என்னன்னவோ அசைத்து காற்றில் வாத்யம் வாசித்துக் கொண்டிருந்தார்.

ஒரு பெரிய கனைப்பு.  செருவாமணி முகத்தில் ஒரு அசட்டுச் சிரிப்பு அவர் பேச்சை ஆரம்பிக்கும் போது.

மனசு என்னவோ ஒரு படபடப்பில் மிதந்து கொண்டிருந்தது.

தொடரும்....

No comments:

Post a Comment